ஜெயமோகன். எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் தமிழின் தலைச்சிறந்த நாவல்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்ட ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி எனும் நாவலை வாசித்தேன்.
இரண்டாம் உலகப்போரின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் தென்கிழக்காசியப் பகுதிகளிலிருந்த சூழலைப் பின்னணியாகக் கொண்டு பாண்டியன் எனும் இளைஞனின் மனவோட்டத்தையும் சாகசச்செயல்களையும் நாவல் சித்தரித்துச் செல்கிறது. பாண்டியனின் சாகசச்செயல்களை மட்டுமே கருத்தில்கொண்டால் ஒரு அதிநாயகனின் நாவலாகக் கூடத் தோன்றக்கூடும். ஆனால், ஒவ்வொரு செயலாற்றும் போதும் உள்ளூர கொள்ளும் சலிப்பின் காரணமாய் நிலையற்று நகர்ந்து கொண்டே இருக்கும் இளைஞனின் கொந்தளிப்பான அகத்துடனான பயணமாக இந்நாவல் அமைந்திருந்தது. ஒவ்வொரு செயலுக்கான பயணத்தின் போதும் மனத்தில் தோன்றுகின்ற பால்யக்கால நினைவெழுச்சி, அறிவு, அனுபவம் ஆகியவற்றால் அடையும் உள்ளூணர்வின் குழப்பங்கள், செயலின் பொருளின்மையால் உண்டாகும் சலிப்பு, உறவு, வணிகம், கேளிக்கை என உலகியல் இன்பங்கள், கடமைகள் அத்தனையும் தாண்டும் போது நிகழ்த்தும் தன்னுரையாடல், உரையாடல்கள் என நாவல் விரிகிறது. இன்னொரு வகையில், சமகால வாழ்வுடன் பழந்தமிழிலக்கியத்தில் சாரமாக நிலைபெற்றிருக்கும் அறவுணர்வுகளுடான விவாதமாக நாவல் புதிய திறப்புகளை அளிக்கிறது.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர் மேடான் நகரைக் கைபற்றுகின்றனர். அந்தக் காலக்கட்டத்தில் மேடான் நகரில் இருக்கும் அன்னெமெர் வட்டிக்கடையில் அடுத்தாளாகப் பாண்டியன் பணிபுரிகிறான். வணிக உலகின் கணக்குகள், தங்களுக்கான கேளிக்கைகள் என மிகச்சிறு உலகில் வாழும் மற்றவர்களிலிருந்து பாண்டியன் தமிழிலக்கிய அறிவு, இளமைத்துடிப்பு, செயலூக்கம் ஆகியவற்றால் வேறுபட்டிருக்கிறான். ஜப்பானியரின் வருகையும் வெளியுலகத் தொடர்பைத் துண்டித்து விடுகிறது. டச்சுப் படைகளின் தோல்வியும் ஜப்பானியர் வருகையும் சேர்ந்து உள்ளூரில் இருந்து வரும் சுதந்திர எழுச்சியுடன் சேர்ந்து கொள்கிறது. ஜப்பானியர் வருகையும் டச்சுப்படையினரின் தோல்வியும் சேர்ந்து அதிகாரமற்ற தற்காலிகச் சூழலொன்று நிலவுகிறது. மக்கள் விடுதலையுணர்வோடு ஜப்பானியரை வரவேற்கின்றனர். கடைகளில் கொள்ளையடிக்கும் போதும் மெர்டேக்கா எனச் சுதந்திர முழக்கம் எழுகிறது. பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். அரசதிகாரம் அற்றுப் போகும் சிறு தருணத்தில் மக்கள் வெளிப்படுத்தும் வன்முறை மனிதர்களின் ஆதியுணர்வைக் காட்டுகிறது. ஜப்பானியர்கள் கொள்ளையடித்தவர்கள் சிலரின் தலையை வெட்டி மக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்துகிறார்கள். அந்தக் காட்சி ஏற்படுத்தும் அச்சவுணர்வில் திருடியவர்கள் தலைதெறிக்க ஒடுகிறார்கள். புதிய அதிகாரம் ஒன்று எழும் தருணமது.
