வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலை வாசித்தேன். மணப்பாடு கடற்கரையை ஒட்டி வாழும் மீனவர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டிருந்தது. சிறிய
தீற்றல்களால் ஒரு சித்திரத்தைத் தத்ரூபமாகக் கொண்டு வருவதைப் போல தெற்காகப் பறந்து
செல்லும் கடற்காகங்கள், கரையை மோதம் ஓயாத அலைகளின் இரைச்சல், காற்றுக்கு ஆடும் தென்னங்கீற்றுகள்
என நுணுக்கமான கடற்கரைப் பின்னணிச் சித்திரிப்புகளால் வன்மம் துரோகம் காமம் துயர் தவிப்பும்
மனச்சஞ்சலங்களாலும் ஆன கடற்கரை மக்களின் வாழ்வை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். மீனவர்களுக்குள்
நிகழும் எல்லா சம்பவங்களிலும் தானும் பங்கெடுத்துத் துயருற்றும் மகிழ்ந்தும் வரும்
பவுல் கிழவர், தன் சேகரத்தில் உள்ள பொருட்களைக் கணம் தவறாமல் திறந்து பார்க்கும்
சிறுமியைப் போல வீட்டுக்கு முன்னிருக்கும் மனிதர்களையும் கடலையும் பார்வை குன்றிய கண்களால்
அளைந்து கொண்டிருக்கும் பெரிய மாமி எனப் பாத்திரங்களும் நாவலை உயிர்ப்புடையதாக்குகிறது.
பல தலைமுறைகளாக மரங்களால் ஆன வள்ளங்களில் மீன்பிடித்து
வந்த கடல்பகுதியில் மோட்டார் பொருத்திய லோஞ்சுகள் அறிமுகமாகின்றன. கடல் அலைகளின் சுழிகளுக்கேற்ப
துடுப்பிட்டு காற்றின் திசைக்கேற்ப பாய்விரித்துச் செல்லும் முறை மாறி கடலலைகளைக் கிழித்துக்
கொண்டு செல்லும் மோட்டார் படகுகளின் வருகை மீனவர்களுக்குள் வழிவழியாய் இருந்து வந்த
முறைகளை மாற்றியமைக்கத் தொடங்குகிறது. ஒருவகையில் மரபு நவீனத்தை எதிர்கொள்ளும் சூழலில்தான் நாவலின் களம் நிகழ்கிறது. லோஞ்சுகளால் தங்களுடைய தொழில் பாதிக்கப்படுகிறதென்றும்
மரபாக இருந்துவந்த முறைகளை லோஞ்சு வைத்திருந்தவர்கள் மீறுகிறார்கள் என வள்ளம் வைத்திருந்தவர்களுக்கும்
லோஞ்சு உரிமையாளர்களுக்கும் தகராறுகள் நிகழ்கின்றன. மர வள்ளங்களில் மீன்பிடிப்பதென்பது
லாபம் குறைந்ததாகப் பயனற்றதாக மாறிக் கொண்டிருக்கும் காலத்திலே கதை நிகழ்கிறது.
மைக்கேல் குருஸின் மரவள்ளத்தையும் வீட்டையும் விற்று கடை வைப்பதற்காக அவருடைய மகன் செபாஸ்டியன் தந்தையிடம் வேண்டுகிறான். தொழிலை விடமுடியாத உறுதி இருந்தாலும் உள்ளூர என்றோ ஒருநாள் வள்ளத்தை விற்க வேண்டியிருக்கும் என்பதை குருஸ் அறிந்தே இருக்கிறான். குரூஸின் மனைவி மரியம்மை வயதாகிய பின்னரும் தன்னை அலங்கரிப்பதில் ஆர்வமுள்ளவள். அவளுக்கும் வாத்தியாருக்கும் நீண்டகாலமாக உறவு இருந்துவருவதை குருஸ் உட்பட மகள் பிலோமிக்குட்டியும் அறிந்தே வைத்திருக்கின்றனர். கணவன், மகள், மறைந்த மாமனார் தாசையா என எல்லாரிடமும் சிடுசிடுப்பும் எரிச்சலும் காட்டுகிற மரியம்மை பல்லாண்டுகளாக வாத்தியுடன் மட்டும் சிநேகம் பாராட்டுகிறாள். அவள் இறந்த பின்னரே, அவள் நினைவுகளில் மூழ்கி குரூஸ் வேதனைப்படுகிறான். தனக்கு மரியம்மை துரோகம் இழைக்கவில்லை என எண்ணுகிறான். அவளுடைய மடியில் தலைசாய்த்துப் படுத்தால் மனத்தில் உருவாகும் வீரத்தையும் நிம்மதியையும் எண்ணி மருகுகிறான். மனைவியின் இழப்பும், லோஞ்சுகளின் வருகையால் மெல்ல மாறிக் கொண்டிருக்கும் கடற்சூழலை எதிர்கொள்ள முடியாமல் வள்ளத்தையும் வீட்டையுமே கூட விற்றுவிடுகிறான். மனைவியின் இழப்புக்குப் பின் மனத்திலிருந்த வெறுப்பு மறைந்து கடலில் துடுப்பற்றுப் போனவனாக குருஸ் உணர்கிறான். அந்தத் துயரே அவனை மனப்பிறழ்வுக்குள்ளாக்குகிறது.
அதைப் போல பிலோமியின் தோழியான ரஞ்சியும் செபாஸ்டியனும்
காதலிக்கின்றனர். அந்த உறவும் ஏதேதோ காரணங்களால் கைகூடாமலே போகிறது. மற்றவர்களைத் திருமணம்
புரிந்து கொண்ட பின்னரும் உள்ளூர இருவருக்கும் ஒருவர் மீது மற்றொருவருக்கு அன்பு இருக்கிறது. அந்த ஆற்றாமையுடனே பின்னர் பார்க்கும் போது ஒருவரையொருவர்
நலம் விசாரித்து மனதுக்குள்ளே புழுங்கி கொண்டிருக்கின்றனர்.
தன்னுடைய லோஞ்சு தீயில் எரிந்து கருகுவதை ஐசாக் காண்கிறான். ‘’வயிறு திறக்காததால்’’ காலம் முழுவதும் அடிப்பட்டும்
துன்புறுத்தப்பட்டும் மனைவி காத்ரீனும் நீல ஆடை உடுத்தியத் தோற்றத்தில் அந்த நெருப்பில்
எரிவதைப் போல கண்டு ''நீ சாகக் கூடாது நீதான் எனக்கு வேணும்'' என நெருப்பைத் தழுவச்
செல்கிறவன் மனம் பிறழ்ந்து போகிறான். இழப்பின் குரூரத்துக்கு முன் குற்றவுணர்வால்
தூண்டப்பட்டு மனம்பிறழ்ந்து போகிறான்.
இழப்பும் ஏமாற்றமும் அன்பாகக் கனியும் விந்தையைப் பிலோமியும் உணர்கிறாள். பிலோமிக்கு சாமிதாஸுடன் காதல் உருவாகத்தான் செய்கிறது. குடும்ப நெருக்கடியின் காரணமாக சாமிதாஸ் பிலோமியைக் கைவிடுகிறான். அம்மாவின் மரணமும் அதனைத் தாங்கி கொள்ள முடியாமல் தந்தை குரூஸும் மனம் பிறழ்ந்து போகின்றனர். கடலலைத் தீண்டலில் காலடி மணல் உள்வாங்கி காணாமற் போய்க் கொண்டிருப்பது போல ஏமாற்றங்களும் இழப்புகளுமான அனுபவங்களில் பிலோமியும் கனிந்துதான் போக வேண்டியிருக்கிறது. அந்தச் சூழலிலே அவளுடைய தாய்க்கு நெருக்கமாக இருந்த வாத்தியார் அவளுக்கும் அணுக்கமானவராக மாறுகிறார். வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டு கையில் தந்த சட்டையை வாங்கி அணிந்து கொள்ளும் சிறு நிகழ்வுகளில் வெளிப்படும் வாஞ்சையும் மென்மையுமே வாத்திக்கும் அவளுக்குமான உறவைச் சொல்கிறது. இப்படியாக, வன்முறை, ஏமாற்றங்கள், இழப்புகள் ஆகியவற்றால் அலைகழிந்து கொண்டிருக்கும் கடல்புரத்து மக்கள் குறிப்பாகப் பெண்கள் அன்பாலும் வாஞ்சையாலும் வாழ்க்கையைத் தொடரச் செய்வதை வண்ணநிலவன் நாவலில் காட்டுகிறார்.
இழப்புகளின், துயர்களின் முன்னால் எல்லா வாழ்க்கை அனுபவங்களுக்குப் பின்னால் இருக்கும் வெறுப்பு, காமம், துரோகம் எல்லாம் அலை வந்து அழித்துவிடும் மணற்கோலங்களாகப் பொருளற்றுப் போகிறது. அதன் மேல்தளத்தில், வாழ்வை ஏற்றுக் கொள்வதில் ஒரு ஆயாச உணர்வை அது அளிக்கத்தான் செய்கிறது. துரோகமும் துயரும் நிறைந்த வாழ்வை அன்பால், வாஞ்சையால் நிறைப்பதென்பது ஒரு வசீகரத்துயரத்தை வாசிப்பில் கடத்திவிடுகிறது. இருந்தாலும், நாவலென்பது அந்தத் துயரை அதன் வசீகரத்துடன் காட்டுவதுடன் நிறைவு பெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. அந்த அனுபவத்துக்குள் புதைந்து போயிருக்கும் உணர்வு முரண்களையும் ஊடாட்டங்களையும் கடல்புரத்தில் நாவல் காட்டத் தவறியிருப்பதாகவே உணரமுடிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக