முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏசுவின் பிறப்பு

 

பயண நினைவுகளில் சில தருணங்கள் நேரில் உணர்ந்ததைக் காட்டிலும் பின்னர் எண்ணிப்பார்க்கும் போது இன்னுமே விரிவானதாகத் தெரிகிறது. 2023 டிசம்பரில் நிகழ்ந்த முதல் இந்தியப்பயணம் பற்றி எழுத வேண்டுமெனப் பலநாட்களாக எண்ணம் இருந்தது. அதில் சில தருணங்களைப் பற்றி மட்டும் எழுதிப் பார்க்கிறேன். 

மலேசியாவுக்குத் திரும்புவதற்கு இரு நாட்களுக்கு முன் தான் தஞ்சையிலிருந்து ரயிலிலே சென்னையை வந்தோம். சென்னையில் முதல் நாள், எழுத்தாளர் ம.நவீனின் தாரா நாவல் அறிமுகக்கூட்டம் நிகழ்ந்தது. அந்த நாவலை ம.நவீன் எழுதத் தொடங்கி பெயரிடுவதற்கான குறியை நேபாளத்தில் பெற்றது தொடங்கி முதல் பிரதியை வாசித்தது முதலாக உடனிருந்திருக்கிறேன். நிகழ்ச்சியில் பேசுவதற்கான குறிப்புகளை எழுத்தாளர் சு.வேணுகோபால் , நானும் நவீனும் தங்கியிருந்த விடுதி அறையில்தான் தயார் செய்தார். அறையை விட்டு எங்குமே அகலாமல் கையிலிருக்கும் புத்தகத்தை மல்லாந்தும் உட்கார்ந்தும் என மாறி மாறி வாசித்துக் கொண்டிருந்தார்.  கோவையில் விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரைச் சந்தித்திருந்தேன். என் பெயரை அரவிந்து…அரவிந்து எனச் சொல்லி அழைத்துப் பேசினார். விழாவின் இடையிலே ஆட்டோவில் நானும் லதாவும் அவர் அழைத்துப் போக கோவையின் பழைமைவாய்ந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குச் சென்றோம். அங்குத்தான் சிறையிலிருந்து வெளிவந்த வ.உ.சி தேங்காய் வியாபாரம் செய்தார் என வேணுகோபால் சொன்னார். வ.உ.சி சிறையிலிருந்து வெளிவந்ததும் அடைந்த நலிவை கப்பலோட்டிய தமிழன் படத்தில் பார்த்திருக்கிறேன். அங்கு இப்பொழுதும் இருந்த பூக்கடைகள், பழக்கடைகளைப் பார்க்கும் போது ஏனோ சோகமாக இருந்தது. அன்றிரவே, நிகழ்ச்சி முடிந்து தொண்டாமுத்தூரில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று நாட்டாடு இறைச்சிக் குழம்பும் நாட்டுக்கோழிக் குழம்பையும் குலோப் ஜாமூனையும் கொடுத்து விருந்துபசாரம் செய்தார். நாங்கள் அங்கிருந்து விடைபெற்று திருச்சி, புதுக்கோட்டை என சோழநாட்டுக் கோவில்களைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். இடைப்பட்ட நாட்களில் சு.வேவின் உடல்நலம் கெட்டு மெல்ல சீரடைந்து வந்திருந்தார். அதனாலே கொஞ்சம் சோர்வுடன் இருந்தார். 


                                        தங்கும் விடுதி முன்னால்  சு.வே

அவரைத் தனியே விட்டு வெளியே செல்லும் திட்டம் நவீனுக்கு இல்லையென்பதால் நான் தனியாகச் செல்ல முடிவெடுத்தேன்.ஆட்டோ ஒன்றை அமர்த்திக் கொண்டு திருவொற்றியூரில் இருந்த பட்டினத்தார் சமாதிக்குச் சென்றேன். நவீன் தான் பரிந்துரைத்திருந்தார். மீன்பிடித் துறைமுகம், அடுக்குமாடிக் குடியிருப்புகள் எல்லாம் கொண்ட கடற்பகுதியில் ஏகாந்தமாய்ப் பட்டினத்தார் சந்நிதி இருந்தது. சமாதியின் முன்னிருந்த மணலில் நாய்கள் புரண்டு கொண்டிருந்தன. விடுமுறை நாளென்றாலும் ஆட்கல் குறைவாகவே இருந்தனர். சமாதியைச் சுற்றும் போது, காதற்ற ஊசியும் வாராது கடைகண் வழிக்கே என்ற பட்டினத்தார் பாடல் நினைவில் வந்தது. பட்டினத்தார் சமாதியில் சிறிய நினைவு மண்டபமும் அதற்குப் பின்னால் சிறிய பேய்க்கரும்பு கொல்லையும் இருந்தது.  பட்டினத்தார் மண்டபத்தில் அமர்ந்து,  துறவு பூண்டும் தாயின் சிதைக்கு எரிமூட்டச் சென்றபோது பட்டினத்தடிகள் பாடிய பாடலைக் கைப்பேசியில் தேடியெடுத்துப் படித்தேன். தத்துவப்பாரம் இல்லாமல் தாயின் பிரிவுத்துயரைப் பாடிப்பாடி ஆற்றிக் கொள்ளும் பாடல். மனத்துக்குள் சொல்லிப் பார்த்துக் கொள்ளும் போது பாரம் அழுத்தி ஆசுவாசம் தந்தது.


                                                 பட்டினத்தார் சமாதி

 

 ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே

அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ

மெய்யிலே தீமூட்டு வேன்

பட்டினத்தார் பாடல்

மண்டபத்துக்கு வெளியே கதம்பச்சோற்று அன்னதானம் வழங்கப்பட்டது. சாம்பாரும், பட்டாணி குர்மாவும் சேர்ந்து மிகச் சிறப்பாக இருந்தது. அங்கிருந்து, ஆட்டோவிலே மெரினாவுக்குச் சென்றேன். எம்.ஜி.ஆரின் நினைவு நாள் என்பதால் வரிசையாகக் கட்சியினர் கொடிபிடித்து ஊர்வலமாய் வந்து கொண்டிருந்தனர். சிறுவயதில் எம்.ஜி.ஆரின் பாடல்களைப் பலமுறை கேட்டிருப்பதால் அங்கு ஒலிக்கப்பட்ட பாடல்கள் எல்லாவற்றையும் உடன் பாடிக்கொண்டே மெரினா கடற்கரை மணலில் நடந்து வந்தேன்.

                                                                   மெரினாவில் 

                                                                 எம் ஜி ஆர் சமாதி

மெரினாவிலிருந்து சில கிலோமீட்டர் சாலையிலே நடந்து சென்றேன். மூடம் தட்டியிருந்த வானத்தில் சென்னை எதோ நிறம் மங்கி தூசுப்படலத்துக்குள் இருப்பது போல தெரிந்தது. கண்ணுக்குத் தெரியாத ஊமைவெய்யிலின் தாக்கமும் இருந்தது. கடற்கரை வழிமுழுக்க இருந்த சிலைகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சேப்பாக்கம் மைதானம் வழியே நடந்து ஆட்டோவைப் பிடித்து விடுதிக்குச் சென்றேன். இன்னுமே, சு.வேணுகோபால் நாவலின் பாதிப்பக்கங்களைத் தாண்டி நிதானமாய் வாசித்துக் கொண்டிருந்தார்.

 



நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது கூட விடுதியில் வாங்கிய கூடுதல் தாளில் தேர்வு முடிய சில நிமிடங்கள் இருக்கும் பரபரப்பான நிமிடங்களில் கடைசி வரிகளை எழுதித் தள்ளும் மாணவனின் அவசரத்துடன் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி நடக்கும் கவிக்கோ மன்றத்துக்குச் செல்லத் தயாராகி நின்று கொண்டிருந்த ம.நவீன், வேணுகோபால் தயாராகுவதை மிகுந்த பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அரங்கில் கூட, சு.வேணுகோபாலின் உரைக்காகத் தேர்வு முடிவுகள் காத்திருப்பதைப் போல நிலைகொள்ளாமலே இருந்தார். ஆனால், நிகழ்ச்சியில் வேணுகோபால் பேசிய உரை அரை நாளில் தயாராகியதைப் போல தெரியவில்லை.

நாவலின் களம் , உளவியல் ஆழம் என ஒன்றையும் விடாமல் தொகுத்துப் பேசினார். உறை நீங்கிய குத்து வாளின் பிடியைப் போல நாவலில் ஒரிடத்தை ம.நவீன் தொட்டுக்காட்டினார் எனச் சொல்லக் கேட்டதும் சிலிர்ப்பு எழுந்துவிட்டது. எழுத்தாளன் பயணிக்கும் அக ஆழமென்பது வியப்பூட்டுவது என்பதை நேரில் உணர்ந்த தருணமது.மேடையிலிருந்து இறங்கியவரிடம் நானும் எழுத்தாளர் லதா, ம.நவீன் எல்லாருமே அவரின் வழக்கமான உரைகளில் இடம்பெறும் ‘அதாவது’ இந்த உரையில் இல்லாமல் போய்விட்டது என வேடிக்கையாகச்  சொன்னோம். தனக்குள்ளே வியந்து சிரித்துக் கொண்டார்.

 சென்னையில் இன்னும் ஒருநாள்தான் இருக்கப்போகிறோம் என்ற எண்ணம் வந்ததும் நான் மட்டும் தனியாகக் கிளம்பி டிடிகே சாலையின் இரவு முகத்தைத் தரிசிக்க சென்று விட்டேன்.  விடுதிக்கு முன்னால் இருந்த பெரிய தேவாலயம், மறுநாள் பிறக்கும் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேராக, தேவாலயத்துக்குள் நுழைந்து முன்வரிசையில் பைபிள் வைக்கப்பட்டிருந்த மனைப்பலகையின் முன்னே உட்கார்ந்து கொண்டேன்.  மேற்கூரையிலிருந்த நீலம் பச்சையும் கொண்ட கண்ணாடிகளில் ஒளிப்பட்டு எழுந்த வெளிச்சம் சிலுவைத் தாங்கிய ஏசுவின் மீது பட்டுக் கொண்டிருந்தது.  கைகளால் சிலுவைக்குறி செய்து டிடிகே சாலைக்கு எதிர்புறம் இருந்த சாலையில் நடக்கச் சென்றேன். சாலையோரத்தில் மாதுளம், வாழைப்பழம் எனக் கூவிக்கூவிப் பழம் விற்றுக் கொண்டிருந்த பழக்கடைகள், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மாடுகள், சாலையைக் கடந்து கொண்டிருந்த நாய்கள் எனச் சாலையில் மனித நடமாட்டம் குறைவாகவே இருந்தது.





                                                      ஏசுவின் பிறப்பு

அந்தச் சாலையின் ஓரத்தில் இரு குடிசைப்பகுதிகள் தெரிந்தன. உள்ளே அடியெடுத்து வைக்கும் முன்னரே நாய்கள் குரைக்கத் தொடங்கியதால் தயங்கி பின்னகர்ந்து விட்டேன். ஒரு குடிசைப் பகுதிக்கு முன்னால் குழந்தை ஏசுவைத் தாங்கிய மேரிமாதா சிலைக்கு முன்னால் வைக்கோல் பரப்பி பிளாஸ்டிக் மாடுகள் மத்தியில் ஏசு பிறப்புச் சூழலைச் சிறுவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தனர். பன்னிரண்டு மணி நெருங்கும் வேளையில் சிறப்பு வழிபாடுகளுக்காகத் தேவாலயத்தில் மணி ஒலிக்கப்பட்டது. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் ஏசுவின் பிறப்பை வரவேற்றார்கள். இன்னொரு சிலுவைக்குறியைப் போட்டு விடுதி அறைக்குச் சென்றேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...