முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்)

வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே

பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே என்னை அமர வைத்து அவரின் பாட இடைவேளை நேரங்களில் கணிதம் சொல்லிக் கொடுத்தார். சொல்லப்போனால், அந்த இடைவேளை நேரங்களிலும் அவருக்கு மாற்று வகுப்புகள், மற்ற வேலைகள் எனக் கொடுத்துத் தமிழ் பாடத்தையும் சரி கூடுதலாக எங்களுக்கு சொல்லித்தருவதாய் ஒப்புக்கொண்ட பாடங்களையும் நடத்தவிடாமல் செய்த மேலிட சதிகாரர்கள் பள்ளியில் இருக்கத்தான் செய்தார்கள். அந்தச் சொற்ப நேரத்தில், சொல்லித் தருவதாக ஆசிரியர் சொன்ன பாடங்களைச் சொல்லிக் கொடுக்காமல் விட்ட நேரமே மிகுதி. இருந்தும், அந்தக் காத்திருப்புக் கணங்கள் ஏற்படுத்திய நிதானமும் சிக்கல் இருப்பதாக நானே கண்டுகொண்ட தருணங்களும் என்னைக் கொஞ்சம் மாற்றியது என்றே சொல்லலாம்.



பின்னாளில், படிவம் 4, 5 இலும் தொடரும் பாடங்களின் குறைந்த புள்ளிகள் சிக்கலுக்காக ‘ நான் வேணும்னா காசு கட்டுறேன்…டியுசன் எடுத்து படி’ என்று சொன்னதோடு நில்லாமல் அதற்குத் தகுந்த ஆசிரியரையும் கண்டு சொன்னார். என்னைப் பொறுத்தளவில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெரிய லட்சியங்கள், அடைய வேண்டிய சாதனைகள் என எதையும் வகுத்துச் செயற்பட்டதில்லை. என்னை வழிநடத்தியதெல்லாம். நான் உயர்வாக எண்ணிய ஆசிரியர்கள், மனிதர்கள் அவர்களின் மனத்துக்கு நெருங்கியவர்களாக ஆக வேண்டுமென்ற முனைப்புத்தான். அப்படியாக, ராதா டீச்சரை நான் கண்டுகொண்டிருந்தேன். நூலகத்தில் இரவல் வாங்கிய நூல்களை அவர் கண்படும்படி மேசையில் வைத்து நற்பெயர் ஈட்ட செய்த அசட்டையான முயற்சியைப் பார்த்து ‘ படிக்குறத்துக்கும் பேசுறத்துக்கும் சம்பந்தமே இல்லையே’ எனச் சொல்லிச் சென்றார். எனக்கு வாசிப்பு, எழுத்து தவிர வேறு ஆர்வம் குறைவாகவே இருந்தது. அதிலும் கவின் கலைகள் மீது தயக்கம்தான் அதிகம். எல்லாவற்றிலும் சிறந்தவனாக என்னை உருவாக்க டீச்சர் எண்ணம் கொண்டிருந்தார் போலும். நான் தயங்கிப் பின்னகர்வதைப் பார்த்து ஒருநாள், கடுமையாக ஏசி விட்டார். அப்படியே பேயறைந்ததைப் போல வகுப்பில் அமர்ந்திருந்தவனைக் கண்டு ‘ ஸ்தூல உடம்பு மட்டும் தான் இங்க இருக்கு…சூட்சும உடம்பு வேற எங்கோ உலாத்திட்டு இருக்கு போல’ என்றார். வகுப்பு என்று சொன்னாலும் பல நாட்களாக மரத்தடிக் கீழ் ஓய்வு நேர மாணவர்களின் இரைச்சலுக்கு இடையிலும் தான் அந்த வகுப்பை ஆசிரியர் நடத்தி வந்தார்.

வகுப்புகளில் வரையறுக்கப்பட்ட பாடங்களின் மீதான போதனை மிஞ்சி போனால் அரை மணி நேரத்துக்கு மேல் நீண்டதில்லை. அப்படியே ஒருவேளை 1 மணி நேரமும் பாடத்தை மட்டுமே ஆசிரியர் போதித்தால், அன்றைக்குக் கடும் கோபத்தில் இருப்பதாகவே எல்லாருக்கும் தெரியும். அந்தப் பாட வேளையில் தன் வாழ்க்கை அனுபவங்கள், வாழ்க்கை நிகழ்வுகள், வாசித்த நூல்கள், செய்யுளடிகள், பழமொழிகள், அனுபவங்கள், ஆன்மீக அனுபவங்கள் என எங்கெங்கோ புள்ளிகளை இட்டு இணைத்து எங்கெங்கோ சென்று வளர்ந்து நிற்கும் அனுபவங்கள் ஒவ்வொரு பாட வேளைக்குப் பின்னரும் மனத்தில் உணரச் செய்த பரவசத்தை இன்றும் சிலிர்ப்புடன் நினைவு கூர்கிறேன். ‘நாடா கொன்றோ அவலா கொன்றோ என அவ்வைப் பாடல் தொடங்கி சபையில் நீட்டோலை வாசியான் நின்ற நெடுமரம்’ ஐயோ இவன் அழகென்பதோர் அழியா அழகுடையான் எனக் கம்ப ரசம் வழங்கி உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்…உடம்பினுள்ளே உருப்பொருள் கண்டேன் என திருமூலர் வரிகள் எனத் தமிழின் இடைக்கால இலக்கியங்கள் எல்லாம் ராதா டீச்சரின் சொல் உதிர்த்தலிலே எனக்கு அறிமுகமானவையே. 

கம்பத்துச் சூழலில் வளர்ந்த எனக்கு விரிந்த உலகத்தைக் காட்டியவை நாளிதழ்களே. அதிலிருந்து விலகி இன்னுமே விரிவான உலகம் ராதா டீச்சரின் அறிமுகத்தால் கிடைத்தது. அப்பொழுதெல்லாம் இணையம் என்பது எங்கோ யாருக்கோ இயங்குகிறது என்ற எண்ணம்தான் இருந்தது. ஒரு வகுப்பில் எல்லாருக்கும் மின்னஞ்சல் உருவாக்கித்தந்தார். இணையத்தில் எனக்கும் ஒரு அஞ்சல் என்பது பதின்மூன்று வயதில் செய்த பரவசம் ரகசியமாகத் தவறிழைத்து அதை நினைத்து உள்ளுக்குள் உணரும் பற்கூச்சமான பரவசத்தைச் சில நாட்கள் எனக்குள் படரவிட்டிருந்தது. பள்ளியில் பயின்ற நாட்களிலும் சரி பின்னர் கல்லூரிக்கு வந்தப்பின்னரும் சரி என்னால் ஒருநாள் கூட ஆசிரியருடன் இயல்பாகப் பேச முடியவில்லை. அவரருகில் சென்றாலே கால்களில் நடுக்கமும் பேச்சில் தயக்கமும் தொற்றிக் கொள்ளும். வகுப்பில் மற்ற நண்பர்கள் ஆசிரியருடன் எல்லா கதைகளையும் பேசுவார்கள். நான் மட்டும், ஆசிரியர் துவக்கத்தில் திறக்கச் சொன்ன பக்கத்தைத் திறந்து வைத்து அரட்டை முடியும் வரையில் காத்திருப்பேன். என்னை எங்கும் வெளிப்படுத்த தயாராக இல்லாதவனாகவே இருந்திருக்கிறேன். தொடக்கப்பள்ளியில் முடிந்தளவு எந்த வெளிநிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் செல்லாமல் அரணொன்றை அமைத்துக் கொண்டிருந்தேன். அதையும் தாண்டி என்னைக் கண்டுகொண்டு அழைத்துச் செல்ல முயன்ற ஆசிரியர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறேன். இடைநிலைப்பள்ளியின் தமிழ் வகுப்பில் அறுவரில் ஒருவனாக அமர்ந்த போது ஒவ்வொருவரையும் கண்காணிப்பதொன்றும் சிரமமாக இல்லை. பேச்சுப்போட்டி, கட்டுரை, சிறுகதை எனப் போட்டிகளுக்கு என்னை அனுப்பி வைத்தார். அந்தப் போட்டிகளில் நான் வெற்றியும் பெற்றேன். அங்கும் சில தருணங்களில் நான் என்னை ஒடுக்கிக்கொண்ட பொழுதுகளில், ஏசவும் செய்திருக்கிறார்.



நிமிர்ந்த நடையும் எதற்கும் தளராத ஆளாகவும் ராதா டீச்சர் பள்ளியில் இருந்தார். கட்டொழுங்கு அறையின் முன்னால் வரிசையாக நிற்கும் இந்திய மாணவர்களைச் சுட்டெரிப்பதைப் போன்ற பார்வையுடன் பார்ப்பார். மற்ற இன மாணவர்கள் முன் நாமும் தன்மானத்துடன் நடந்து கொள்ளச் சொல்வார். பொதுவாகவே, இடைநிலைப்பள்ளியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர் என்ற வாதம் இருக்கிறது. அதிலும் நியாயம் இருந்தாலும், தமிழ் மாணவர்களே தங்களை ஒடுக்கிக் கொள்ளும் சூழலில் ராதா ஆசிரியர் போன்ற ஒருவரின் இருப்பு தமிழ் மாணவர்களுக்கு அளிக்கும் மாற்றமும் நம்பிக்கையும் என்பது அசாதாரணமானது.

நான் இன்றளவும் என் வாழ்வில் நடந்து விட்டதாகவே நம்ப மறுக்கும் நிகழ்வுகளில் என் அம்மாவின் இறப்பும் ஒன்று. அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரையில் பள்ளியில் யாருக்கும் அவரைப் பற்றிச் சொன்னதில்லை. அம்மாவின் உடல்நலம் மிகப்பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த நாட்களில் கூட மதியப்பள்ளியின் போது நண்பர்களுடன் பேசப் பிடிக்காமல் நூலகத்தில் அமர்ந்து பொழுது போக்கியிருக்கிறேன். அம்மா இறந்து போன நாளில் ஆசிரியர் வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, மறுநாள் வகுப்பில் முன்னரே சொல்லியிருந்தால் எதாவது செய்திருக்கலாமே என்று சொன்னார். ஒரு கணம் அழ வேண்டுமெனத் தொண்டை வரை பரவியிருந்த துக்கம் எழுந்து மறைந்தது. எஸ்.பி.எம் தேர்வு முடியும் வரையில் என் மேல் எதோ ஒருவகையில் கவனமும் அக்கறையும் செலுத்திக் கொண்டே இருந்தார். எட்டு ஏக்கள் பெற்றதை நானே உள்ளூர நம்ப மறுத்துக் கைகளில் நடுக்கத்துடன் தேர்வு முடிவுகளை ஏந்தி கொண்டிருந்ததைப் பார்த்து ‘எனக்கு அப்பவே தெரியும்..’’எனப் பெருமிதத்துடன் சொன்னார்.

தமிழில் நீ ஒரு ஆளாகவேண்டும் என்பதுதான் ராதா டீச்சர்  நிறைவாக எனக்கு அருளிய ஆசி. ராதா டீச்சரிடமிருந்து கற்றதற்கும் பெற்றதற்கும் மனமார்ந்த நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...