தீம்புனல் நாவல் வாசிப்பனுபவம் எழுத்தாளர் கார்ல் மார்க்ஸின் தீம்புனல் நாவலை வாசித்து முடித்தேன். அதையொட்டி முன்னரே எழுத்தாளர் ஜெயமோகனின் உரையொன்றை யூடியுபில் கேட்டிருக்கிறேன். கார்ல் மார்க்ஸ் என்ற பெயரும் தீம்புனலும் கம்யூனிசச் சித்தாந்ததை ஒட்டிய நாவலாக இருக்கும் என்ற அனுமானத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், இந்த நாவல் நிலவுடைமை பின்புலம் கொண்ட விவசாயக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியையொட்டிச் சமகால தமிழ்வாழ்வின் போக்கைப் பற்றியதாகவே இருந்தது. முன்னமே தமிழில் விவசயக் குடும்பங்களின் வீழ்ச்சியை முன்வைத்திருக்கும் சு.வேணுகோபால், இமயம் போன்ற படைப்பாளிகளின் புனைவுகளையும் நினைவுப்படுத்துவதாக இருந்தது. அந்தப் புனைவுகளிலிருந்து கார்ல் மார்க்ஸின் நாவல் வேறுபடும் அல்லது புதியதாகத் தொட்டுக் காட்டும் இடத்தையே இந்நாவலில் தொடக்கம் முதலே தேடினேன். அந்த விவசாய வாழ்விலும் எழுந்துவரும் சித்திரிப்புகளும் அனுபவங்களுமாகவே இருந்தன. முன்னரே, தெரிந்த வாழ்வு என்றாலும் அதனுள் அமைந்திருக்கும் மனித உறவுகளின் சிடுக்குகள், சமூகக்கட்டமைப்பின் மாற்றங்களால் துலங்கிவரும் வாழ்வின் தரிசனம் நிச்சயம் மற்ற நாவல்களிலிருந்து வ...