முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கெல்லிஸ் ஸ்மித்தின் சுரங்கப்பாதை

 

மலேசியா பிரிட்டன் காலனி நாடாக இருந்த சமயத்தில் உலகளவில் மிக முக்கியமான ஈயம், ரப்பர் உற்பத்தி நாடாக இருந்தது. மலேசியாவின் தொழிற்வளர்ச்சி மிகுந்த, ரயில் தடம் கொண்ட நகரங்கள் யாவும் ஈயம், ரப்பர் உற்பத்தி, ஏற்றுமதி தொழிலில் மிக முக்கியமான நகரங்களாக அமைந்தவையே. ரயில் தடத்தின் முக்கியமான நிலையங்களைக் கொண்டே அதைக் கவனிக்கலாம். அன்றைய காலனிய அதிகாரிகளும் தோட்ட முதலாளிகளும் தங்குவதற்காக அமைக்கப்பட்ட வீடுகள், விடுதிகள் இன்றைக்குப் பெரும்பாலும் சுற்றுலாதளங்களாகவும் சில கைவிடப்பட்டும் கிடக்கின்றன.



உலகின் ஆழமான ஈயச்சுரங்கமான பகாங் மாநிலத்தில் அமைந்திருக்கும் சுங்கை லெம்பிங்கில் இருக்கும் சுரங்க நிர்வாகியின் இல்லம் அரும்பொருள்காட்சியகமாக மாற்றப்பட்டுப் பரமாரிக்கப்படுகின்றது. ஈயத்தொழிலில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், இயந்திரங்கள், வெள்ளையர்கள் பயன்படுத்திய தளவாடங்கள் ஆகியவைக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இல்லத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைவது அங்கு இன்னுமிருப்பதாகச் சொல்லப்படும் வெள்ளைக்காரர்களின் ஆவி நடமாட்டம். அங்கு வசிக்கும் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் கண்டதாகச் சொல்லப்படும் ஆவி நடமாட்டம் பலரை ஈர்க்கின்றது.

அதைப் போல, பத்துகாஜா பகுதியில் அமைந்திருக்கும் கெல்லிஸ் மாளிகை சுற்றிலும் கூட வெள்ளைக்காரர்களின் ஆவி நடமாட்டம், சுரங்கத்தில் கண்டதாகச் சொல்லப்படும் வாகனங்கள் எனப் பல மர்மமான செய்திகளால் நிறைந்திருப்பதை நேரில் சென்றபோது காணமுடிந்தது.  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்காட்லாந்திலிருந்து மலாயாவுக்கு வந்த பொறியிலாளரான வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் மெல்ல  பேராக் மாநிலத்தில் ரப்பர் தோட்டங்கள், ஈயச்சுரங்கங்கள் எனத் தொழில்களில் ஈடுபடத் தொடங்குகிறார். பத்து காஜா பகுதியில் இருக்கும் 960 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை வாங்கி கிந்தா கெல்லாஸ் ரப்பர் தோட்டத்தை உருவாக்குகிறார். 1903 இல் மலாயாவுக்குத் தன்னுடைய மனைவியான ஆக்னேஸை அழைத்து வருகிறார். கெல்லாஸ் தோட்டத்தை ஒட்டித்தன்னுடைய கனவு வீடான கெல்லிஸ் காஸ்டல் (Kellies Castle) 1905 இல் கட்டுகிறார். கெல்லிஸ், ஆக்னேஸ் தம்பதியினருக்கு ஹெலன் (1904), ஆந்தோனி (1915) ஆகிய இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர்.

வில்லியம் கெல்லிஸ் ஸ்மித்

இரண்டாவது மகன் பிறந்ததும் தன்னுடைய வீட்டை விரிவாக்கிக் கட்டத் தொடங்குகிறார். அதற்காக, தமிழ்நாட்டிலிருந்து 70 கட்டிடப் பணியாளர்களை அழைத்து வந்து மாளிகையைக் கட்டுகிறார். மூர், மற்றும் ரோமானியக் கட்டிடக் கலையை ஒட்டி இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கற்களும் கட்டிட வடிவமைப்பும் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் சுல்தான் அப்துல் சமாட் கட்டிடம் அதனைச் சுற்றியும் அமைந்திருக்கும் கட்டிடங்களை நினைவுபடுத்துகிறது. அப்போது மலாயாவில் சிமெண்டு பூசி கற்களை இணைத்துக் கட்டும் பாணி பெருமளவில் உருவாகததால், தேன், முட்டையின் வெண்கரு, கருப்புச் சீனி, சுண்ணாம்பு போன்றவற்றைக் குழைத்து அதனைக் கற்களுக்கு இடையில் குழைத்துப் பூசிக் கட்டிடத்தை எழுப்பியிருக்கின்றனர். ஆறு மாடி கட்டிடடமாக எழுப்பவிருந்த மாளிகையில் பதினான்கு அறைகள், வைன் வைப்பதற்கான அறை, குதிரைக் கொட்டில், பணியாளர் அறைகள், மேல்தளத்தில் விருந்தினரை உபசரிப்பதற்கான கூடம், டென்னிஸ் மைதானம், அதன் மேல் குவிமாடத்துடன் பலுத்தூக்கி செயற்படுவதற்கான அறையையும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. 


மாளிகையின் முகப்பில் இருக்கும் குதிரைக் கொட்டிலுடன் கூடிய பாதுகாவலர் அறை

முதலாம் உலகப் போரில் கட்டிடப் பணி தடைப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து, மலாயாவில் பரவத் தொடங்கிய ஸ்பானிஸ் காய்ச்சலால் கட்டிடப் பணியாளர்கள் 70 பேர் இறந்தனர். இந்த மாளிகைக்காகப் பலுத்தூக்கியை வாங்க போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகருக்குச் சென்ற வில்லியம் ஸ்மித் நிமோனியா காய்ச்சல் கண்டு 1926 ஆம் ஆண்டு இறந்து போனார். அவரின் இழப்பைத் தாங்க முடியாமல் முற்றுப் பெறாத கட்டிடத்தையும் தோட்டத்தையும் ஹாரிசன் அன்டு குரோஸ்பிள்டு நிறுவனத்துக்கு விற்றுவிட்டு ஆக்னேஸும் அவருடைய பிள்ளைகளும் ஸ்காட்லாந்துக்கே குடியேறிவிட்டனர். அவரின் இறப்புக்குப் பின்பு கட்டிடப் பணிகள் முற்றுபெறாமலே போய்விட்டது.  ஸ்மித்தின் மகன் அந்தோனி இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று இறந்துவிட்டான்.



இன்றைக்கு முற்றுப்பெறாமல் நின்றிருக்கும் கெல்லிஸ் மாளிகையைப் பார்க்கும் போது அன்றையக் காலத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தைப் பற்றிய வியப்பும் ஸ்மிதின் கனவும் விருப்பமும் நிறைவேறாமல் போனதன் சோகமும் ஒருசேர தோன்றுகிறது.




இந்த மாளிகையைத் தாண்டி ஐந்நூறு ஏலா தூரத்தில் அமைந்திருக்கும் (அன்றைய தூரக் கணக்கு முறை) மாரியம்மன் கோவிலில் கெல்லிஸின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தோட்டத்தைச் சுற்றிலும் பரவத் தொடங்கிய ஸ்பானிஸ் காய்ச்சலின் தாக்கத்திலிருந்து மீள மாரியம்மன் கோவில் கட்ட வேண்டுமென்ற தோட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்மித் கோவிலைக் கட்ட நிலத்தையும் பணத்தையும் கொடுத்ததால் அவரை மரியாதை செய்வதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டது என மாளிகைக் குறிப்புகளில் காணப்படுகின்றன. 


ஆனால், கோவில் கட்டப் பண ஒதுக்கீட்டைத் தவிர முக்கியமான பணியை ஸ்மித் செய்திருக்கிறார். 1914 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய ரப்பர் தோட்ட முதலாளிகள் சங்கத்தில் தன்னுடையத் தோட்டத்தின் முன்பாக அரசு அனுமதியுடன் செயற்பட்டுவரும் கள் கடையினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தீர்மானத்தை முன்வைத்திருக்கிறார். 1913 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கள் கடை திறக்கப்பட்டதிலிருந்து தொழிலாளிகளுக்காகச் செலவிடப்படும் மருத்துவக் கட்டணம் 300 டாலரிலிருந்து 900 டாலராக அதிகரித்திருக்கிறது புதியத் தொழிலாளர் தருவிப்புக்காக 20000 டாலர் செலவிடப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், தொழிலாளர் கட்டுப்பாட்டு அதிகாரியால் அவருடைய கெல்லாஸ் தோட்டம் நலக்குறைவான தோட்டம் எனக் கருப்புப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான கேடுகளைக் கொண்டு வருவதால் கடுமையான பொருளாதார இழப்புகளும் தொழிலாளர்கள் நலம் கெடுவதாலும் கள் கடைகளுக்கான உரிமம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மாளிகை மேல்மாடத்தில் இருக்கும் டென்னிஸ் அரங்கம்


கெல்லிஸ் போன்ற முதலாளிகள் தங்கள் பொருளாதார நலனை முன்னிறுத்தியே இவ்வாறான முடிவுகளுக்கு வந்திருக்கக்கூடும் என்றே இந்தச் செய்தியை வாசித்ததும் எண்ணத் தோன்றியது. 15 ஜனவரி 1914 தேதியிடப்பட்ட செய்தியில் மத்திய தோட்ட முதலாளிகள் சங்கக் கூட்டத்தில், சிறிய நிலப்பரப்பில் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்ய நேர்வதால் அவர்களின் சமபளத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் எழுவதைப் பற்றிப் பேசுகிறார்கள். சராசரியாக ஒரு தொழிலாளி பத்து ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ரப்பர் மரங்களைச் சீவுகிறார். நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு அப்பால் ஒரிரண்டு மரங்களை மட்டுமே அவர்களால் கூடுதலாக சீவ முடிகிறது. இதனால், அதிகமான தொழிலாளர்கள் தேவைபடுகிறார்கள். 1912 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்த தொழிலாளர் எண்ணிக்கையைக் காட்டிலும் 12 % அதிகமான தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் முதலாளிகளுக்குப் பொருளியல் இழப்பு ஏற்படுகிறது. ஆனாலும், தொழிலாளர்களின் நிலை மீது இரக்கம் கொண்டு அவர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் நிலைநிறுத்தும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அந்தத் தீர்மானத்தை கெல்லிஸ் வழிமொழிகிறார். அதே கூட்டத்தில், ரப்பர் தோட்டக்குடியிருப்புகளில் மோசமான தங்குமிடங்களில் இருக்கும் இந்தியத் தொழிலாளர்களின் நிலை குறித்து பேசும் போது அதனை ஒப்பு கொள்கிற தோட்ட முதலாளிகள் சங்கத்தலைவர் ஏ.பி.மில்னே இதைவிட மேம்பட்ட தொழிலாளர் நிலை வேறு நாடுகளில் இல்லை என்கிறார்.  மேலும், மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான கூலி விகிதம் தரப்படவேண்டுமென முடிவு எடுக்கப்படுகிறது. தொடக்கக் காலத்தில், இந்தியர்கள் எம்மாதிரியான இக்கட்டிலும் உழைப்புச் சுரண்டலிலும் இருந்தார்கள் என்பதை இந்த விவாதங்கள் காட்டுகின்றன. அதே கூட்டத்தில், கள் கடையின் மீதான தீர்மானத்தை மீண்டும் முன்வைக்கிறார். இந்தக் கூட்டத்தில், கள் கடைகளை நிரந்தரமாய் மூடுவதற்குப் பதிலாக மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளை எவ்விதக் கலப்புமின்றி விற்கலாம் என்ற பரிந்துரையை முன்வைக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளரும் போதையூட்டாத 6 புட்டிகள் வரை கள் அருந்தலாம். ஆனால், அவ்விதமாய்ச் செய்வதால் வயிற்றுப் போக்கு ஏற்படக் கூடும். அதனைப் பருக தகுந்ததாக மாற்ற மூன்று வழிமுறைகளைக் கையாளலாம் என்கிறார்.

முதலாவதாய், ஒராண்டு நொதிக்க வைக்கப்பட்ட சுக்கா கள் கலவையைப் புதியதாக இறக்கப்பட்ட கள்ளில் கலப்பதன் வாயிலாக கள்ளில் இருக்கும் நச்சை முறிக்கலாம். 1 சுக்கா கள் புட்டியைக் கொண்டு 50 நீர் புட்டிகள், 55 கட்டி உப்பைக் கொண்டு நூறு கள் புட்டிகளை அன்றாடம் தயாரிக்கலாம்.

இரண்டாவதாக, அப்பொழுது கடைகளில் விற்க அனுமதிக்கப்பட்டிருந்த போதை தரும் ஒப்பியம் எனப்படும் கஞ்சா செடியின் விதைகளையும் கறிகல் (curry stone)  ஆகியவற்றுடன் நீர், சீனியையும் கரைசலாகச் செய்து கள்ளில் கலந்து குடிக்கச் செய்தல். இவ்வாறு செய்வதன் மூலம், சற்றே போதையூட்டலாம்,

மூன்றாவதாக, திரோங் பூங்கா, திரோங் இதாவும் ஆகிய இலைகளையும் பழங்களையும் கள்ளில் கலந்து குடித்தல். இவ்வாறு செய்வதன் மூலமாக மிகையான போதையை ஏற்படுத்தலாம். இந்த மூன்று முறையிலும் தயாரிக்கப்படும் கள்ளின் மாதிரியை அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஆனால், இது குறித்த அரசுக்கு அவர் எழுதிய கடிதத்துக்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை என்கிறார்.

அத்துடன் கள் கடை திறப்பினால், தோட்டத் தொழிலாளர்கள் மனைவியை அடிக்கின்றனர்;  நிமோனியா காய்ச்சல், இறப்பு விகித அதிகரிப்பு ஆகியவையும் ஏற்படுகின்றன என்கிறார். 1915 ஆம் ஆண்டு ஜூன் தேதியிடப்பட்ட செய்தியில் கெல்லாஸ் தோட்டத்தில் கள் கடை மூடப்பட்டதனால், இறப்பு விகிதம் குறைந்திருப்பதைக் குறிப்பிடுகிறார். ஆனால், தொழிலாளர்கள் கள் அருந்துவதற்காக கோப்பேங், சிபுத்தே போன்ற பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர். அங்கிருந்து செல்லும் பகுதியில் இருக்கும் கால்வாய்களில் விழுந்து நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர் என்கிறார். அதனால், மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளைத் தயாரிக்கும் கடைக்கான உரிமத்தை அளிக்குமாறு அரசுக்கு விண்ணப்பிக்கிறார். நாட்டுக் கள்ளுக்கும், ரசயானம் கலக்கப்பட்ட கள்ளுக்குமிடையிலான வேறுபாட்டைக் கண்டடைவதற்கு இந்த முயற்சி அவசியம் என்கிறார். ஆனாலும், அவரின் விண்ணப்பத்தை தொழிலாளர் கட்டுப்பாட்டு அதிகாரி நிராகரித்தையும் சுட்டிக்காட்டுகிறார். கள் கடைகளை ஒரேயடியாக மூடுவதுதான் சிறந்த வழியென அரசு கருதுகிறது. கள் விற்பனையிலிருந்து பெறப்படும் 100 டாலர் வருமானம் ஒரு கூலியின் உயிரைப் பறிக்கிறது என அரசுதரப்பு குறிப்பிடுகிறது. இந்தக் கூட்டத்தின் இறுதியிலும் நாட்டுக்கள் கடைக்கு அனுமதியளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறார். 17 ஜூன் 1915 இடப்பட்ட செய்தியில் நடந்த தோட்ட முதலாளிகள் சங்கத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்வதற்கு ஏதுவாக வார இறுதி விடுமுறை வழங்க வேண்டுமென்ற சிங்கப்பூர் பிஷப்பின் கோரிக்கை விவாதிக்கப்படுகிறது. அந்த விவாதத்தில் பங்கேற்கின்ற ஸ்மித் மலாயா இசுலாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடென்பதால் வெள்ளிக்கிழமை விடுமுறை சரியானதாக இருக்குமென்கிறார். அத்துடன் தோட்டத்தில் பணியாற்றும் ஐரோப்பியர்களுக்கு ஒரு நாள் விடுப்பு தருவது முதலாளிகளுக்குச் சிரமமாக இருக்காதென்கிறார். அதே கூட்டத்தில், எல்லா தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிப்பது தேவாலயங்களில் கூட்டங்களைக் கூட்டவும் வசூலை அதிகரிக்கவும் உதவாதென்பதால் ஞாயிறு கட்டாய விடுமுறை கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

கோவில் கோபுரத்தில் வைக்கப்பட்டிருக்கும் கெல்லிஸின் சிலை

வில்லியம் ஸ்மித்தின் நாட்டுக்கள் கடை திறக்கும் முயற்சிக்கு எம்மாதிரியான பலன் கிடைத்தது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. கெல்லிஸ் ஸ்மித்தின் செயற்பாடுகளை முழுமையாகக் காணும் போது, தன்னுடைய பொருளாதார நலன் மேல் அக்கறை கொண்ட விவேகமான முதலாளியாகவே காண முடிகின்றது. அதைத் தாண்டி, தொழிலாளர்களிடையே நிகழும் சமூகச் சிக்கல்களைக் களைவதிலும் தன்னுடைய பொருளாதார நலன் இருப்பதைக் கண்டுணர்ந்தவராகவும் தெரிகிறது. அதனால் தான் என்னவோ, மாளிகையில் எதாவது நடந்தால், அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கான சுரங்கப்பாதையைக் கோவில் நோக்கி வைத்திருக்கிறார்.

மேற்கோள்கள்

https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitsecho19140109-1.2.60?ST=1&AT=search&K=Kellie-Smith&P=2&QT=kellie-smith&oref=article

https://www.whwdesign.org/kellies-castle

https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitsbudget19140115-1.2.85.14?ST=1&AT=search&k=Kellie-Smith&QT=kellie-smith&oref=article

https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/pinangazette19150614-1.2.70?ST=1&AT=search&k=Kellie-Smith&QT=kellie-smith&oref=article

https://cilisos.my/wp-content/uploads/2020/09/temple-e1599817309699.jpg


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற