முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

இமயத்தியாகம் நாவல் வாசிப்பனுபவம்

 

எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய இமயத்தியாகம் நாவலை வாசித்தேன். என்னுடைய வளரிளம் பருவத்தில் ஜப்பானியர் ஆட்சிக்காலக் கொடுமைகளை வயது முதிர்ந்த பாட்டிகள் சில சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். விநோதமான தண்டனைகள், புரியாத ஒரிரு ஜப்பானிய சொற்கள், பஞ்சக்கால உணவு வகைகள், ஜப்பானியரின் உடைகள், பெரிய வாள்கள் ஆகியவற்றைச் சிறுவர்களுக்கே உரிய வியப்புடன் சொல்ல கேட்டிருக்கிறேன். பள்ளிப்பாட வரலாறு என்பதும் ஜப்பானியாராட்சியை இருண்ட காலக்கட்டமாகவே வகைப்படுத்துகிறது.  

 இந்த வரலாற்றை முப்பரிமாண அனுபவமாக இமயத்தியாகம் அளித்தது. ஜப்பானியர்கள் மலாயாவைக் கைபற்றுவதில் இருந்து நாவல் தொடங்குகிறது. மலாயா நிலப்பரப்பை முழுவதும் அங்குலம் அங்குலமாய் அளந்ததைப் போன்ற துல்லிய அறிவும், பிரிட்டன் படைகளின் பலத்தையும் வேவுபார்த்து முழுவதுமாய் அறிந்து வைத்திருக்கின்றனர். பாங்காக்கில் செயல்பட்டு வரும் இந்திய சுதந்திரச் சங்கத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்தித் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். அதன் நீட்சியாகவே, ராஷ் பிகாரி போஸ் தொடங்கிய ஐ.என்.ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தையும் கிழக்காசியாவைக் கைபற்றுவதற்கான முயற்சியில் இணைத்துக் கொள்கின்றனர். நாவல் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில், ஜப்பானியர் படைகளுக்கும் பிரிட்டன் மலாயா படைகளுக்கும் இடையிலான போரைச் சொல்லிச் செல்கிறார். போர் நடந்த இடங்கள், திசைகள், தேதிகள் எனத் துல்லியமான வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். பிரிட்டன் படைகளும் அதன் நேசநாட்டுப் படைகளும் ஜப்பான் படையிடம் சரணடைவதில் முதல் பாகம் முடிகிறது. இரண்டாம் பாகம், இந்தியச் சுதந்திரச் சங்கம், இந்தியத் தொண்டர் படை ஆகியவை இணைந்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்துப் படைப்பயிற்சி பெறுவதைக் குறிப்பிடுகிறது. மூன்றாம் பாகத்தில் மலாயாவிலிருந்து இந்தியாவின் கிழக்கெல்லையான பர்மிய நாட்டுக்குச் சென்று இந்தியத் தேசிய ராணுவத்தினர் செய்யும் போரின் சித்திரிப்பாகத் தொடங்குகிறது. அந்தப் போரில் ஏற்படுகிற பின்னடைவும் ஜப்பானியர் படைகள் சரணடைவதும் நேதாஜியின் மரணத்துடன் நாவல் முடிவடைகிறது. ஜப்பானியர் படைகளின் எழுச்சியுடன் மேலோங்குகின்ற இந்தியாவுக்கான ஆயுத வழியிலான விடுதலைப் போராட்டமும் அதன் வீழ்ச்சியையுமே நாவல் பதிவு செய்திருக்கிறது எனச் சொல்லலாம். இந்தப் பெருஞ்சித்திரத்தின் ஊடே மலாயாவில் காப்பார் கலகத்தில் பங்குபெற்றதற்காக நாடு கடத்தப்பட்டு தாய்லாந்தில் இருக்கும் இளங்கோ எனும் கதைமாந்தரின் கதைச்சரடு அமைகிறது. பிரிட்டன் இந்தியா படைகளிடம் பிரச்சாரம் செய்து இந்தியத்தேசிய ராணுவத்துக்குப் பக்கம் இணையச் செய்கிறான். தோட்டத்தில் இருக்கும் இளைஞர்களையும் படையில் சேர்க்கிறான். நேதாஜியின் மீதும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மீதும் பெருநம்பிக்கை வைத்து இயங்கி கொண்டிருக்கிறான். ஒரு இலட்சியவாதத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுததவனாகவே நாவலில் வருகிறான்.



இந்த நாவலுக்காக ஆசிரியர் பலரையும் நேர்காணல் செய்து, பல நூல்களையும் தரவுகளையும் வாசித்து அக்காலக்கட்டத்தினை நாவலின் பல இடங்களிலும் கண்முன் நிகழ்த்தியிருக்கிறார். அந்தக் கொந்தளிப்பான காலக்கட்டத்தை வரலாற்றுப்பதிவாக ஆக்க வேண்டும் என்ற உந்துதலே பல இடங்களில் வெளிப்பட்டது.தமிழ் சூழலில் வரலாறு என்பது பெரும்பாலும் வீரநாயகப் பிம்பமும் புளங்காங்கிதங்களுமாகவே இருக்கின்றன. இந்த நாவல் ஒருவகையில் நேதாஜி போன்ற பெருந்தலைவர்களை மட்டுமின்றி வரலாற்றின் முன் எளியவர்கள் எப்படி பொருள் கொள்ளப்பட்டிருக்கின்ரனர் எனும் மாற்று வரலாற்றைப் பதிவு செய்கிறது. இந்த நாவலில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்தியத் தேசிய ராணுவத்தின் மூலமாக மலாயா-சிங்கப்பூர் இந்தியர்களை இந்தியாவுக்கான விடுதலைப் போரில் உள்ளிணைக்கிறார். இந்தியாவைப் பார்த்திராத ஒரு தலைமுறையினரிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்துகிறார். கண்முன் பார்த்திராத தங்கள் முன்னோர்களின் நாட்டுக்காக அனைத்தையும் இழந்து படையில் ஆயிரக்கணக்கில் வந்து இணைகின்றனர். ரத்ததால் விண்ணப்பப்பாரம் எழுதுதல், நகைகளையும் பணத்தையும் போர் செலவினங்களுக்காகக் கொடுத்தல், வயதைக் கூட்டிச் சொல்லிப் படையில் பங்குபெறுதல் எனப் பித்துநிலைக்குச் சற்றும் குறையாத பல செயல்களைச் செய்கின்றனர். இந்திய விடுதலை எழுச்சி தரும் நேர்நிலையிலான பித்துச் செயற்பாடுகளைக் காண முடிகிறது.

போர் என்பது மனித மனத்தில் இருக்கும் அச்சம், ஐயத்தையும் ஊதிப் பெருக்குகின்றது. பிரிட்டன் படைகளில் இருக்கும் இந்தியப்படையினரைச் சரணடையச் செய்து இந்தியத் தேசிய ராணுவத்தில் சேர்வதற்காகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இந்தியப்படையினரிடம் இருக்கும் பிரிட்டன் படைகள் மீதான சந்தேகங்களையும் நிறைவின்மையையும் பிரச்சாரத்தின் மூலம் பெருக்குகின்றனர். கடுங்குளிரிலும் முறையான உணவின்மையாலும் போர்களத்தில் பலியாகிக் கொண்டிருக்கும் இந்தியராணுவத்தினர் அணிமாறுகின்றனர். பிரிட்டனுக்கு அடிமையானதைப் போல ஜப்பானுக்கும் அடிமையாகிவிடுவோம் எனச் சிலர் உள்ளூர எண்ணுகின்றனர். எனவே, இந்தியத் தேசிய ராணுவத்திலும் முழுமையான நம்பிக்கையும் ஈடுபாடும் இல்லாமல் இருக்கின்றனர். ராணுவத்தில் வந்து சேரும் தொண்டூழியர்களை இளக்காரமாக எண்ணுகின்றனர். நேதாஜி ஜப்பானியர்களுடன் சேர்ந்து இந்தியாவைக் கைபற்ற முனைகிறார் என்ற அச்சத்தை வானொலி வாயிலாக இந்திய மக்களுக்கு பிரிட்டன் பரப்புகிறது. ஐ.என்.ஏ படைகளால் பயிற்றுவிக்கப்பட்டு இந்தியாவுக்குச் செல்கின்ற உளவாளிகள் பிரிட்டனுக்கு ஆதரவானவர்களாக ஆகின்றனர். இந்தியாவின் எல்லையோர பூர்வக்குடி மக்களும் பிரிட்டனுக்கு ஆதரவாக உளவாளிகளாக இருக்கின்றனர்.

போர் என்பது அறுதியாக எந்த அதிகாரம் வலிமையானது என்பதை முடிவுசெய்வதற்கான முயற்சியாகவே இருக்கிறது. அதன் கருவிகளாக மட்டுமே சித்தாந்தங்கள் தேவைபடுகின்றன. இந்தியாவுக்கான விடுதலைப் போரை நிகழ்த்தும் ஐ.என்.ஏ வைக் கூட்டு சேர்ப்பதன் மூலம் கிழக்காசியாவைத் தங்கள் குடைக்குக் கீழ் கொண்டு வரும் கனவை ஜப்பான் கொண்டிருக்கிறது. ஐ.என்.ஏ படைகளுக்குச் செய்யும் போர்தளவாட உதவிகள், போர்பயிற்சிகளின் பின்னால் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வேட்கையைக் கொண்டிருக்கிறது. இந்தியச் சுதந்திரச் சங்கத்தின் சேமிப்புக் கிடங்கில் இருக்கும் அரிசி மூட்டையில் இருக்கும் சுதந்திரச் சங்கத்தின் முத்திரையை ஜப்பானிய வீரனொருவன் வெட்டுகிறான், இந்தியத் தேசிய ராணுவத்தின் அதிகாரிகளை தங்களுக்கு மரியாதை செலுத்த ஜப்பானிய கீழ்நிலைத்தளபதிகள் கட்டாயப்படுத்துகின்றனர். அதைப் போல ஐ.என்.ஏவின் சேர்ந்திருக்கும் தொண்டூழியப்படையினரை மூத்த அதிகாரிகள் தங்களுக்குக் கீழானவர்களாக நடத்துகின்றனர். விடுதலை என்னும் இலட்சியவாதம் இவர்களனைவரையும் பிணைக்கிறது.

போர்சித்திரங்களைத் தாண்டி இந்தியாவுக்கு வெளியே நிகழ்ந்திருக்கும் விடுதலைப் போரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை இந்நாவல் அளிக்கிறது. இந்தியத் தேசிய ராணுவத்தின் உருவாக்கம், சுபாஸ் சந்திரபோஸின் பங்களிப்பு ஆகியவற்றை விரிவாக முன்வைக்கிறது. அந்த வரலாற்றை ஆவனப்படுத்தும் தன்மையும் கூட புனைவாகக் கூடிய சில தருணங்களை இந்நாவல் தவறவிட காரணமாக அமைகிறது. பெருங்காடுகளில் நிகழும் போரில் காடுகள், வனவிலங்குகள் குறித்த விவரனைகள் மிகக் குறைவாகவே அமைகின்றன. பிரிட்டனின் தோல்வியால் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாட்டிலிருந்து மலாயாவுக்கு வருகின்ற படைகள் நிர்க்கதியான சூழலுக்கு ஆளாகின்றனர். ஆஸ்திரேலியா படைத்தளபதி இந்தோனேசியாவுக்குத் தப்பித்துச் செல்கின்றனர். இவ்வாறாகச் சூழல் நெருக்கடியால் சிக்கிக் கொள்கின்றவர்களைப் பற்றிய விவரிப்பு தவறவிடப்பட்டிருக்கிறது. வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் முயற்சியால் சில கதைமாந்தர்களைச் சம்பவங்களைச் சொல்வதற்கான தூதுவர்களாகவே இருக்கின்றனர்.

வெற்றியடைந்தவர்களின் வாழ்வையும் போராட்டத்தையுமே கவனப்படுத்தும் வரலாற்றுச் சூழலில் தங்கள் நம்பி ஏற்ற இலட்சியவாதம் ஒன்றுக்காக போரிட்டவர்களையும் அதன் வரலாற்றுச்சுவடுகளையும் புனைவனுபவமாக எழுத்தாளர் அ.ரெங்கசாமி கடத்தியிருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...