வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர்.
விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன்.ஒவ்வொரு கதையையும் வாசித்து அதன் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி அதனைச் சரிசெய்ய உதவி தொகுப்புப் பணி அனுபவத்தையும் உடனிருந்து நவீன் கற்றுக் கொடுத்தார். எல்லா பணிகளும் முடிந்து முதல் நூலை நவீன் கையளிக்க பெற்றுக் கொண்டதே மகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்ச்சி நெருங்க நவீன் ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நினைவுறுத்திக் கொண்டே இருந்தார். எழுத்தாளர் பாவண்ணன், ஜா.ராஜகோபாலன் ஆகியோரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வருதல் அவர்களுடன் உடனிருப்பதெனப் பொறுப்புகளையும் தந்திருந்தார். அந்தப் பொறுப்புகளால், சற்றே இயல்படைந்திருந்தேன். ஜா.ராஜகோபாலனின் ஆழமும் நுட்பமும் கூடிய விமர்சன உரைகளை யுடியுப் காணொளிகளில் கேட்டிருக்கிறேன். பாவண்ணனின் சிறுகதைகளையும் பாய்மரக்கப்பல் நாவலையும் கூட முன்னரே வாசித்திருந்தேன். எழுத்தில் வெளிப்படுவதைப் போல நேர்பேச்சிலும் கனிவு மட்டுமே ஆனவராக அவரைக் கண்டேன். உடன் அவருடைய மனைவி அமுதாவும் வந்திருந்தார். முதல் நாளிரவு மூவரையும் எம்.டி.ஆர் எனப்படும் கர்நாடக உணவகமொன்றுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். ஜா.ஜா இலக்கியத்தைப் போலவே உணவையும் மிக ரசனையுடன் விளக்கிக் கொண்டிருந்தார். கர்நாடகத்தின் அக்கி ரொட்டி முதல் கேழ்வரகு களி, சோள ரொட்டி என ஒவ்வொன்றின் ருசியையும் சொல்லிக் கொண்டிருந்தார். நீர்த்தோசையைச் சொல்லி எனக்குமொன்றைத் தந்து சாப்பிட்டுப் பார்க்கச் சொன்னார். தேங்காய்த்துருவலுடன் கூடிய சட்னி வகைக்கு எண்ணெய் விடப்படாத தோசை நன்றாக இருந்தது. அதற்கடுத்த நாட்களிலும், எம்.டி.ஆருக்கு மூன்று முறை நண்பர்களுடன் சென்று உண்டோம். மறுநாள், சிங்கப்பூரிலிருந்து லதா, கணேஷ்பாபு, பாரதி மூர்த்தியப்பன் ஆகியோர் வந்திருந்தனர். சென்ற மாத வல்லினம் இதழில் என் கதைகளை வாசித்து விரிவான விமர்சனக் கட்டுரையை லதா எழுதியிருந்தார். அதனை நேர்பேச்சிலும் இன்னும் அக்கறையுடன் எழுதுங்கள் எழுத்து நல்லா வரும் எனச் சொல்லி அறிவுறுத்தினார்.
மறுநாள் வல்லினம்
ஏற்பாடு செய்திருந்த இலக்கிய முகாம் தொடங்கியது. முகாமை ஜா.ராஜகோபாலன் வழிநடத்தினார்.
வல்லினம் நிகழ்ச்சியில் அறிமுகமான 26 நண்பர்கள் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் லதா
சங்கப்பாடல்கள், நவீனகவிதைகள், பக்திப்பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள் என எல்லா இலக்கிய வடிவங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பிரதிகள் நான்கு மாதங்களுக்கு முன்னரே வாசிக்கத் தரப்பட்டிருந்தன. நாவல்கள், சிறுகதைகளை முன்னரே வாசித்து கட்டுரைகளை எழுதிக் குறிப்புகளாக வைத்துக் கொண்டேன். ஆனால், சங்கப்பாடல்களுக்கும், பக்திப்பாடல்களுக்கும் சொல் சொல்லாகப் பொருள் தேடி அதன் உள்ளூறையாக இருக்கும் கருத்துகளை உரையிலிருந்து பெற்றதைத்தான் தொகுத்து வைத்துக் கொண்டேன். அதனுடன் தெரிவு செய்யப்பட்ட பாடல்களில் எல்லாமே தருணங்களாக இருந்ததால் அவற்றில் கவனம் படியவில்லை.
கல்விச்சூழலின்
வழியே மரபிலக்கியத்தை அறிந்திருந்தமையால், பழக்கத்தின் புரை படிந்து கருத்து, சொற்பொருளின்
நயம் பாராட்டல் என்றே சென்று கொண்டிருந்த கவனத்தைத் திசைத்திருப்பி அதன் நயத்தைக் குவிக்க
எண்ணி முயலாமல் போய்க்கொண்டிருந்தது. முதல் அமர்வை, ஜா.ஜா நெடுநல்வாடையில் தலைவனைப்
பிரிந்து தலைவி துயருரும் அந்தி நேரக் காட்சியிலிருந்து தொடங்கினார். அதன் பின்னணி,
அந்திப் பொழுது என எல்லாமே முன்னரே தெரிந்தவைத்தான். பந்தலில் படர்ந்திருக்கும் பறித்த
கொடிமுல்லை மாலையிலே மலர்வதைக் கண்டே பொழுதை உணரும் தலைவனை இழந்த பெண்கள் நெல்லும்
மலரும் நிறைந்த தட்டில் விளக்கைத் தொழ மாலை நேரத்து அங்காடிகள் விரிவது வரையிலான காட்சிச்சொட்டுகளைக்
கணம் கணமென பிரித்து அடுக்கி அதனை மலர், மஞ்சள் பூசிய அரிசியில் இருக்கும் நெல்மணிகளுக்குத்
தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்று, தொல்நகரமொன்றின் சூழல் எனச் சொல்ல சொல்ல கையிலிருந்த
அரும்பதவுரை தேவையற்றுப் போனது. அந்தப் பாடலை ரசிக்கும் மனநிலைக்குப் பழக்கும் சூட்சுமத்தை
ஜா.ஜா மிகச்சிறப்பாக நிகழ்த்திக் கொண்டிருந்தார். குறைந்தது 1500 ஆண்டுகள் பழைமையான
பாடல்கள் எல்லாமே காலதூர இடைவெளிகளைக் கடந்து என்றென்றைக்குமான உணர்வு நிலைகளின் நீட்சியாக
பிடிபடத்தொடங்கின.
எழுத்து பழகிய
குழந்தைக்கு கிடைத்த புதிய புத்தகமாக எல்லா பாடல்களும் தெரியத் தொடங்கின. சங்கப்பாடலிலிருந்து
1500 ஆண்டுகள் தாவி நவீனக்கவிதைக்குள் அடியெடுத்து வைக்கும் போது கூறுமுறையால் இருந்த
வித்தியாசம் நீங்கி உணர்வுகளால் அவைப் பிணைந்திருப்பதை ஜா.ஜா சுட்டிக்காட்டினார். ஆரலைக்
கள்வர்கள் சூழ் தகிக்கும் வெப்பத்தில் பொருள் தேடிப் பாலை நிலத்தில் செல்லும் தலைவனைப்
பிரிந்து தலைவி கொள்ளும் துயரைக் குடும்பத்தைப் பிரிந்து வேலைக்குச் செல்லும் பொருள்
வயின் பிரிவு கவிதையின் தலைவனோடு தொடர்புபடுத்தி வாசிக்கச் சொன்னதும் கவிதை பொருள்
விரிவு கொள்வதைக் காண முடிந்தது.
அன்றிரவு,
சிறுகதைகளில் வெளிப்படும் நேர்மறை அம்சம் என்ற தலைப்பில் எழுத்தாளர் பாவண்ணனின் உரையாற்றினார்.
கனிந்த குரலில் மனிதர்களில் நேர்மறை தரிசனத்தைக் காணும் தன்னனுபவம் உருவாகி வந்ததை
ஒவ்வொரு நிகழ்வாக விளக்கி அழகாகச் சொன்னார். மறுநாள், பக்திப் பாடல் அமர்வில் காரைக்கால்
அம்மையின் பாடல்களின் சாரத்தை ஒற்றியே ஆழ்வார் பாசுரங்களும் திருமுறைப்பாடல்களும் அமைந்ததைக்
குறிப்பிட்டு அம்மையை அறிஞரென சொன்னார். அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் எனும்
வரியில் அரிதாக வரும் கோபத்தால் சினமுற்று வசை பெற்ற குழந்தை தன் தாய் முன் பொழிந்த
அணைப்பையே எண்ணி இருப்பதைப் போல தரு துயரிலிருந்து விலக்கும் இறைக்கரத்துக்கான காத்திருப்பைச்
சொல்லும் போதே பாடலின் சாரமான உணர்வு நிலைகளுக்கு ஆற்றுப்படுத்தினார்.
