முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 வாடிவாசல் நாவல் வாசிப்பனுபவம்

சி. சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் ஒரு நிறைவான சிறுகதையை வாசித்த உணர்வை அளித்தது. மாட்டுக்கு ரோசம் வந்தாலும் ஆகாது மனிதனுக்கு ரோசம் வந்தாலும் ஆகாது என்கிற நாவலின் இறுதி வரி இந்நாவலின் ஒட்டுமொத்த வாசிப்பனுபவத்தின் தரிசனமாக இருக்கிறது. தன் தந்தையைக் குத்திக் கிழித்த மாட்டை அடக்குவதற்காக பிச்சி எனும் இளைஞன் செல்லாயி ஜல்லிகட்டுக்கு வருகிறான். அந்தக் காளை ஜமினின் பெருமைக்குரிய சின்னமாகவும் இருக்கிறது. இன்னொருவகையில் நிலப்பிரபு ஒருவரின் செல்வாக்கு, செல்வம் ஆகியவற்றின் வடிவாகவே அதன் திமிறல், பேரூரு இருக்கிறது என ஊகிக்கலாம். அந்த மாட்டை அடக்கும் சாகசத்தின் சித்தரிப்புகளாகவே நாவல் விரிகிறது. வாடிவாசலில் நின்று கண்முன்னே ஜல்லிக்கட்டைப் பார்க்கும் உணர்வை இந்நாவலின் சித்தரிப்பின் வாயிலாக சி.சு.செல்லப்பா அளிக்கிறார். நாவலின் பிச்சியின் நண்பனாக வரும் மருதன், ஊர் கிழவரின் பாத்திரம் நன்றாக அமைந்திருந்தது. ஊர் கிழவன் ஒவ்வொரு மாட்டையிம் பற்றிக் குறிப்பிடும் நுட்பங்கள், அவன் தந்தையைப் பற்றியும் மாடணைவது பற்றிச் சொல்லும் குறிப்புகளும் போர்ச்சூழலில் இருக்கும் வீரனுக்கு உரைக்கும் உரைகளாக இருந்தன.

 


ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகள் மனிதனுள் ஊறியிருக்கும் ஆதியுணர்ச்சியான வன்முறையினை ஏதோ ஒருவகையில் ஆற்றுப்படுத்த அமைந்தவையாக இருக்கிறது. இந்த நாவலின் விவரிப்பும் போர்ச்சூழலில் நின்றிருக்கும் வீரனின் உள்ளுணர்வாகவும் போர்க்களப் பின்னணியாகவுமே உருமாறியிருந்தது. ஊர் கிழவனின் வாஞ்சையான பேச்சு என்பது முதுவீரன் ஒருவன் நல்ல உறுதியான வீரனொருவனைப் பார்த்தப் பின் அவனுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்கிற எழுகிற உந்துதலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிற பாத்திரமாகவே அமைந்திருந்தது.

இந்த மாட்டை அணைந்தப் பின், ஜமீனின் பெருமைக்குரிய சின்னம் பாழ்பட்டதாக அமைகிறது. பிச்சியை அழைத்து நூறு ருபாய் கொடுத்து ஜமீன் கவுரவிக்கிறார். பத்துப் பேரைக் காயமுறுத்தி இருவரைக் கொன்றும் தன்னை அணைந்தவன் மீதான சினம் அடங்காமல் காளை அலைகிறது. அதனை ஜமீந்தார் துப்பாக்கியால் கசந்த சிரிப்புடன் கொல்கிறார். மனிதனுள் இருக்கும் மிருக உணர்வும் மாட்டின் இயல்பை மீறிய உணர்வு கொந்தளிப்பும் சந்தித்துக் கொள்கிற புள்ளியாக அவ்விடம் அமைகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...

வயலும் வாழ்க்கையும்

  வயலும் வாழ்க்கையும் ஷானோன் அகமாட்டின் detik detik diri di daerah daif (உட்புற மாவட்டமொன்றிலிருந்த தருணங்கள்) எனும் தன்வரலாற்று நூலைத்தான் முதலில் வாசித்தேன். செய்திகள், தேர்வு வாசிப்புக்காகவும் இல்லாமல் நான் முதன்முதலாக வாசித்த மலாய் புனைவு நூலும் அதுதான். கெடா மாநிலத்தின் உட்புறப்பகுதியான சிக் பகுதியில் கழிந்த தன் பால்யத்தையும் மேற்கல்வி வரையிலான வாழ்வைப் புனைவு கலந்து சொல்லியிருப்பார். மலாய் மக்களின் கிராமப்புற வாழ்வின் சிரமங்கள், நெல் வயல் வேலைகள் எனச் சுவாரசியமாக இருந்ததாக நினைவிருக்கிறது. அதிலும் குறிப்பாக, தன் தந்தையுடன் சேர்ந்து மணிப்புறாவைப் பிடித்து அதைத் துள்ளத்துடிக்கக் கொல்லும் சித்திரமொன்று நன்கு நினைவில் இருக்கிறது. அதற்கடுத்து tivi எனும் குறுநாவலை வாசித்தேன். நெல் விவசாயம் செய்யும் மலாய் மக்களின் வாழ்வுக்குள் நவீனத் தொழிற்நுட்பத்தின் வருகையை ஒரு விவசாயக் குடும்பத்துக்குள் தொலைக்காட்சி முதலில் அறிமுகமாகி அதன் வழியாக விவசாயப் பணிகளுக்குச் செல்லச் சோம்பல் ஏற்பட்டு மெல்லக் குடும்பம் சீரழிவதைச் சொல்லும் படைப்பு திவி. கலை என்பதை விட சமூக விமர்சனத்தை முன்னிலைப்படுத்தும்...