எழுத்தாளர் பாவண்ணனின் பாய்மரக்கப்பல் நாவலை வாசித்தேன். பிரெஞ்சு புதுவை, கடலூர் பகுதியில் 1920கள் தொடங்கி 1980 களின் பிற்பகுதி வரையில் நடக்கும் காலமாற்றத்தைத்தான் நாவல் களமாகக் கொண்டிருக்கிறது. நிலவுடைமைச் சாதியைச் சேர்ந்த முத்துசாமி எனும் சம்சாரியின் வாழ்வையே நாவல் பிரதானமாகப் பேசுகிறது. பங்காளிச் சண்டைகள், கடன் தொல்லை, பயிர்ச்சேத நட்டம் ஆகிய அழுத்தங்களால் பரம்பரை நிலத்தை அதிகாரச் சாதியைச் சேர்ந்த ரெட்டிக்கு அடிமாட்டு விலைக்கு விற்று வேற்று ஊரில் குடியேறி நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பயிர் செய்யத் தொடங்குகிறார். உழைப்பால் நிலம் பெருக்கி நிலை உயர்ந்து வருபவரின் தலைமுறையினர் மெல்ல விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டு வீழ்ச்சியடையத் தொடங்கும் சித்திரத்தையே பாய்மரக்கப்பல் நாவல் காட்டுகிறது. ஒரு காலக்கட்டத்தில் நிகழும் சமூக அரசியல் பொருளியல் மாற்றங்கள் மரபாக இருந்து வருகின்ற அமைப்புகளுக்குள் கொண்டு வருகின்ற வீழ்ச்சியின் சித்திரத்தை முன்வைத்து நிறைய புனைவுகள் தமிழில் முன்னரே எழுதப்பட்டிருக்கின்றன. காலனியாதிக்கத்தால் அறிமுகமாகும் ஹோமியோபதி மருத்துவத்தை மரபார்ந்த ஆயுர்வேத மருத்...