முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சை.பீர் முகம்மதுவின் சிறுகதைகள் வாசிப்பனுபவம்

 சை.பீர் முகம்மதுவின் சிறுகதைகள் வாசிப்பனுபவம்

 

எழுத்தாளர் சை.பீர் முகம்மதுவின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். 2008 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 20 சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.



சை.பீர் முகம்மதுவின் கதைகளில் கதைசொல்லியின் குரல் உரத்து ஒலிக்கிறது. கதைக்குள் இந்த உரத்தக் குரல் சில இடங்களில் சமூகத்தின் பொது மனநிலையை விமர்சனம் செய்வதாகவும் அதையே நகல் செய்து இறுதியில் அதிலிருந்து நழுவி உணர்வெழுச்சித் தருணங்களைக் கண்டடைவதாகவும் அமைந்திருக்கிறது. சை.பீர்.முகம்மதுவின் கதைகளின் பொதுத்தன்மையாக கதையின் இறுதியில் நிகழ்ந்துவிடும் உணர்வெழுச்சித்தருணங்களையே குறிப்பிடலாம்.

தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் கதையில் தமிழ்நாட்டிலிருந்து தோட்டங்கள்தோறும் மேடை நாடகம் அரங்கேற்ற மலேசியாவுக்கு வரும் குழுவிலிருக்கும் மாரி என்பவன் உள்ளூர் பெண்ணைக் காதலித்து மலேசியாவிலே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறான். தமிழ்நாட்டில் கற்றுக் கொண்ட பயாஸ்கோப் காட்டும் தொழிலைக் கொண்டு தோட்டங்கள்தோறும் திருவிழாக்களில் பயாஸ்கோப் படம் காட்டிச் செல்கிறான். எவ்விடத்திலும் நிரந்தரமாகத் தங்காமல் மிகவும் மகிழ்ச்சியாகப் பாகவதர் பாடலைப் பாடிச் செல்லும் கணவன் மனைவி இருவர் மூலம் ஒரு வாழ்க்கைக்கோணத்தை ஆசிரியர் முன்வைக்கிறார். அவனுக்கு முரணாக, குத்தகைத் தொழிலில் ஈடுபட்டுப் பெரும்பணம் ஈட்டும் ஆசை கொண்ட கோபால் அவ்வாறே செல்வந்தனாக மாறி பின்னால் கடன் கட்ட முடியாதச் சூழலில் சொத்துகள் கையை விட்டுச் செல்ல இருக்கிறான். இந்தச் சூழலில் மாரி, தான் இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு கோபாலின் கடனைக் கட்டி முடித்து மீண்டும் மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே செல்வதாகக் கதை முடிகிறது. மகிழ்ச்சிக்கான மனநிலையை விளக்கும் இருவேறுபட்ட மனநிலைகளின் முரண்பாட்டை ஒரு தருணத்தின் வாயிலாகக் கதை அணுக முயல்கிறது. ஆனால், கதையின் தொடக்கம் முதலே ஆசிரியரின் குரலில் வாழ்க்கைப்பார்வையாகவே முன்வைக்கப்பட்டுவரும் எதிலும் ஒட்டாமல் ஒரிடம் நில்லாமல் சென்று கொண்டே இருக்கும் மாரியின் மனநிலையின் மேன்மையை நிறுவுகின்ற இடமாகவே கதை அமைந்துவிடுகிறது.

இதைப்போல கதையின் இறுதி திருப்பங்கள் அமைந்துவிடுகின்ற இன்னும் சில கதைகளும் இத்தொகுப்பில் அமைந்திருக்கின்றன. வெடித்த துப்பாக்கிகள் கதையில் கம்யூனிசப் போராளிகளின் ஆயுதத்தாக்குதலை முறியடிக்க காட்டுக்கு நான்கு வீரர்கள் கொண்ட சிறிய படையொன்று அனுப்பப்படுகிறது. அப்படைக்குத் தளபதியாக இருக்கும் யாக்கோப் என்பவரின் மீது மற்ற மூவருக்கும் உள்ளூர பகையொன்று இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரைக் கொல்லத் திட்டமிடும் போது எதிர்பாராவிதமாக அவர் எதிரிகளின் தாக்குதலுக்குப் பலியாகி மற்ற மூவரையும் காப்பாற்றுவதாகக் கதை முடிகிறது. உக்கிரப்பாம்பு கதையிலும் தோட்டப்புறத்தில் பணிபுரியும் தங்கம்மாவுக்குப் பக்கத்துத் தோட்டத்தில் பணிபுரியும் தனலெட்சுமியின் வேலை நேர்த்தி, விரைவு ஆகியவற்றின் மீது ஏற்படும் காழ்ப்பைக் கதை சொல்கிறது. அவளைப் பழிவாங்கிட அவள் சேகரித்து வைத்திருக்கும் ரப்பர் பாலைத் தட்டிவிட்டு மலைப்பாம்பின் மீது பழிபோட்டு தப்புகிறாள் தங்கம்மா. அந்த மதியமே, தன் கணவர் வாங்கியிருக்கும் புதிய டேக்சியில் படம் பார்க்க தனலெட்சுமி தங்கம்மாவை அழைத்துச் சென்று திரும்பும் போது அவளது மனவிகாரத்தைக் குறியீடாக்கிப் பாம்புகள் மறைந்தன எனக் கதை முடிகிறது. இவ்வாறாக உணர்வெழுச்சித் தருணங்களால் மனம் மாற்றம் அடையக்கூடும். அந்த மாற்றத்தைச் சென்றடைய மனம் அடையும் சஞ்சலங்கள், கொந்தளிப்பு என்பதைச் சொல்லாமல் ஒரு தருணத்தில் மாற்றமடையும் போது கதை இலக்கு தவறிவிடுகிறது.

இவ்வாறாக திடிர் இறுதித் திருப்பங்கள் கொண்ட கதை வரிசையில் ஆண்டவனுக்கு ஆண்டவன் கதை சிறப்பாக இருந்தது. ஜப்பானியர் காலக்கட்டத்தில் சயாம் மரண ரயில்வே நிர்மாணிப்பில் தப்பிப் போக முயன்று ஜப்பானிய ராணுவத்திடம் சந்தானம் எனும் தொழிலாளி சிக்கிக் கொள்கிறான். ராணுவப்பிரிவில் மிகவும் கடுமையானவன் எனப் பெயரெடுத்த இம்மாசாகி எனும் அதிகாரி சந்தானத்தை விசாரணை செய்து காரணங்களைக் கேட்கிறான். குடும்பத்தைப் பார்க்கத்தான் தப்பினேன் எனச் சொல்லும் சந்தானத்தின் காரணம் இம்மாசாகியைத் தணியச் செய்திருக்க வேண்டும். கதையின் இறுதியில் இம்மாசாகியே சந்தானம் தப்பிச் செல்ல உதவுதாகக் கதை முடிகிறது. ஆனால், இந்தக் கதையிலும் இம்மாசாகியின் உள்ளத்தை நெருங்குவதற்கான எந்தப் பாதையும் கதையில் விடப்படவில்லை.

இந்தத் தொகுப்பில் விளிம்பு நிலை மனிதர்கள் அல்லது சமூகத்தில் அவ்வளவாகக் கவனிக்கப்படாத தரப்பினரின் கதைகளையும் சை.பீர் எழுதியிருக்கிறார். பிச்சைக்காரர்களைப் பற்றி உண்டியல். சிவப்பு விளக்கு, நெஞ்சின் நிறம் ஆகிய கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகளில் வெளிப்படும் பிச்சைக்காரர்களைச் சித்திரிக்கும் போது அழுக்கு உடை, துர்நாற்றம் இவ்வாறாகப் பொதுப்பார்வையில் அவர்களைக் காட்டுவதாக முன்வைக்கப்படும் சித்திரம் உண்மையில் கதைக்கு எந்தளவு உதவுகிறது என்பது அவசியமாகிறது. இவ்வாறான தோற்றம் கொண்டவர்கள் இறுதியில் ஏதேனும் நெகிழ்ச்சியான செயலை நிகழ்த்துவதால் அவர்கள் மேன்மைப்படுத்த முயல்வது பொருத்தமற்றதாகவே இருக்கிறது. சிவப்பு விளக்கு எனும் கதையில் எவ்வித லட்சியமும் இல்லாத தமிழ்ப்பிச்சைக்காரர் ஒருவர் கள் குடித்து அன்றன்றைக்கான வாழ்க்கை வாழ்ந்து இறந்து போகிறார். அவருக்கு முரணாகச் சீனப் பிச்சைக்காரர் உழைத்து முன்னேறிப் பணக்காரராகி இறக்கின்றார். இவர்கள் இருவரின் இறப்பும் கதையின் இறுதியில் வருகிறது. சமூகம் குடும்ப அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்டு அல்லது அதிலிருந்து வெளியேறி வாழும் பிச்சைக்காரர்களின் மன அமைப்பு உழைத்து முன்னேறி பணம் ஈட்டும் பொது மனநிலையிலிருந்து விலகியதாகவே இருக்கக்கூடும். அவ்வாறிருக்க அவர்களைக் கொண்டு வாழ்வை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அலட்சியம் செய்வதாகக் கதை எழுதுவது பொருத்தமாக இல்லை.

