எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் நன்கு பழகிய வாழ்வனுபவம், சந்தித்த மனிதர்கள், பழகிய சூழல் ஆகியவற்றையே தங்கள் எழுத்துக்கான மூலப்பொருளாக்குவார்கள். அவ்வாறான பதிவுகளில் நினைவேக்கம் என்பதும் தவிர்க்க முடியாததாக இருக்கும். தான் பெற்ற அறிவனுபவத்தைக் கொண்டு இன்னொரு காலத்தை எழுத்தில் கொண்டு வரும் போது அந்தக் காலக்கட்டத்தின் மீது மெல்லிய ரொமான்டிசிசைஸ் தன்மை எழுந்துவிடுகிறது. அவ்வாறாக இன்னொரு காலக்கட்டத்தின் மேம்பட்ட பக்கங்களைக் காட்ட வேண்டாமென்பதில்லை. ஆனால், அவை அனுபவச் சித்திரிப்பில் தன்னிகழ்வாக எழ வேண்டும். நீண்டகாலத்திற்குப் பின் எழுத்தாளர் அருண்மொழிநங்கை வலைப்பூவில் எழுதத்தொடங்கிய அனுபவப்பதிவுகளும் அவரின் பால்யக்காலம் தொட்டு அமைந்த நிகழ்வுகள், பழகிய மனிதர்களால் ஆனதாகவே இருந்தது. ஆனாலும், ஒவ்வொரு அனுபவப்பதிவும் துருதுருப்பான இளஞ்சிறுமி ஒருத்தியின் அகம் புறச்சூழலைப் பரவசத்துடன் எதிர்கொண்டு பரிணமிப்பதன் அனுபவத்தை அளித்தது. அவரின் விரிவான இலக்கிய வாசிப்பும் வாழ்க்கை அவதானிப்புமே இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. அவ்வாறாக, வலைப்பதிவில் வெளிவந்த கட்டுரைகளில் அவரின் வாழ்வனுபவத்தையே முதன்ம