காலையில், எழுத்தாளர் பெருந்தேவியைச் சந்திக்கும் திட்டத்தை லதா சொன்னார். பெருந்தேவி முகநூலில் இருந்த சமயத்தில் அவருடைய கவிதைகளையும் உடல் அரசியல் பால் தொடரின் சில பகுதிகளையும் வாசித்திருக்கிறேன். ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் மாடியின் கடைசி வீட்டுக்குள் எங்களைப் பெருந்தேவி அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் நுழைந்ததும், கணநேரம் எதாவது பேசிக்கொள்ளாமல் எங்களையே வெறித்துப் பார்த்தார் பெருந்தேவி. பேச்சிலும் பார்வையிலும் கனிவுடன் ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டிருந்தார். மதிய உணவு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டுமெனச் சொல்லியிருந்தார். அவருடைய வீட்டைப் பார்த்த மாதிரியாக சக்கரை அம்மா எனும் 19 ஆம் நூற்றாண்டு சித்தர் கோவில் இருப்பதையும் சொன்னார். திரு.வி.க போன்றவர்கள் கூட சக்கரை அம்மாவின் ஆற்றலைக் கண்டு பேசியிருக்கிறார்கள் எனச் சொன்னார். மிளகு ரசம், பருப்புத் துவையலுடன் நெய்யும் அப்பளமுமாய் தமிழ்நாட்டிலருந்த நாட்களில் மிக அருமையான உணவுகளில் ஒன்றைத் தந்தார். உணவு முடித்தப் பின், மாமல்லப்புரம் செல்லும் திட்டத்தைச் சொன்னார். சென்னைக்கு வந்தால் மாமல்லப்புரம் சென்று பார்த்து...