நாவல் கட்டுமானத்தின் வழியே துலங்கும் தரிசனத்தையும் சிறுகதையின் அமைப்பையும் கூட ஜா.ஜா சிறப்பாக விளக்கினார். அமர்வின் இறுதியில் கேள்வி நேரத்தின் போது ஒரு பாடலின் பொருட்செறிவை உணர தத்துவம், வரலாறு என ஒன்று தொட்டு மற்றொன்றுக்குள் செல்கின்ற போது பிரதியை விட்டு விலகி விடாதா என்ற கேள்வியைக் கேட்டேன். ஜா.ஜா, மொழியின் பணியே அதுதானே எனச் சொன்னார். அப்படி தூய அறிவுத்துறையாக இலக்கியம் இருக்க முடியாது. அதன் வழியே எல்லாவற்றுக்கும் பயணப்பட்டு உங்களுக்கான வெளியைத் தேடுங்கள். அதற்கான வாய்ப்பும் வயதும் உங்களுக்கு இருக்கிறதெனச் சொன்னார். பிறகு, அவருடன் பேசும் போதும், அந்தக் கேள்வியை இன்னுமே விளக்கிச் சொல்ல முயன்றேன். என் கேள்வியைப் புரிந்து கொண்டவராக, ஒரு பிரதியை வாசித்து அதன் உபதுறைக்குள் முழ்கும் போது நீங்கள் சொல்வதைப் போல பிரதியை விட்டு விலகக் கூடும். ஆனால், ஒட்டுமொத்தமாக இலக்கியம் வாசிக்கும் போது மற்ற அறிவுத்துறைகளை அறிவதென்பது நல்லதே எனச் சொன்னார். மதிய நிகழ்ச்சியில்தான் விருது வழங்கும் நிகழ்வும் புத்தக வெளியீடும் ஒருக்கப்பட்டிருந்தது.
தமிழ்மாறனுடன்மனதுக்கினிய சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, மருத்துவர் சண்முகசிவா ஆகியோருடன் என்னை இலக்கியத்துக்கு ஆற்றுப்படுத்திய ஆசிரியர் தமிழ்மாறன் ஆகியோருடன் முக்கியமான எழுத்தாளர்கள், நண்பர்கள் நிகழ்ச்சிக்கு வந்தனர். முதல் அமர்வில், கடந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள் குறித்த விவாத அரங்கில் எழுத்தாளர் இளம்பூரணன், எழுத்தாளர் விஜயலட்சுமி, எழுத்தாளர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
முதல் அமர்வுபொறுப்புகள், முகாம்க்கான வாசிப்பென நிகழ்ச்சியில் பேசுவதற்கான உரை எதனையும் முறையாகத் தயாரிக்கவில்லை. நிகழ்ச்சி தொடங்கியதுமே பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து இயல்படைந்து கொண்டிருந்தது. முதல் நூலை சுவாமி வெளியீட மனதுக்கினிய ஆசிரியர் சுப்புலட்சுமி பெற்றுக் கொண்டு ஆரத்தழுவி வாழ்த்தினார். விருதினை என்னுடைய அம்மாயுடன் இணைந்து பெற்றுக் கொண்டேன். எனக்கு முன்னர் பேசிய எழுத்தாளர் பாவண்ணன், என் கதைகளை வாசித்து அதனைக் காட்சியாக விவரித்துத் தான் பெற்ற நுட்பத்தை விளக்கும் போதே என் தொண்டை கனக்கத் தொடங்கிவிட்டது.
புத்தக வெளியீடு
ஏற்புரையில் பேசுவதற்காக திரட்டி வைத்திருந்த சொற்கள் கொஞ்ச நேரத்தில் பனிப்புகை போல அப்படியே மறைந்து போய்விட்டது. மேடைக்குச் சென்று சிறு தடுமாற்றத்துக்குப் பின்னர்தான் நன்றியறிவிப்பு தொடங்கி வாசித்து அனுபவத்தைப் பகிரும்படி வந்திருந்தவர்களைக் கேட்கும் சுருக்கமான உரையை ஆற்றி முடித்தேன். மனதுக்கு நெருக்கமான இலக்கிய உறவுகளின் தழுவல்களும், வாழ்த்துச் செய்திகளும் பாராட்டுகளாலும் நிறைந்து கொண்டே இருந்தேன். பதற்றத்தின் துலா முள் தாழ்ந்து தாழ்ந்து மனம் இயல்படைந்து கொண்டிருந்தது. துணை நின்ற ஆசிரியர்கள், இலக்கிய நண்பர்கள், குடும்ப உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நண்பர்களுடன்நூல்களைப் பெற விரும்புவோர் தமிழாசியா நிறுவனத்தை 012 5158314 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக