முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 மணற்கடிகை நாவல் வாசிப்பனுபவம்

ஏதேனும் இரைச்சல் அல்லது தொடர் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தால் எனக்குத் தூக்கம் நன்கு வரும். உறக்கமற்ற இரவுகளில் நிசப்தபே பெரும் அச்சமாகச் சூழ்ந்து கொள்ளும். சூழ இருக்கும் நிசபத்தின் பேரிரைச்சலைக் களைய ஏதேனும் ஒலியைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். மணற்கடிகை நாவலை வாசித்து முடிக்கும் வரை ஓயாத சிறு இரைச்சலொன்று ஒலித்துக் கொண்டிருந்ததாகவே இருந்தது. குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செல்கிற தறிச்சத்தமாகவும் இயந்திரங்களின் கலவையொலிகளாகவும் இருந்தன. திருப்பூர் எனும் இந்தியாவின் மாபெரும் தொழிற்நகரொன்றின் பாரம்பரியத் தொழிற்முறையிலிருந்து நவீனத் தொழில் உலகுக்குள் செல்லும் காலக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு நாவல் எழுந்திருக்கிறது. சிறு வயதில் நகரங்களைப் பார்க்கும் போது வியப்பில் ஆழ்த்துவது அதன் ஒழுங்கும் பிரம்மாண்டமும்தான். கார்கள் ஓயாமல் எதையோ நோக்கி விரைவதும், கட்டிடங்கள் உயர்ந்து செறிவாக, சாலைகள் மேல் கீழாக இருப்பது பயத்தையும் வியப்பையும் ஆழ்த்தும். அதே நகரில் வந்து இருக்கும் போது அதன் பிரம்மாண்டங்கள், ஒழுங்குக்குள் அமைகிற வாழ்வு குறித்த விசாரமே இந்நாவலை எல்லா நகருக்குமானதாக எல்லா மனிதர்களுக்குமானதாக ஆக்குகிறது.



நாவலின் முதன்மைப் பாத்திரங்களாக வளரிளம் பருவத்தில் சிவா, சண்முகம், பரந்தாமன், அன்பழகன், திரு ஆகியோர் வருகின்றனர். பள்ளிப் படிப்பு முடிந்த பின்னதாக நீளும் அலைவுகளும் தடுமாற்றங்களும் நடுத்தர வயது வரையில் சொல்லப்படுகிறது. என்னுடைய வயதையும் கடந்து செல்கின்ற வாழ்வு என்பதால் பலமுறை என்னையும் நாவலில் பார்வையாளனாக இருத்திக் கொள்ள முடிந்தது. தமிழ் சமூகக் கட்டுமானம் என்பது பெரும்பாலும் இயங்கும் தொழிற்முறையிலிருந்து உருவாவதே. அந்த இறுக்கமான கட்டுமானமே சமூக நிலை, பொருளியல் நிலை ஆகியவற்றை உறுதி செய்கிறது. நிலப்பிரப்புதவக் காலத்துக்குப் பிந்தைய முதலாளித்துவக் காலக்கட்டத்தில் நிகழும் மாற்றங்களான கல்வி வாய்ப்பு, தொழிற் புரட்சி போன்றவற்றால் மரபாக வரும் சமூகக்கட்டுமானம் தலைக்கீழாக்கம் அடைகின்றன. இறுக்கமான வருக்கப்படிநிலையிலிருந்து கல்வி பெற்று வரக்கூடியவர்கள் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்தப் பாய்ச்சல் நிகழும் போது சமூகக்கட்டுமானம் நிச்சயமாக உடைந்து போகிறது. ஆனால், வழிவழியாகத் தொடர்ந்து வரும் சமூக, ஒழுக்கவியல் மதிப்பீடுகள் ஆழ்மனத்தில் அப்படியே தங்கி போகின்றன. இந்தச் சித்திரத்தை ஏற்படுத்திக் கொள்வதன் வாயிலாகவே, மணற்கடிகை நாவலை அணுக இயலும்.

மனித மனத்தில் இருக்கும் ஆழ்மன உணர்வுகள் நவீன சமூக உருவாக்கத்தின் போது எதிர்கொள்கிற முரண்களையும் திரிபுகளையுமே இந்நாவலின் முதன்மை தரிசனமாகத் திரட்டிக் கொள்ள முடிகிறது. இந்தத் தொழிற் வளர்ச்சியில் நில்லாமல் ஒடிக்கொண்டிருக்கிற சிவராஜ் தன்னுடைய காமத்தையும் ஓயா அலைகழிதலாகவே காண்கிறான். எதுவுமே நிறைவு செய்ய முடியாத வெறுமையை அடைகிறான். அந்த வெறுமையின் ஆழத்தில் இளமையில் எழுந்த உமாவின் மீதான காதலே உறைந்திருக்கிறது. அதைப் போலவே, சண்முகமும் காமத்தைக் கொண்டாட்டமாகக் கருதுகிறான். அந்தக் காமம் பெண் குழந்தை பிறந்தவுடன் முழுவதுமாய் மாறுவதென்பது நாடகீயத்தருணமாக அமைந்திருந்தது. வாழ்வின் தொடரோட்டத்தில் காமத்திலிருந்து விலகி செல்கிறான் அன்பழகன். தன்னுடைய ஆணவம் தோற்றுப் போகுந்தருணத்தில் காமத்திலிருந்து ஓட முயல்கிறான் பரந்தாமன். காமம் என்பதை வெறும் இச்சையாக, இயந்திரம் ஓடுவதற்கான மசகு எண்ணெயாக மாறி போகும் தருணத்தையும் இந்நாவல் அளிக்கிறது.உடல் வெறும் பொருளாக மாறுகிறது. அதன் மூலமாகப் பெறும் பணத்தில் தனக்கான சமூகப்பொருளியல் நிலையை அடைகிறாள்………………


இந்த நாவலில் இளமைக்கே உரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் தேடலையும் சொல்கிறது. காத்திரமான இலக்கியப்படைப்புகள் இவ்வாறுதான் அமைய வேண்டும் எனச் சண்முகம் சில முன்முடிவுகளுடன் இருக்கிறான். கம்யூனிச இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு அரசியல் முடிவுகளால் வெளியேறுகிறான் பரந்தாமன். இந்த அடையாளங்களை விரும்பி அணிந்து பின்னர் மனம் கொள்கிற வெறுமையை இந்நாவலில் காண முடிகிறது. இளமையில் சாகசமும் அருஞ்செயலாகத் தோன்றுபவை மெல்ல திரிபடைந்து பொருள்ளில்லாத வெறும் செயலாக மாறுகிறது.

 

எழுந்துவரும் தொழிற்புரட்சி காலத்தில் கூடவே கம்யூனிசமும் தேவையென உணரப்படுகிறது. தொழிலாளிகளின் மீதான முதலாளித்துவத்தின் சுரண்டலைப் பற்றிய தேவையினால் அவ்வியக்கம் திருப்பூரில் அல்லது அதைச் சமானமான வேறு நகரங்களிலும் வேறு பெயர்களில் தேவைபடுகிறது. ஆனால், மக்கள் உள்ளுக்குள் கனவுகாண்பது சமநிலையை அன்று…எதிரில் இருப்பவனை முன்னேறிச் செல்லும் கனவுகளையே. அந்தக் கனவுகளைச் சுமந்து கொண்டு கம்யூனிசத்தைப் பேசுவது முரணாக அமைகிறது. அந்த முரனில் கம்யூனிசமும் முதலாளித்துவத்துடன் சற்றே கடுமையான சமரசத்தைச் செய்து கொள்ளும் அடையாள அரசியலாக மாறுகிறது. கம்யூனிசம் போன்ற இயக்கங்களின் பங்களிப்பு என்பது தேவையானதாகவே இருந்தாலும் இதுமாதிரியான சமரங்களின் வாயிலாகவே நீடித்திருக்க இயலுகின்றன எனும் சமூக யதார்த்ததை முன்வைக்கிறது.

