எழுத்தாளர்
பாவண்ணனின் பாய்மரக்கப்பல் நாவலை வாசித்தேன்.
பிரெஞ்சு புதுவை, கடலூர் பகுதியில் 1920கள் தொடங்கி 1980 களின் பிற்பகுதி வரையில் நடக்கும் காலமாற்றத்தைத்தான் நாவல் களமாகக் கொண்டிருக்கிறது. நிலவுடைமைச் சாதியைச் சேர்ந்த முத்துசாமி எனும் சம்சாரியின் வாழ்வையே நாவல் பிரதானமாகப் பேசுகிறது. பங்காளிச் சண்டைகள், கடன் தொல்லை, பயிர்ச்சேத நட்டம் ஆகிய அழுத்தங்களால் பரம்பரை நிலத்தை அதிகாரச் சாதியைச் சேர்ந்த ரெட்டிக்கு அடிமாட்டு விலைக்கு விற்று வேற்று ஊரில் குடியேறி நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பயிர் செய்யத் தொடங்குகிறார். உழைப்பால் நிலம் பெருக்கி நிலை உயர்ந்து வருபவரின் தலைமுறையினர் மெல்ல விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டு வீழ்ச்சியடையத் தொடங்கும் சித்திரத்தையே பாய்மரக்கப்பல் நாவல் காட்டுகிறது.
ஒரு
காலக்கட்டத்தில் நிகழும் சமூக அரசியல் பொருளியல் மாற்றங்கள் மரபாக இருந்து வருகின்ற
அமைப்புகளுக்குள் கொண்டு வருகின்ற வீழ்ச்சியின் சித்திரத்தை முன்வைத்து நிறைய புனைவுகள்
தமிழில் முன்னரே எழுதப்பட்டிருக்கின்றன. காலனியாதிக்கத்தால் அறிமுகமாகும் ஹோமியோபதி
மருத்துவத்தை மரபார்ந்த ஆயுர்வேத மருத்துவம் எதிர்க்கொள்வதை ஆரோக்கிய நிகேதனம் நாவலில்
சொல்லப்பட்டிருக்கும். தமிழிலே விவசாயத்தையும் அதன் சாரமாக இருந்த கிராமப்பண்பாட்டுப்
பின்னணியின் மாற்றங்களைப் பேசும் சூல், அஞ்ஞாடி, மிக அண்மையில் வந்த தீம்புனல் போன்ற
நாவல்களை வாசித்திருக்கிறேன். அந்த வரிசையிலே பாய்மரக்கப்பல் நாவலையும் வைக்க வேண்டியிருக்கிறது.
சுதந்திரத்துக்குப்
பின்பு சினிமா கவர்ச்சியும் அதன் விளைவாக வளர்கின்ற அரசியலியக்கங்களும் கிராமங்களுக்குள்
ஊடுருவுகின்றன. அதன் கவர்ச்சியில் மயங்கி நீண்ட கால உழைப்பும் நிச்சயமில்லா வாழ்வையும்
மட்டுமே உறுதியளிக்கின்ற விவசாயத்திலிருந்து விலகி அரசியலுக்குள் நுழைகின்றான் முத்துசாமியின்
மகன் வழிப்பேரன் துரைசாமி. அரசியல் அதிகாரப் படிக்கட்டில் ஏறுவதற்கு நிலத்தை விற்க
செய்து சாராய கடை வைத்து அதனால் வரும் இடர்களால் பாதிக்கப்படுகிறான். அதிகார வெறியால்
வரும் இடர்களைக் கூட கூழைக்கும்பிடுகளைப் போட்டுக் கடக்கின்றான். இன்னொரு பக்கம், முத்துசாமியை
இயக்குவதும் வாழ்விச்சையின் நுட்பமான விசையே. பங்காளிச் சண்டைக்குச் சரிபாதி குடும்பத்தைப்
பலி கொடுத்து மகன்களைப் பிரெஞ்சுபட்டாளத்துக்கும் சாமியாராகவும் அனுப்பி வைக்கிறார்.
மறுமணம் புரிந்து பிறக்கும் ஆறுமுகமும் வாதத்தால் முடங்கிவிட பேரன் அரசியல் மோகத்தால்
குடும்பத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிறான். இத்தனை நெடிய வீழ்ச்சிக்குப்
பின்னரும் உடன் இருப்போரைக் காத்து நின்று உயிர்த்திருப்பதென்பது அவருள் செயற்படும்
வாழ்விச்சை எனும் ஆதியுணர்வே. ஆனால், அதன் பின்னிருப்பது தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களை
வாழ்விப்பது அவர்களுக்கே உரமாகுவது என்ற விவசாயத்தை ஆன்மீகமாக மாற்றிப் பார்க்கும்
பார்வை. அதற்கு நேர்மாறாக, அதிகாரப்பீடத்தின் மீதான மோகத்தால் எதனையும் மிதித்து விட்டு
எம்பிப்பாயத் துடிக்கும் துரைசாமிக்குள் இருப்பது சுயநலமே. நிலத்துக்கான குத்தகைப்பணத்தைத்
தர மறுக்கும் குத்தகைக்காரனை மிரட்டி பணத்தை துரைசாமி பெற்று தருகிறான். மிரட்டலுக்கு
அடிபணிந்து பணம் தந்துவிட்டுச் செல்லும் கெஞ்சிவிட்டுச் செல்லும் குத்தகைக்காரனைக்
கண்டு காலத்தின் மீது நம்பிக்கை இழந்து போகிறார் முத்துசாமி. ஆனால், உள்ளூர அதிகாரத்தைக்
காட்டிப் பணம் வசூலித்துத் தருபவனுக்குள் இருக்கும் விசையை விவசாயத்தின் பக்கம் திருப்பிவிடலாம் எனத் தப்புக்கணக்கைப்
போட்டுப்பார்க்கவும் தவறவில்லை. மனிதனுக்குள் செயற்படும் இருவேறு அதிகாரவிசையின் மாற்றங்களை
நாவல் பேசுகிறது.
நிலத்துடனான
பிணைந்த வாழ்வு அந்நியப்படத் தொடங்கும் போது முத்துச்சாமியின் உடல்நலமும் குன்றத்தொடங்குகிறது.
மெல்ல உடல் தேறியதும் வற்றிப் போன ஏரியருகில் மறைவதற்குக் காத்திருக்கும் மதகுகள் முன்னர்
விறைப்பாக எழும் கட்டடங்களைப் பார்க்கிறார். சுதந்திரப் போராட்டத் தியாகி காத்தவராயக்
கவுண்டரின் மகன் சத்தியசீலன் விவசாயத்தைக் காட்டிலும் சினிமாவில் லாபம் அதிகம் வருவதாகச்
சொல்லும் போது எதை சாப்புடுவீங்க என அப்பாவியாகக் கேட்கிறார் முத்துச்சாமி. இப்படியாக
மாறிவரும் காலத்தில் வீழ்ச்சியடையும் விவசாயத்தை எதிர்கொள்ளும் சம்சாரியின் மனச்சஞ்சலங்களைச்
சொல்கிறார். அந்த வாழ்விலிருந்து வெளிப்பட்ட பின்னர் அரசியல் சினிமா கவர்ச்சியில் மயங்கி
அதிகாரத்தைத் துரத்தி அலைக்கழிகிறான் துரைசாமி. இந்த விவசாய வாழ்வும் அதிலிருந்து விடுபட்ட
பின் நேரும் அலைகழிவும் இரு வாழ்க்கையின் முரண்பாடாகவே நாவலில் வெளிப்படுகிறது.
பாய்மரக்கப்பல்
நாவல் இக்கட்டுக்களுக்கு முன்னர் ஆண் பெண் உறவு கொள்ளும் மாற்றங்களையும் பேசுகிறது.
விஷ சாராயம் அருந்தி முடங்கிப்போகிற ஆறுமுகம் காலமெல்லாம் மனைவி தனலெட்சுமியின் தயவுடனே
வாழ வேண்டியிருக்கிறது. அவன் உண்ண நடமாட அவள் உதவுகின்ற தருணங்களிளெல்லாம் கோபத்துடன்
வசைச்சொற்களை உதிர்க்கிறான். காலம் முடக்கிப் போட்ட உடலை மனைவியும் சாய்த்துவிடுவாளென்ற
பயமும் அவனை அரிக்கிறது. அந்த எரிச்சலுடனே வாழ்வைக் கடத்துகின்றான். நிலவுடமைச் சம்சாரி
வாழ்வு தந்த ஆணாதிக்க மனநிலை உடல் நைந்தப்போதிலும் ஒட்டிக் கொண்டு செய்யும் தொந்திரவாக
ஆறுமுகத்தின் மனவுணர்வுகளைக் காணமுடிகிறது. மகன் துரைசாமி நினைத்து தனலெட்சுமி கலங்கும்
போது ஆறுமுகம் அவளைத் தேற்ற முயல்கிறான். அதற்கடுத்து, குடும்பத்தை ஒதுக்கி விட்டு
சாராயக்கடை வைக்கும் துரைசாமி மனைவி மல்லிகாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறான். தன்
இச்சையைத் தீர்க்க மல்லிகாவை வலிந்து இணங்கச் செய்கிறான். அந்தப் புணர்ச்சியனுபவத்தின்
போது மல்லிகாவின் மனத்தில் வேறொருவனின் முகம் வந்து நிற்கிறது. இப்படியாக ஆண் பெண்
உறவுகளில் நீரு பூத்த நெருப்பாக மறைந்திருக்கும் அன்பையும் வக்கிரத்தையும் நாவல் காட்டுகிறது.
அதிலிருந்து மனம் போட்டுக்கொள்ளும் வேடத்தையும் காட்டிச் செல்கிறது.
நாவல்
என்பது விரிந்த வாழ்வையும் ஊடுபாவுகளையும் பேசும் கலைவடிவம். இந்த நாவல் பல கதைமாந்தர்களின்
வாழ்வைப் பேசினாலும் திரும்ப எல்லாவற்றையுமே முத்துசாமி என்னும் சம்சாரியின் மீதே முடிச்சிட்டு
விடுகிறது. அதனாலே, மற்ற பாத்திரங்கள் சற்று அழுத்தம் குறைந்திருப்பதாகத் தெரிகிறது.
முத்துசாமியின் மகனான ஆறுமுகம், அண்ணன்கள் எல்லாம் போனப்பிறகு அப்பாவுக்குத் துணையாக
விவசாயம் செய்கிறான். அவனுடைய உழைப்பால் நிலம் இன்னும் பெருகுகிறது. ஒரு நாள் குடிபோதையில்
வீட்டுக்கு வருபவனை முத்துசாமி கடுமையாக ஏசுகிறார். அவன் குடித்திருந்த சாராயத்தில்
விஷம் கலந்திருந்ததால் வாதம் வந்து உடலை முடக்கிப் போடுகிறது. மனைவி மீது ஆத்திரமெழுவது,
மகன் மீதான விலக்கம், அப்பாவின் மீதான பணிவு, தன்னிரக்கம் என அவ்வப்போதைய உணர்வு நிலைகள்
சொல்லப்படுகின்றன. அதைத் தாண்டி, அவனை இயக்கும் விசை நாவலில் உயிர்பெறவில்லை. முத்துசாமி
ஏசியப்பின்னரே ஆறுமுகத்துக்கு வாதம் வந்து உடல் செயலிழந்து போகிறது. அதனால், மாமனார்
மீது தனலெட்சுமிக்குக் கோபம் எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோபம் நாவலில் வேறெங்கும்
வெளிப்படவில்லை. இப்படி அவ்வப்போதைய உணர்வு நிலைகள் ஒன்று திரளாமல் கலைந்து போய்விடுகின்றன.
முத்துசாமிக்கு உள்ளூர முதல் மனைவி வனமயில் மீது ஏக்கம் இருக்கிறது. ஆனால், அவளின்
பாத்திரம் நாவலில் அழுத்தமாக இல்லை. ஒவ்வொரு பாத்திரத்தின் மனநிலையும் தனித்தனியே காட்டி
அவற்றை ஊடுபாவாகச் சேர்க்கும் நுட்பம் நாவலில் கைகூடியிருக்கவில்லை.
அதிகார
வெறியில் திளைத்திருக்கும் துரைசாமி மனைவி மல்லிகாவைக் கடுமையாக அடித்துக் காயப்படுத்துகிறான்.
மகனைத் தூக்கிக் கொண்டு யார் கண்ணிலும் படாமல் சந்தை பாதையைக் கடந்து மல்லிகா மாமனார்
வீட்டுக்குச் செல்கிறாள். அந்த வழியில் நடந்து செல்லும் போது குழந்தை கண்ணில் எதிர்படும்
நாய், கழுதை மாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.
உடலில் காயத்துடன் மனத்தில் பதைப்புடன் பிறர் கண்களை எதிர்கொள்ளாமல் நடந்து
செல்கின்றவளைக் குழந்தை எதிர்படும் விலங்குகளைச் சுட்டிக் காட்டுகிறது என்பதை அழுத்தமில்லாமலே
ஆசிரியர் சொல்கிறார். நாவல் என்னும் கலைவடிவின் நுண்விவரணைகளைத் தவறவிடும் இடங்களாகவே
இவ்விடங்கள் இருக்கின்றன.
விவசாய வாழ்விலிருந்து நுகர்வு வாழ்வுக்கு நகரும் கால மாற்றத்தில் நேரும் வீழ்ச்சியைப் பதிவு செய்த வகையில் பாய்மரக்கப்பல் நாவல் முக்கியமானதாகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக