முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மானசரோவர் நாவல் வாசிப்பனுபவம்

 அசோகமித்திரனின் மானசரோவர் நாவலை வாசித்தேன். மான்சரோவர் புண்ணியத் தலங்களில் ஒன்று என்பதை அறிந்திருக்கிறேன். பனிமலைச்சிகரத்திலிருக்கும் தலத்துக்குச் சென்று புனித நீரில் தீர்த்தமாடுவதன் மூலம் செய்த தீவினைகள் கழியுமென்பது நம்பிக்கை. இப்படியாக மனித மனம் கொள்கின்ற சஞ்சலங்களுக்கான தீர்வினைச் சமயங்கள் குறிப்பிடவே செய்கின்றன.  மானசரோவர் நாவலும் மனம் அடைகின்ற சஞ்சலங்களாலும் குற்றவுணர்வுகளாலும் ஏற்படுகிற சுமைக்கான கழுவாயைத் தேடியலையும் இருவேறு பாத்திரங்கள் மேற்கொள்ளும் அகப்பயணத்தையே பேசுகிறது. 



நாவலின் மையப்பாத்திரமான கோபாலன் படத்தயாரிப்பு அரங்கத்தின் கதை இலாகாவில் பணியாற்றுகிறான். கலையிலக்கிய ஆர்வமிருந்தும் வாழ்க்கைத்தேவைக்காக இதழ்கள், படங்கள் என மாறி மாறி பணிபுரிகிறான். அந்தக் கலையிலக்கிய ஆர்வம் சினிமா என்னும் பெரும்புகழும் பணத்தையும் தரக்கூடிய ஊடகத்தில் சாத்தியமான வளர்ச்சியைப் பெறுவதற்கு மேற்கொள்ளக்கூடிய போலி முயற்சிகளை நிராகரிக்கச் செய்கிறது. அதன் விளைவாகக் குடும்பம் வறுமையில் தள்ளாடுகிறது. இந்த ஊசலாட்டத்தில் மனைவி ஜம்பகத்துக்கு ஏற்படும் மனப்பிறழ்வு, மகனின் இறப்பு என மனம் அலைகழிகின்றது. இத்தனை அலைகழிவையும் உடனிருக்கும் யாருடனும் பகிர்ந்து கொள்ள அவன் அகம் ஒப்பவில்லை. அவனுடைய தன்னிலை விவரிப்புகளிலே கூட நிகழ்கின்ற சிக்கல்களை மனம் ஒன்றும் நடவாததைப் போலவே சொல்லிச் செல்கிறது. அவனைத் தேடித்தேடி வரும் நடிகன் சத்யன்குமாரிடம் கூட அதனை முழுவதுமாய் அவனால் சொல்லிவிடமுடியவில்லை. முன்னரே அறிமுகமாகியிருந்த சித்தரொருவரிடம் அடைக்கலமாகிறான்.

ஒன்றுபட்ட இந்தியாவின் பெஷாவாரில் பிறந்து பம்பாய்க்கு வந்து இந்திப்படங்களில் நடித்து யூசுப் எனும் சத்யன் குமார் புகழ்பெறுகிறான். நாட்டுப் பிரிவினையால் பிரிந்து போய்விட்ட பெற்றோர், இளவயது நினைவுகள், சினிமா நடிகர் வாழ்வின் போலியான ஆடம்பரங்களின் மீது யூசுப்புக்குச் சலிப்பிருக்கிறது. இலக்கிய ஆர்வமே கோபாலனையும் சத்யன் குமாரையும் ஒன்று சேர்க்கிறது. அவனுக்குமே மெஹபூப் எனப்படும் ஞானி மீது பற்றிருக்கிறது. அந்த ஞானிக்கும் கோபாலனுக்கும் ஒற்றுமை இருப்பதாகவே எண்ணுகிறான். அவனுடைய வீண் ஆடம்பர வாழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோபாலனுடன் இணக்கத்துடன் இருக்க அவனைத் தேடி நாவல் முழுதும் அலைகிறான். கோபாலனும் யூசுப்பும் தாங்கள் அகத்தைக் காட்டுகிற வகையில் இருவரின் தன்னிலை விவரிப்புகளில் நாவல் நகர்கிறது. இந்தப் பயணத்தின் ஊடேதான் அவர்களின் அகம் உள்ளூர என்னவாக இருக்கிறது, அது அணிந்து கொள்ளும் தோற்றங்களையும் கண்டு கொண்டு எல்லாமே களையும் புள்ளிக்குச் செல்கிறது.

ஜம்பகம் கோபாலனின் மீது சந்தேகம் கொண்டு அவனைக் கண்ட மாதிரியாக ஏசுகிறாள். குடும்பத்தை நிராதரவாய் விட்டுத் தன் போக்கில் சுற்றிக் கொண்டிருப்பவன் மீதாக உள்ளூர இருந்து வரும் சினம்தான் அப்படியாக வெளிப்படுகிறது. அதன் உச்சமாய், காய்ச்சலில் இருக்கும் மகனையும் தலையணையில் அழுத்திக் கொல்கிறாள். அவளின் மனம் அப்படி விகாரப்படுவதற்கு உள்ளூர கோபாலனும் காரணமாகவே இருந்திருக்கிறான். நடிகனாகி அதனால் பெரும் செல்வாக்கும், ஆடம்பரமான வாழ்வு கிடைத்தாலும் யூசுப்பால் அதில் மனம் ஒன்ற முடியவில்லை. அவை அத்தனையும் பொருளற்றவை என்றே எண்ணுகின்றான். இளவயதின் நினைவுகளும் பெற்றோர் பிரிவும் அப்படியாக அவனை உணரச் செய்கிறது. அந்தச் சலிப்பைக் கடக்க காமம், மது எல்லாவற்றிலும் திளைக்கிறான். எல்லாமே, அவன் மனம் எண்ணுகின்ற பொருளற்ற வாழ்வென்னும் எண்ணத்தையே மிகைப்படுத்துகின்றன. மனப்பிறழ்வுற்றிருக்கும் ஜம்பகத்துக்கும் அவனுக்குமான சந்திப்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாலியல் விழைவும் குற்றவுணர்வை அவனுக்குள் ஆழமாக ஏற்படுத்துகிறது.  இந்த இருபாத்திரமும் உணரும் வெறுமையும் குற்றவுணர்வுமே வாழ்வின் மீதான விமர்சனமாக நாவல் முழுதும் விரவிக்கிடக்கிறது. இந்த ஆழமற்ற வாழ்விலிருந்து விலகிப் பற்றிக் கொள்ளத்துடிக்கும் அனுபவம் சாத்தியப்படும் இடத்தையே இருவரும் தேடுகிறார்கள்.

 அசோகமித்திரன் சிறிய விவரிப்புகளிலே பாத்திரத்தைக் கோட்டுச்சித்திரமாக வரைந்து காட்டிவிடக்கூடியவர். மனப்பிறழ்வுற்ற ஜம்பகமும் ஒருகாலத்தில் கணவரின் துணையில்லாமல் நன்கு நிர்வாகம் புரிந்தவள். வீடு காலி செய்யும் போது வீட்டில் நிறைய பொருட்கள் சேர்ந்திருக்கின்றன. கணவனின் சினிமாதொடர்பும் கலையிலக்கிய ஆர்வமும் குடும்பத்துக்கு ஒன்றுமே சேர்க்கவில்லை. எல்லாமே சேர்ந்து அவனை ஒவ்வாமையுடன் சகித்து வாழச்செய்கிறது. அந்த உணர்வழுத்தமே மனப்பிறழ்வாக வெளிப்படுகிறது. கொடுமைக்கார கணவனிடம் இருந்து விலகி ஒலிப்பதிவு உதவியாளர் ராமநாதனின் வீட்டில் துணைநடிகை சியாமளா தன் கைக்குழந்தையுடன் அடைக்கலமாகிறாள். கோபாலனின் மகன் இறந்து மனைவி மனப்பிறழ்ந்த சூழலில் அவனுக்கு ஆதரவாய் அங்கு வருபவள் பிணம் கிடத்தப்பட்டிருக்கிற வீட்டில் மகனுக்குப் பாலூட்டுகிறாள். சிறிய விவரிப்புகளில் உயிர்ப்பான சித்திரிப்புகளை அசோகமித்திரன் அளிக்கிறார். நெருக்கடியில் இருந்தும் ஒன்றுமே நடக்காத்தைப் போல வெறுமையுற்றிருக்கும் கோபாலனின் அறிமுகமே கறவை மாட்டின் பாலில் கலந்திருக்கும் மடியில் இருக்கும் புண்ணிலிருந்து வடியும் ரத்தம் கலந்து வருவதைக் கண்டு ‘ இன்றாவது புண் ஆறியிருக்க வேண்டும்’ என்பதில்தான் தொடங்குகிறது.

வாழ்க்கையின் தருணங்களைத் தழுவி எடுக்கப்படும் சினிமா தொழிலின் நுணக்கத்தில் இருக்கும் சாரமின்மை நாவலில் பல இடங்களில் சொல்லப்படுகிறது. இந்திய சினிமா எப்படி உண்மையான வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தது என்பதை பொருத்தமில்லாத ஒப்பனை, மிகை நடிப்பு என மெல்லிய பகடியாக நாவல் முழுதும் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். கரைந்த நிழல்கள் நாவலில் சினிமாவின் இன்னொரு முகத்தை இன்னுமே கூர்மையாக சித்திரித்திருப்பார்.

மானசரோவரில் குளித்து எழுந்தால் யோகம் சித்திக்கும். யோகமெல்லாம் நமக்கெதற்கு. மனம் சுத்தமானால் போதாதா’ எனச் சித்தர் யூசுப்பைப் பார்த்து கேட்கிறார். எதிலும் ஆர்வ்மற்று அலைந்து கொண்டிருக்கும் கோபாலனின் வீட்டைப் பார்த்து அவனையும் அவனது குடும்பச் சிக்கலையும் உணர்ந்தவராக அவன் கன்னத்தில் அறைகிறார். மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற விழிப்பு ஏற்படுவதாக உணர்கிறான். வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே அதன் சாரமின்மையிலிருந்து வெளியேறிவிடவே இருவரும் அலைகின்றனர். ஆனால், அப்படி முற்றிலும் விலகி விட முடியாத சூழலிலே இருவரும் இருக்கின்றனர். அகத்தைக் கூர்ந்து சாத்தியத்துக்குட்பட்ட எல்லையில் அதனைச் சுத்தி செய்து கொண்டு வாழ்வில் நீடிக்க முடியுமென்ற நம்பிக்கையே மானசரோவர் நாவலின் தரிசனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...