 அதற்கு நேர் எதிராகச் சமயம் இருக்கிறது. வாழ்வு மீதான மேலான பொருளை அல்லது தொடர்ந்து நிகழும் நிறைவில்லா கேள்விகளை அடைய சமயத்தை நாடுகிறார் சித்தர் சாமி சுப்ரமணியம். பெரும்பான்மையான பொழுதுகளில் சமயம் என்பது சிறு இடைத்தாங்கலாக ஆசுவாசப்படுத்தச் செய்யும் எளிய பயணமாக இருக்கிறது.இந்த நாவலில் ஒருவிதமான சுமூகத்தன்மையை எல்லா இடங்களிலும் காண முடிகிறது. நண்பர்கள் தங்கள் மனத்தில் இருக்கும் காழ்ப்புகளை நெஞ்சோடு வைத்துக் கொள்வதும் மீறி பீறிட்டு வரும் தருணத்தில் புரிந்து கொள்கின்ற நண்பர்களும் சேர்ந்து சுமூகமானதாகவே சூழல் அமைகின்றன. மேலும், வருக்க வேறுபாடு ஏற்படுத்தும் ஒருவிதமான வன்மம், சிக்கல் ஆகியவை முழுமையாக வெளிப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

 இந்த நாவலில் இருக்கின்ற படிமங்கள் கற்பனையால் சென்றடையக்கூடிய உச்சப்பட்ச சாத்தியத்தை அளிக்கின்றன. மலையில் அமர்ந்திருக்கும் நண்பர்கள் பின்னே இருக்கும் மயிலின் துயரார்ந்த அகவலாகட்டும், சட்டென்று ஹைட்ராலிக் தேராக மாறி விரைவாக வீதிவலம் வருகின்ற தேராகட்டும், வயதேற வயதேற துலக்கம் காணும் சுற்றுப்புறக் காட்சிகளாகட்டும் நாவலின் அப்போதையத் தன்மையைப் பிரதிபலிக்கின்றன. சூத்ரதாரியான கோபாலகிருஷ்ணனின் பாவைகளாகவே நாமும் மாறி போகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...

வயலும் வாழ்க்கையும்

  வயலும் வாழ்க்கையும் ஷானோன் அகமாட்டின் detik detik diri di daerah daif (உட்புற மாவட்டமொன்றிலிருந்த தருணங்கள்) எனும் தன்வரலாற்று நூலைத்தான் முதலில் வாசித்தேன். செய்திகள், தேர்வு வாசிப்புக்காகவும் இல்லாமல் நான் முதன்முதலாக வாசித்த மலாய் புனைவு நூலும் அதுதான். கெடா மாநிலத்தின் உட்புறப்பகுதியான சிக் பகுதியில் கழிந்த தன் பால்யத்தையும் மேற்கல்வி வரையிலான வாழ்வைப் புனைவு கலந்து சொல்லியிருப்பார். மலாய் மக்களின் கிராமப்புற வாழ்வின் சிரமங்கள், நெல் வயல் வேலைகள் எனச் சுவாரசியமாக இருந்ததாக நினைவிருக்கிறது. அதிலும் குறிப்பாக, தன் தந்தையுடன் சேர்ந்து மணிப்புறாவைப் பிடித்து அதைத் துள்ளத்துடிக்கக் கொல்லும் சித்திரமொன்று நன்கு நினைவில் இருக்கிறது. அதற்கடுத்து tivi எனும் குறுநாவலை வாசித்தேன். நெல் விவசாயம் செய்யும் மலாய் மக்களின் வாழ்வுக்குள் நவீனத் தொழிற்நுட்பத்தின் வருகையை ஒரு விவசாயக் குடும்பத்துக்குள் தொலைக்காட்சி முதலில் அறிமுகமாகி அதன் வழியாக விவசாயப் பணிகளுக்குச் செல்லச் சோம்பல் ஏற்பட்டு மெல்லக் குடும்பம் சீரழிவதைச் சொல்லும் படைப்பு திவி. கலை என்பதை விட சமூக விமர்சனத்தை முன்னிலைப்படுத்தும்...