இவ்வாண்டு தொடக்கத்தில் மாதமொரு மலாய் நாவலை வாசிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன். மலாய் இலக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம்தான் அதற்கான உந்துதல். முதலில் எங்கிருந்து தொடங்குவது, யாரிலிருந்து தொடங்குவதென்ற என்ற எந்தத் தெளிவும் இல்லை. இருந்தாலும், சமூகம், நிலம், வாழ்க்கைப் பின்னணி எனத் தெளிவான புறப்பின்னணிகள் கொண்ட நாவல்களைத் தேடி வாசிக்க வேண்டுமெனத் திட்டமிட்டேன். அவ்வாறான நாவல்கள் இயல்பான ஒரு நெருக்கத்தை வாசிப்பில் தருகிறது. அதனால், அந்நிய நிலம், வாழ்க்கையொன்றை வாசிக்கின்றோம் என்ற சோர்வு தட்டுவதில்லை. வாசிப்பிலிருந்து வெளியேறுவதையும் தடுக்கிறது. சில பண்பாட்டுக் குறிப்புகள், பின்னணிகள் குறித்து நூலுக்கு வெளியே வாசிப்பதைத் தவிர வேறு தடங்கல்கள் இல்லாமல் வாசிப்பைத் தொடர முடிகிறது.
இம்மாதம் மூன்றாவது நாவலாக தொடக்கக் கால மலாய் இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளராக மதிப்பீடப்படுகின்ற இஷாக் ஹாஜி முகம்மதுவின் அனாக் மாட் லேலா கிலா (பைத்தியக்கார மாட் லேலாவின் பிள்ளை) எனும் நாவலை வாசித்தேன். இஷாக் ஹாஜி முகம்மது மலாய் இலக்கிய உலகில் பாக் சாக்கோ எனும் புனைபெயரில் பரவலாக அறியப்படுகிறார். 1909 இல் பகாங் மாநிலத்தின் தெமர்லோ மாவட்டத்தில் பிறந்த பாக் சாக்கோ இடைநிலைக்கல்வியை நிறைவு செய்த பின் காலனிய அரசில் மலாய் நிர்வாகப் அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கினார். கோலா லிப்பிஸ், ரெம்பாவ் போன்ற மாவட்டங்களில் பணியாற்றினார். மலாய்க்காரர்கள் வறுமையிலும் அறியாமையாலும் வாழ்வதைக் கண்டு மிகுந்த மனச்சோர்வுற்றார். காலனிய அரசின் மீது கொண்ட சலிப்பினாலும் வெறுப்பினாலும் வேலையை விட்டு நீங்கினார். 1930கள் தொடங்கி 1940கள் வரையில் வேலையை விட்டு நீங்கிய பின்னர் மலாயாவின் பல பகுதிகளுக்கும் சென்று மலாய்க்காரர்களின் வாழ்க்கைச் சூழல், சமூகச்சூழல்களை அவதானித்திருக்கிறார். 1937 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து இயங்கி வந்த வர்தா மலாயா எனும் மலாய் நாளிதழில் ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். 1939 ஆம் ஆண்டு மலாய் சமூக விழிப்புணர்வு இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றிய உத்துசான் மெலாயு நாளிதழைத் தோற்றுவித்து அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இஷாக் ஹாஜி முகமதுமலாய் சமூகத்தில் அரசியல் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேசியவாத சிந்தனை
அலை ஆகிய சிந்தனைப் போக்குகளே அவருடைய எழுத்துலகத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.
பிரித்தானிய காலனிய எதிர்ப்பு மனநிலையின் காரணமாக ஜப்பானியப் படைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை
எடுத்தார். பிரிட்டானிய காலனிய ஆட்சியை அகற்றி மலாயா, இந்தோனேசியா, புருணை போன்ற நாடுகளை
உள்ளடக்கிய இந்தோனேசியா ராயா எனும் ஐக்கிய நாட்டை உருவாக்கும் முயற்சி நிறைவேற ஜப்பானியப்
படைகளுடன் இணைந்து செயற்படும் விதமாக மலாய் இளைஞர் சங்கம் (Kesatuan Melayu Muda)
எனும் இடதுசாரி அமைப்பைத் தொடங்கினார். ஜப்பானிய ஆட்சியின் போது பெரித்தா மலாய் இதழின்
ஆசிரியராக ஆசிய மறுமலர்ச்சியை முன்வைத்து கட்டுரைகள் எழுதினார். இரண்டாம் உலகப் போர்
முடிவில் ஜப்பானியர்கள் படை சரணடைந்து பிரிட்டன் படைகளின் ஆளுகைக்குக் கீழ் மலாயா ஆட்பட்டதும்
அவசரக்காலக் கட்டத்தில் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற ஐயத்தின் பேரில்
ஐந்தாண்டுகள் கைது செய்யப்பட்டார். பின்னாளில், சபா, சரவாக், சிங்கப்பூர் ஆகியவை ஒன்றிணைந்து
மலேசியா உருவான போதும் இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் உருவான பனிப்போர் காலக்கட்டத்திலும்
மீண்டுமொரு முறை கைது செய்யப்பட்டார். சுதந்திர மலாயாவில் சோசிலிச கட்சியின் மூலமாக
இரு முறை தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். இப்படியாக, மலாய் அரசியல் சமூக
விழிப்புணர்வு, விடுதலைப் போராட்டம், சோசிலிசம் எனத் தீவிரமான அரசியல் இயக்கங்களில்
பாக் சாக்கோ பங்கேற்றார்.
