முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 மருத்துவர் சண்முகசிவாவின் எட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியை வாசித்தேன், 2018 ஆம் ஆண்டு வல்லினம் மற்றும் யாவரும் பதிப்பகமும் இணைந்து பதிப்பித்திருக்கும் இந்நூலில் முந்தையத் தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளும் புதிய கதைகளாக ஆறு கதைகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவர் சண்முகசிவா ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் நலமுடன் வாழ்வோமங்கத்தின் வாயிலாகத்தான் அறிவேன். அதன் பின்னர், மயில் மாத இதழில் ஒவ்வொரு மாதமும் விழி வாசல் வழியே என்ற தொடரில் கட்டுரைகள் எழுதி வந்ததை வாசித்திருக்கிறேன். பல கவிதை மேற்கோள்களும், புதிய திறப்புகளை அளிக்கும் கட்டுரைத்தொடருக்காகவே மயில் இதழை வாங்கி வாசித்திருக்கிறேன். அதன் பின்னால் மைஸ்கில் அறவாரியம் நடத்திய இதழிலும் அவரின் மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்கிற மருத்துவக் கேள்விப்பதில் நூலிலிருந்து சில கேள்விப்பதில்களை வாசித்திருக்கிறேன். அதிலும் பல நவீன கவிதை வரிகளை மேற்கோள்காட்டி பதில்களை எழுதியிருப்பார். எந்தக் கேள்விக்கும் இந்த நோய் என்றோ இதுதான் தீர்வு என்றோ நேரடியான பதில் அளிக்காமல் உளவியல், இலக்கியம், நகைச்சுவை எனத் தொட்டு விரியும் பதில்கள் வாசிக்க சுவாரசியமானவை. அந்தப் பதில்களின் வாயிலாக பல படைப்பாளிகள், படைப்புகளின் பெயர்கள் அறிமுகமாகியிருக்கிறது.



ஆனால், இந்த நோய்க்கு இந்தத் தீர்வு என்றோ, இதுதான் சிகிச்சை முறை என்றோ திட்டவட்டமான பதில்களை எதிர்பார்க்கும் ஒருவருக்கு சண்முகசிவாவின் பதில்களில் சற்றே விலக்கம் இருக்கக்கூடும். அவரின் கதைகளிலும் இந்த அணுகுமுறையையே காணமுடிகிறது. அவை நேரடியான சித்திரமொன்றை எழுப்பி அதன் பின்னால் வேறொன்றை முன்வைக்கக்கூடியவையாக இருக்கின்றன. மெர்ஸ்டிசும் முண்டக்ககண்ணியம்மன்னும் கதையில் ஜப்பானிய பன்னாட்டுத் தொழிற்சாலையில் இயக்குநராகப் பணியாற்றும் ரட்னராஜாவுக்குக் கார் ஒட்டுநராக முனியாண்டி பணிபுரிகிறான். முனியாண்டி காரைத் தன் சொந்த தேவைக்குப் பயன்படுத்திய குற்றத்துக்காக வேலை நீக்க அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறான். அவனுடன் பணியாற்றும் பாலாத்தான் முனியாண்டியின் தவற்றை ராஜாவிடம் கூறுகிறான். அந்தக் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டால் வேலை பறிபோகாது என்ற அறிவுரையையும் கூறுகிறான். உயரதிகாரியின் நன்மதிப்பைப் பெறுவதும் அதைத் தக்கவைக்க முயற்சிகள் எடுப்பதாக அடிமட்டத்தில் சிறு அதிகாரத்துக்கான பூசல் இருக்கும் சூழலில் ரட்னராஜாவும் இன்னொரு அதிகாரப் பூசலில் இருக்கிறார். நிறுவனத்தின் மற்றொரு உயரதிகாரியான கமாருடின் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களும் மாந்திரீகர்களின் சந்திப்பும் அவரை அச்சப்படுத்துகின்றன. இந்தச் சூழலில் அலுவலகத்தில் கண்டெடுக்கப்படும் ஊசிகள் குத்தப்பட்ட எலுமிச்சைப்பழம் கூடுதலாக அச்சுறுத்துகிறது. இந்தச் சூழலில்தான், குங்குமத் திலகமிட்ட நெற்றியுடன் பக்திமானாக ராஜாவின் முன்னின்று மன்னிப்பு கோரச் செல்கிறான் முனியாண்டி. அவனுடைய குங்குமம் தன்னுடைய சிக்கலுக்கான உபாயமாக எண்ணி அவன் சொல்லுகின்ற கோவிலுக்கு ராஜா செல்கிறார். அந்தக் கோவிலில் நிகழும் மருளாடலில் முனியாண்டியே அம்மனாக மாறி ராஜாவுக்கு வாக்கு அளிக்கிறார். முனியாண்டியை மெர்சிடிஸ் காரில் படுக்கவைத்து ராஜா ஒட்டுநராக மாறி காரை ஒட்டுவதாகக் கதை முடிகிறது.கதையின் இறுதியில் நிகழும் சிறு பிசகல் அளிக்கும் பகடியென்பது, அதிகாரத்தைத் தலைகீழாக மாற்றிப் பார்க்கும் சிறு விளையாடலாக இந்தக் கதையில் திரண்டு வந்திருக்கிறது. இந்தக் கதையை அரசியல் கதையாகவும் மாற்றுகிறது.

