அசோகமித்திரனின் மானசரோவர் நாவலை வாசித்தேன். மான்சரோவர் புண்ணியத் தலங்களில் ஒன்று என்பதை அறிந்திருக்கிறேன். பனிமலைச்சிகரத்திலிருக்கும் தலத்துக்குச் சென்று புனித நீரில் தீர்த்தமாடுவதன் மூலம் செய்த தீவினைகள் கழியுமென்பது நம்பிக்கை. இப்படியாக மனித மனம் கொள்கின்ற சஞ்சலங்களுக்கான தீர்வினைச் சமயங்கள் குறிப்பிடவே செய்கின்றன. மானசரோவர் நாவலும் மனம் அடைகின்ற சஞ்சலங்களாலும் குற்றவுணர்வுகளாலும் ஏற்படுகிற சுமைக்கான கழுவாயைத் தேடியலையும் இருவேறு பாத்திரங்கள் மேற்கொள்ளும் அகப்பயணத்தையே பேசுகிறது. நாவலின் மையப்பாத்திரமான கோபாலன் படத்தயாரிப்பு அரங்கத்தின் கதை இலாகாவில் பணியாற்றுகிறான். கலையிலக்கிய ஆர்வமிருந்தும் வாழ்க்கைத்தேவைக்காக இதழ்கள், படங்கள் என மாறி மாறி பணிபுரிகிறான். அந்தக் கலையிலக்கிய ஆர்வம் சினிமா என்னும் பெரும்புகழும் பணத்தையும் தரக்கூடிய ஊடகத்தில் சாத்தியமான வளர்ச்சியைப் பெறுவதற்கு மேற்கொள்ளக்கூடிய போலி முயற்சிகளை நிராகரிக்கச் செய்கிறது. அதன் விளைவாகக் குடும்பம் வறுமையில் தள்ளாடுகிறது. இந்த ஊசலாட்டத்தில் மனைவி ஜம்பகத்துக்கு ஏற்படும் மனப்பிறழ்வு, மகனின் இறப்பு என ம...