யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...