முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகச்சோர்வில் கரைந்த பேரோசை

 ஜகாட் திரைப்படம் குறித்து வந்த எதிர்வினைகளில் மிகமுக்கியமானதாக இயக்குநர் சஞ்ஜய் குமார் குறிப்பிடுவது, // தோட்டத் துண்டாடலின் காரணமாக இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களைப் போல பெல்டா போன்ற நிலக்குடியேற்றத்திட்டங்கள் தரப்பட்டிருக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால், அவர்கள் எவ்வித மாற்றுக் குடியிருப்புகளுக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருந்ததாக மலாய் ரசிகர் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்டதைச் சொன்னார். சுதந்திரத்துக்குப் பிந்தைய மலேசிய இந்தியர்களின் வாழ்வில் தோட்டத் துண்டாடலும் நகரத்தை நோக்கிய நகர்வும் மிகமுக்கியமான நிகழ்வுகளாகும். இந்தியர்களின் அரசியல், சமூகப்பொருளியல் சூழலை அறிந்து கொள்ள இநத இரண்டு நிகழ்வுகளுமே மிக முக்கியமானவை. அதனை விளக்குகின்ற கட்டுரைகளும் ஆய்வுகளும் செய்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ஜகாட் படம் காட்டும் வறுமையும் வன்முறையும் நிரம்பிய சூழலுக்குள் வளர்கின்ற சிறுவனுக்குள் நிகழ்கின்ற உளவியல் மாற்றத்தை உயிர்ப்பாகக் காட்டப்படும் போதே அந்தச் சமூகச்சூழலின் நியாயம் ஒரு வாசகனுக்குப் புரிபடுகிறது. ஒரு கலை இலக்கியப் பிரதியை அணுகுவதில் இருக்கும் முதன்மையான கூறாக இதனையே கருத்தில் கொள்கிறேன். அது கைகொள்ளும் வடிவத்துக்குள் வெளிப்படும் கலைத்தன்மையே அதன் சமூகச்சூழல், உளவியல், அரசியல் விமர்சனம் என்ற எல்லா பரிணாமங்களையும் காட்டி நிற்கிறது.


தோட்டத் துண்டாடல் அதன் பின்னான அரசியல் ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டே செம்மண்ணும் நீலமலர்களும் எனும் நாவலை 1969 ஆம் ஆண்டிலே எழுத்தாளர் எம்.குமரன் எழுதியிருக்கிறார். ஆனால், இந்த சமூக நெருக்கடியும் அரசியல் சூழலும் எவ்வாறு ஒரு தனிமனிதனின் அகச்சோர்வுகளை மறைக்கும் பயணத்தில் ஓரங்கமாக மாறுகின்றன என விவரிப்பதிலே இந்த நாவலின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

1960 களில் தற்காலிக ஆசிரியர் பணி நீட்டிக்கப்படாத ஆற்றாமையுடன் புக்கிட் தானா மேரா தோட்டத்திலிருக்கும் தன் வீட்டுக்கு நாவலின் முதன்மைக் கதைமாந்தரான கன்னியப்பன் திரும்புவதிலிருந்தே நாவல் தொடங்குகிறது. கீழ் நிலைத் தேர்வான எல்.சி.இ இல் தொடர் தோல்விகள் அடைந்து வருவதால் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பும் கை நழுவி போயிருக்கிறது. தோட்டத்திலிருக்கும் அவனுடைய காதலியான நீலாவுக்கும் திருமணம் ஏற்பாடாகியிருப்பது தெரிந்து மனமுடைந்து போகிறான். பெற்றோர்களிடம் சொல்லிக் கொண்டு மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்பி வேறொரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிகிறான். காரணமே சொல்லாமல் மன்னிப்பை மட்டுமே கேட்டுவிட்டு விலகிச் சென்ற நீலாவைப் பழிவாங்கும் எண்ணத்துடன் பெற்றோர்கள் வற்புறுத்தும் திருமணத்துக்கு இணங்குகிறான். மாமன் மகள் கமலாவைத் திருமணம் செய்தப்பின்னும் மனச்சோர்வு நீங்கவில்லை. கமலா இறந்தப்பின், தோட்டத் துண்டாடலைத் தடுத்து நிறுத்தும் முயற்சிக்குத் தலைமையேற்கிறான். அவனுடைய பெற்றோர்கள் வேலை செய்யும் புக்கிட் தானா மேரா தோட்டத்தின் இரண்டாம் டிவிசன் கூறு போடப்பட்டு விற்கப்படுவதால தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதனைத் தடுக்க தோட்டந்தோறும் சென்று தொழிலாளர்கள் முன்னிலையில் பரப்புரையில் ஈடுபட்டு கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகத் தோட்டத்தை வாங்க எண்ணுகிறான். அந்த முயற்சிக்கும், தோட்டத்தில் சிலர் எதிராக நிற்கின்றனர். ஒற்றுமையின்மையால் இரு குழுவாகச் செயற்படுகின்றனர். நிதி திரட்டுவதை அலட்சியமாகக் காண்கின்றனர். ஒரு லட்ச வெள்ளி இலக்கில் ஐம்பதாயிரம் சேர்ந்த பின் நிதி திரட்டும் முயற்சி கைவிடப்படுகிறது. பொது வாழ்வில் நிகழ்கின்ற தோல்விகள் கன்னியப்பனை இன்னுமே சோர்வுக்குள்ளாக்குகிறது. அவனுடைய காதலியான நீலா இறந்து போகிறாள். அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி அவளுடைய தங்கையான செல்லம்மாவையும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போகிறது. இப்படியாகத் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் நிகழும் தொடர் தோல்விகளால் சோர்வுறும் நொய்மையான உள்ளத்தைக் கொண்டவனை ஆசிரியர் தன்னுடைய நாவலின் நாயகனாகப் படைத்திருக்கிறார்.


                                                     எழுத்தாளர் எம்.குமாரன்

செம்மண்ணும் நீலமலர்களும் நாவலின் முதன்மையான பலமே அதன் நாயகன் எதிர்நோக்கும் இருத்தலியல் சிக்கல் சித்தரிப்பே. கன்னியப்பன் தன்னைப் பற்றி உருவாக்கிக் கொள்ள முனையும் பிம்பத்துக்கும் நிகர் வாழ்வின் யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளியைக் கடக்க முடியாமல் அடையும் தடுமாற்றத்தையே நாவல் மிகச்சிறப்பாக முன்வைக்கிறது.கன்னியப்பன் தான் நம்பி ஈடுபடுகின்ற உறவுகள், பணிகள் ஆகியவற்றில் நேரும் தோல்விகளால் அவற்றிலிருந்து உடனடியாகத் தன்னைத் துண்டித்துக் கொண்டு அடுத்ததை நோக்கி நகர்கின்றான். நீலாவைப் பழிவாங்கும் முயற்சியில் கமலாவைத் திருமணம் செய்து கொள்கிறான். அவள் இறந்து போனப்பின், மனச்சோர்வை மறைக்க பொதுப்பணியில் ஈடுபடுகிறான். //மனத்தில் கப்பியிருக்கும் சோக இருளிலிருந்து மீள பொதுப்பணி துணைசெய்யும். அதில் கிடைக்கும் வெற்றி தன்னுடைய தோல்விகளையெல்லாம் வென்றுவிடக்கூடும்// என எண்ணுகிறான். மனச்சலனங்களால் ஏற்படும் மெளனங்கள் தன்னைப் பலவீனப்படுத்தும் என அஞ்சி அதனைத் தவிர்த்து அடுத்தடுத்து என நகர்கின்றான். ஆனால், அவனது இருப்பைப் பொருள்படுத்தும் தன்னை மையப்படுத்திய முயற்சியில் காதல், பொதுத் தொண்டு எல்லாமே அர்த்தமற்று நழுவிப் போகின்றன. பலவீனங்களும் சோர்வுகளும் கொண்ட இளைஞனொருவனின் அகத்தை நாவலாசிரியரால் மிகச்சிறப்பாகப் படைக்க முடிந்திருக்கிறது.

செம்மண்ணும் நீலமலர்களும் நாவலின் இன்னொரு முக்கியமான பலமாக அதன் சித்திரிப்பைச் சொல்ல முடியும். நாவலின் தொடக்கத்திலே வேலை பறிபோன சோர்வுடன் பேருந்திலிருந்து இறங்கி தோட்டத்துக்குக் கன்னியப்பன் வருகிறான். அவனுடைய மனச்சோர்வின் அடையாளமாக செம்மண் புழுதியை நினைத்துக் கொள்கிறான். அதுவே, பிறந்த மண் என்ற உணர்வெழுச்சியும் பிறகு காதலியின் நினைவாக நீலமலர்களின் நினைவும் வருகிறது. இப்படி அவன் காணும் தோற்றத்திலிருந்து மனம் சோர்வும், எழுச்சியும் என உருமாறுவதன் சித்திரத்தை எழுத்தாளரால் காட்டமுடிகிறது. நாவலில் மனிதர்களின் உளவியலையும் சிறப்பாகக் காட்ட முடிந்திருக்கிறது. கன்னியப்பனின் அம்மா நீலாவின் சாதியைக் காரணம் காட்டி அவனுடைய காதலைப் புறக்கணிக்கிறாள். அதே அம்மா, அவளுடைய இறப்பின் போது அவளை சுத்தமான மனசு..நல்லவ எனச் சொல்லிப் புலம்புகிறாள். தோட்டத் தமிழர்களின் அறியாமையை எண்ணிப் புலம்பி அரசின் நிலக்குடியேற்றத் திட்டங்களுக்கு இந்தியர்களை அனுப்பும் முனைப்புடன் இருக்கும் மேத்யுஸ் என்பவரே தோட்டத்தை விற்கும் முயற்சிக்கு உதவியாக இருக்கிறார். இப்படியாக, ஒரு சார்பாக இல்லாமல் சூழல், இயல்பான பலம் பலவீனங்களால் ஆனவர்களாகவே ஆசிரியர் படைத்திருக்கிறார்.

இந்த நாவல் சமூகத்தில் நிலவும் ஒற்றுமையின்மையையும் மறைமுகமாக விமர்சிக்கவே செய்கிறது. தோட்டத் துண்டாடலினால் பாதிக்கப்படும் தோட்டங்களை வாங்கும் கூட்டுறவு முயற்சிக்கு அரசியல் வேறுபாடுகளைக் காரணம் காட்டி முட்டுக்கட்டை போடப்படுகிறது. தோட்டத் தொழிலாளர் சங்கம், தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் தோட்டத்தைக் கூட்டுறவு முறையில் கையகப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத வரலாற்று உண்மையும் நாவலில் சொல்லப்படவே செய்கிறது. பெரிய பரப்பளவு தோட்டங்களுக்கு முதலாளிகளாக இருந்த ஐரோப்பியர்களிடமிருந்து தோட்டங்களைச் சிறு அலகுகளாகப் பிரித்து உள்நாட்டுத் தோட்ட முதலாளிகளுக்குத் தோட்டங்களை விற்பதன் மூலம் உள்நாட்டினரின் சொத்துரிமையை உயர்த்துவது என அரசு தோட்டத் துண்டாடலுக்கு நியாயம் சொல்கிறது. ஆனால், அதன் பின்னணியில் சிறிய தோட்டங்களில் குறைவான தொழிலாளர்களே வேலைக்கு எடுக்கப்படுகின்றனர். அதனால், வேலையிழந்த தொழிலாளர்கள் நகரங்களில் வாழ்வாதாரம் இழந்து வீடற்று நகரங்களில் அலைவதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அதைப் போல, சிறிய தோட்டங்களில் முறையான கால்வாய் வசதியில்லாததால் வெள்ளம், பழையதாகிப் போன குடியிருப்புகளில் பூராணும் தேளும் கொட்டுகின்ற ஓட்டுக்கூரையின் கீழ் வாழ்தல் எனத் தொழிலாளர்களின் அவல வாழ்வும் பேசப்படுகிறது.

நாவலின் முதன்மையான குறையாக அதன் பெண்பாத்திர வார்ப்புகளைக் குறிப்பிட வேண்டும். ஆணாதிக்கச் சூழலில் பலவீனமானவர்களாகவே பெண்களை ஆசிரியர் சித்திரித்திருக்கிறார். தங்களுக்கு நேரும் கட்டாயத் திருமணம், இடப்பெயர்வு, மனச்சோர்வு என எல்லாவற்றிலும் எந்த எதிர்வினையும் இல்லாமல் பரிதாபத்துக்குரியவர்களாகவே பெண்களை ஆசிரியர் படைத்திருக்கிறார். புழு போன்ற பலவீனமான பிறவி, பரிதாபத்துக்குரியவள், உடற் கற்பை இழந்தவள் தன்னையே குறுக்கிக் கொள்ளுதல் எனப் பெண்களின் மீதான ஆசிரியரின் பார்வை குறுகியதாகவே தெரிகிறது. தோட்டச் சமூகம் ஆணாதிக்கச் சமூகம் எனக் காட்டுவதிலோ சமூகப்பணி, குடும்பம் போன்றவற்றில் பெண்களின் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்ததைக் காட்டுவதையோ தவறென்று சொல்ல இயலாது. ஆனால், ஒரு சூழலுக்குள் இருக்கும் அத்தனை பெண்களும் பரிதாபத்துக்கும் இரக்கத்துக்குரியவர்களாகவும் காட்டப்படும் சூழலே பலவீனமானதாக ஆக்குகிறது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடராக வந்த தோட்டத் துண்டாடலும் அதனைப்பற்றிய அரசியல் சமூக விமர்சனத்துடன் விரிவாக வந்திருக்க நாவலாகவே செம்மண்ணும் நீலமலர்களும் இருக்கின்றது. இருந்தப்போதிலும், அந்தச் சமூகச்சூழலுக்குள் இலட்சியவாதத்துடன் வண்ணக்கனவுகளையும் எளியத் தீர்வுகளையும் முன்வைக்கும் படைப்புகளிலிருந்து வேறுபட்டு தனிமனிதனின் அகச்சோர்வுடன் அவைக் கரைந்து போய்விடுவதையே நாவல் முன்வைக்கின்றது.

எம்.குமரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...

சிண்டாய் தொகுப்பு வாசிப்பனுபவம்

  அரவின் குமாரின் சிண்டாய்-   ‘பசியோடிருக்கும் மனங்கள்’ -ஒரு பார்வை  ஜி.எஸ்.தேவகுமார் அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின் போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.   நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன்.   எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்‌ஷன் படம் தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம்.   பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள் அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள   ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும்   தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது ஊர் இருக்கும் ...

வயலும் வாழ்க்கையும்

  வயலும் வாழ்க்கையும் ஷானோன் அகமாட்டின் detik detik diri di daerah daif (உட்புற மாவட்டமொன்றிலிருந்த தருணங்கள்) எனும் தன்வரலாற்று நூலைத்தான் முதலில் வாசித்தேன். செய்திகள், தேர்வு வாசிப்புக்காகவும் இல்லாமல் நான் முதன்முதலாக வாசித்த மலாய் புனைவு நூலும் அதுதான். கெடா மாநிலத்தின் உட்புறப்பகுதியான சிக் பகுதியில் கழிந்த தன் பால்யத்தையும் மேற்கல்வி வரையிலான வாழ்வைப் புனைவு கலந்து சொல்லியிருப்பார். மலாய் மக்களின் கிராமப்புற வாழ்வின் சிரமங்கள், நெல் வயல் வேலைகள் எனச் சுவாரசியமாக இருந்ததாக நினைவிருக்கிறது. அதிலும் குறிப்பாக, தன் தந்தையுடன் சேர்ந்து மணிப்புறாவைப் பிடித்து அதைத் துள்ளத்துடிக்கக் கொல்லும் சித்திரமொன்று நன்கு நினைவில் இருக்கிறது. அதற்கடுத்து tivi எனும் குறுநாவலை வாசித்தேன். நெல் விவசாயம் செய்யும் மலாய் மக்களின் வாழ்வுக்குள் நவீனத் தொழிற்நுட்பத்தின் வருகையை ஒரு விவசாயக் குடும்பத்துக்குள் தொலைக்காட்சி முதலில் அறிமுகமாகி அதன் வழியாக விவசாயப் பணிகளுக்குச் செல்லச் சோம்பல் ஏற்பட்டு மெல்லக் குடும்பம் சீரழிவதைச் சொல்லும் படைப்பு திவி. கலை என்பதை விட சமூக விமர்சனத்தை முன்னிலைப்படுத்தும்...