போரின் போது வீண் வதந்திகள் தோன்றி வணிகர்கள் தங்களின் அச்சத்தை வளர்த்துக் கொள்கின்றனர். ஆனாலும், போர் சூழலில் எப்படியேனும் வாழ்வை நடத்த வேண்டுமென்ற வேட்கை அவர்களுக்குள்தான் மிகுதியாக இருக்கின்றது. வட்டிக்கடைகளில் பணிபுரியும் சிலருடன் சேர்ந்து மேடானிலிருந்து சீனர்களால் தயாரிக்கப்பட்டுச் செலுத்தப்படும் தொங்கான் எனும் பாய்மரக்கப்பலில் பினாங்குக்குப் பாண்டியன் பயணம் செய்கிறான். அந்தப் பயணத்தினூடே, வட்டிக் கடைப் பணியாளர்களின் பேச்சிலிருந்து வட்டித்தொழில் செய்யும் வியாபாரிகள் மெடானிலும் மலேயாவிலும் செலுத்தி வந்த ஆதிக்கத்தைக் காண முடிகிறது. அதே சமயத்தில் அளவற்ற போகவுணர்வு நிரம்பிய வாழ்வினால் வீழ்ச்சியடைந்து போன வியாபாரிகளைப் பற்றியும் நாவல் பேசுகிறது. பொருள் சேர்க்க வட்டித்தொழில் நடத்த கடல் தாண்டி குடும்பத்தைத் தூரநாட்டில் விட்டு புதிய நாட்டின் அரசியல் சூழலுக்கேற்ப நடந்து கொள்ளும் வட்டித்தொழில் ஈடுபடுவோரின் இன்ப நுகர்வு மிகுந்த வாழ்வு பற்றிய பேச்சு கடற்பயணத்தில் நிகழ்கிறது. அவர்களின் வியாபாரக் கணக்குகள், இன்ப நுகர்வுக்குப் பின்னால் இருக்கும் உறவுகளின் மீதான அன்பு மேலிடும் தருணமாக ஆண்டியப்பன் வியாபாரத்துக்குச் செல்லு முன் தம் இளைய மகள் வளையல் கேட்டாள் என்பதற்காக அடித்து விட்டதை எண்ணி வருந்துவதைச் சொல்லலாம். கடற்கொந்தளிப்பில் உயிரச்சம் மிகுந்த சூழலில் தம் மகள் அப்பூ,,,வளவி…அப்பூ வளவி எனக்கேட்டு அழுததை எண்ணி வருந்துகிறார். ஒவ்வொரு பயணத்தின் போதும் ஏற்படுகிற உயிரச்சம் வாழ்வில் அரியவையாக நிகழ்ந்ததையும் பிரிந்த உறவுகளையும் எண்ணிப் பார்க்க செய்கிறது.
பினாங்குக்குச் சென்ற பின் ஐ.ஏன்.ஏவில் பயிற்சி பெற்றுப் படைப்பிரிவில் லெப்டினன்டாகப் பணி புரிகிறான். படைப்பிரிவில் இருக்கும் வட இந்தியர்/தென்னிந்தியர் எனும் நுட்பமான வேறுபாட்டை உணர்கிறான். அதன் பின்னணியில் நிகழும் கலகத்தில் பதவி பறிக்கப்பட்டுச் சிறைவைக்கப்படுகிறான். பின்னர், சிங்கப்பூருக்குச் சென்று நேதாஜி இடும் ரகசியப்பணியொன்றைச் செய்கிறான். போர் முடிவுறும் தருவாயில், தாய்லாந்துக்குச் சென்று வணிகம் புரிகிறான். அங்கிருந்து மெடான் நகருக்குச் சென்று அங்கிருக்கும் உள்ளூர் கம்யூனிஸ்டு இயக்கங்களுடன் சேர்ந்து இந்தோனேசியா சுதந்திரத்துக்காகப் போராடுகிறான்.
மெடானிலிருந்து பினாங்கு, சிங்கப்பூர், சயாம், மெடான் எனப் பாண்டியன் பயணிக்கும் திசை நம்மையும் இழுத்துச் செல்கிறது. உயிரச்சம், வாழ்வின்பங்கள், உறவுத்தளை என எதனாலும் கட்டப்படாத சுதந்திர மனிதனாகப் பாண்டியனின் பாத்திரம் அமைந்திருக்கிறது. இந்த நாவல் நெடுக விலைமாதர்களின் சித்திரிப்பு அமைந்திருக்கிறது. மதுரையிலிருந்த விலை மாதர் தெருக்கள், பினாங்கிலும் மெடான் நகரிலும் இருந்த விலைமாதர்கள் என நிறைய இடங்களில் வருகிறார்கள். போர் ரகசியம் பரிமாறும் இடமாக, உளவாளிகளாக, உடல் வழியே அகத்தைக் கண்டடைபவர்களாக எல்லாம் அவர்கள் இருக்கிறார்கள்.
அன்றைக்கும் தமிழர்களிடையே இருந்து வந்த மொழி, பண்பாடு குறித்த பெருமிதங்களை எல்லாம் நாவலாசிரியர் பாண்டியனின் உரையாடல்களின் வழியே கேள்விகுட்படுத்துகிறார். தமிழில் கூறப்பட்டுவரும் ஒவ்வொரு பெருமைக்கும் இணையாக அல்லது அதற்கும் விஞ்சியதான பெருமைகள் உலகின் தொல்பண்பாடுகளில் உள்ளதெனச் சுட்டுகிறார். உலகின் ஒவ்வொரு மூலையில் இருக்கும் நாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்ற எண்ணம் இரண்டாம் உலகப்போரின் போதே மேலோங்குகிறது. அந்தச் சூழலில், தமிழர்களின் போலிப்பெருமிதங்களை விமர்சனம் செய்வதன் மூலம் உலக மாந்தன் எனும் இலட்சியப்பாத்திரமாகப் பாண்டியனைப் படைக்கிறார்,
இந்த நாவலின் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் சட்டென்று சிந்தனைத் தெறிப்பாக தோன்றுகின்ற பழந்தமிழிலக்கிய வரிகளும் புதிய திறப்புகளை அளிக்கின்றன. இலக்கியத்தை ஆழ்ந்து பயின்று நிகழ்வாழ்வின் ஒவ்வொரு சூழல் பொருத்தப்பாட்டுக்கும் ஏற்ப அவற்றைத் தொடர்புறுத்திச் சிந்திக்கச் செய்வது இலக்கியத்தைப் பயில்வதற்கான சிறந்த முறையாக இருக்கிறது. ஜப்பானியர் சரண்டைந்து பிரிட்டானியர் திரும்பி வரப்போகும் நிலையில் இந்தியத் தேசிய ராணுவத்தின் தளபதி காலிஸ்குஸ்மான் ஜப்பானின் வாழைத்தார் நோட்டைத் தரும் போது பணத்தின் செல்லுபடியை ஒட்டிச் செல்காலம் எல்லாம் செலுத்தினோம் அல்காலம் கல்லானோம் செம்பானோம் என்ற வரியைப் பாண்டியன் சொல்கிறான். சோழர் காலத்துக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள் என நம்பப்படும் இரட்டைப்புலவர்களின் பாடல் என நம்பப்படுகிறது. ஒருவர் கேள்வி கேட்க மற்றவர் பதில் சொல்வதான பாடல்களில் ஒன்று. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல காரணங்களால் மேலாதிக்கம் பெறும் சமயம், அரசு, பொருள் என அனைத்துக்கும் செல்காலம், அல்காலம் என இரு காலக்கட்டங்கள் இருக்கின்றன. அதன் ஆதிக்கம் குறைகின்ற போது அல்காலம் தொடங்கி அவை வெறும் வரலாற்றில் செம்பாகவும் கல்லாகவும் சாட்சிகளாக உறைந்துவிடுகிறது. அப்படி ஒரு காலக்கட்டத்தின் ஆதிக்கம் விலகி மற்றொரு ஆதிக்கம் நிலைபெறுகிற அல்காலத்தையும் செல்காலத்தையும் புயலிலே ஒரு தோணி நாவல் பேசுகிறது. அல்காலமும் செல்காலமும் தற்காலிகமானவையே; அவற்றுக்குப் பின்னால் மனித இருப்பைத் தொடர்ந்து முன்னகர்த்தி வரும் பல நூறு விசைகளில் ஒன்றைப் பிரதிநிதிக்கும் பாத்திரமாகப் பாண்டியன் படைக்கப்பட்டிருக்கிறான்.
யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...
கருத்துகள்
கருத்துரையிடுக