இவ்வாண்டு தொடக்கத்தில் மாதமொரு மலாய் நாவலை வாசிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன். மலாய் இலக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம்தான் அதற்கான உந்துதல். முதலில் எங்கிருந்து தொடங்குவது, யாரிலிருந்து தொடங்குவதென்ற என்ற எந்தத் தெளிவும் இல்லை. இருந்தாலும், சமூகம், நிலம், வாழ்க்கைப் பின்னணி எனத் தெளிவான புறப்பின்னணிகள் கொண்ட நாவல்களைத் தேடி வாசிக்க வேண்டுமெனத் திட்டமிட்டேன். அவ்வாறான நாவல்கள் இயல்பான ஒரு நெருக்கத்தை வாசிப்பில் தருகிறது. அதனால், அந்நிய நிலம், வாழ்க்கையொன்றை வாசிக்கின்றோம் என்ற சோர்வு தட்டுவதில்லை. வாசிப்பிலிருந்து வெளியேறுவதையும் தடுக்கிறது. சில பண்பாட்டுக் குறிப்புகள், பின்னணிகள் குறித்து நூலுக்கு வெளியே வாசிப்பதைத் தவிர வேறு தடங்கல்கள் இல்லாமல் வாசிப்பைத் தொடர முடிகிறது. இம்மாதம் மூன்றாவது நாவலாக தொடக்கக் கால மலாய் இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளராக மதிப்பீடப்படுகின்ற இஷாக் ஹாஜி முகம்மதுவின் அனாக் மாட் லேலா கிலா (பைத்தியக்கார மாட் லேலாவின் பிள்ளை) எனும் நாவலை வாசித்தேன். இஷாக் ஹாஜி முகம்மது மலாய் இலக்கிய உலகில் பாக் சாக்கோ எனும் புனைபெயரில் பரவலாக அறியப...