முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடலுக்கு அப்பால்; வாழ்வென்னும் சோர்வுக்கு அப்பால்

 

ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவலை வாசித்தேன். மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஜப்பானியாராட்சிக் காலக்கட்டத்தில் எழுந்த சுபாஸ் சந்திரபோஸ் தோற்றுவித்த ஐ.என்.ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவம் உண்டாக்கிய எழுச்சி குறிப்பிடத்தக்கது. அதனை மையப்படுத்தித் தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியமான நாவல்களாக இமயத்தியாகம், கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய நாவல்களைக் குறிப்பிட முடியும்.

கடலுக்கு அப்பால் நாவல் ஜப்பானியராட்சியின் வீழ்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. ஜப்பானியருடன் நல்லுறவைப் பேணிய இந்தியத் தேசிய ராணுவத்தினர் பர்மா எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் சென்று இந்திய விடுதலையைப்  பெற்றுத் தந்துவிட வேண்டுமென முனைந்தனர். அந்தப் பயணத்தையும் அம்முயற்சியின் வீழ்ச்சியையும் இமயத்தியாகம் நாவல் பேசியது. அந்த முயற்சி தோல்வி கண்டதற்கு ஒருவகையில் ஜப்பானிய ராணுவத்தினரின் ஆதரவின்மையும் காரணமாக இருந்தது. கடலுக்கு அப்பால் நாவல், இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் தொடங்குகிறது. அச்சமயத்தில் மலாயாவில் ஜப்பானியர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஜப்பானின் ராணுவக்கட்டமைப்பு சிதறியிருந்த சூழலை நன்கு பயன்படுத்தி சின் பெங் தலைமையிலான கம்யூனிஸ்டு இயக்கத்தினர் காட்டிலிருந்து வெளியேறி  மலாயாவின் பல பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போர் புரிந்து கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் இந்தியத் தேசிய ராணுவம் பர்மாவிலிருந்து பின்வாங்கி மலாயாவுக்குள் நுழைகிறது. மேடானிலிருந்த இ.தே.ராணுவத்தில் பணியாற்றிய கதையின் மையப்பாத்திரமான செல்லையா பினாங்கு திரும்புகிறான். தமிழர்களின் எழுச்சி வெள்ளமென திரண்டு அரசியல், போர் காரணங்களால் சிதறிப்போய் வடிந்து கொண்டிருக்கும் சோர்வு சூழல்தான் நாவலின் களம்.

பினாங்கில் வட்டித்தொழில் நடத்தி வரும் வயிரமுத்துப்பிள்ளையின் கடையில் அடுத்தாளாகப் பணியாற்றிய செல்லையா சுபாஸ் சந்திரபோஸால் ஈர்க்கப்பட்டு இ.தே.ராணுவத்தில் பங்கேற்ற தமிழர்களில் ஒருவன். இளமைத்துடிப்பும் உற்சாகமும் நிரம்பிய பருவத்தை இ.தேசிய ராணுவ பங்கேற்பு இன்னுமே முறுக்கேறச் செய்கிறது. செல்லையாவும் அவனுடைய ராணுவ நண்பர்களும் ஆயுதங்களைத் தாங்கி தலைமையின் அடுத்தக்கட்ட நகர்வுக்காகக் காத்திருக்கின்றனர். ராணுவத்தில் எதைக் குறித்தும் சிந்திக்காமல் உற்சாகமாக இருந்த பொழுதுகள் வடிந்து கொண்டிருக்கும் சோர்வும் அச்சமுமே செல்லையா தன் நண்பர்களுடனான உரையாடலில் வெளிப்படுகிறது. சுபாஸ் சந்திரபோஸ் இறந்துவிட்டார் எனத் தெரிகின்ற போது அவர்களின் எஞ்சிய உற்சாகமும் முற்றாக வடிகின்றது.  போஸின் மரணத்துக்கு ஜப்பானியர்களே காரணமென செல்லையா சினமடைகிறான். ஜப்பானியர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பு மையம் கொள்ளும் காரணப்புள்ளியாக போஸின் மரணச்செய்தி விளங்குகிறது. தம் தம் ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் இடைமறிக்கும் ஜப்பானிய ராணுவத்தினருடன் பொருதிச் சிலரைக் கொல்கின்றனர். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், தம் தம் ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.

ராணுவப்பயிற்சி அளித்திருந்த மதர்ப்பு நிலை மாறி வட்டிக்கடையில் பணியாளராக மீண்டும் சேர்வதென்பது செல்லையாவுக்கு உள்ளூர சிரமமாக இருக்கிறது. ஆனால், முதலாளி மீதான விசுவாசம், முதலாளி மகள் மரகதம் மீது கொண்ட காதலால் வேறுவழியின்றிட் வேலையில் நீடிக்கிறான். ஆனால், போர்ச்சூழலில் ஈடுபட்ட அவனுடைய சாகசங்கள் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த முதலாளியைக் கலங்கடிக்கிறது. அதனையே காரணமாகக் காட்டி அவனுக்குப் பெண் தரவும் வேலையில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளவும் மறுக்கிறார். மரகதத்துக்கும் செல்லையாவுக்குமான காதல் முறிகிறது. இந்தச் சூழல் செல்லையாவின் உற்சாகம், துடிப்பு எல்லாவற்றையும் குலைத்துப் போடுகிறது. போரின் முடிவில் உபரியாய் மனதில் எஞ்சிய உணர்வெழுச்சி அத்தனையும் கலைந்து காதல் பிரிவு ஏற்படுத்தும் துயர், வாழ்க்கைத் தடுமாற்றங்கள் ஏற்படுத்தும் அலைகழிவாக செல்லையா எனும் தனிமனிதனைக் கொண்டு போருக்குப் பிந்தைய வாழ்வை இந்நாவல் பேசுகிறது.

                                               இந்தியத் தேசிய ராணுவத்தினர்

ஜப்பானியர் மலாயாவைப் படையெடுத்துப் பெருநாசம் செய்தே கைபற்றுகின்றனர். அவர்கள் நடத்தும் குண்டுவெடிப்பில் வைரமுத்துப்பிள்ளையின் ஒரே ஆண்மகனுடன் பலரும் இறந்து போகின்றனர். அதற்குப் பிந்தைய ஜப்பானியரின் வெற்றி அணிவகுப்பில் உள்ளூர் மக்கள் ஆரவாரத்துடன் ஜப்பானியர்களை வரவேற்றத்தைப் பின்னாளில் ஜப்பானின் சரணடைதலுக்குப் பின் பிரிட்டன் வரவேற்புக்கூட்டச் சூழலுடன் ஒப்பீட்டுப் பார்த்துச் செல்லையா உணர்கிறான். மனிதர்கள் தாங்கள் அடையும் துயர்களை மறந்து சூழலுடன் ஒன்றி வரலாற்றில் முன்னகர்ந்து வரும் சிறிய காலக்கோட்டுச் சித்திரத்தைக் கடலுக்கு அப்பால் நாவல் காட்டுகிறது. இன்னொரு புறத்தில், எதை உயர்வானது மேன்மையானது என மனம் கொள்கின்ற உணர்வுகளும் மனநிலையும் கூட மனிதன் தன் அகந்தையால் உருவாக்கிக் கொள்வதே என செல்லையா உணர்கிறான்.  இவ்வாறாக மனம் அடையும் எல்லா அதீத உணர்வுநிலைகளும் ஒருகாலத்தில் பொருளில்லாதவையாக மாறுவதை வரலாற்றையும் சாட்சியாக வைத்து இந்நாவல் பேசுகிறது.

கடலுக்கு அப்பால் நாவலின் மாணிக்கம் பாத்திரம் எல்லா வகையிலும் விடுதலைக்கான வேட்கையை நாடுகின்றவனாக இருக்கிறான். மரகதத்துடனான காதல் கைகூடாமல் போனதால் வெறுமையும் ஆற்றாமையும் கொண்டு அலைகின்ற செல்லையாவுடன் மாணிக்கம் பண்டையத்தமிழ் இலக்கியங்களில் இருக்கும் வரிகளைக் கொண்டு செய்யும் இலக்கியத் தருக்கம் நவீன மனம் இலக்கியத்தை அணுகும் தர்க்க முறைகளில் ஒன்றாகவே காண முடிகிறது. பொதுவாகவே, மரபான தமிழ்ச் சூழலில் ஆண் பெண் உறவு சார்ந்து முன்வைக்கப்படும் கற்பு, லட்சிய காதல் ஆகிய விழுமியங்களைச் சிலப்பதிகாரம், தாயுமானவர் வரிகள், திருமந்திரம் ஆகியவற்றைக் கொண்டு கேள்வியெழுப்புகிறார். பொதுவாகவே இரண்டாம் உலகப்போர் இலட்சியவாத கருத்துகளின் மீதான சோர்வையும் சலிப்பையும் ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஒருவகையில் தமிழ் மனச்சான்றாக மாணிக்கம் படைக்கப்பட்டிருக்கிறான். இலட்சியவாதம், வீரம் ஆகிய விழுமியங்களின் பிரதிநிதியாக இருக்கும் செல்லையா வாழ்வில் தடுமாறி கடவுள் நம்பிக்கை, வெறுமை எனச் சோர்ந்திருக்கும் போது அவனைச் சீண்டுகிறான். ஆனால், மாணிக்கம் விடுதலை வேட்கை மிகுந்தோறும் மனது அலைபாயும் வெறுமையின் ஆபத்தையும் உணர்ந்தவனாகவே இருக்கிறான்.  அதனாலே, அந்தப் பாத்திரம் சொல்லும் மிகப்புகழ்பெற்ற வரியான ‘’மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை’’ என்ற வரி இடம்பெறுகிறது.

இந்த நாவல் வரலாற்று அடிப்படையில் மூன்று முக்கியச் சித்திரங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, பினாங்கு, மலாயாவின் பல பகுதிகள், பர்மா, மேடான் எனத் தென்கிழக்காசியாவின் பலபகுதிகளிலும் குடியேறி வட்டித்தொழில் புரிந்துவந்த செட்டியார்களின் வட்டிக்கடைகளின் கட்டமைப்பைப் பற்றியத் தெளிவை இந்நாவல் தருகிறது. இரண்டாவதாக, 1940களில் இருந்த ஜார்ஜ்டவுன் எனப்படும் பினாங்கின் தலைநகரத்தைப் பற்றிய விரிவான நிலக்காட்சி சித்தரிப்பு வரலாற்று ஆவணமாகவே கொள்ளத்தக்க வகையில் துல்லியத்துடன் அமைந்திருக்கிறது. மூன்றாவதாக, ஜப்பானியர் சரணடைவதற்கு முந்தைய இருவாரக்காலமாக மலாயாவில் நடைபெற்ற சம்பவங்களின் சித்தரிப்பு. ஜப்பானியர் சரணடைவதற்கு முந்தைய பகுதிகள் மலேசியாவில் வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் எழுச்சி பெற்றிருந்த காலமென்பதால் சற்றே சாம்பல் நிறப்பகுதியாகத் தெளிவில்லாமலே சொல்லப்படுகிறது. இந்நாவல், அக்காலத்தில் இ.தே.ராணுவத்தமிழர்கள் எப்படி ஜப்பானியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் எதிர்கொண்டார்கள் என்பதையும் சொல்கிறது. கம்யூனிஸ்டுகள் எவ்வாறு தமிழர்களுடன் இணைந்து கொள்வார்கள் என இணக்கப்போக்குடன் நடந்து கொண்டனர் என்பதை கம்யூனிஸ்டு இயக்கக் கேப்டன் லிம் கியு உணவும் பணமும் கொடுத்து உபசரித்ததிலிருந்து உணர முடிகிறது.



இந்த நாவலின் வாசிப்பனுபவம் அளிக்கும் வரலாற்றுச்சோர்வுக்கு நிகராகவே எழுத்தாளர் ப.சிங்காரத்தின் வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ளுந்தோறும் சோர்வும் துயரும் எழுகிறது. ஜப்பானியாராட்சிக்கு முன் மேடானுக்கு வந்து வட்டிக்கடையில் பணியாற்றியப் போது பெற்ற அனுபவங்களையே நாவலில் புனைவாக்கியிருக்கிறார். அத்துடன், மேடானில் திருமணம் புரிந்து முதற் பிரசவத்தின் போது மனைவியும் மகனும் இறந்தகாரணத்தால் வாழ்வு மீது கொண்ட சலிப்பினால் தனிமையால் வாழ்ந்து இறந்திருக்கின்றார். மேலும், தமிழிலக்கியத்துக்கு மிகப்பெரும் கொடைகளாகக் கருதப்படவேண்டிய கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி என்ற இருநாவல்களையும் எழுதிப் பிரசுரிக்க எடுத்துக் கொண்ட சிரமங்கள் தந்த அவநம்பிக்கையால் எஞ்சிய காலமெல்லாம் இலக்கியத்திலிருந்து விலகியே இருந்திருக்கிறார். இருந்தபோதிலும் என்றென்றைக்கும் தமிழ் இலக்கியத்தில் அவருடைய பங்களிப்பையும் இடத்தையும் மறுக்க முடியாததாக இந்நாவல்கள் செய்திருக்கின்றன எனலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...