முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

தீம்புனல் நாவல் வாசிப்பனுபவம்

எழுத்தாளர் கார்ல் மார்க்ஸின் தீம்புனல் நாவலை வாசித்து முடித்தேன். அதையொட்டி முன்னரே எழுத்தாளர் ஜெயமோகனின் உரையொன்றை யூடியுபில் கேட்டிருக்கிறேன். கார்ல் மார்க்ஸ் என்ற பெயரும் தீம்புனலும் கம்யூனிசச் சித்தாந்ததை ஒட்டிய நாவலாக இருக்கும் என்ற அனுமானத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், இந்த நாவல் நிலவுடைமை பின்புலம் கொண்ட விவசாயக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியையொட்டிச் சமகால தமிழ்வாழ்வின் போக்கைப் பற்றியதாகவே இருந்தது. முன்னமே தமிழில் விவசயக் குடும்பங்களின் வீழ்ச்சியை முன்வைத்திருக்கும் சு.வேணுகோபால், இமயம் போன்ற படைப்பாளிகளின் புனைவுகளையும் நினைவுப்படுத்துவதாக இருந்தது.


அந்தப் புனைவுகளிலிருந்து கார்ல் மார்க்ஸின் நாவல் வேறுபடும் அல்லது புதியதாகத் தொட்டுக் காட்டும் இடத்தையே இந்நாவலில் தொடக்கம் முதலே தேடினேன். அந்த விவசாய வாழ்விலும் எழுந்துவரும் சித்திரிப்புகளும் அனுபவங்களுமாகவே இருந்தன. முன்னரே, தெரிந்த வாழ்வு என்றாலும் அதனுள் அமைந்திருக்கும் மனித உறவுகளின் சிடுக்குகள், சமூகக்கட்டமைப்பின் மாற்றங்களால் துலங்கிவரும் வாழ்வின் தரிசனம் நிச்சயம் மற்ற நாவல்களிலிருந்து வேறுபட்டதாக இந்நாவலைக் காட்டியது. மேலும், இந்நாவலின் முதன்மைப் பாத்திரமாக வரும் சோமு-மூர்த்தி இருவருக்கும் இடையிலான தாத்தா-பேரன் உறவு என்பதைப் பலவகையிலும் என் வாழ்வுக்கு அணுக்கமான அனுபவத்தை அளிப்பதாக உணர்ந்தேன்.

இந்த நாவலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் இருசொற்கள் ஆகிருதி, பூஞ்சை. இந்த இரு சொற்களுக்கான உறவும் முரணாகவும் நாவலைக் கட்டமைத்திருக்கிறார். நில உடைமை விவசாயக் குடும்பங்களைப் பேணுவதற்கு இயல்பாகவே தலைமை ஒன்று உருவாகிறது. அப்படியாகக் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் விவசாயம் பார்ப்பவராகவும் குடும்பத்தின் ஆகிருதியாக சோமு மாறியிருக்கிறார். அந்த அனுபவப்பாத்தியப்பட்ட நிலத்தை உரிமையாளரான செட்டியார் எடுத்துக் கொள்ள முனைகிறார். இவ்வாறு குத்தகை நிலத்தை மீட்க எண்ணும் உரிமையாளர்களின் நிலையையும் குத்தகைக்கு எடுத்து தலைமுறைத் தலைமுறையாக ஒரே குடும்பத்தில் நிலைபெற்றிருக்கும் நிலத்தில் தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட எண்ணும் குத்தகைத்தாரர்களின் இக்கட்டான சூழலைச் செந்தில்குமாரின் அனுபவப்பாத்தியம் எனும் சிறுகதையில் வாசித்திருக்கிறேன். அதனை எதிர்கொள்வதற்கு இருபக்கமும் நீடித்த நிதானமும் ஒற்றுமையும் இன்றியமையாததாகிறது. குடியானக் குடும்பங்களுக்கே உரித்தான ஒற்றுமையின்மை சோமுவின் குடும்பத்திலும் நிகழ்கிறது. செட்டியாரும் சோமுவும் நிலத்தைச் சரிபாதியாகப் பிரித்துச் சர்ச்சையைத் தீர்த்துக் கொள்கின்றனர். சோமுவின் மூன்று மகன்களும் சிறு பாகங்களாகத் தங்களுக்குள் பிரித்துக் கொள்கின்றனர். முதல் மகன் ராஜேந்திரன் திராவிட அரசியல் கட்சியொன்றின் அபிமானியாகவும் குடும்பப்பொறுப்புகளில் பெரிதும் ஆர்வமில்லாதவனாக இருக்கிறான். அவனின் மனைவி, மாமனாரின் ஆளுமையைப் பெரிதும் ஏற்றுக் குடும்பத்தைப் பேணும் மனைவியாக இருக்கிறாள். அவர்களின் பிள்ளைகளான மூர்த்தி, ரஞ்சிதா, செல்வா, கெளரி விவசாயக் குடும்பத்தின் வீழ்ச்சிக்குப் பிந்தைய வாழ்வில் நிலத்துடனான எந்த நேரடியான பிணைப்பும் இல்லாத வாழ்வை வாழ்கின்றனர். இந்த மாதிரியான வாழ்வைத்தான் நாவலில் ஆசிரியர் பூஞ்சையான வாழ்வு என்று முன்வைக்கிறார்.



சோமுவின் இரண்டாவது மகன் ரெங்கநாதன் மனைவியின் சொல்லைக் கேட்டு வழிநடப்பவனாக இருக்கிறான். கடவுள் மறுப்புக் கொள்கை நம்பிக்கையாளனாக  மற்றொரு மகன் மகேந்திரன் இருக்கிறான். ஒருவகையில் நில உடைமை சமூகம் முன்வைக்கும் இறுக்கமான சமூகக்கட்டமைப்பு, குடும்ப அமைப்பு, ஒற்றுமை ஆகிய அனைத்தும் விலகி போகும் போது இருக்கின்ற அமைப்பே பூஞ்சையானதாகச் சோமு போன்ற நில உடைமைச் சமூகத்தின் இறுதி தலைமுறையால் கருதப்படுகிறது. இவர்களுக்குள்ளான உறவின் முரண்களையே நாவல் முன்வைக்கிறது. நிலம் துண்டாடப்பட்ட பின்னர் சாதி அடிப்படையிலான சமூக அடையாளம் சுமையாகத் தொடர்கிறது. விவசாய நிலங்களைத் துண்டு போட்டு வீட்டுமனைகளாக்கப்படுகின்றன. நிலத்துக்கான ஆற்றிலிருந்து நீர்வரத்து குறையத்தொடங்குகிறது. எஞ்சியிருக்கும் நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் மழை பெய்யும் போது தேங்கி பயிரை நாசம் செய்கிறது. ஆற்றில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. விவசாயம் மெல்ல அழிந்து கொண்டிருக்கும் சித்திரத்தை நாவலில் காண முடிகிறது. சோமுவின் பங்காளி மகனான கோபால் சாதியடையாளத்தையும் நிலவுடைமைச் செல்வாக்கையும் பயன்படுத்தி அரசியலில் உயர்கிறான்.

சோமு குடும்பத்தின் வீழ்ச்சி மகன்களின் ஒற்றுமையின்மையில் தொடங்குகிறது. இன்னொருபக்கம் கிராமத்தில் சிறுசிறு திருட்டுகளைச் செய்கிறான் பெரியசாமி. குடும்பத்துக்கான அந்தச் சிறுசிறு திருடுகளைக் கிராமத்து மனிதர்கள் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. நிலம் பாகப்பிரிவினையாகின்ற போது சோமுவில் எழுகின்ற நிதானமின்மை வெறுப்பாகத் திரண்டிருக்கிறது. தேங்காய்களைத் திருடி போகும் பெரியசாமியைக் கட்டிவைத்து அடிக்கிறார்கள். அந்தச் சம்பவம் பெரியசாமிக்கு ஊரார் முன்னிலையில் அவமானம் ஏற்படுத்தவே நடக்கிறது. அதனால் உடைந்து போகிறவன் உடலோடு தீமூட்டி தற்கொலை செய்து கொல்கிறான். அவனுடைய மனைவி சந்திரா, சோமுவின் வீட்டுக்கு முன் மண்ணை வாரி தூற்றிச் சாபமிட்டுச் செல்கிறாள். இப்படியாக, அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சிக்கான முடிச்சு நாற்புறமும் விழுந்து கொண்டே இருக்கிறது.