அதைப் போல பிச்சைக்காரர் நூலகம் அமைக்க உண்டியல் பணம் தருவது, பேருந்து கட்டணம் கட்ட இயலாத சிறுவனுக்குப் பணம் செலுத்துவது என பிச்சைக்காரர்களை மேன்மைப்படுத்தும் திருப்பங்கள் அவர்களைப் பற்றிய மேலதிகப் புரிதலுடன் நிகழ்த்தப்பட்டிருந்தால் இன்னும் வலுவானதாக அமைந்திருக்கும். ஆண்மை எனும் சிறுகதையில் பெண் தன்மையுள்ள அப்துல் ரஹிம் பாத்திரத்தை வீட்டில் செயற்படாமல் போன கடிகாரத்துடன் ஒப்பீடுவதும் கூட உள்ளூர இத்தகைய மனிதர்களின் மீதான ஆசிரியரின் புரிதலின்மையே வெளிப்படுத்துகிறது.

 இந்த வரிசைக் கதையில் அந்த மரங்களும் பூப்பதுண்டு என்ற கதை சிறப்பானதாக இருந்தது. பதினைந்து வயதாகியும் பூப்பெயதாமல் இருக்கும் பாக்கியமும வயிறு உப்பிப் போய் இருக்கும் ராமசாமி எனும் சிறுவனுக்கும் இடையிலான நட்பைப் பேசுகிறது. மற்றவர்களின் பார்வைக்குக் கேலிக்கு ஆளாகும் பாக்கியத்தை ராமசாமி ஆதரிப்பதும் ராமசாமியின் துணையாகப் பாக்கியம் மாறுவதும் என உடற்குறையுடைய இருவர் தங்களுக்குள் உணரும் துணையைக் கதை வெளிப்படுத்துகிறது. ராமசாமி இறந்ததும் பாக்கியம் அடையும் துயரும் அதன் பின்னால் அவளுக்குள் உண்டாகும் மாற்றமென்பதும் முக்கியமானது.

சை.பீரின் கதைகளில் சமூகத்தின் மீதான விமர்சனம் மிக உரத்த குரலில் முன்வைக்கப்படுகின்றன. இந்த உரத்த குரல் கலையாகாமல் பதிவுகளாக மாறும் அபாயம் கதையில் அமைந்திருக்கிறது. பினாங்கு மாநிலத்தில் 1970 களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உயர்சாதியினர் இடுகாட்டில் புதைக்கப்போய் நீதிமன்றம் வரைக்கும் வழக்கு தொடுத்து இறுதியில் புதைக்கப்பட்ட இடத்திலே உடலைப் புதைக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தக் கதையைப் புதைக்கப்பட்ட நபரே ஆவியாகச் சொல்வதாக அமைந்த எலும்புகூடு எனும் கதை முழுக்க முழுக்க அவர் அடைந்த துயரைச் சொல்லும் நேரடிப்பதிவாகவும் அரசியல், சமூக விமர்சனக் கருத்துகளால் ஆனதாக அமைகின்றது. ஆவியே தன் கதையைக் கூறும் உத்தி மலேசியச் சிறுகதை உலகில் யாரும் கையாளாதது. சிறுகதைகளில் எழுத்தாளனின் குரல் என்பது நிச்சயமாக எல்லாவிதமான கலையமைதி கோட்பாடுகளைத் தாண்டியும் மெல்லிய குரலில் ஒலிக்கக்கூடியதுதான். ஆனால், புனைவின் அடிப்படைக் கோட்பாடான மொழிக்குள் இயங்கும் இன்னொரு மொழியின் வாயிலாக ஒன்றை உணர்த்தும் தன்மையை உரத்த குரல் கலைக்கிறது. வெளிப்படையான கூற்றுகளைச் சொல்கின்ற போது கதைகள் புனைவுத்தன்மையை இழந்து கட்டுரை வடிவை அடைகின்றன. இக்கதை கலையாகாமல் குறுக்கிவிடும் நேரடியான கூற்றுகள் தாண்டி  சமூக அவலத்தைக் கதையாக்க எண்ணும் எழுத்தாளனின் எண்ணம் முக்கியமானதே.

இதைப் போல திரைப்படக் காட்சி மொழியைப் போல காமிரா கோணங்கள் வாயிலாக கணவன் விட்டுச் சென்ற பெண் மலிவு விலை வீட்டுக்காக அலைவதையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் மிக நுட்பமாகக் காட்டும் குருதி கசியும் கேமிரா கதையும் சிறப்பானதாக இருந்தது.

வயதானவர்களின் புலம்பலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் அக்கினி ஸ்தம்பனம் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்துக்குப் புதிதாக வந்திருக்கும் முதியவருக்கு இன்னொரு முதியவர் சொல்லும் புலம்பல் கதை. தங்களைப் புறக்கணித்த பிள்ளைகளைக் கொள்ளி வைக்கக் கூட அனுமதிக்கக் கூடாது எனச் சொல்லும் கதைசொல்லி முதியவரின் மனநிலை புதிதாக வந்தவருக்கும் தொற்றிக் கொள்ளும் புலம்பலாகக் கதை அமைகிறது. வெண்மணல் எனும் கதையில் வெள்ளைக்காரர்கள் காலத்தில் பெரும் பணக்காரரான இரட்டைக்குதிரை பூட்டிய வண்டியில் கம்பீரமாக வரும் தன் அப்பாவின் கதையை நாள்தோறும் பெருமாள் கிழவன் சொல்கிறார். இப்பொழுது தனியனாய் வாழ்பவனுக்குத் தந்தையின் கதைகள் ஒருவகையில் வாழ்வைக் கடப்பதற்கு உதவுகின்றன.  ஈயம் உறிஞ்சப்பட்ட வெண்மணலாக அவன் வாழ்க்கை அமைவதாகச் சொல்லப்படும் படிமம் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது.

காலங்காலமாக இருந்துவரும் நீதிக்கதைகள், இதிகாசங்கள் ஆகியவற்றை மீளாக்கம் செய்யும் போது அதன் நுட்பமான இடைவெளிகளை நிரப்பும் புதிய கோணம் ஒன்றைக் கதை கண்டடைய வேண்டியிருக்கிறது. கதையைத் தன்மொழியில் எழுதிப்பார்த்த முயற்சியாகவே தேவத்தேர் என்ற மகாபாரதக் கதையையும் பொற்காசுகள் என்ற நீதிக்கதையையும் கருத வேண்டியிருக்கிறது.  

சை.பீர் முகம்மதுவின் கதைகளின் ஆகப்பெரும் பலமாக அவரின் கதைக்கூறல் தன்மையும் மொழியையும் குறிப்பிடலாம். அவரின் கதைகளில் தெளிவான மொழியில் அனைத்தையும் சீராகச் சொல்லிச் செல்லும் போக்கையே காணமுடிகிறது. பாதுகை சிறுகதையில் தோட்டத்தில் வசிக்கும் ஏழ்மை மிகுந்த குடும்பப்பின்னணியிலிருக்கும் சிறுமிக்குப் புதிதாக அணியும் பள்ளிக் காலணி வெள்ளை முயல்களாக மாறி ‘ பள்ளிக்குத் தாவித் தாவி நடந்தாள்’ எனக் கவித்துவத்துடன் எழுதுகிறார். அசுணப்பறவை சிறுகதையில் தன் நாதசுவரக் கலையை இறைவன் முன் மட்டுமே ஒலிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருக்கும் கலைஞனின் திறனைக் காட்டும் இடங்களும் கவித்துவ உச்சத்துடன் அமைந்திருக்கின்றன. அதைப் போல மிக இயல்பான வசனங்களையும் குறிப்பிடலாம். வசனங்களின் மூலமாகவே நகரும் வெண்மணல், அக்கினி ஸ்தம்பனம் போன்ற கதைகளில் கதைமாந்தர்களின் உணர்வை நன்கு வெளிப்படுத்திக் கதையையும் நகர்த்திச் செல்லும் வசனங்கள் அமைந்திருக்கின்றன. அத்துடன், அவரின் கதைகளில் வெளிப்படும் தகவல்களைக் குறிப்பிடலாம். சிறுகதைகள் நிகழும் களத்தை இன்னும் நம்பகமானதாக தகவல்களும் நுண்விவரணைகளும் ஆக்குகின்றன. கம்யூனிசக் கால ராணுவத்தாக்குதலை நம்பகமான முறையில் குறிப்பிடும் வெடித்தத் துப்பாக்கிகள், கலைஞர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் அசுணப்பறவை ஆகிய கதைகள் அவரின் நேரடி அனுபவத்தையும் தாண்டி கலைஞர்களுக்கே உரிய நுண்ணுணர்வுகள் வெளிப்படும் இடங்களாக அடையாளப்படுத்த வேண்டியவை.

சை.பீர் முகம்மது வெவ்வேறு உத்திகளின் வாயிலாகக் கதையைக் கூறும் தன்மைக்ககாவும் சமூக விமர்சனத்தைக் கலைத்தன்மையுடன் முன்வைக்கும் கதைகளுக்காகவும் நிச்சயமாக மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியாகக் கருதப்படுவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...