விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்றுப் பேச முடியுமா என எழுத்தாளர் ஜெயமோகனிடமிருந்து செய்தி வந்த நாளிலிருந்து அதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். டிசம்பர் 15 இரவு சென்னையில் தரையிறங்கி கோவைக்கு 12 மணி நேரம் கார்பயணத்திலே விழாவுக்கான முன்னோட்டம் தொடங்கியிருந்தது. எழுத்தாளர் பிரவின் குமார் (பி.கு) எழுத்தாளர் இளம்பரிதி (வழி இணைய இதழின் ஆசிரியர்) என்னையும் எழுத்தாளர் நவீனையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். வழிநெடுக இலக்கிய அரட்டையாடல் உறக்கம், விழிப்பு எனத் தொடர்ந்து கொண்டே சென்றது. எதிலும் பங்குபெறாமல் விஷ்ணுபுரம் அமர்வைப் பற்றியே எண்ணம் சுற்றிக் கொண்டிருந்தது. எனக்கு கிடைத்த அமர்வு எல்லா வகையிலும் சமகால மலேசிய தமிழ் இலக்கியத்துக்கும் மற்ற மலேசிய படைப்பாளிகளுக்கும் சேர்த்துக் கிடைத்த அமர்வென்ற எண்ணம் தொடக்கம் முதலே இருந்தது. விஷ்ணுபுரம் விருது விழா பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜெயமோகனின் இணையத்தளத்தை வாசிக்கத் தொடங்கியப்போது, விஷ்ணுபுரம் விருதுவிழாவில் பங்கேற்றவர்களின் கடிதங்களை வாசித்து என்றாவது ஒருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகக் கலந்து ...