முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 தண்ணீர் நாவல் வாசிப்பனுபவம்

அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தப்போது தண்ணீர் சிக்கலைப் பற்றிய நாவலாகவே எண்ணினேன். பித்தளைத் தவலையொன்றின் அடியில் வண்டலாகப் படிந்திருக்கும் துருவேறிய கலங்கிய நீரை நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஆனால், இப்பொழுது அந்த நாவலை மீள்வாசிப்பு செய்கின்ற போது துருவேரிய நீர், கோடைக்காலத்துத் தூறல், பெருமழை, சாக்கடை நீர் எனத் தண்ணீரின் வண்ண மாற்றத்தையும் எல்லாவற்றிலும் தன்னை இருத்திக் கொள்கிற நீரின் தன்மையையும் ஒருங்கே கண்முன்னால் கொண்டு வருகிறது.

சென்னை போன்ற பெருநகரொன்றின் ஒண்டு குடித்தனத்தில் தன் தங்கையுடன் ஜமுனா வாடகைக்கு இருக்கிறாள். சினிமாவில் நடிக்கும் ஆசையினால் பாஸ்கர் ராவ் எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவனிடம் சேர்ந்து தயாரிப்பாளர்களையும் வினியோகஸ்தர்களையும் சந்தித்து வருகிறாள். அவ்வாறான சந்திப்பில், அவர்களை மகிழ்விக்க பாலியல் சார்ந்த கேளிக்கைகளுக்கு இணங்குகிறாள். பாஸ்கர் ராவினால் ஜமுனா ஏமாற்றப்படுவதாகவே சாயா எண்ணுகிறாள். அலுவலகம் ஒன்றில் வேலை செய்கிறாள். அவளது கணவன் ராணுவத்தில் வேலை செய்கிறான்.  எப்பொழுதும் நீடிக்கும் தண்ணீர் சிக்கலும் அக்காவின் சினிமா ஆசையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. அவளது மகன் முரளியை மாமா வீட்டில் வளரச் செய்கிறாள். மனப்பிறழ்வு அடைந்த தாயும், தாய் வழி பாட்டியும் மாமாவும் அவரது குடும்பமும் தனியே இருக்கின்றனர். ஜமுனாவின் குடியிருப்பைச் சுற்றிலும் வாழ்கின்ற மக்கள் தண்ணீருக்காகப் பெரும்பாடு அடைகின்றனர், கோடைக்காலத்தில் கைபம்பை விடாமல் அடித்து வரும் சொற்ப நீருக்காக அல்லாடுகின்றனர். பல மைல் தூரம் நடந்து சென்று பாத்திரங்களிலும், குடங்களிலும் நீரைக் கொண்டு வருகின்றனர். நீரின்மையால் துளையிட்டுத் தண்ணீர் கிணறு தோண்டுகின்றனர். உறை இறக்கிக் கிணறுகளை ஆழப்படுத்துகின்றனர். மழைக் காலத்தில் வீட்டில் கிடக்கும் பாத்திரங்களில் எல்லாம் நீர் சேமிக்கின்றனர். சாலைத் தெருவில் இருக்கும் கேபிள்கள், சாக்கடைகள், நீர்க்குழாய்கள் என ஏதாவதொன்றுக்காகத் தோண்டப்படுகிற பள்ளத்தால் சேறு நிறைந்து கிடக்கிறது. சாக்கடை நீரும் குடி நீரும் கலந்து வருகிறது. இவ்வாறாக நாவல் முழுவதுமே நீர் சிக்கல் விரவிக்கிடக்கிறது.

இந்த நீர் சிக்கல் மிகுதியிலும், மனிதர்கள் தங்களுக்கான வாழ்வைத் தகவமைத்துக் கொள்கின்றனர். இந்த நாவலின் மொத்த பாத்திரங்களையும் வாழ்க்கைக்குள் ஒழுங்கொன்றைக் கட்டமைக்க எண்ணுகிறவர்கள், வாழ்வுக்குள் தங்களைத் தகவமைத்துக் கொள்வோர் எனப் பிரிக்கலாம். கணவன் மகன் இணைந்து தனியாக வாழ வேண்டும் எனக் கறாரான நடுத்தர வாழ்வொன்றை எண்ணியப்படியே இருக்கிறாள் சாயா. அதற்கு நேர்மாறாக, வயதான நோயாளி கணவன், கரித்துக் கொட்டும் நோயாளி மாமியார், பணிவிடைகள், வேலைகள் என சாயா போன்ற கறாரானவர்களின் பார்வையில் வாழ்வதற்கான சொற்ப நியாயங்களையும் கொள்ளாத திச்சரம்மா போன்றவர்கள் வாழ்க்கைக்குள் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர். ஜமுனாவின் உள்ளொடுங்கிய பார்வையை திச்சரம்மா திட்டுகிறாள். பிறர் மீதான கருணையும் மேலான வாழ்வு என்ற எளிய நிறைவும் கொண்டு வாழ்வை அமைத்துக் கொள்கிறாள். நெருக்கடிகள் மிகுந்த வாழ்வில் கைகொள்ளும் தப்பித்தல்களாக இருந்தாலும், வாழ்வதற்கான நியாயம் என்பது எல்லாவற்றையும் தாண்டியதாக இருக்கிறது. தன் பிள்ளைகளின் பிரிவும் அவர்களின் போக்கை ஏற்றுக் கொள்ளாமலும் தன் சகோதரனுடனும் தாயுடனும் இணைந்து கொள்கிற ஜமுனாவின் தாய் மனப்பிறழ்வுக்கு ஆளாகிறாள்.  தன் திருமண வாழ்வின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட பயறு அரைக்கும் வேலையை இயந்திரம் போலத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாள். திருமணம், குடும்பம் என நேர்த்தியான வாழ்வொன்றை ஜமுனாவும் சாயாவும் அமைத்துக் கொள்ளவில்லை என்பதே அவளை மகள்களுக்கு எதிரானவளாக ஆக்கியிருக்கிறது, நோய்மையும் மகள்களின் பிரிவும் சேர்ந்து மனப்பிறழ்வடைந்தளாக்குகிறது. இந்த இரு வேறு மனநிலைகளின் ஊசலாட்டமே ஜமுனாவிடம் காண முடிகிறது. மெல்ல தான் வாழ்வதற்கான நியாயங்களை உருவாக்கியப்படி நகர்ந்து செல்கிறாள்.

ஜமுனாவின் தாயைப் போல ஆசாரம், ஒழுங்கு என உள்ளொடுங்கி போயிருக்கும் மனிதர்களையும் நிறைய இடங்களில் அடையாளம் காட்டுகிறார். வெகு தொலைவிலிருந்து நீரைப் பித்தளைக் குடத்தில் கொண்டு வருகிறாள் தெலுங்கு பிராமண விதவை கிழவி. அந்தத் தவலையைக் காலில் போட்டு மயங்கி விழுந்து விடுகிறாள். ஜமுனா அவளைப் பிடித்து ஆசுவாசப்படுத்துகிறாள். கீழே விழுந்த தவலையை யாரோ ஒருவர் எடுத்து வந்து தருகின்றனர். மற்றவர்களின் பிடியிலிருந்து தன்னை விலக்கித் தவலையிலிருந்த சொற்ப நீரையும் ஊற்றிவிட்டுச் செல்கிறாள். நோய்மையால் முடங்கி கிடக்கும் திச்சரம்மாவின் மாமியார் ஜமுனாவைக் கண்டு இரைகிறாள். படவாய்ப்பு வாங்கிதருவதாக ஜமுனாவை அழைத்துச் சென்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் பாஸ்கர் ராவே, உட்காரும் நாற்காலி மேல் கைகுட்டை ஒன்றை விரித்திருக்கிறான். இவ்வாறாகச் சமூகத்தில் தங்களுக்கான இடமென்று ஒன்றை உருவகித்துக் கொண்டு விடாப்பிடியாக நிற்கும் போலிப்பாவனைகளைச் சுட்டுகிறார்.

இந்த நாவலில் கதைமாந்தர்களின் தன்மைகளை மிக அசாதராணமாகப் பல இடங்கிளில் ஒரிரு சொற்களில் சொல்லிவிட்டுச் செல்கிறார். அந்த ஒவ்வொரு வரிகளுக்குப் பின்னால் மிகப்பெரும் சொற்களை இட்டு நிரப்பும் இடைவெளிகள் இருக்கின்றன. சாலை தெருவில் பள்ளம் தோண்டுபவர்களின் தினக்கூலியைக் கேட்டு ஏனென பரிதாபத்தோடு கேட்கும் போது ‘நாங்களெல்லாம் டெம்பவரரிதானே’ என்கிறார்கள். அதற்கு முன்பதாகத்தான், டெம்பவரரி ஆட்கள் முன்யோசனை இல்லாமல் பள்ளம் தோண்டுகின்றனர் என்ற வரி வருகிறது.  இன்னொருவரிடம் சம்பளம் வாங்கும் அனைவருமே எதோ ஒரு வகையில் வாழ்வுக்குள் சமரசம் செய்து கொள்பவர்களாகவே இருக்கின்றனர் என திச்ச்சரம்மா ஜமுனாவிடம் சொல்கிறாள். வாழ்வுக்குள் ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் சாயாவின் நடையைப் பார்த்து ‘ செருப்பின் குதிகால் உயரம் குறைவாக இருந்தால் இவ்வளவு நெளிவு இருக்காது’ என ஜமுனா எண்ணிக்கொள்கிறாள். கீழ் நடுத்தரவர்க்கது மக்களின் வாழ்வின் இக்கட்டுகள் நாவல் முழுதும் இழையோடுகிறது. மழை பெய்யும் இரவில் பாத்திரங்களில் நீர் சேமிக்க சென்று முற்றிலும் நனைந்து விடுகிற மனைவி, ஒன்று போலவே இருக்கும் தெருக்களின் வேறுபாட்டை உணர்கிற குழந்தைகள் என 1970களில் இருந்த சென்னை நகரின் குறுகலான தெருவொன்றுக்குள் நுழைந்த அனுபவத்தை இந்நாவல் தருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...