முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி உருகுவதில்லை வாசிப்பனுபவம்

எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் நன்கு பழகிய வாழ்வனுபவம், சந்தித்த மனிதர்கள், பழகிய சூழல் ஆகியவற்றையே தங்கள் எழுத்துக்கான மூலப்பொருளாக்குவார்கள். அவ்வாறான பதிவுகளில் நினைவேக்கம் என்பதும் தவிர்க்க முடியாததாக இருக்கும். தான் பெற்ற அறிவனுபவத்தைக் கொண்டு இன்னொரு காலத்தை எழுத்தில் கொண்டு வரும் போது அந்தக் காலக்கட்டத்தின் மீது மெல்லிய ரொமான்டிசிசைஸ் தன்மை எழுந்துவிடுகிறது. அவ்வாறாக இன்னொரு காலக்கட்டத்தின் மேம்பட்ட பக்கங்களைக் காட்ட வேண்டாமென்பதில்லை. ஆனால், அவை அனுபவச் சித்திரிப்பில் தன்னிகழ்வாக எழ வேண்டும். நீண்டகாலத்திற்குப் பின் எழுத்தாளர் அருண்மொழிநங்கை வலைப்பூவில் எழுதத்தொடங்கிய அனுபவப்பதிவுகளும் அவரின் பால்யக்காலம் தொட்டு அமைந்த நிகழ்வுகள், பழகிய மனிதர்களால் ஆனதாகவே இருந்தது. ஆனாலும், ஒவ்வொரு அனுபவப்பதிவும் துருதுருப்பான இளஞ்சிறுமி ஒருத்தியின் அகம் புறச்சூழலைப் பரவசத்துடன் எதிர்கொண்டு பரிணமிப்பதன் அனுபவத்தை அளித்தது. அவரின் விரிவான இலக்கிய வாசிப்பும் வாழ்க்கை அவதானிப்புமே இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. அவ்வாறாக, வலைப்பதிவில் வெளிவந்த கட்டுரைகளில் அவரின் வாழ்வனுபவத்தையே முதன்மையாக முன்வைக்கும் 22 கட்டுரைகள் அடங்கிய பனி உருகுவதில்லை எனும் நூல் சீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. 



தமிழில் பெரும்பாலும் வெளிவரும் புனைவுகளிலும் திரைப்படங்களிலும் பெண்களின் சிறுவயது தொடங்கி பருவமடைந்து உலகைக் காணும் அகச்சித்திரிப்புகள் மிகக் குறைவாகவே வாசிக்கவும் காணவும் முடியும். ஆண் பாத்திரத்தின் அகத்தையே முதன்மையாகச் சித்திரிக்கும் படைப்புகளில் பெண்களும் ஏதேனும் முக்கிய தருணங்கள் ஒன்றிரண்டில் தலைகாட்டிச் செல்வர். அழியாத கோலங்கள், ஆட்டோகிராப், அழகி என ஆண் மனத்தில் பெண் என்னவாக உருவாகி வருகிறாள் என்பதான வணிகப்படங்களே பருமடைந்த பெண்களைப் பற்றிய சித்திரமாக இருக்கிறது. அதுவும் முற்றிலும் ஆண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த எனக்கு பெண்களின் உலகம் என்பது குறிப்பிட்ட வயதைத் தாண்டியவுடன் பெண் குடும்பப்பொறுப்புகளுக்குப் பழக்கப்படுகிறாள் என்ற சித்திரம் இருந்தது. குட்டி அருணாவும் குடும்பப் பொறுப்புகளுக்குப் பழக்கப்படுத்தப்படுகிறார். ஆனால், அதனை எல்லா வகையிலும் அருணாவின் உள்ளம் திணிப்பாகவே உணர்கிறது. அதைத் தாண்டிய அறிதலின் பரவசமும் புலன் கூர்மையும் மிகுந்த பால்யமே