இந்த நாவலை அதிகாரத்தின் வீழ்ச்சியையும் அதைத் தக்கவைப்பதற்கான வேட்கையை மனிதர்கள் திரட்டிக் கொள்வதையும் காண முடிகிறது. நிலம் துண்டாடப்பட்டுக் குடும்பம் பிரிவுண்ட பிறகும் விவசாயத்தைக் கைவிடாமல் சோமு இருக்கிறார். அதிகாரம் என்னும் குருதிசுவை அறிந்து முதுவிலங்கொன்று வேட்டைக்கு இயலாமல் தன் குருதியைத் தானே உண்டு கொண்டிருப்பதைப் போல அதிகாரத்தினவு சோமுவிடம் இருக்கிறது. நிலத்தைச் சீதனமாகக் கொண்டு வரும் விசாலாட்சி நிலம் மீதான உரிமையையும் பெருமிதத்தையும் கணவனை மீதான ஆளுகையாக மாற்ற முனைகிறாள். கலியமூர்த்தி தன்னுடைய அதிகார எல்லையைக் கண்டடைய ஆன மட்டும் விசாலாட்சியிடமிருந்து பின்னகர்ந்து கோடொன்றை வரைந்து கொள்கிறார். பறைச்சேரியிலிருந்து வேறொரு பெண்ணை வைத்துக் கொள்கிறார் கலியமூர்த்தி. மற்ற பெண்கள் அதனைக் கேலி செய்கிற போது சீண்டப்பட்டுப் பின்னகர்ந்த கலியமூர்த்தியின் எல்லைக்குச் சென்று புடலங்கொடிகளை அறுத்துவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். கலியமூர்த்தியை வென்றவளாகவே விசாலாட்சி இறக்கிறாள். மனைவியின் சொத்தான குத்தகை நிலம் மட்டுமே எஞ்சுகிற போது தன் அதிகாரத்தின் மீது பதற்றம் கொள்கிறார் செட்டியார். அதனைக் குத்தகைத்தாரரிடமிருந்து பிரித்துத் தனக்கானதாக ஆக்கிக் கொள்ள ஆனமட்டும் முயல்கிறார். நிலம், சாதி, அரசியல் என அதிகாரத்தின் ஊற்றுகளை ஆழமாகத் தோண்டி கொண்டே இருக்கிறான் கோபால்.

முதல் தலைமுறை மனிதர்களான சோமுவும் கலியமூர்த்தியிடம் ஒருவகையான இறுக்கம் இருக்கிறது. தங்களுக்கான அதிகாரம் என்பது நிலத்தோடு பிணைந்தது என்பதை அறிந்தே வைத்திருக்கிறார்கள். சோமு போன்றவர்களின் அதிகாரத்தின் முன்னால் பணிந்து போகவும் தெரிந்தவர்களாகவே உள்ளுக்குள் இருக்கின்றனர். சோமு நில உரிமையாளரான செட்டியாரின் முன் தரையில் அமர்ந்து தோளில் இருக்கும் துண்டைத் தாழ்த்தி மிக இயல்பாக மொச்சைப்பயறுகளின் தோலை உரித்துத் தம் பணிவைக் காண்பிக்கிறார். அதைப் போலவே, மற்ற சாதிப்  பையனோடு ஒடி போகின்ற ரஞ்சிதாவைத் தேடும் கோபாலின் நடவடிக்கையின் தீவிரத்தைச் சகித்துக் கொள்ளவே செய்கிறார். தான் ஒரு தாழ்த்தப்பட்ட குடியைச் சேர்ந்த பெண்ணை வைத்துக் கொண்டாலும் ரஞ்சிதா வெளிப்படையாக மாற்றுச் சாதிப் பையனோடு ஓடியதைப் பொறுக்க முடியாதவராகக் கலியமூர்த்தி இருக்கிறார்.  தன்னுடைய அதிகார எல்லையைத் தக்க வைக்க, தன்னை விட பெரிதான அதிகாரத்தின் முன்னால் பணிந்து போகவும் மவுனமாகக் கடந்து போகவும் தெரிந்து வைக்கின்றனர். அடுத்தத் தலைமுறையினருக்கு, நிலத்தின் மீதான அதிகாரம், பிணைப்பு என்பது பெற்றோர்களிடமிருந்து இருக்கும் உறவைப் போன்றது. அவர்களுக்குள் அதற்கான நேரடியான தொடர்பு இல்லை. அந்தச் சமூக அதிகாரத்தின் கிரணங்கள் விலகுகின்ற போது உள்ளுக்குள் அதிர்ச்சி அடைகின்றனர். ஹார்ட்வேர் கடையில் வேலை செய்யும் ராஜேந்திரன், கூலியாக தேநீர் வாங்கவும் குவளைகளைக் கழுவவும் போதும் உள்ளுக்குள் தன் இடத்தின் மீதான குழப்பதை அடைகிறார். அந்தக் குழப்பம் விலகி மெல்ல பழகிப் போனதாக மாறுகிறது. மூன்றாம் தலைமுறையில் தங்கள் முன்னோர்களின் மீதான அடையாளமாக, பால்யத்தின் நினைவாக மட்டுமே சமூக அதிகாரம் எஞ்சுகிறது.

நாவலின் மையப்பாத்திரமான மூர்த்தியின் மனநிலையும் அனுபவங்களும் நெருக்கமானதாக உணர முடிந்தது. இளமைக்காலத்தில் எழும் பாலியல் தடுமாற்றங்களின் சித்திரம் சமகாலத் தமிழ் சமூகத்துக்கும் அணுக்கமானது. மூர்த்தி தனக்குள் ஒடுங்கி புறத்தில் காமத்தின் மீதான விலக்கம் உள்ளவனாக இருக்கிறான். அவனது முதல் கலவியனுபவம் கிருஷ்ணனின் முயற்சியால் நடக்கிறது. அது கிருஷ்ணனின் தாயாக இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. பின்னாளில், அவளுடன் இயல்பாக மூர்த்தி பழகுகிறான். இந்தத் தருணம் அதிர்ச்சி மதிப்பீடாகவே நாவலில் அமைகிறது. அதனை மேலேடுத்துச் செல்லும் வாசிப்பனுபவம் அமையவில்லை.

நிலவுடைமைச் சூழல் வீழ்ச்சியடைகிற போது சாதிய அடுக்குமுறையைத் தங்கள் அதிகாரத்தை நிலைப்படுத்தவும் மேன்மையைப் பேணுவதற்கும் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். சோமு குடும்பத்தின் வீழ்ச்சியிலே அனைத்தும் தொடங்குகின்றது. மூர்த்தியின் அக்கா ரஞ்சிதா அவ்வாறே பறைச்சேரியைச் சேர்ந்த சேகருடன் ஓடிப்போகிறாள். அவர்கள் இருவரையும் பிடித்துச் சாதிய கவுரவத்தை நிலைநாட்டும் வன்மத்தையும் ஆணவத்தையும் கோபால் கொண்டிருக்கிறான். வன்னியர் எனும் சாதியடையாளத்தைப் பேணுபவன் எனும் தனது அரசியல் பிம்பதுக்கான கருவியாகக் கொள்கிறான். கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் ரத்தினம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கிறார். கல்வித்தகுதி, வசதிகள் ஆகியவற்றின் மூலம் மேம்பட்டிருந்தாலும் சாதிய அடையாளத்தைக் கொண்டு சமூகம் அவரின் மீதான நுண்வன்முறையை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. மற்ற ஆசிரியர்கள் அதிக மரியாதை அளிப்பதன் மூலம் விலக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். சாதியின்மை அல்லது சாதி ஒழிப்பு என்பது வெளிப்படையான வசைகள், தீண்டாமை முறைகள் ஆகியவ்ற்றைக் களைவதாகவே சமூகம் புரிந்து கொள்கிறது. அதுவும் மிக வசதியாக சாதியடையாளத்தை மறைக்கவும் விலகி நின்று பார்க்கும் மேட்டிமை நோக்கையுமே சாதி வெறுப்பின் வழிகளாகச் சமூகம் புரிந்து கொள்கிறது.

தீம்புனல் நாவல் விவசாயக்குடும்பத்தின் சமகால வாழ்வை விரிவான பார்வையில் முன்வைக்கிறது. அந்த வகையில் சிறப்பான நாவல் வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. கார்ல் மார்க்ஸின் அடுத்தப் படைப்பு குறித்த கவனத்தையும் ஏற்படுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற