முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலேசிய இந்தியர்களின் அரசியல் வரைபடம்

 எனக்கு ஒன்பது வயதிருக்கும் போதே நாளிதழ் செய்திகளை நாள் தவறாமல் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். நாளிதழ் வாசிக்காமல் ஒரு நாளைக் கடக்க முடியாத அளவு நாளிதழ் வாசிப்பு பித்து பதினேழு வயது வரை தொடர்ந்தது. நாளிதழில் வரும் அரசியல் செய்திகள், பிரமுகர்களின் பெயர்கள், நிகழ்வுகள் அத்தனையும் மனப்பாடமாகத் தெரியும். வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களிடம் என் அரசியல் அறிவை ஒப்பிப்பதை ஒரு கடமையாகவே செய்து வந்தேன். அந்தப் பெயர்களையும் நிகழ்வுகளையும் விளையாட்டைப் போல சொல்லிக் காட்டுவேன். 

அரசியல் செய்திகளைப் பேசுவதென்பது அரட்டையாடலாக மாறி உரையாடலைக் கெடுப்பதாகவும் சலிப்பூட்டுவதாகவும் அமைவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். சலிப்பையும் வெறுப்பையும் விதைக்கும் செய்திகளே பரபரப்பு கருதி நாளிதழ்களில் கவனம் பெறுகின்றன. இன்றைக்கும்  ஊடகங்களில் அவைப் பரவலாகப் பகிரப்பட்டு உடனடி எதிர்வினைகள் பெற்று அடுத்தடுத்து வரும் செய்திகளால் விரைவில் மறைகின்றன. ஆனால், அவை உருவாக்கும் சலிப்பு, அச்சம் எப்பொழுதும் இங்கு இருக்கிறது.

ஆனால், ஒரு காலக்கட்டத்தில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் செய்திகளையும் பெரும் வரைபடமாகத் தொகுத்து வரலாறு இயங்கும் விசையைக் காட்டும் நூல்கள் மேற்சொன்ன அச்சமும் சலிப்பும் நீங்கச் செய்யக்கூடுவதோடு தெளிவையும் தரவல்லன.மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றை ஒட்டிய ஆய்வுகளை வாசிக்கும் போது தவறாமல் குறிப்பிடப்படும் ஆய்வாளர்களில் ராஜேஸ்வரி அம்பலவாணர் முதன்மையானவர். அவரைத் தவிர கே.எல்.சித்து, அரசரத்தினம் போன்ற ஆய்வாளர்களும் அவர்களின் ஆய்வுகளும் குறிப்பிடப்படுவதுண்டு.

ராஜேஸ்வரி அம்பலவாணர்  மேற்கு மலேசியா, சிங்கப்பூரில் மலேசிய இந்திய சமூகமும் அரசியலும் 1945-1957  (POLITICS AND THE INDIAN COMMUNITY IN WEST  MALAYSIA  AND SINGAPORE 1945-1957) என்ற தலைப்பில் ஆய்வை 1982 இல் செய்திருக்கிறார். மலேசிய இந்தியர்களின் அரசியல் ஈடுபாட்டில் மிக முக்கியமான காலக்கட்டத்தை ராஜேஸ்வரி அம்பலவாணர் ஆராய்ந்திருக்கிறார். மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றை அறிய விரும்புகின்றவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஆய்வு நூலாக அந்நூல் திகழ்கிறது. மலாயாவுக்கு சஞ்சிக்கூலிகளாக வரும் இந்தியர்களின் மிக முந்தைய அரசியல் ஈடுபாடு என்பது 1915 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த சிப்பாய் கலகத்திலிருந்து தொடங்குகிறது. இந்தியாவில் விடுதலைக்கு முன்பதாக நடைபெற்ற சிப்பாய் கலகத்தைப் பற்றிய செய்திகள் தெரிந்தளவு சிங்கப்பூரில் இருந்த பிரிட்டன் படையில் பணியாற்றிய இந்திய முஸ்லிம் படையினர் நிகழ்த்திய கிளர்ச்சி பெருமளவில் வெளியே தெரிந்திருப்பதில்லை. அந்தக் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாடு வாழ் வட இந்தியர்களிடையே காலனிய எதிர்ப்பு மனநிலையைப் பரப்பிய கதர் கட்சியின் செயற்பாடுகள் இருக்கலாம் என நம்பப்பட்டது.


மலாயா இந்தியர்களின் அரசியல் செயற்பாடுகள் இந்தியாவின் அரசியல் நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் ஒட்டியே அமைந்திருந்தது. இந்தியாவில் முஸ்லிம்களிடையே தோன்றிய கிலாபாட் இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆகியவை தொடக்கக்கால மலாயா இந்தியர்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்திருக்கிறது. அக்காலத்தில் இந்திய சமூகத்தில் மிகக்குறைவாக இருந்த படிப்பறிவு பெற்றோர், வணிகர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரே அரசியல் பிரக்ஞை உடையவர்களாக இருந்திருக்கின்றனர். அதன் பின்னர் 1936 இல்தான்  CIAM (Central Indian Association of Malaya) மலாயா இந்திய இயக்கம்  தொடங்கப்படுகிறது. அந்த இயக்கம் ரப்பர் தோட்டங்களிலும் அரசுப்பணிகளிலும் பணியாற்றிய இந்தியர்களிடையே வலுவான தொழிற்சங்கங்களை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டிருந்தது.

அதிலிருந்தே வெகு மக்கள் பங்கேற்பு கொண்ட இந்திய அரசியலியக்கங்கள் மலாயாவில் ஆழமாகக் காலூன்ற தொடங்குகின்றன. 1941 ஆம் ஆண்டு கிள்ளானில் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய கிள்ளான் கலகம் நடைபெறுகிறது. அதன் பின்னணியில் மலாயா மத்திய இந்திய இயக்கமும்  தொழிலாளர் தலைவர்களும் இருந்திருக்கின்றனர். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் மலாயா, சிங்கப்பூரில் இயங்கிய இந்தியத் தேசிய படையில் ராணுவப்பிரிவான இந்தியத் தேசிய ராணுவத்தில் இந்தியர்கள் திரளாகப் பங்கேற்கின்றனர். மலாயாவைக் கைபற்றிய ஜப்பானியப் படையினருடன் இணக்கப்போக்கைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தினர் மேற்கொண்ட  ராணுவப்பயிற்சியில் சாதாரணத் தோட்டத்தொழிலாளர்களும் பங்கேற்றனர். அதன் விளைவாக இந்திய நாட்டின் மீதான விடுதலையில் மலாயா, சிங்கப்பூரில் வசிக்கும் அயலகத் தமிழர்கள் தங்களுக்கும் தார்மீகமான கடமை இருப்பதை உணர்ந்தனர். இ.தே.ராணுவத்தின் தளபதி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்தப்பின் படையின் நடவடிக்கை முடங்கிப்போகிறது. போரில் ஜப்பான் சரணடைந்து பிரிட்டன் மலாயாவைக் கைபற்றிய காலக்கட்டத்தில்தான் இந்தியர்களின் அரசியல் எழுச்சி தொடங்குகிறது. 

1940க்கு பிற்பட்ட காலக்கட்டத்தில் இந்தியர்களிடையே தீவிரவாதப் போக்குடையவர்கள், மிதவாதப் போக்கு என இருவகையிலும் தீவிரமான அரசியல் ஈடுபாடு இருந்ததை ராஜேஸ்வரி சுட்டிக்காட்டுகிறார். தொழிற்சங்கங்களில் ஈடுபட்டு வேலை நிறுத்தங்களை அதிகளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், பங்கேற்ற தலைவர்கள் என விரிவான தகவல்களுடன் எழுதியிருக்கிறார். கள் ஒழிப்பு, சமூக விழிப்புணர்வு ஆகிய தளங்களில் தீவிரத்துடன் போராட்டங்களை ஒருங்கிணைத்த தொண்டர் படை குறித்தும் தகவல்களைத் தந்திருக்கிறார். மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சோவியத் மலாயா நாட்டு உருவாக்கத்துக்காகப் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியிருந்த இந்தியர்களைக் கொண்டு தொழிலாளர் போராட்டங்கள் ஒருங்கிணைப்பது எவ்வளவு எளிதாக இருந்தது என்பதையும் குறிப்பிடுகிறார். இந்தியர்களின் தீவிர தொழிற்சங்க ஈடுபாட்டைக் குறைக்க கொண்டு வரப்படும் தொழிற்சங்க சட்டங்களும் அரசு சார்பு தொழிற்சங்க இயக்கங்களின் தோற்றமும்  தோட்டத் தொழிலாளர்களின் சமூக அரசியல் சூழலைப் புரிந்து கொள்வதில் மிக முக்கியமான திறப்பைத் தரக்கூடியவை.

இன்னொரு பக்கம் இந்தியாவில் இயங்கி வந்த இந்திய காங்கிரஸின் அடியொற்றி மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியப் பண்புகளைக் கொண்டு உள்ளூரில் உருவான மலேசியா இந்தியர் காங்கிரஸ் இன் தோற்றத்தையும் குறிப்பிடுகிறார். இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினை கொண்டு வந்த உயிரிழப்புகளை மனதில் கொண்டு தொடர்ந்து மலாயாவில் மதச்சார்பின்மை கொள்கையை ம.இ.கா வலியுறுத்தியிருக்கிறது. தொடக்கக்காலத்தில் சட்ட எதிர்ப்பு, தேர்தல் புறக்கணிப்பு, அதிரடியான அரசியல் கருத்துகள் என ம.இ.கா பயணித்த வரலாற்றையும் குறிப்பிடுகிறார். 

அந்தத் தீவிர அணுகுமுறையால், மலாயாவின் சுதந்திர அரசு அமைவதற்கான முன்னேற்பாடுகளில் இந்தியர்கள் தவறவிட்ட முக்கியமான விடயங்களை விமர்சனப்பூர்வமாக ஆய்வாளர் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் அரசியலாதரவு பெறும் திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் தாக்குறவால் மலேசிய இந்திய அரசியல் தலைமையைத் தமிழர்களே முன்னெடுக்கவேண்டும் என்ற கருத்தியல் முன்னணி பெறுவதையும் குறிப்பிடுகிறார். அந்தப் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் விவாதங்கள், தலைவர்களின் கூற்றுகள் பலவும் சுவாரசியமானவையாக இருக்கின்றன. இன்றைய அரசியல் நிலையைப் புரிந்து கொள்ளவும் அவை பெருமளவு உதவி புரியக்கூடியன. இனம், மொழி சார்ந்தும் தங்களை அரசியலில் அடையாளப்படுத்தும் போக்கு இங்கிருந்தே மலேசிய இந்தியர்களிடம் தொடங்குகிறது. சிறுபான்மை மக்களாக தேர்தலரசியலில் தங்களின் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம் இருப்பதால் தனித்தொகுதிக்கான கோரிக்கையையும் அரசிடம் முன்வைக்கின்றனர். ஆனால், இந்தியாவில் கையாளப்பட்ட மதச்சார்பின்மை அரசியல் அணுகுமுறை மலாயாவில் சிறுப்பான்மை இன மக்களின் அரசியல் போக்குக்கு உதவாது என்ற நடைமுறை உண்மையை வெகு தாமதமாகவே உணர்கின்றனர்.

ம.இ.காவின் மூன்றாவது தேசியத்தலைவராக இருந்த ராமநாதன் 

‘மலாயா குடியுரிமை என்பது சில்க் சட்டையைப் போன்றது. அதை அணிவதில் எந்தச் சிரமமும் இருக்காது. நாம் இந்தியாவுக்குச் சென்றால் கதராடை அணிந்து கொள்ளலாம். ஆனால், சில்க் சட்டை மக்கிப் போகாமல் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டுமென 1951 ஏப்ரலில் குறிப்பிடுகிறார். 

இந்தப் போக்கிலிருந்தே அன்றைய இந்திய அர்சியல் கட்சி இந்திய நாட்டின் மீதான அரசியல் விருப்பம் கொண்டவர்களால் வழிநடத்தப்படும் கட்சி எனப் பொதுவாக இருந்த முத்திரை ஓரளவு உறுதியாகத் தெரிகிறது. அதே சமயத்தில், சமயமும் இனமும் சார்ந்த கருத்தியல் மேலோங்கிய காலக்கட்டத்தில் பெரும்பான்மையாக ஒரே இனத்தவர்கள் உறுப்பியம் கொண்ட கட்சியொன்று மதச்சார்பின்மை என்ற முரணான கருத்தை முன்னிறுத்தியிருக்கிறது. இம்மாதிரியான தடுமாற்றங்களும் சிக்கல்களும் நிறைந்த சூழலில் விடுதலைக்கு முந்தைய முக்கியமான விவாதங்களில் இந்தியத்தரப்பு பல சமயம் முக்கியமற்றதாகக் கருதப்பட்டிருக்கிறது. இந்தப்பின்னணியில்தான் பல்லினக் கட்சிகளில் மதச்சார்பின்மையுடன் முன்னெடுக்கப்படும் அரசியல், இனம், மொழி சார்ந்த கட்சியின் வாயிலாக உரிமைகளைப் பெறுதல் ஆகிய இரண்டு தளங்களிலும் இன்றைக்கும் இந்தியர்களிடம் அரசியல் ஊசலாட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

விடுதலைக்கு முந்தைய மலாயா அரசியலில் இந்தியர்களின் பங்களிப்பையும் ஈடுபாட்டையும் விமர்சனப்பூர்வமாக முன்வைக்கும் ஆய்வுக்கட்டுரையாக ராஜேஸ்வரி அம்பல்வாணர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். 

                                                      ராஜேஸ்வரி அம்பலவாணர்

ஆய்வுக்காக நூற்றுக்கணக்கான நூல்களையும், ரகசிய ஆவணங்களையும், நாளிதழ் செய்திகளையும் கண்டடைந்து எழுதியிருக்கிறார். அவர் நிறுத்திய புள்ளியிலிருந்து இன்றைய சூழல் வரையிலான இந்திய அரசியலைப் புரிந்து கொள்வதற்கான முகாந்திரங்களும் நூலில் இருக்கவே செய்கிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற