முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்றுப் பேச முடியுமா என எழுத்தாளர் ஜெயமோகனிடமிருந்து செய்தி வந்த நாளிலிருந்து அதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். டிசம்பர் 15 இரவு சென்னையில் தரையிறங்கி கோவைக்கு 12 மணி நேரம் கார்பயணத்திலே விழாவுக்கான முன்னோட்டம் தொடங்கியிருந்தது. எழுத்தாளர் பிரவின் குமார் (பி.கு) எழுத்தாளர் இளம்பரிதி (வழி இணைய இதழின் ஆசிரியர்) என்னையும் எழுத்தாளர் நவீனையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். வழிநெடுக இலக்கிய அரட்டையாடல் உறக்கம், விழிப்பு எனத் தொடர்ந்து கொண்டே சென்றது. எதிலும் பங்குபெறாமல் விஷ்ணுபுரம் அமர்வைப் பற்றியே எண்ணம் சுற்றிக் கொண்டிருந்தது. எனக்கு கிடைத்த அமர்வு எல்லா வகையிலும் சமகால மலேசிய தமிழ் இலக்கியத்துக்கும் மற்ற மலேசிய படைப்பாளிகளுக்கும் சேர்த்துக் கிடைத்த அமர்வென்ற எண்ணம் தொடக்கம் முதலே இருந்தது.
விஷ்ணுபுரம் விருது விழா 
 பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜெயமோகனின் இணையத்தளத்தை வாசிக்கத் தொடங்கியப்போது, விஷ்ணுபுரம் விருதுவிழாவில் பங்கேற்றவர்களின் கடிதங்களை வாசித்து என்றாவது ஒருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகக் கலந்து நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வேண்டுமென எண்ணியிருந்தேன். அதன் பிறகு, ஸ்ருதி டிவி வரவுக்குப் பின்னால் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிறைவினை உரைக்காணொளிகள் அளித்தன. ஆனால், முதலாண்டே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறோம் என்பது உள்ளூர மகிழ்ச்சியை விட கூடுதல் பொறுப்புணர்வு கூடியிருக்கும் உணர்வையே அளித்தது. அதுவும் இந்தப் பத்தாண்டுகளில் தமிழின் முதன்மையான இலக்கியக்கூடுகையாக விஷ்ணுபுரம் எல்லாவகையிலும் மாறியிருக்கிறது. மாறுபட்ட இலக்கிய அழகியல் பார்வையையும் முன்வைத்து விவாதிக்கும் களமாக விஷ்ணுபுரம் விருதுவிழா மாறியிருக்கிறது. விருது பெறுபவரைத் தாண்டி சமகாலத்தில் தமிழிலக்கியத்தில் செயற்படும் இளம் தலைமுறை படைப்பாளர்களையும் கவனப்படுத்தும் முயற்சியையும் செய்கிறது. இவ்வாண்டு தேர்வு பெற்ற எழுத்தாளர்களில் நான் மட்டுமே நூலாகத் தனியாகப் படைப்புகளைத் தொகுத்திருக்கவில்லை. அதனாலே அதிகமும் அறியப்படாத படைப்பாளியாக இருக்கிறாரே எனக் குறிப்பிட்டு ஜெ வின் தளத்தில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பவும் செய்திருந்தார். அதற்கு நிகழ்ச்சியில் பங்குபெறும் அறியப்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் அமர்வின் வாயிலாகப் புதிய படைப்பாளிகளுக்கு அறிமுகத்தைப் பெற்றுத் தரவேண்டும் என ஜெ பதிலளித்திருந்தார். என்னுடைய அமர்வு முடிந்து, மேடையிலிருந்து கீழே இறங்கி வந்தப்போது என்னை வந்து சந்தித்த, நான் சென்று சந்தித்த எழுத்தாளர்களின் சந்திப்பின் வாயிலாக அந்த அமர்வு தந்த அறிமுகத்தை உணர முடிந்தது.
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவுடன்
என்னுடைய அரங்கை எழுத்தாளரும் நண்பருமான ஜி.எஸ்.எஸ்.வி நவீன் நெறியாளராக நின்று நடத்தினார். எனக்கான சிறு அறிமுகக் குறிப்பை வாசித்துவிட்டு கேள்விகளைக் கேட்கலானார். விஷ்ணுபுரம் அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளை மலேசிய சமூக இலக்கியச் சூழலை அறிந்து கொள்ளும் வகையிலான கேள்விகள், என்னுடைய புனைவுலகத்தையும் கலையிலக்கிய ஆர்வங்கள் குறித்து அறியப்படுவதற்குக் கேட்கப்பட்ட கேள்விகள் என இருவகையாகப் பிரித்துக் கொள்ளலாம். எழுத்தாளர் ம.நவீன், தமிழ்விக்கி தளத்துக்காக நான் பங்களித்த சபா, சரவாக் பழங்குடிகளைப் பற்றிய கட்டுரைகள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தைப் பற்றி கேள்வியெழுப்பினார். தமிழ் விக்கி தளத்துக்காக மலேசியத் தமிழ் ஆளுமைகள், இலக்கிய ஆக்கங்கள், சபா, சரவாக் பழங்குடிகள், தமிழ்ப்பள்ளிகள் என நான்கு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். சபா, சரவாக் மாநிலப் பழங்குடிகளைப் பற்றிய அறிமுகம் தமிழ்ச்சூழலில் பெருமளவில் நிகழவில்லை. அவர்களைப் பற்றிய அறிமுகக்கட்டுரைகள் ஆங்கிலத்திலே கூட முழுமையாகக் கிடைப்பதில்லை. சபா, சரவாக் ஆகிய இரு கிழக்கு மலேசிய மாநிலங்களையும் பழங்குடிகளின் தொகைகள் என்றே குறிப்பிடவேண்டும். பெரிய நிலப்பரப்பில் சிறு சிறு வேறுபாடுகளுடன் நூற்றுக்கணக்கான பழங்குடி இனத்தவர்கள் அவ்விரு மாநிலங்களிலும் வாழ்கின்றனர். அவர்களில் கெஜாமான் பேரின மக்களின் தனித்துவமான இறப்புச்சடங்கினைத் தமிழ்விக்கி தளத்துக்குக் கட்டுரைகள் எழுதவந்தப்போதுதான் அறிந்து கொண்டேன். அந்த இனத்தில் இருக்கும் பழங்குடி மூத்தார்களையும் தலைவர்களையும் இறந்த பின் கெலிரியாங் எனும் பெரும் தூனில் கிடத்தியே அடக்கம் செய்கின்றனர். அந்தத் தூணைத் தயாரிப்பதற்கு பல மாதங்கள் ஆகின்றன. காட்டிலிருந்து தேர்ந்த மரத்தை வெட்டியெடுத்து அதன் வெளிப்புறத்தில் அழகிய மர வேலைப்பாடுகளுடன் கூடிய செதுக்குச்சிற்பங்களை வரைகின்றனர். அந்தத் தூணின் நடுப்புறத்தில் இறந்தவரின் உடலைக் கிடத்த துளையிட்டு வைக்கின்றனர். தூணின் மேல்மாடத்தில் இறந்தவரின் அடிமைகள் அல்லது பணியாளை உயிருடன் பிணைத்து நீரும் உணவும் தராமல் சாகவிடுகின்றனர். பழங்குடித்தலைவர் அல்லது மூத்தார் விண்ணுலகை அடையும் போது உடன் இந்தப் பணியாளரும் அவருக்கு ஏவல்பணிகள் செய்ய அனுப்பப்படுகிறார் என நம்பப்படுகிறது. இவ்வாறு புனைவுக்கு இன்றியமையாத பல செய்திகள் தமிழ்விக்கி தளத்துக்காகக் கட்டுரைகள் எழுதும் போதுதான் கண்டுகொண்டேன். அத்துடன், இந்தமாதிரியான தூண்கள் காலனியாதிக்கக் காலக்கட்டத்துக்குப் பின்னர் பழங்குடிகளால் கைவிடப்பட்டுச் சிதிலமடையத் தொடங்கின. எஞ்சியிருக்கும் தூண்களில் ஒன்றை அரசுக்குப் பழங்குடி மக்கள் பரிசளித்திருக்கின்றனர். அந்தத் தூண், தேசிய அருங்காட்சியகத்தின் வாசலில் வைக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவின் வரலாற்றுக்கு வெளியே இருக்கும் உதிரி வரலாறாகவே அதனை அடையாளம் காண முடிகிறது. இந்தமாதிரியான வரலாற்றுக் கண்டடைதல்களையும் புனைவுக்கான களங்களையும் தமிழ்விக்கி கட்டுரைகள் தந்திருக்கின்றன எனப் பதிலளித்தேன்.
                                                  எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்புடன் 
அதன் பிறகு, எழுத்தாளர் கனகலதா, மலேசியாவில் கலையிலக்கியத்துக்கு இருக்கக்கூடிய தணிக்கைகள் போன்றவற்றால் உங்களுடைய எழுத்துகளில் ஏதேனும் சுயத்தணிக்கை செய்து கொள்கிறீர்களா எனக் கேள்வியெழுப்பினார். அதனை ஒருவகையில் ஒப்புக்கொள்ளத்தான் செய்தேன். மலேசியாவில் இருக்கும் எல்லைக்குட்பட்ட சுதந்திரம் என்பது எதோ ஒருவகையில் புனைவெழுதும் போது தடையாக மாறுகிறது. ஆனால், இருந்தப்போதிலும், தமிழ்ச்சூழலிலே இருக்கும் சில பொதுப்புத்திகளை முன்னிறுத்தி எழுத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்வதில்லை என்பதையும் குறிப்பிட்டேன். அவ்வாறு புனைவில் தங்கள் பார்வைக்குப் பொருந்தாதவையாக அடையாளம் காட்டப்படுகின்ற உதிரிவரிகளை எடுத்துக்காட்டிப் புனைவுகளைத் தடைசெய்ய வலியுறுத்துகின்றவர்களுக்காக எதையும் மாற்றவில்லை என்பதைச் சொன்னேன். அத்துடன், என்னுடைய விமர்சனக் கட்டுரைகளில் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனை மேற்கோள்காட்டி எழுதுவது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. க.நா.சுப்பிரமணியம், சுந்தர ராமசாமி இப்படியான எழுத்தாளர்களை ஏன் விமர்சனத்தில் மேற்கோள் காட்டுவதில்லை. அவர்களை வாசிக்காதது ஒரு காரணமா எனவும் கேட்கப்பட்டது. அதனை என்னுடைய வாசிப்பின் எல்லை விரிவின்மையின் காரணமாய் மற்ற விமர்சகர்களை மேற்கோள் காட்டத் தவறியதைக் குறிப்பிட்டேன். அத்துடன், ஜெயமோகன் தன்னுடைய விமர்சனங்களில் அளிக்கும் தொகுப்புத்தன்மை என்பதே, அவருடைய இலக்கிய அளவுகோல்களையும் விமர்சனங்களையும் ஏற்கச்செய்கிறது என்பதையும் குறிப்பிட்டேன். எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதன், என்னுடையத் திரைப்படம் சார்ந்த ஆர்வத்தை ஒட்டிக் கேள்வியெழுப்பினார். என்னுடைய திரைப்பட ரசனை என்பது முழுக்க கதை, திரைக்கதை ஆகியவற்றை மட்டுமே அளவீடாகக் கொண்டது. அதைத் தாண்டி திரைமொழியின் தொழில்நுட்பம் என்பதைப் பெரியளவில் நான் அறிந்து வைத்திருப்பதில்லை. வல்லினம் தளத்துக்காகத் தயாரித்த ஆவணப்படங்களிலும் கேள்விகள், கோணங்களைத் தெரிவு செய்தல் என மிக அடிப்படையான பங்களிப்பையே வழங்கியிருந்தேன். ஆனால், படங்களுக்குக் கதை, திரைக்கதை சார்ந்தும் பங்களிக்கும் ஆர்வம் இருப்பதைக் குறிப்பிட்டேன். 



எஸ்.எம் சாக்கீருடனான அமர்வு

என்னுடைய அமர்வுக்குப் பின் மலேசிய எழுத்தாளர் சாக்கீருடனான அமர்வுக்கு நெறியாளராகப் பணியாற்றினேன். மலேசியாவில் மற்ற மொழி இலக்கியங்களில் நிகழ்பவற்றைப் பற்றிய கவனம் மிகக் குறைவே. அவரவரக்கான தனித்த களங்களில் களமாடிக் கொண்டிருக்கிறோம். விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக சாக்கீர் அழைக்கப்பட்டிருந்தார் என்பதாலே அவருடைய கதைகளையும் புனைவுலகையும் ஓரளவு வாசித்தேன். நிகழ்ச்சிக்கு முன்னதான சில உரையாடல்களில் மலாய் இலக்கியச் சூழலையும் அவருடைய புனைவுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டேன். அங்குமே தீவிர இலக்கியமென்பது சிறு வட்டத்தில் மட்டுமே புழங்குகிறது என்பதையும் பொதுவான இலக்கிய நிகழ்ச்சிகள், இலக்கியத்தில் களமாடிக் கொண்டிருப்பதாக நம்பும் முந்தைய தலைமுறையினரின் பார்வை என மிக இயல்பான மலாய் மனிதரைப் போலவே பேசிச் சிரித்தார். அவருடனான அமர்வில் கேள்விகளை மலாய் மொழியில் பெயர்த்து ஆங்கிலப் பதில்களைத் தமிழ்படுத்தி மும்மொழியில் சாரத்தை மட்டுமே உள்வாங்கி சொன்னேன். சாக்கீர் அரங்கில் ஆங்கிலத்தில் பதிலளித்துக் கொண்டு இருக்கும் போது அரங்கில் அமர்ந்திருந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்நிய மொழியின் இலக்கியப்பரப்பு என்பதால் சற்றே சோர்வுடன் அமர்ந்திருந்ததைப் போல இருந்தது. ஆனாலும், தொடர் கேள்விகள் அரசியல், சமூகம், இலக்கியம், படைப்புச் சுதந்திரம் எனப் பலதளங்களிலும் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் முடிந்து கீழிறங்கியதும் கூட பலரும் அவரைச் சூழ்ந்து கொண்டு அமர்வைப் பற்றி உரையாடினார்கள். அமர்வு சிறப்பாக இருந்ததாக என்னிடமும் சாக்கீரிடமும் சொன்னார்கள். நிகழ்ச்சி முடிந்து இன்னும் சில பேரைத் தொடர்ந்து பார்த்தேன்;பேசினேன். வாசிக்கப்படுகிறேன்; அறியப்படுகிறேன் என்பதே மிக மகிழ்ச்சியாக உணரச் செய்தது. விஷ்ணுபுரம் விருது விழா நடத்தப்படும் விதம் மிகவே சிறப்பாக இருந்தது. அரங்கின் முகப்பில் இருந்த தட்டிகள் முதல் அரங்கு அலங்காரம், உணவு, அரங்கின் நேர ஒழுங்கு, விருந்தினருக்கான ஏற்பாடுகள், புத்தகச் சந்தை ஆகியவை மிகச்சிறப்பாக விஷ்ணுபுரம் நண்பர்களால் ஒருக்கப்பட்டிருந்தது. 


காலைவேளை தேநீர் நடை

அதனையடுத்து ஒவ்வொரு அமர்விலும் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் என அத்தனையிலும் சிறப்பினைக் காண முடிந்தது. அரங்குக்கு ஒவ்வாத கேள்விகளை உடனுக்குடனே சுட்டிக்காட்டப்பட்டு நிறுத்தப்பட்டன. மொழிபெயர்ப்பு, இணைய இதழியல், நாவல், சிறுகதைகள் என இலக்கியத்தில் பல முகங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புகளை வாசித்திருக்கிறேன். அதைக் குறித்துக் கட்டுரைகளும் எழுதியிருப்பதாலே நிகழ்ச்சி மனதுக்கு மிக நெருக்கமாக அமைந்துவிட்டது. நிகழ்ச்சி முழுதுமே பலரும் யுவனின் குழந்தைமையை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கவிஞர் ஆனந்தகுமார் எடுத்த சுழற்பாதை யாத்ரீகன் எனும் தலைப்பிடப்பட்டிருந்த ஆவணப்படம் நிகழ்ச்சியின் இறுதியில் திரையிடப்பட்டது. அவருடைய நண்பர்கள், எழுத்தாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரின் பார்வையில் ஆவணப்படம் அமைந்திருந்தது. பூ மரத்து நிழலிலே என்ற பாடல் எப்படி அவருக்கு அணுக்கமாக இருந்தது என்பதை அவருடைய மகள் குறிப்பிட்டுச் சொன்னார். அந்த ஆவணப்படத்தை நினைக்கும் போது அந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

ஆவணப்படத் திரையிடலின் போது


அரங்கு நிறைந்த திரளுடன் உற்சாகமாய் ஒர் இலக்கிய கூடல் நடைபெற்றது மகிழ்ச்சியாக இருந்தது. இந்நிகழ்வு நான் செல்ல வேண்டிய பயணத்தையும் இன்னுமே விரிவுப்படுத்தியிருக்கிறது விஷ்ணுபுரம் விருதுவிழா. ஒர் அறிவார்ந்த கூடுகையில் கலந்து கொண்ட நிறைவைத் தந்தது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...