அமைகிறது. காணும் பொருட்களுக்கெல்லாம் உணவின் நிறத்தை இடுவதில் தொடங்குகிறதெனலாம். தவிடு படிந்த பட்டாணியைப் பிஸ்கட் நிறத்தில் இருந்தார், பாசிப்பருப்பு வண்ணத்தில் சேலை, காபி நிறம், ஸ்ட்ராபெர்ரி நிறத் தாவணி எனத் தான் காணும் பொருட்களுக்கு இன்னொன்றுடன் தொடபுபடுத்திச் செல்கிறார். காவிரிக் கரையை ஒட்டிய பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்குச் செல்லும் போது காவிரி பாயும் நிலத்தில் இயல்பாகவே மேலோங்கியிருக்கும் கர்னாடகச் சங்கீத ரசனை எழுகிறது. பின்னாளில், தன் கணவருக்கும் இசை ரசனையை எழச் செய்யும் போது மஹாராஜபுரம் சந்தானத்தின் கீர்த்தனைகளைக் கேட்டதாகச் சொல்லியிருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பக்கத்திலும் மகாராஜபுரம் சந்தானத்தின் சில பாடல்களைப் பரிந்துரைத்தைக் கண்டிருக்கிறேன். அதன் பிறகே மகாராஜபுரம் சந்தானத்தின் பாரதியார் கீர்த்தனைகளை நானும் தொடர்ந்து கேட்டேன். ஆசை முகம் மறந்து போச்சே, மோகத்தைக் கொன்று விடு எனக் கம்பீரமான குரலொன்று இழைந்து பாடுவதைக் கேட்பது பிடித்திருந்தது. இந்தப் புத்தகத்தில் வெளிவராத கிஷோரி அமோன்கரின் பாடல் பரிந்துரை, ஜாகிர் உசேனின் தபேலா கச்சேரிக் காணொளி கொண்ட இசைரசனைப் பதிவையும் வாசித்துக் காணொளிகளைச் செவிமடுத்தேன். முதல் தடவை கேட்டப்போதே கிஷோரியின் குரலில் எதோ சுத்திகரிப்பு ஆற்றல் இருந்தைப் போன்றிருந்தது. ஜாகிர் உசேனின் தபேலாவில் அருண்மொழி குறிப்பிட்டிருந்த உச்சத்தை மட்டுமே கேட்பதற்காகக் காணொளியை பத்து வினாடியாக நகர்த்திக் கொண்டே வந்தேன். அந்த உச்சத்தை மட்டுமே கேட்டப் பிறகு முழு கச்சேரியையும் கேட்காத குற்றவுணர்வொன்று தோன்றியது. முதலிலிருந்தே இறுதி வரையில் கச்சேரியைக் கேட்டேன். நாதஸ்வர மேளம், உறுமி போன்ற தோல் கருவிகளில் கணம் தோறும் அதிர்வு எழுந்து கொண்டே இருக்கும். இந்தக் காணொளியில் உச்சத்திற்குப் பிறகு ஒரு சில நிமிடங்களுக்குத் தபேலாவிலிருந்து பெரிய ஒலியொன்றும் வரவில்லை. ஆனால், உச்சத்திற்கு பிறகு தபேலாவில் இசை விடாமல் கேட்டுக் கொண்டிருப்பதாகவே இருந்தது. ஆனால், அருண்மொழியின் கட்டுரையோடு வாசிக்கும் போது அந்த இசையின் நுட்பத்தை அறிந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. வடிவேலு மாமாவைப் பற்றிய பதிவில் வெளிப்படும் வடிவேலு மாமாவின் ஆளுமையில் வெளிப்படும் அபாரமான நகைச்சுவையின் பின்னால் வாழ்வில் வெளிப்படும் துயர் காவியத் துயராகவே மாறிவிடுகிறது. மனிதர்களுக்குள் இருக்கும் பலவிதமான வேறுபாடுகளுக்கிடையே கூட்டுவாழ்வொன்று அமைவதை வேலிகள் பதிவில் சொல்கிறார். நுரை எனும் பதிவில் விஜயா அத்தையைப் பெண் பார்க்கும் படலத்தின் தயாரிப்பு மிக அமர்க்களமாகத் தொடங்குகிறது. அந்தத் தயாரிப்பில் உள்ளூர சிறு உறுத்தலொன்று எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அந்தச் சூழலை எதிர்கொள்ளப்போகும் மகிழ்ச்சி அனைத்தையும் சிறியதாக்கி விடுகிறது. அலட்சியமாக இடப்படும் கோலத்தைக் கூட மற்ற ஏற்பாடுகள் பின்னுக்குத் தள்ளிவிடுவதைப் போல. அவையெல்லாம் கூரடைந்துதான் இறுதியில் சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை ஏற்படுகிறது. முழு நிறைவு என்பது எந்த மங்கல நிகழ்ச்சியிலும் முழுதும் ஏற்படாமல் ஒரு சிறு குறைவு விடுவதைப் பற்றி ஜெயமோகனுடைய கதையில் வாசித்த நினைவும் எழுந்தது. இப்படியாக, ஒரு சிறுகதைக்கே உரிய வகையில் வாசக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் நுண் தருணங்களைச் சித்திரிக்கிறார். பனி உருகுவதில்லை பதிவில் சிறு வயதில் ரஷிய நிலமும், கம்யூனிசமும் மீது இருந்த ஆதர்சத்தைச் சொல்கிறார். பனி விறைத்துச் சாகவும் செய்யும், உணவை இறுகவும் செய்யும் என்றும் சொல்லும் போது மனத்தில் பனியின் மீது கார்ட்டுன்களும் படங்களும் பார்த்தும் உருவான பரவசத்தின் பின்னான குரூரத்தையே மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பொதுவாகவே, அரசியல் சார்ந்த செய்திகளில், நடப்புகளில் பெண் குழந்தைகளின் அகம் ஈடுபடாமலே பெற்றோர்கள் வளர்க்கிறார்கள். அதற்கு மாறாக, தந்தையின் குணநலனால், சிறுவயது அருணாவுக்கு, இந்தியா மட்டுமின்றி உலக அரசியலோடு கோட்பாடு அடிப்படையிலும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அந்த அரசியல் புரிதலோடு ஒரு புரட்சியாளர் ஆகவேண்டுமென்கிற முனைப்பும் உடனிருந்திக்கிறது. ஆனால், பின்னாலில் தன் அகம் பயணிக்கும் செல்திசையை உணர்ந்த பின் அது முதிரா ஆசை என்றே உணர்ந்து கொள்கிறார். இருந்தும், சோவியத் ரஷ்யா உடைந்ததும் உள்ளூர வருத்தமடைகிறார். ஆனால், அந்தக் கனவின் மீது கொண்டிருந்த ஆசை என்றுமுள்ளதென அடையாளம் காண்கிறார். இந்தப் பதிவுகளில் கடந்துவிட்ட காலத்தைப் பற்றிய நினைவேக்கம் மேலோங்கவில்லை. அந்தக் கடந்துவிட்ட காலத்தில் அடைந்த உணர்ச்சிகள் கைதொடும் உயரத்தில் அவ்வாறே இருப்பதாகவே ஒவ்வொரு பதிவிலும் உணர முடிகிறது. ஒளியும் இருளும் பதிவில் வயலட் பொற்கொடி ஜேனட் தமயந்தி உடன் இருந்த பொழுதுகள் அவ்வாறே மனத்தில் பதிந்துவிடுகிறது. இந்தப் பதிவுகளில் சித்திரிக்கப்படும் மனிதர்களும் வாழ்வின் வெவ்வேறு இயல்புகளின் உருவகங்களாகவே மனத்தில் எழுகிறார்கள்.ஆப்கானிஸ்தானில் போர்வீரர்களாக இருந்த இனப்பிரிவொன்றைச் சேர்ந்தவர் பின்னாளில் நாடோடிகளாக இந்தியாவுக்குள் நுழைந்து தென்னிந்தியாவின் சின்னஞ்சிறு கிராமமொன்றில் கண் தெரியாத மனைவியுடன் அரசமரத்து நிழலில் ஏவும் பணிகளைச் சிறுதொகைக்காகச் செய்கிறார். கண்ணில் புரை விழுந்து எழுந்து நடக்க முடியாத மனைவிக்கு எல்லா பணிவிடைகளையும் செய்கிறார். பின்னாளில் இன்னொரு மனைவியைத் திருமணம் செய்த பின் அவளும் முதல் மனைவிக்கு அவளின் வசைகளைத் தாண்டி பணிவிடைகள் செய்கிறாள். இவ்வளவு தூரம் தாண்டி வந்து கடுமையான உடலுழைப்பு மேற்கொண்டு அவளை ஏன் பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு வகையில் பட்டாணி இன்னும் உயிர்த்திருப்பதற்கும் வாழ்வதற்குமான பொருளையும் நம்பிக்கையையும் மனைவியே வழங்குகிறாள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த நூலில் ஒரு காலக்கட்டத்தின் அன்றாடமும் மனித நடவடிக்கைகளும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. விண்கலம் விழுந்து நொறுங்குவதை ஊர் எதிர்கொள்ளும் தருணம் மொத்த சூழலுமே அடையும் களேபரம் அன்றாடத்தை விஞ்சும் சாகசத்துக்கான விழைவைக் காட்டுகிறது. அவர் சிறு வயதில் சந்தித்த பெண்கள் ஆளுமைகளாகத் திரண்டு வருகின்றனர். ‘ ஒலகத்துல ஏதாவது பிடிமானம் வேணுமில்லடி…அதுதான் இந்த பைபிள்’ எனக் குடிநோயாளி கணவனிடத்திலிருந்து விலகி ஊழியத்தில் ஆசுவாசம் தேடுகிறார் டெய்சி பெரியம்மா. கணவன் இழந்து இரு பெண் பிள்ளைகளைக் கட்டுக்கோப்பாக வளர்க்கும் தையலாசிரியை பிலோமினா, குடும்பச் செலவுகளுக்கு இடையில் சிறு சிறு பிடித்தம் செய்து சேமித்த பணத்தை அம்மாவுக்கு அனுப்பும் அம்மா என ஒவ்வொருவரும் புற அழுத்ததால் பெண்கள் உன்னதங்களைத் தொடுகின்றனர். இதற்கு மாறாக, தன் ரசனையால் தனக்கான உலகொன்றை ராஜம்மா பாட்டி உருவாக்குகிறார். அவ்வாறே சிறுவயது அருணாவும் தன்னைச் சுற்றிலும் தன் ரசனைகளாலும் மனிதர்களைத் தன்னை நோக்கித் திருப்புகிறார். அத்தை திருமணமானவுடன் தான் புறக்கணிக்கப்படுவதாக எண்ணும் அருணா கழுத்தில் இருக்கும் சங்கிலியில் தொங்கும் அன்னப்பறவையைக் கடித்து ஒன்றாக்குகிறார். அது புறக்கணிப்பைத் தாங்க முடியாததான் சிறுமியின் எதிர்ப்புணர்வு. கறாரான மனிதரான அப்பாவை எவ்வாறு வழிக்குக் கொண்டு வருவது என்றும் தெரிந்து வைத்திருக்கிறார். இந்த நூலின் வாசிப்பனுபவம் நாவலொன்றை வாசித்த உணர்வை அளித்தது. ஒரு நல்ல நாவல் வாசிக்கையில் ஏற்படும் நிகர் வாழ்வுடன் இணைந்து விரியும் தரிசனத்தை இந்நூல் அளித்தது. இந்த நூலில் சித்திரித்த மனிதர்கள் எதோ ஒருவகையில் நான் பார்த்த கேட்ட வாழ்வின் மனிதர்களையும் இயல்புகளையும் சூழலையும் நினைவுறுத்திச் செல்வதாக அமைந்திருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற