காலையில், எழுத்தாளர் பெருந்தேவியைச் சந்திக்கும் திட்டத்தை லதா சொன்னார். பெருந்தேவி முகநூலில் இருந்த சமயத்தில் அவருடைய கவிதைகளையும் உடல் அரசியல் பால் தொடரின் சில பகுதிகளையும் வாசித்திருக்கிறேன். ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் மாடியின் கடைசி வீட்டுக்குள் எங்களைப் பெருந்தேவி அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் நுழைந்ததும், கணநேரம் எதாவது பேசிக்கொள்ளாமல் எங்களையே வெறித்துப் பார்த்தார் பெருந்தேவி. பேச்சிலும் பார்வையிலும் கனிவுடன் ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டிருந்தார். மதிய உணவு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டுமெனச் சொல்லியிருந்தார். அவருடைய வீட்டைப் பார்த்த மாதிரியாக சக்கரை அம்மா எனும் 19 ஆம் நூற்றாண்டு சித்தர் கோவில் இருப்பதையும் சொன்னார். திரு.வி.க போன்றவர்கள் கூட சக்கரை அம்மாவின் ஆற்றலைக் கண்டு பேசியிருக்கிறார்கள் எனச் சொன்னார். மிளகு ரசம், பருப்புத் துவையலுடன் நெய்யும் அப்பளமுமாய் தமிழ்நாட்டிலருந்த நாட்களில் மிக அருமையான உணவுகளில் ஒன்றைத் தந்தார். உணவு முடித்தப் பின், மாமல்லப்புரம் செல்லும் திட்டத்தைச் சொன்னார்.
சென்னைக்கு வந்தால் மாமல்லப்புரம் சென்று பார்த்துவிடவேண்டுமென்ற எண்ணம் எனக்குமே இருந்தது. நவீனுக்கு மற்ற வேலைகள் இருந்ததால் கலந்து கொள்ள முடியாதெனச் சொன்னார். பெருந்தேவியின் காருக்காகக் காத்திருக்கும் தருணத்தில் அரைக்கதவுடன் மூடுவதற்குத் தயாராக இருந்த சக்கரை அம்மா சந்நிதியை ஒருமுறை பார்த்துவிட்டேன். வயதான தோற்றத்தில் இருந்தார். நவீன் வருவதற்குள் கதவு மூடப்பட்டது. கோவிலைச் சுற்றிலும் சிறிய புதர் மூங்கில் நடப்பட்டிருந்தது. அவரின் வரலாறு, அவர் எளிமையான மொழியில் சொன்ன பத்து கட்டளைகள் சுற்றிலும் பொறிக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டுக் கதவை மூடுவதற்காக முறைத்துக் கொண்டிருந்த பூசாரிக்கு முன்னர் ஆலயத்திலிருந்து வெளியேறினோம். அங்கிருந்து மாமல்லப்புரம் நாற்பதைந்து கி.மீ தூரத்தில் இருந்தது. பெருந்தேவியின் ஓட்டுநர் பலவேந்திரன் மேற்கு வங்கத்துக்காரர். தமிழ்நாட்டுக்கு வந்து 26 ஆண்டுகளாகி தமிழை மழலை மாறாமல் பேசினார். அவரருகில் அமர்ந்து கொளுத்தும் வெய்யிலில் கிருஸ்துமஸ் விடுமுறை நெரிசலில் மாமல்லப்புர கோவிலுக்குச் சென்றோம். அன்றைக்கு இரவே மலேசியா திரும்ப வேண்டுமென்பதால் கூடுதல் பதற்றமாக இருந்தது. வடநாட்டுச் சுற்றுப்பயணிகள் ஒவ்வொரு சிற்பத்தின் முன்னரும் அமர்ந்து படமெடுத்துக் கொண்டிருந்தனர். சிற்பங்களுக்கு முன்னால், விதவிதமான மணிகளை விற்கும் நரிக்குறவப் பெண்கள் அமர்ந்திருந்தனர். அதில் சிவப்பு மணியொன்றை வாங்கலாமென்று விலை பேசிக் கொண்டிருந்தேன். யாருக்கு என லதா கேட்டார். எங்க அம்மாய்க்கு என்றதும் ‘’வேற இடத்தில நானே வாங்கி தருகிறேன்’’ எனச் சொன்னார்.
அர்ஜூனன் தபஸு சிற்பத்தைப் பார்த்தேன். மணற்கல்லில் மிக தத்ரூபமாக யானையின் அசைவு அதில் தெரிந்தது. பாசுபத அஸ்திரம் பெற வேண்டி அர்ஜூனன் ஒற்றைக்காலில் செய்யும் தவத்தை பூதகணங்கள், வானரங்கள் குரங்குகள், புலி, யானைகள் சூழ அமைந்திருக்கும் சிற்பத்தைப் பார்த்தேன். அதற்கு பின்னால், குடைவரைவுக் கோவிலிலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து சற்று நடந்து கம்பி வேலிகளுக்கு உள்ளே இருக்கும் பகுதிகளுக்குச் சென்ற போதும் வரிசையாய் பல குடைவரை கோவில்களும் சிற்பங்களும் அமைந்திருந்தன.
ஒவ்வொன்றின்
அருகிலும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனையோ பாடல்களில் திரும்பத்திரும்ப
மாமல்லப்புரம் கோவில் சிற்பம் எனப் பாடியும் படங்களில் காட்டியும் வைத்திருக்கிறார்கள்.
சிவகாமியின் சபதம் நாவலிலும் மாமல்லப்புரம் கோவில் கட்டப்படும் சித்திரம் இருந்ததாய்
நினைவில் வந்தது. சிற்பங்களை நின்று நிதானமாய்க் காணும் ரசனைத் திறன் கைகூடவில்லையோ
என ஒரு சிலையிலிருந்து இன்னொரு சிலைக்கு நகரும் போது நினைத்துக் கொண்டேன். ஒரு இடத்துக்குச்
சென்று திரும்பியப்பின் அவ்விடத்தில் எத்தனையோ நினைவுகளும் சம்பவங்களும் நிகழ்ந்திருந்தாலும்
சம்பந்தமேயில்லாத ஒரு சிறிய நிகழ்வாக மனப்பதிவாக அவ்விடம் நினைவில் தங்கிவிடும்.
பிடியானையொன்றின் பின்னங்காலை உதைத்து நிலத்தைக் கிளரும் கன்று கொண்ட சிற்பமொன்றின் தலைப்பில் குழப்பத்துடன் வெறித்துப்பார்க்கும் குரங்கின் சிற்பம் இருந்தது. வெய்யிலில் சுற்றுப்பயணிகளில் நெரிசலில் அவசரமாய் அவசரமாய்ச் சிற்பங்களின் முன்னால் படமெடுத்து அலைந்து கொண்டிருந்த இடத்தில் முகத்தை வெறித்துக் கொண்டிருந்த குரங்கின் தோற்றமே மாமல்லப்புரத்தின் நினைவாக மனதுக்குள் பதிந்துவிட்டது. அங்கிருந்து நகர்ந்து, கைவினைப்பொருட்கள் கடைக்குச் சென்றோம். ஒரு மணி நேரம் லதாவும் பெருந்தேவியும் கடைகளுக்குள் நுழைந்து பொருட்களைப் பேரம் பேசி வாங்கினார்கள். சுனாமியில் மீண்ட கதையைக் கடைக்காரர் சொன்னார். அவருடைய தமிழும் அவ்வளவாகத் தெளிவாக இல்லை. பத்துமலை முருகன், கோலாலம்பூர் எனச் சில மலேசிய இடங்களைப் பற்றிச் சொன்னார். மாமல்லப்புரத்திலிருந்து வெளியேறும் போது மணி நான்கைத் தாண்டியிருந்தது. கைப்பேசியில் சிம்கார்டும் இணையம் எதுவும் இல்லை. பதினோரு மணி விமானத்துக்கு எட்டு மணிக்காவது விமான நிலையத்துக்குச் சென்று விடவேண்டும். விடுதியில் ஆறு மணியுடன் நேரம் முடிகிறது. மாமல்லப்புரச் சாலை நெடுக கார்கள் நெரிசலில் நிலைகுத்தி நிற்கின்றன. என்னுடைய பதற்றத்தைப் பார்த்து பெருந்தேவியும் லதாவும் போய்விடலாம் பயப்படாதீர்கள் எனச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். வழியில் மேட்ரோ ரயிலுக்காக ஒசிஆர் சாலையை வேறு அகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவழியாய், விடுதிக்கு முன்னால் இறங்கும் போது, பெருந்தேவி கைகளை ஆதுரமாகப் பற்றிக்கொண்டு தாமதத்துக்கும் பதற்றத்துக்கும் மன்னிப்பு கேட்டு விடைகொடுத்தார். பதற்றம், பயம் எல்லாம் போய் மனம் லேசாகியதைப் போலிருந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக