முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதுகள் நாவல் வாசிப்பனுபவம்

 

தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கம் இளவயதில் பள்ளி முடிந்து தனித்திருக்கும் மாலைப் பொழுதுகளில் உருவானது என எண்ணுகிறேன். காண்கின்ற படம், நாள்தோறும் வாசிக்கின்ற நாளிதழ் செய்திகள், பள்ளியில் நடந்த சம்பவங்கள் இப்படியாகப் பலராகவும் உருமாறிப் பேசி, வாதிட்டுக் கொள்வேன். இதைத் தவிர, எதைச் செய்தாலும் உள்ளிருந்து உற்றுநோக்கிக் குரல் எழுப்பும் உள்ளுணர்வின் குரலும் அங்கிருந்தே உருவானது. பொதுவாகவே, மற்றவர்களிடம் அதிகமும் பேசாத இயல்பினாலும் வெளியுலக வாசம் குறைவாக இருந்ததாலும் இவை உருவாகியிருந்தது. சமயங்களில் பேச வேண்டிய அல்லது எதிர்வினையாற்ற தவறுகின்ற பொழுதுகளில் நேரும் குற்றவுணர்ச்சியை நேர் செய்யும் தப்பித்தல் வழிமுறையாகவும் இதை உணர்ந்து குறுகிப் போயிருக்கிறேன். ஆனால், எதோ ஒரு பொழுதில் உள்ளிருந்து ஒலிக்கும் குரலை இயல்பானதாக அனுமதிக்கவே செய்திருக்கிறேன். காதுகள் நாவலின் மையப்பாத்திரமான மகாலிங்கத்தின் காதுகளில் ஒலிக்கும் அந்நியர்களின் குரல்களை என்னுடைய உள்ளுணர்வு குரலுடன் தான் தொடர்புறுத்தி வாசித்தேன். அந்த அனுபவத்தை வாசிக்கும் போதே உள்ளூர நடுக்கமெழுந்தது.

வணிகக்குடும்பத்தில் பிறந்த மகாலிங்கம் தன்னுடைய நடுவயதை எட்டியப் போது ஏற்படும் பொருளியற் சரிவு, வறுமையாலே தன்னுடைய காதுகளில் விநோதமான ஆபாசமான அந்நியக் குரல்களைக் கேட்கின்றான். அந்த அனுபவங்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அவனுடைய ஆழுள்ளம் தேக்கியிருக்கும் அனுபவங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் வெளிப்பாட்டாக உணர முடியும். இளவயதிலே திருமணம் புரிந்து கொள்கின்ற மகாலிங்கத்தைக் கூடலுக்கு அழைக்கின்ற பெண்ணை மறுக்கின்றார். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், தன்னை வணங்க மறுத்தத்தற்காய்க் காளி அவரின் காதுகளில் ஏசுகிறாள்; மன்றாடுகிறாள். பல பாத்திரங்களை ஏற்று காளி நடத்தும் அபத்த நாடகங்களை நாள்தோறும் மகாலிங்கம் கேட்க நேரிடுகிறது. வறுமை பீடித்திருக்கும் குடும்பச் சூழலில் தன்னுடைய குழப்பமான மனநிலையால் எதையும் செய்ய முடியாத சோர்வு மகாலிங்கத்தை அழுத்துகிறது. அதிலிருந்து மீளத் தன்னுடைய ஆன்மீகக் குருவான முருகனைத் துணையாகக் கொள்கின்றார். முருகனும் ஒரு பாத்திரமாக மாறி மாலியின் நிலைக்காய் வருந்தத்தான் முடிகின்றது. எழுத்தாளர் எம்.வி.வெங்கடராமின் வாழ்வில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையிலே இந்நாவலை எழுதியிருக்கிறார். இளவயதிலே கற்பனை வளமும் மாற்றுச் சிந்தனைகளிலும் ஈடுபாடு கொண்டவனாக வளரும் மாலி தான் அடைய நேரிடும் நிகர்வாழ்வின் துன்பங்களில் இருந்து மீள்வதற்காய்க் கொள்ளும் வழிமுறையே முடிவில்லாச் சுழலாக மாறியிருக்கிறது என இந்த அனுபவத்தைக் கொள்ளலாம். எழுத்தாளரின் மனம் கொண்டவரின் கற்பனையும் உணர்வு அலைக்கழிப்பும் அந்த அனுபவத்தை வளர்த்தெடுத்து உளத்திரிபுநிலைக்கு இட்டுச் செல்கிறது. அதிலிருந்து மீள்வதற்கான மீட்பாக ஆன்மீகக் குருவான முருகனை நாடுவதன் மூலம் அதை ஆன்மீக அனுபவமாகவும் அவரால் மாற்றிக் கொள்ள முடிகின்றது. இவ்வாறான விநோதமான அந்நியக் குரல்களைக் கேட்க நேரிடும் அனுபவத்தை ஆடிட்டரி ஹலுசினேஷன் என உளவியல் அடிப்படையில் சொல்லப்படுகின்றது.பாரதி, காளிதாசன், வான் கோ போன்ற கலைஞர்களுக்கும் இவ்வாறாக உருவாகியிருக்கும் அனுபவங்களுடன் இதை ஒப்பீட்டுப் பார்க்க முடிகின்றது, பிரசவ வலியால் வேதனைப்படும் மனைவியை ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதித்தப் பின்னர் ஏற்படும் பதற்றமான தருணத்தில் அவரைப் பிடித்திருக்கும் அக இரைச்சல் சற்றே ஒய்ந்திருக்கிறது. இவ்வாறாக மனம் உச்சக்கணங்களாக எண்ணுகின்ற தருணங்களில் தன்னை மறந்த சூழலில் காதிரைச்சல் ஒய்ந்திருக்கிறது.  இவ்வாறாக மகாலிங்கத்தின் அனுபவங்களுக்குத் தருக்கப்பூர்வமான விளக்கங்களை அளித்தாலும் அதன் கற்பனை நிரம்பிய மூளையின் செயற்பாட்டின் மர்மத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல்தான் போகிறது.


காதுகள் உணரக்கூடிய அனுபவத்துக்கேற்ப மூக்கில் மணம் எழுகிறது. நேர் அனுபவத்துக்கு மாறாகப் புலன்கள் மாற்று அனுபவங்களால்  மெய்நிகர் உலகொன்றை  உருவாக்கிக் கொள்கின்றன, அந்த மாற்று அனுபவங்களில், முற்பிறவியில் காளியை வணங்கி வந்தவன் இப்பிறவியில் முருகனை வணங்குவதற்காய்ச் சிற்றம் கொள்கிறது. அவனுடன் கூடுவதற்கும் தயாராய் இருக்கும் தெய்வத்தின் குரலாக ஒலிக்கின்றது. அவனுடைய வாழ்வின் அபத்தங்களுன் முன்னால் பரிகசித்துச் சிரிக்கிறது. அவனுடைய தருக்கப்பூர்வமான முடிவுகளின் போது எதாவது அபத்தமான சிந்தனைக்கும் செயலுக்கும் உந்தித் தள்ளுகின்றது.  இந்த மாற்றனுபவங்களால் வாழ்வின் நெருக்கடிகளிலும் போதமற்றவனாக மாலி விளங்குகின்றான். பசி, காமம், தூக்கம் போன்ற இயற்கையான அழைப்புகள் தவிர்த்தவற்றுக்கு மாலியால் கவனம் செலுத்த முடியவில்லை. மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து வீடு திரும்புகின்ற அவசத்தருணத்தில் குடும்ப நிலை அறியாமல் முரண்டு பிடிக்கின்ற மகனைக் கண்டமாதிரியாக அடித்துவிட்டுக் காலையில் அவனுடைய முகத்தில் படிந்திருக்கின்ற ரோசக்களையை  கண்டு சிரிக்கின்றான். மாற்று அனுபவங்கள் அலைகழிக்கும் சூழலிலும் எழும் இவ்வாறான நுண்ணிய தருணங்களை மாலியால் உணரவே முடிகின்றது.

ஒவ்வொன்றிலும் வேறுபட்டு நிராகரித்து வேறொன்றைக் கற்பிதம் செய்யும் தருணங்களிலெல்லாம் இவ்வாறாக நுண்ணுணர்வுடன் கூடிய தருணங்களை எண்ணிக் கொள்வதொன்றே முற்றிலும் இங்கிருந்து விலகாமல் இருப்பதற்கான வழியாக இருக்கக்கூடும்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...