முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம்

யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன்.

மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை  பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான  ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்றைத் தொகுத்துக் கொள்ள முடிந்தது.

 
செளந்தர்

1. முதலாவதாக, யோகப்பயிற்சியென்பதை உடல், உயிராற்றல், மனம், ஆழ்மனம், ஆன்மீகம் ஆகியவற்றுக்கான பயிற்சியாகக் காணலாம்,

2. இரண்டாவதாக யோகத்தை அறிவுத்துறையாக அணுகுகின்ற வகையில், யோகம் சொல்லும் மனித உடற்கூறுகளை அவதானித்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாகுபாடுகள், ஆசனங்களையும் தெளிவுப்படுத்தினார்.

3. மூன்றாவதாக, யோகத்தின் இன்றியமையாமையை நிறுவ எந்தவகையிலும் மற்ற பயிற்சிகளான நவீன மருத்துவம், அறிவியல், வணிக நோக்கிலான எளிய யோகப்பயிற்சிகள் ஆகியவற்றை நிராகரித்தலும் மறுத்தலும் கூடாது.  யோகத்தின் மகிமையைச் சொல்லும் உறுதிபடுத்தப்படாத போலி அறிவியல் தகவல்களையும் (        Pseudo Science) முற்றாகவே ஒதுக்கினார்.

4. நான்காவதாக, அவருடைய பதிலிலும் அணுகுமுறையிலும் நவீனமான மொழியும் முறையும் இருந்தாலும், அவர் முன்வைத்த பயிற்சிகள், மரபு ஆகியவற்றுக்குப் பின் முதன்மையாக இருப்பது யோகத்தை வாழ்க்கைமுறையாக ஆக்கிக் கொள்ளும் ஒழுங்குத்தான். அந்த ஒழுங்கை எந்த குறுக்குவழிகளின் வாயிலாகவும் எளிமைப்படுத்தல்களின் மூலமாகவும் அறிந்து கொள்ள முயலும் உடனடி வழிகளையும் மென்மையான மொழியில் உறுதியாகவே ஒதுக்கினார்.

5. ஐந்தாவதாக, அடுத்தடுத்த பயிற்சிகள் என்பது அளிக்கப்பட்ட பயிற்சிகளைச் சாதகம் செய்து உடல்பெறும் எதிர்வினைகளை அவதானிப்பதன் மூலமாய் அறிந்து கொள்ளலாம்.

அவரளித்த பயிற்சிகளை நான்கு மாதங்களில் சில நாட்கள் நீங்கலாக தொடர்ந்து செய்து வந்தேன். இரண்டாவது பயிற்சியையும் ம,நவீன் ஒருங்கிணைத்த போது அதிலும் ஆர்வத்துடன் பங்கெடுத்தேன். கடந்த 25, 26, 27 மே மாதத்தில் இரண்டாம் கட்ட யோக முகாம் கூலிம் பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடந்தது. நாடு தழுவில் நிலையில் 130 பேர் கலந்து கொண்டனர். மறுபடியும் செளந்தரைப் பார்த்ததும் அரவணைப்பும் செல்லமான தட்டலுமாய் மகிழ்ச்சியான மூன்று நாட்கள் கற்றல் தொடங்கியது.


சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

வழிகாட்டல் காணொளிகள் அளிக்கப்பட்டிருந்தாலும் சில மாதங்களில் பயிற்சிகளைத் தனியே செய்து  உடல் அசைவுகள், மூச்சுப்பயிற்சிகள் எனப் பலவற்றையும் எளிமைப்படுத்தித் தொடர்ந்திருப்பது இரண்டாம் கட்ட முகாமில் பயிற்சிகளை மறுபடியும் செய்யும் போதே தெரிந்து கொண்டேன். சில அறிந்த பயிற்சிகளைக் கொண்டிருந்தாலும் இன்னொரு புதிய தொடக்கமாகவே முகாம் அமைந்திருந்தது. 

இந்த முகாமில் பத்து விதமான ஆசனங்களும் மூச்சுப்பயிற்சிகளும் விரிவாகவே சொல்லிக் கொடுத்தார். கற்றுக்கொடுக்கப்பட்ட ஆசனங்களை மீண்டும் மீண்டும் செய்ய வைத்து அந்த ஒழுங்கை ஏற்படுத்த முயன்றார். மனதுக்கினிய சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியும் முகாமில் உடன் இணைந்து கொண்டார். ஒவ்வொரு பயிற்சி முடிவிலும் உடலை நெட்டி முறித்து இயல்பாக்குவதைப் போல சுவாமியும் அருகிருந்து கேலிகளால் நெகிழ்வாக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அமர்வின் போதும் உடற்கூறுகள், பயிற்சிகளின் பின்னணி, யோகத்தத்துவம் என விரிவாகவே தெளிவுபடுத்தினார். சற்றே நீண்ட நேரம் கண்களை மூடிச் செய்யும் பயிற்சிகளில் பிசகி ஓடும் கவனத்தைப் பிடித்து நிறுத்தும் பிரயத்தனத்தில் ஆழ்ந்தேன். ஆசனங்கள் தரும் அழுத்தத்தில் வயிறு, முதுகு, கால்களில் இருந்த அசைவுகளைக் கவனித்தேன். மூன்று நாட்களுக்குள் உடல் மீது அவதானம் உருவாகி வந்திருந்ததை உணர முடிந்தது.

மகிழ்ச்சி இல்லாமல் கற்றல் இல்லை என ஜெ குறிப்பிடுவதைப் போல மிக மகிழ்வான மூன்று நாட்களில் நல்ல கற்றலனுபவம் நடந்த நிறைவை முகாம் அளித்தது.


கருத்துகள்