தண்ணீர் நாவல் வாசிப்பனுபவம் அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தப்போது தண்ணீர் சிக்கலைப் பற்றிய நாவலாகவே எண்ணினேன். பித்தளைத் தவலையொன்றின் அடியில் வண்டலாகப் படிந்திருக்கும் துருவேறிய கலங்கிய நீரை நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஆனால், இப்பொழுது அந்த நாவலை மீள்வாசிப்பு செய்கின்ற போது துருவேரிய நீர், கோடைக்காலத்துத் தூறல், பெருமழை, சாக்கடை நீர் எனத் தண்ணீரின் வண்ண மாற்றத்தையும் எல்லாவற்றிலும் தன்னை இருத்திக் கொள்கிற நீரின் தன்மையையும் ஒருங்கே கண்முன்னால் கொண்டு வருகிறது. சென்னை போன்ற பெருநகரொன்றின் ஒண்டு குடித்தனத்தில் தன் தங்கையுடன் ஜமுனா வாடகைக்கு இருக்கிறாள். சினிமாவில் நடிக்கும் ஆசையினால் பாஸ்கர் ராவ் எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவனிடம் சேர்ந்து தயாரிப்பாளர்களையும் வினியோகஸ்தர்களையும் சந்தித்து வருகிறாள். அவ்வாறான சந்திப்பில், அவர்களை மகிழ்விக்க பாலியல் சார்ந்த கேளிக்கைகளுக்கு இணங்குகிறாள். பாஸ்கர் ராவினால் ஜமுனா ஏமாற்றப்படுவதாகவே சாயா எண்ணுகிறாள். அலுவலகம் ஒன்றில் வேலை செய்கிறாள். அவளது கணவன் ராணுவத்தில் வேலை செய்கிறான். எப்பொழுதும்...