எனக்கு ஒன்பது வயதிருக்கும் போதே நாளிதழ் செய்திகளை நாள் தவறாமல் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். நாளிதழ் வாசிக்காமல் ஒரு நாளைக் கடக்க முடியாத அளவு நாளிதழ் வாசிப்பு பித்து பதினேழு வயது வரை தொடர்ந்தது. நாளிதழில் வரும் அரசியல் செய்திகள், பிரமுகர்களின் பெயர்கள், நிகழ்வுகள் அத்தனையும் மனப்பாடமாகத் தெரியும். வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களிடம் என் அரசியல் அறிவை ஒப்பிப்பதை ஒரு கடமையாகவே செய்து வந்தேன். அந்தப் பெயர்களையும் நிகழ்வுகளையும் விளையாட்டைப் போல சொல்லிக் காட்டுவேன். அரசியல் செய்திகளைப் பேசுவதென்பது அரட்டையாடலாக மாறி உரையாடலைக் கெடுப்பதாகவும் சலிப்பூட்டுவதாகவும் அமைவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். சலிப்பையும் வெறுப்பையும் விதைக்கும் செய்திகளே பரபரப்பு கருதி நாளிதழ்களில் கவனம் பெறுகின்றன. இன்றைக்கும் ஊடகங்களில் அவைப் பரவலாகப் பகிரப்பட்டு உடனடி எதிர்வினைகள் பெற்று அடுத்தடுத்து வரும் செய்திகளால் விரைவில் மறைகின்றன. ஆனால், அவை உருவாக்கும் சலிப்பு, அச்சம் எப்பொழுதும் இங்கு இருக்கிறது. ஆனால், ஒரு காலக்கட்டத்தில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் செய்திகளையும் பெரும் வ...