சை.பீர் முகம்மதுவின் சிறுகதைகள் வாசிப்பனுபவம் எழுத்தாளர் சை.பீர் முகம்மதுவின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். 2008 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 20 சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. சை.பீர் முகம்மதுவின் கதைகளில் கதைசொல்லியின் குரல் உரத்து ஒலிக்கிறது. கதைக்குள் இந்த உரத்தக் குரல் சில இடங்களில் சமூகத்தின் பொது மனநிலையை விமர்சனம் செய்வதாகவும் அதையே நகல் செய்து இறுதியில் அதிலிருந்து நழுவி உணர்வெழுச்சித் தருணங்களைக் கண்டடைவதாகவும் அமைந்திருக்கிறது. சை.பீர்.முகம்மதுவின் கதைகளின் பொதுத்தன்மையாக கதையின் இறுதியில் நிகழ்ந்துவிடும் உணர்வெழுச்சித்தருணங்களையே குறிப்பிடலாம். தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் கதையில் தமிழ்நாட்டிலிருந்து தோட்டங்கள்தோறும் மேடை நாடகம் அரங்கேற்ற மலேசியாவுக்கு வரும் குழுவிலிருக்கும் மாரி என்பவன் உள்ளூர் பெண்ணைக் காதலித்து மலேசியாவிலே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறான். தமிழ்நாட்டில் கற்றுக் கொண்ட பயாஸ்கோப் காட்டும் தொழிலைக் கொண்டு தோட்டங்கள்தோறும் திருவிழாக்களில் பயாஸ...