இலக்கியத்தைப் பொறுத்தளவில் இரண்டாம் உலகப்போருக்கு முன்பிலிருந்தே சிறுகதைகள்
நாவல்கள், கட்டுரைகள் எழுதத்தொடங்கினார். மலாய் சமூக விழிப்புணர்வே பாக் சாக்கோவின்
எழுத்துக்கான விதையாக இருந்திருக்கிறது. இந்தப் பின்னணியிலே, அவருடைய இரண்டாவது நாவலான
அனாக் மாட் லேலா கீலா (1938) மதிப்பீட வேண்டியிருக்கிறது.
காலனிய அரசின் நிர்வாகத்துக்குள் வாழப் பழகிவிட்ட கம்பத்து மலாய் மக்கள் சூழல்
மீதான விமர்சனத்திலிருந்தே நாவல் தொடங்குகிறது. மலாய் கம்பமொன்றில் வாழும் மாட் லேலா
எனும் இளைஞனைக் கம்பத்து மக்கள் மனநலம் பிறழ்ந்தவனாகக் காண்கின்றனர். எந்தப் பிரதிபலனுமின்றி
பள்ளிவாசலுக்கருகில் குவிந்திருக்கும் சருகுகளையும் தென்னம் மட்டைகளையும் கூட்டித்
தூய்மைப்படுத்திப் பகல் முழுவதும் காடுகளில் மரக்கட்டைகளை வெட்டி வாங்குகளை அமைத்து
ஆளொழிந்த காட்டுப் பகுதிகளில் தனியாளாகச் சுற்றித் திரியும் மாட் லேலாவை கம்பத்து மக்கள்
மனநலம் பிறழ்ந்தவனாகக் காண்கின்றனர். அவனைப் பொறுத்த வரையில் கம்பெனி அச்சிட்ட நோட்டுகள்
மதிப்பற்றவை. கம்பெனி நோட்டுகளைப் போல தென்னம்
மட்டைகளில் போலித்தாள்களைச் செய்கின்றான். செங்கல் கட்டடங்களே இல்லாத ஊரில் பள்ளிவாசல்
கட்ட ஆற்றுச் செம்மண்ணை எடுத்துச் செங்கற்களைச் செய்து உலர வைக்கின்றான். இப்படி கம்பெனி
ஆட்சியில் நடைமுறையாகிப் போனவற்றுக்குப் பிறழாக நடந்து கொள்கின்றவனைச் சமூகம் மனநலம்
பிறழ்ந்தவனாகக் காணும் விந்தையைச் சுட்டிக்காட்டுவதிலிருந்தே நாவல் தொடங்குகிறது.
தன்னுடைய குடிலில் கைவிடப்பட்டுக் கிடக்கும் குழந்தையொன்றை மாட் லேலா எடுத்து
வளர்க்கின்றான். பூலாட் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை பைத்தியக்காரனது பிள்ளை என
அறியப்படுகிறது. அந்தக் கிராமத்தில் நீண்ட நாட்களாகக் குழந்தையின்றி இருக்கும் ஜோஹாரி,
பெர்மாய் தம்பதியினர் மாட் லேலாவின் குடிலிலிருந்து பூலாட்டைக் கண்டெடுத்து வளர்க்கின்றனர்.
அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் அறியப்படாமையால் பூனியன் எனப்படும் சூட்சும
உலகத்தில் வாழும் மனிதர்களின் குழந்தை என ஊரார் கருதுகின்றனர். பூலாட்டின் வருகை தங்களுக்குச்
செல்வத்தைத் தந்ததாக ஜொஹாரியும் பெர்மாயும் கருதுகின்றனர். முதன் முறையாக பெர்மாய்
கருவுற்றதும் அவளின் பாலியல் ஒழுக்கத்தின் மீது சந்தேகம் கொண்டு பூலாட்டை அழைத்துக்
கொண்டு இசுலாமியப் போதனைப் பள்ளியொன்றுக்கு ஜோஹாரி செல்கின்றான். அங்கு, ஜோஹாரியா எனும்
இளம் விதவையின் அழகில் மயங்கி பூலாட்டைக் கைவிட்டு அவளுடன் சென்று வாழத் தொடங்குகிறான்.
மறுபடியும் அநாதையாகிப் போகின்ற பூலாட், அங்கிருந்து பல பகுதிகளில் அலைந்து வாழத் தொடங்கிறான்.
கேமரன் மலைப் பகுதியில் வாழும் பூர்வக்குடித் தலைவனுடன் அடைக்கலமாகி பல வித்தைகளைக்
கற்றுக் கொண்டு தன்னுடைய உண்மையான பெற்றோர்களைத் தேடிக் கண்டடைகிறான். அந்த நீண்டப்பயணத்தில்
அவன் அடைகின்ற அனுபவங்களும் பெற்றோர்களைத் தேடுதலுமே நாவலின் கதை.
தன்னுடைய உண்மையான அடையாளத்தைக் கண்டடைய மலாயா, சிங்கப்பூர் முழுமையும் பல பகுதிகளுக்குச்
சுற்றியலைகின்ற சிறுவனின் வாழ்க்கையைக் காட்டி கம்பத்துக்கு வெளியே இருக்கும் விரிந்த
நிலப்பரப்பையும் வாழ்வையும் அரசியல் சமூகச் சூழலையும் உணர்த்தும் எண்ணம் மட்டுமே இந்த
நாவலின் நோக்கமாக இருக்கின்றது. இந்த நோக்கமே
நாவல் காட்டும் சமூகச் சூழல், வாழ்க்கைப் பின்னணி எதுவுமே அழுத்தமற்று மேடை நாடகங்களில்
பின்னணி மாற்றம் காட்ட மாற்றப்படும் தீரைச்சிலைகளைப் போல வெறுமே மாறி மாறிச் செல்கிறது.
கோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற பெருநகரங்களில் மக்கள் பல தொழில்களில் உழைக்கின்றனர்.
ஆங்கிலத் திரைப்படங்கள், ஆங்கில தாக்கம் கொண்ட பாடல் நிகழ்ச்சிகள் அரங்கேறும் அரங்குகளான
ஆனவையாக நகரங்கள் இருக்கின்றன. கேமரன் மலையில் அரசவையில் தளபதிகளாக இருந்த பூர்வக்குடித்
தலைவர்கள் காலனிய ஆட்சியின் காரணமாக பதவியற்றுக் காடுகளில் அலைகின்றனர். காலனிய ஆட்சியின்
காரணமாய் மலாய் மக்களின் வாழ்க்கை முறை வீழ்ச்சியடைந்திருக்கிறது. நகரங்களில் போகங்களில்
திளைத்திருக்கின்றனர். கம்பங்களில் அறியாமையில் இருக்கின்றனர்.
இந்தச் சமூகச்சூழலைக் கண்டிக்க கதையாசிரியரே புனைவில் நேரடியாகப் பேசுகிறார்.
மனநலம் பிறழ்ந்தவனா அல்லது களங்கமில்லாதவனா எனச் சந்தேகம் தோன்றும்படி படைக்கப்பட்டிருக்கும்
மாட் லேலா காலனியப் பழக்கங்களைப் பின்பற்றும் மக்கள் குறித்து உள்ளூர விமர்சனப் பார்வை
கொண்டிருக்கிறான். களங்கமற்ற மனைவி மீது சந்தேகம் கொண்டு இளம்விதவையைத் திருமணம் செய்து
கொள்ளும் ஜொஹாரி மனைவி வீட்டாரால் வீட்டு வேலைகள் செய்ய ஏவப்பட்டு விரக்தியடைந்து மனநலம்
பிறழ்ந்து போகிறான். இப்படியாக, மலாய் சமூக நெறிகள், இசுலாமியச் சமய நெறிகள் ஆகியவற்றைக்
கைவிடுவதால் ஏற்படும் குழப்பங்களையும் பிறழ்வுகளையும் சுட்டிக்காட்டிச் செல்கிறார்.
அநாதையாக அலைகின்ற பூலாட் மலாய் வீரமரபும் நெறிகளையும் பின்பற்றும் பூர்வக்குடித் தலைவன்
அலாங்கிடமிருந்து அவற்றைக் கற்றுக் கொள்கிறான். இறுதியில், மெக்கா நகரின் புனிதப்பயணம்
மேற்கொள்ளக் காத்திருக்கும் வளர்ப்புப் பெற்றோர்களையும் உண்மையான பெற்றோர்களையும் தேடிக்
கண்டடைகிறான்.
தெளிவான அரசியல் சட்டகத்தில் எழுதப்பட்டிருக்கிற நாவல் இன்றைய பார்வையில் பெரும்
ஈர்ப்பைத் தரவில்லை. காலனிய ஆதிக்கம் நிலைத்து நவீனக் கல்வி கற்று சொந்த சமூகத்தின்
மீதான விமர்சனப் பார்வையும் உருவாகிய சூழலில் மலாய் சமூகத்துக்கு அரசியல் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் முயற்சி என்றளவிலே இந்நாவலை மதிப்பீடமுடிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக