தமிழ்ப்பிரபாவின் இரண்டாவது நாவலான கோசலையை வாசித்தேன். 80,90 களில் வெளிவந்த நூல்களின் காகித அட்டைப்படத்தைப் போலவே எழுத்துருவும் வடிவமைப்பையும் கொண்டு கோசலையின் அட்டைப்படம் தயாராகியிருக்கிறது. தமிழ்ப்பிரபாவின் முந்தைய நாவலான பேட்டையைப் போலவே நடையிலிருக்கும் சரளமும் எளிமையும் வாசிப்பில் ஈர்ப்பை உருவாக்குகிறது. சென்னையில் சிந்தாதிரிப் பேட்டையில் வாழும் குள்ளமான உருவமும் கூன் விழுந்த உடல் அமைப்பும் கொண்ட கோசலை எனும் பாத்திரத்தைச் சுற்றியே நாவல் நகர்கிறது. உடற்குறை, அவமதிப்பு, இழப்புகள் எனத் தான் எதிர்கொள்ளும் எல்லா சிக்கலையும் செயலூக்கத்துக்கான உந்துவிசையாக கோசலையால் மாற்றிக்கொள்ள முடிகிறது. தோற்றம் தரும் தாழ்வுணர்வால் குடும்பத்துக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டு மூடுண்ட வாழ்க்கையைத் தெரிவு செய்கின்ற கோசலை, அதிலிருந்து வெளிப்பட்டு மெல்ல சமூகத்தை நோக்கியப் பயணத்துக்குத் தயாராகுவதையே கோசலையின் கதையோட்டம். காட்சியாகும் உணர்வுகள் கோசலை நாவலின் முதன்மை பலமே துண்டுத் துண்டான காட்சிகளில் பாத்திரங்களின் மனவுணர்வுகளைக் கடத்துவதையும் பாத்திர வார்ப்பில் வெளிப்படும் முரணையும் சொல்லலாம். வேலை ம...