சாமிக்குத்தம் என்கிற கதை, தோட்டத்தில் சிதைந்துபோய் கவனிப்பாரற்ற கோவில் எவ்வாறு தவறுதலாக இடிக்கப்பட்டதும் அரசியல் காரணங்களால் அதிகார மையமாகத் திரண்டு வருகிறதென்பதை வேடிக்கையாகச் சொல்லுகிறது. இந்தக் கதையில் இருக்கும் சம்பவ அடுக்குகளின் விரைவுத்தன்மை சமூகத்தின் அவலச் சூழலைக் காட்டுகிறது. தமிழ் சமூகத்தில் இருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பு, கண்மூடித்தனம் எவ்வாறு அரசியல் லாபத்துக்கு அதிகாரத்துக்கும் மூலதனமாகிறது என்பதைக் கதை பேசுகிறது. இடிக்கப்பட்ட கோவிலில் பூசாரியாக வேலை செய்த சோணமுத்துவின் கனவில் காட்சியளிக்கும் முனியாண்டிசாமி இன்னொரு கோவிலைக் கேட்கிறது என்பதுடன் கதை நிறைவு பெறுகிறது. கட்டப்படும் புதிய கோவில் யாருக்கான கோவிலாக இருக்கின்றது என்கிற கேள்வியைக் கதையின் இறுதி சன்னமாக எழுப்புகிறது. இது தனக்கான கோவிலல்ல என எண்ணும் மனநிலைக்கான காரணமென்ன என்பதைக் கதை கேள்வியாகவே நம்முன் விட்டுவிடுகிறது.

 

இந்தத் தொகுப்பில் இருக்கும்  நவீனத்துவப் பாணி கதைக்கு நெருக்கமான கதையாக புலிச்சிலந்தி கதையைக் குறிப்பிடலாம். குடும்பச் சூழலின் காரணமாய் சிறுவயதில் தன்னை அன்பாகக் கவனித்துக் கொண்ட அத்தை வீட்டில் வளர்கிறாள் அகிலா எனப்படும் அகிலாண்டேஸ்வரி. நீரிழிவு நோயால் காலை இழந்து அத்தையைக் கவனித்துக் கொண்டே படிக்கின்றாள். அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அகிலாவுக்குப் பாலியல் தொல்லைகளை மாமா தருகிறார். இதிலிருந்து தப்பி அம்மாவைக் காணச் செல்கின்ற போது, அங்கு அவள் இருக்கும் அவலச் சூழல் அத்தை வீடே மேலானது என்கிற எண்ணத்துக்கு அவளைத் தள்ளுவதாகக் கதை முடிகிறது. இந்த இருவேறு சூழலின் ஒப்பீடும் அதனால் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அகிலாவுக்கு இருப்பதைக் காட்டும் கதை மற்றொரு தளத்தில் கதையில் காட்டப்படும் அந்த அவலச் சூழலுக்கான காரணத்தைக் காட்டாமலே நிறைவு பெறுகிறது. 

கதையின் இறுதில் காணப்படும் அதிர்ச்சியான சம்பவம், இரண்டின் ஒப்பீடு, அதில் மேலான ஒன்றின் தேர்வு எனக் கதை மையம் ஒன்றை நிறுவி நகர்வது நவீனத்துவக் கதைப்பாணியைத் தொடர்கிறது. வைரத்தூசு என்கிற கதையும் கல்வியறிவும் அனுபவமும் இல்லாத்தால் நகரத்துக்குத் தன் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க வரும் இளம்விதவைத் தாயான பார்வதி நகரம், மருத்துவமனைச் சூழல் அளிக்கும் அந்நியத்தன்மையால் உணரும் பதற்றத்தையும் பரிதவிப்பையும் பேசுகிறது. அந்த அந்நியத்தன்மையால், தன் கூட்டுக்குள்ளே உள்ளொடுங்கி கொள்ள பார்வதி முடிவெடுக்கிறாள். வைத்திருக்கவும் முடியாமல் அகற்றவும் முடியாமல் தேங்கிப் போயிருக்கும் வைரத்தூசான அலட்சியத்தை அல்லது தனக்குள் உணர்கின்ற பாதுகாப்பைக் கதை பேசுகிறது.

இந்தத் தொகுப்பில், எனக்கு மிகவும் ஈர்ப்பான கதைகளாக அமைந்தவை கனவு, எல்லாமும் சரிதான் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். போதை வினியோகத் தொழில் ஈடுபட்டிருக்கும் தாயைக் காவல்துறையினர் கைது செய்த சூழலில் அவளின் தனித்துவமான கனவுகளால் கதையில் நிகழும் சம்பவங்களுக்குப் பொருளேற்றம் தரும் சிறுமியின் மனநிலையைக் கனவு கதை சித்திரிக்கிறது. ஒவ்வொரு கனவும் தாய் மீதான அவளின் பாசம், அவள் இருக்கும் சூழல் மீதான பயம் ஆகியவைச் சேர்ந்து தாயையே காவல் துறையிடம் காட்டிக் கொடுக்கச் செய்கிறது. சண்முகசிவாவின் கதைகளில் இருக்கும் மற்றொரு தன்மையாக அதில் இருக்கும் தலையீடற்ற படர்கைத் தன்மை அல்லது கதைசொல்லியின் கதைகூறலைக் குறிப்பிடலாம். கனவு கதையில் சிறுமியின் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாத கதைசொல்லியின் குழப்பத்துடன் கதை முடிகிறது. அந்தக் குழப்பத்தை அவரவருக்கான நியாயம் என்கிற அளவில் கூட புரிந்து கொள்ளலாம். அதைப் போன்றே, எல்லாமும் சரிதான் கதையில் தனக்குப் பெரும் உதவி புரிந்த மருத்துவரின் மனைவியை உளவு பார்க்க செல்லும் நாகராஜு, அவளைப் பற்றி நல்ல விதமாய்ச் சொல்கிறான். அவரவருக்கான நியாயத்தைக் காட்டி எல்லாமே சரிதான் என்கிற மனநிலையை முன்னிலைப்படுத்துகிறது. ஒரு வகையில், நாகாராஜூவும் கனவு சிறுகதை சிறுமியும் தங்கள் அனுபவத்தாலும், உள்ளுணர்வாலும் தங்களுக்கு நியாயமான பக்கமொன்றைத் தேர்கின்றனர். இந்தச் சாமானியர்களின் மனதில் எழுகின்ற நியாயத்தராசின் சாய்வே இந்தக் கதைகளை முக்கியமானதாக ஆக்குகிறது. அந்த மேன்மை நிறுவுவதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்கின்றன.

துர்க்காபாய் கதையில், தமிழ் பெற்றோரால் வளர்க்கப்பட்ட சீனப்பெண்ணான துர்க்காபாய் மருத்துவமனை ஆயாவாக வேலை செய்கிறாள். சமூகநலத்துறையினரால் மருத்துவமனைக்கு அனுப்பப்படும் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான பதின்மூன்று வயது சிறுமியைத் தத்தெடுத்துக் கொள்கிறாள். அவள் காட்டும் இந்தக் கருணைக்குக் கதையில் அவளின் ஆதரவற்ற தன்மையும் சிறுமிக்கு நேர்ந்த அவலங்களும் மட்டுமே காரணங்களாகக் காட்டப்படுகின்றன. துர்க்காபாய் மேன்மையானவளாகக் கதை பதிவு செய்கிறது. அவளில் எழும் மேன்மை என்பது மனிதத்தின் சாட்சியாக அமைகிறது. 

வீடும் விழுதுகளும் தொகுதியிலே படித்த கதை ஒரு கூத்தனின் வருகை. இந்தக் கதையின் இறுதியிலும் மேன்மையானவராக ஒருவரைக் காட்டும் தன்மை இருக்கிறது. ஆனால், இந்தக் கதையில் கூத்து காட்டியாடும் முத்துசாமி தம்பிரான் எனும் கடைசித் தலைமுறைக் கூத்து கலைஞரில் வெளிப்படும் மேன்மையும் கம்பீரமும் கதையை நினைவில் தங்க வைக்கின்றது.

ஒட்டுமொத்தமாக, சண்முகசிவாவின் கதைகள் பார்வையாளரின் கோணத்தில் சம்பவங்களை எந்த முன்முடிவுமின்றி முன்வைக்கின்றன. சாமானியர்கள் எனக் கருதத்தக்க மனிதர்களில் எழும் மேன்மையான பக்கத்தைக் காட்டுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...