தமிழ்ப்பிரபாவின் இரண்டாவது நாவலான கோசலையை வாசித்தேன். 80,90 களில் வெளிவந்த நூல்களின் காகித அட்டைப்படத்தைப் போலவே எழுத்துருவும் வடிவமைப்பையும் கொண்டு கோசலையின் அட்டைப்படம் தயாராகியிருக்கிறது. தமிழ்ப்பிரபாவின் முந்தைய நாவலான பேட்டையைப் போலவே நடையிலிருக்கும் சரளமும் எளிமையும் வாசிப்பில் ஈர்ப்பை உருவாக்குகிறது. சென்னையில் சிந்தாதிரிப் பேட்டையில் வாழும் குள்ளமான உருவமும் கூன் விழுந்த உடல் அமைப்பும் கொண்ட கோசலை எனும் பாத்திரத்தைச் சுற்றியே நாவல் நகர்கிறது. உடற்குறை, அவமதிப்பு, இழப்புகள் எனத் தான் எதிர்கொள்ளும் எல்லா சிக்கலையும் செயலூக்கத்துக்கான உந்துவிசையாக கோசலையால் மாற்றிக்கொள்ள முடிகிறது. தோற்றம் தரும் தாழ்வுணர்வால் குடும்பத்துக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டு மூடுண்ட வாழ்க்கையைத் தெரிவு செய்கின்ற கோசலை, அதிலிருந்து வெளிப்பட்டு மெல்ல சமூகத்தை நோக்கியப் பயணத்துக்குத் தயாராகுவதையே கோசலையின் கதையோட்டம்.
காட்சியாகும் உணர்வுகள்
கோசலை
நாவலின் முதன்மை பலமே துண்டுத் துண்டான காட்சிகளில் பாத்திரங்களின் மனவுணர்வுகளைக்
கடத்துவதையும் பாத்திர வார்ப்பில் வெளிப்படும் முரணையும் சொல்லலாம். வேலை முடிந்து
வீடு திரும்பாத கணவனைத் தேட மகள் ரேவதியையும் உடனழைத்துச் செல்கின்றாள். கணவன் வேறொரு
திருமணம் புரிந்து கொண்டு அவளையும் உதாசீனம் செய்து அனுப்பி வைக்கிறான். பதைபதைப்பும்
விரக்தியும் மிகுந்த தருணத்தைக் கடக்க வழிதெரியாமல் அல்லாடும் தருணத்தில் நடப்பதை அறிந்து
கொள்ள முடியாத ஆறு வயது மகள் விழ காத்திருக்கும் முன்பல்லை முன்னும் பின்னுமாக அசைத்துக்
கொண்டிருக்கிறாள். திருமணம் நடந்த கோவில் சந்நிதியில் தாலியைக் கழற்றி வைத்து திரும்பும்
போது மகளின் பல் உதிர்ந்திருக்கிறது. கோவில் மணல் மேட்டில் பல் வளருமென்ற நம்பிக்கையால்
புதைத்து வைத்து வீடு திரும்புகின்றனர். பொருளற்றுப் போகும் வாழ்வின் ஊசலாட்டத் தருணத்தில்
சட்டென வாழ உந்தும் விசை பற்றுவதைக் காட்சியாகச் சொல்ல தமிழ்ப்பிரபாவால் முடிந்திருக்கிறது.
இப்படியாகக் காட்சியாக விரியக்கூடிய பல சித்திரங்களை நாவலில் காண முடிகிறது.
பாத்திரங்களில் முரண்கள்
நிகழ்வுகளும்
உணர்வுகளும் பாத்திரங்களுக்குள் ஏற்படுத்தும் மாற்றமே நாவலை உயிரோட்டமிக்கதாக்குகிறது.
சக மனிதர்கள் சமமானவர்கள் என நம்பும் கம்யூனிசச் சித்தாந்தப் பின்புலத்தில் வந்த அலங்கார
வேலன் மாற்றுச் சாதியைச் சேர்ந்தவனுடன் மகள் இணைசேர்வதைத் தடுக்கிறார். அதிகார அரசியலில் ஓரங்கட்டப்படுவதன்
இயலாமையை மறைக்க சுயசாதி பற்று தேவைபடுகிறது. காதலிக்கும் போது தன் எதிர்காலத் திருமண
வாழ்வு மீதான பாதுகாப்பின்மை கணந்தோறும் கோசலையை அச்சுறுத்துகிறது. அதனை உறுதி செய்து
கொள்ள காதலன் ஜோதியைச் சீண்டவும் கேட்கவும் செய்கிறாள். அவ்வாறான தருணங்களிலெல்லாம்
உறவின் உறுதியை ஜோதி வழங்கி கொண்டே இருக்கிறான். திருமணமாகி குழந்தை பிறந்த சில ஆண்டுகளில்
அம்மாவின் வற்புறுத்தலும், கோசலையினுடனான உறவின் சலிப்பும் சேர்ந்து கொள்ள உறவிலிருந்து
விடுபடலுக்கான நியாயத்தையும் காரணத்தையும் தேடிக் கொண்டிருக்கிறான். மனைவிக்கும் குழந்தைக்கும்
தெரியாமல் வேறொருத்தியைத் திருமணம் புரிந்து கொள்கிறான். அவன் வீட்டைத் தேடி நியாயம்
கேட்கும் கோசலையை மாமியார் பர்வதம்மாள் உதாசீனம் செய்து விரட்டுகிறாள். மாமியாரை தலையால்
மூட்டித் தள்ளிவிடுகிறாள் கோசலை. அதனை உறவு முறிவுக்கான காரணமாக்கி அடித்துத் துரத்துகிறான்
ஜோதி. இம்மாதிரியாக பாத்திரங்கள் முரண்படும் புள்ளிகளையெல்லாம் நாவலில் சிறப்பாக வந்திருக்கின்றன.
தன்னைத்
தொடரும் உதாசீனத்தையும் இழப்பையும் வெல்வதற்காக நூலகராக மாறி சிந்தாதிரி நூலகத்தில்
பல சமூகமாற்றங்களைக் கொண்டு வருகிறாள் கோசலை. நூலகத்துறை இயக்குநர் சாம்பமூர்த்தியின்
வீட்டில் படித்த அம்பேத்கர் எழுத்துகளால் உந்தப்பட்டு இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.
வறுமையில் வாழும் சேரிப்பகுதி மக்களை நூலகத்துக்குக் கொண்டு வர அவள் செய்கின்ற முயற்சிகள்
அதிநாடகீயமாக இல்லாமல் மக்களின் இயல்பறிந்து செய்யும் தந்திரமும் நல்லெண்ணமும் கலந்தவையாக
இருந்தன. கோசலையின் தாய்மைக்குணமும் சரி சமூகச் செய்ற்பாடுகளும் சரி எல்லாமே தான் எதிர்க்கொள்ளும்
உடற்குறையும் அதன் விளைவான மற்றவற்றை வெல்வதற்கான முயற்சிகளாகவே இருக்கின்றன. தன்னைக்
கைவிட்ட கணவன், குடும்பத்தினர் முன்னால் அருஞ்செயல்கள் செய்ய வேண்டுமென்ற காரணம் கூட
சிந்தாதிரி நூலகத்துக்குப் பணி மாற்றல் விண்ணப்பத்தில் இருக்கிறது. நூலகத்துக்கு மக்களைக்
கொண்டு வரவேண்டுமென்ற செயலின் பின்னால் இருக்கும் நடைமுறைச் சவால்களைக் கடக்க சளைக்காது
செய்யும் முயற்சிகள்தான் அவளை மாமனிதராக்குகிறது. அந்தப்புள்ளியே தனிமனிதருக்குள் செயற்படும்
அரசியல் பிரக்ஞையை மட்டுமே ஒட்டிப்பேசும் முதிர்ச்சியான நாவலாக கோசலையை மாற்றுகிறது.
மட்டுப்பட்ட வாசக இடைவெளி
நாவலின்
முதன்மையான சிக்கலாக தெரிவது வாசக இடைவெளி இல்லாமல் வாசிப்புச் சுவாரசியத்தை முன்னிறுத்தி
எல்லாவற்றையும் சொல்லிவிடும் ஆசிரியரின் கதைசொல்லலைக் குறிப்பிடலாம். பாத்திரங்களின்
செயல், மனவுணர்வுகள் என எல்லாவற்றுக்குமான நியாயத்தையும் தன்னுரையாடல்கள், உரையாடல்,
சித்திரிப்புகள் என எல்லாவற்றையும் ஆசிரியரே சொல்லிவிடுகிறார். அதிலும் ஒவ்வொரு செயலுக்குப்
பின்னான நியாயத்தையும் அந்தப்பாத்திரமே நீண்ட உரையாடலாகத் தன்னுள் நிகழ்த்திக் கொள்வது
சற்று சோர்வளிப்பதாக இருந்தது. அது ஒருவகையில் வாசகப் பங்கேற்பை மட்டுப்படுத்துவதாக
இருந்தது. மகளின் மணத்தைத் தடுக்கும் அலங்காரவேலன், மனைவியை நிராகரிக்கும் ஜோதி ஆகியோர்
தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல் அத்தகையதாக இருந்தது.
தன்
உடற்குறையையும் அதையொட்டிய சிக்கல்களையும் எதிர்க்கொள்ளும் கோசலை அதனை வென்றெடுக்கும்
முயற்சியில் சமூகப்போராளியாக மாறிப் போகிறாள். உறவுகளால் புறக்கணிக்கப்படும் போதும்
உதாசீனம் செய்யப்படும் போதும் அதனைக் கடப்பதற்கான மல்லிகாக்கா, பூர்னிமா, மீனாள், சாம்பமூர்த்தி
என மாற்று உறவுகள் அவளுக்கு அமைந்து கொண்டே இருக்கின்றனர். அவளின் உடல்குறையென்பதும்
அப்படியாக உடலுக்குள் அமைந்துவிட்ட உறவாகவே இருக்கமுடியும். அதனுடனான, அவளுடைய உறவென்பது
நாவலில் முழுமையாக வெளிப்படவில்லை. அவள் உடலின் இயல்புகளாகவே உடற்குறையும் சொல்லப்படுகிறது.
புற உறவுகளின் அழுத்தம் அதிகமாக அவளை ஆட்கொள்ளும் சித்திரமே நாவலில் அதிகமும் இடம்பெறுகின்றன.
அவள் உடற்குறையை இன்னுமே அகவயமாக அணுகியிருக்கக்கூடிய இடங்கள் நாவலில் தவறவிடப்பட்டிருப்பதாகவே
புரிந்து கொள்ள முடிகிறது.
கோசலை
நாவல் முதன்மையாக வாசிப்பில் சரளத்தையும் சுவாரசியத்தையும் தருகிறது. சிடுக்கான மன
உணர்வுகளையும் அழகாகக் காட்சிப்படுத்தியவகையில் முக்கியமான நாவலாகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக