மலேசியா பிரிட்டன் காலனி நாடாக இருந்த சமயத்தில் உலகளவில் மிக முக்கியமான ஈயம், ரப்பர் உற்பத்தி நாடாக இருந்தது. மலேசியாவின் தொழிற்வளர்ச்சி மிகுந்த, ரயில் தடம் கொண்ட நகரங்கள் யாவும் ஈயம், ரப்பர் உற்பத்தி, ஏற்றுமதி தொழிலில் மிக முக்கியமான நகரங்களாக அமைந்தவையே. ரயில் தடத்தின் முக்கியமான நிலையங்களைக் கொண்டே அதைக் கவனிக்கலாம். அன்றைய காலனிய அதிகாரிகளும் தோட்ட முதலாளிகளும் தங்குவதற்காக அமைக்கப்பட்ட வீடுகள், விடுதிகள் இன்றைக்குப் பெரும்பாலும் சுற்றுலாதளங்களாகவும் சில கைவிடப்பட்டும் கிடக்கின்றன. உலகின் ஆழமான ஈயச்சுரங்கமான பகாங் மாநிலத்தில் அமைந்திருக்கும் சுங்கை லெம்பிங்கில் இருக்கும் சுரங்க நிர்வாகியின் இல்லம் அரும்பொருள்காட்சியகமாக மாற்றப்பட்டுப் பரமாரிக்கப்படுகின்றது. ஈயத்தொழிலில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், இயந்திரங்கள், வெள்ளையர்கள் பயன்படுத்திய தளவாடங்கள் ஆகியவைக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இல்லத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைவது அங்கு இன்னுமிருப்பதாகச் சொல்லப்படும் வெள்ளைக்காரர்களின் ஆவி நடமாட்டம். அங்கு வசிக்கும் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் கண்டதாகச் சொல்லப்படும் ஆவி நடமாட்டம் பலரை...