ஜி.எஸ்.தேவகுமார்
அரவின் குமாரும் அவரின் படைப்புலகமும் எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம். கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் பாரதியார் விழா மற்றும் யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன்.
ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றின் இடைவேளையின்
போது, உலக சினிமா குறித்து நான் எழுதியிருந்தவற்றை வாசித்து வருவதால் அண்மையில் என்ன
திரைப்படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.
நான் அண்மையில் பார்த்தத் திரைப்பட அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்தேன். எண்பதுகளில் வெளிவந்த சாதாரண அதிரடி ஆக்ஷன் படம்
தான். பைக்கர்ஸ் ரவுடி கும்பல் அட்டகாசமாக ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருப்பார்கள்.
அதன் தலைவன் வைத்ததுதான் ஊர் சட்டம். போலிஸ் சட்டம் அங்கு செல்லாத நாணயம். பாப் பாடகி ஒருத்தியைக் கடத்தி சிறைப்பிடித்திருப்பார்கள்
அந்த பைக்கர்ஸ் ரவுடி கும்பல். சீதையை இராவணன் கடத்துவது போலவே. அவ்வூரிலுள்ள ஒருத்தி இராணுவத்தில் பணிபுரியும் தன் சகோதரனுக்குக் கடிதம் எழுதி வரச் சொல்வாள். தற்போது
ஊர் இருக்கும் நிலைமையில் நீ வந்தே ஆக வேண்டும் என்பாள். நாயகனும் வந்து பைக்கர்ஸ்
ரவுடிகளை அடக்கி பாப் பாடகியை மீட்டுக் கொண்டு சென்று விடுகிறான். அதன்பின் அவன் எதிர்நோக்கும்
சண்டைக் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும். ஹோம் தியேட்டர் செட்டிங் பொருத்தி வீட்டில்
பார்க்கையில் காது கிழிந்து வீடு அதிரும். பாடகியோடு அவனும் உல்லாசமாகவும் இருக்கிறான்.
பைக்கர்ஸ் ரவுடிகளை அடக்கிய பிறகு அவள் தன்னுடனே அவனை இருந்து விடச் சொல்கிறாள்.
அதற்கு அந்த நாயகன், ‘ உன் பின்னால் கிட்டார் வாசித்து கொண்டு ஆட நான் பிறக்கவில்லை. என் இயல்பு அதுவுமில்லை. நான் மீண்டும் ராணுவத்திற்குப் திரும்புகிறேன்’ எனப் போய் விடுவான். நாயகியின் அழுகைப் பாடலில் படம் முடிவுறும். இது சாதாரணப் படம் தான். அதைக் குறித்து எழுத ஒன்றுமில்லை. இரண்டு காரணங்களுக்காக நான் இத்திரைப்படத்தை நேரம் ஒதுக்கிப் பார்த்தேன். அறுபது வயதை நெருங்கி விட்ட டையான லன் (Diana Lane) இளமைக் காலத்தில் எவ்வாறு நடித்திருப்பாள் என்பதை பார்ப்பதற்காவே Streets of Fire என்ற இத்திரைப்படத்தைப் பார்த்தேன். இரண்டாவது காரணம், நான் பிறந்த ஆண்டில் வெளியான திரைப்படம் என்பதாலும். மற்றப்படி இதைக் குறித்து எழுத ஒன்றுமில்லை என்ற எண்ணம் எனக்கிருந்தது.
இத்திரைப்படத்தின் இறுதி காட்சியில் இலக்கியக் கூறு இருப்பதாக அரவின்
குறிப்பிட்டார். நாயகனிடமிருப்பது சாகசத்துக்கான விழைவு மட்டும்தான். நாயகியை ரவுடி
கும்பலிடம் இருந்து காப்பதென்பது அந்தச் சாகசத்தின் ஒரு பகுதித்தான். அதற்குப் பிறகு,
அடுத்த சாகசத்தை நோக்கித் தன் பயணத்தை அவன் தொடரும் இறுதிப்பகுதியில் இருப்பது இலக்கியத்துக்கான
கூறு எனக் கூறினார். அவருடைய சிண்டாய் சிறுகதைத் தொகுப்பை வாசித்தப் பின்னர் இந்த நினைவே
என் மண்டையில் பொறித் தட்டி, கண்களைப் பெரிதாக்கி அவரின் படைப்புலகத்தினுள் நுழையும்
(அணுகும்) வாசலையும் திறந்து விட்டது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்தக் காலகட்டத்தில்
உருவாகும் அழுத்தத்தை வெளிபடுத்தும் படைப்பாளிகள் தோன்றுவதும் அல்லது அவர்களின் படைப்பிலிருந்து
அந்தக் காலகட்டத்தின் அகம் புறம் சார்ந்த அழுத்தத்தை, அவர்கள் படைக்கும் பாத்திரத்தின்
வழி அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் அரவின் குமாரின் சிறுகதைகள் தற்கால மனித
மனதில் புதைந்துள்ள புதிர்களைத் தூர் வாருவதாக அமைந்துள்ளன. புதிர் என்பதால் அதற்கான
விடையைத் தேடச் சொல்லி வாசகனை நகர்த்தாமல், சிண்டாய் பாடல் போல அவர் குறிப்புணர்த்தும்
புதிர்களைக் கதைகளின் நுண் தருணங்களில் ஒன்றிணைவதன் மூலமாகப் புரிந்து கொள்ள முடியும்.
கதைகளுக்கு உயிர் கொடுக்கும் கதைமாந்தர்கள் வாழ்வில்
எதையோ எங்கோ தொலைத்து, வேறெங்கோ தேடும் இயல்புடையவர்கள். ஆனால் தொலைத்தது கிடைக்காததால்
கிடைத்த ஒன்றை வைத்து போலியாக ஆறுதல் அடைகிறார்கள். விளிம்பு நிலை மனிதர்களின் நிலை
இதுதானே…?
எலி கதையின் நாயகி மற்றும் அல்ஹாம்டுலில்லா நாயகன் (கிழவர்) அத்தகையக் கதைமாந்தர்கள். அல்ஹாம்டுலில்லா கதையில் வரும் கிழவர் ஒரு வரலாற்று ஆசிரியர் அல்லாமல் வேறு ஆசிரியராக காண்பிக்கப்பட்டிருந்தால் கதையில் ஏதோ ஒன்று குறைந்திருக்கும். வரலாற்றுப் பாடம் போதித்தவர். தன் முதுமையில் தான் தொலைத்த தன் சுய வரலாற்றை (வாழ்க்கை ,தாய் மொழி எதுவாகவும் இருக்கலாம்) , இந்திய குடிமகன் பேசிய தமிழ் வார்த்தைகளின் வழி தனக்கே போதிக்க தொடங்கி விட்டார். இந்தக் கதையைப் பெற்றோர்களை, அவர்களின் மரண வாசல் நெருங்கும் காலத்தில் பேணி காப்பதாக கூறிக் காட்டும் பாசம் என்ற உணர்வைக் கொண்டு குறுக்கிப் பார்க்க இயலாது.
எலி சிறுகதை கதையே கதையை எழுதிக் கொண்ட பாணியில்
அமைந்து விட்டது. அதன் நாயகியான பெலிசியாயின்
சித்திரிப்பு கண் முன் திரையை ஓடவிட்டதைப் போன்ற உணர்வைத் தந்தது. சிண்டாய் கதையில்
ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை மிகத் துல்லியமாகவும், அதே சமயம் மறைமுகமாகவும் ஒரு சேரப்
பார்க்க முடிந்தது. அந்த கதையில் ஆசிரியர் தன்னிலையை பெண் பாத்திரத்தில் அமர்த்தி அவளின்
உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார் . ஆண், பெண் எனப் பால் வேறுபாடுகள், வயது, மொழி,
பண்பாடு என மாறுபட்ட வாழ்வுக்குள் தன்னை உருமாற்றிப் புனைவை உருவாக்கும் கற்பனையே புனைவாசிரியனின்
தனித்தத் திறன். அரவின் ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணின் அக உணர்வையும் , அது ஏற்படுத்தும்
புற மாறுதல்களையும் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளார். கோணம் கதையின் இறுதியில் நீங்கள்
வந்தால் தன் கணக்கில் எழுதச் சொல்லிக் கொள்ள சொல்லி விட்டார் என்று இவர்கள் ஏமாற்றுக்காரராக
நினைத்தவர் சொல்லிச் சென்றது தான் கதையின் உயிர்.
கதைகள் வாசித்து பழக்கமில்லாதவர்களால் அரவினின் கதைக்குள் கொஞ்சம் முக்கிக் கொண்டே செல்ல வேண்டும். அவரின் கதைச் சொல்லும் நுண் தருணங்களைப் புரிந்து கொள்ள வாசிப்பு பயிற்சி அவசியம். அரவினின் எழுத்துக்களை இணையத்திலும் இந்தக் தொகுப்பிலும் பார்க்கும் போது தோன்றுவது, இலக்கியத்தை இலக்கியம் சார்ந்தே அணுகுகிறார். எழுதினால் போதும் என்றோ, பொருளீட்டுவதற்காகவோ, அல்லது புகழ் பெறுவதற்காகவோ (திடீர் புகழுக்கு டிக் டாக் போதுமே) எழுதுவதாக தெரியவில்லை. வருங்காலத்தில் அரவின் குமார் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து எற்ற இறக்கங்களிலும் இலக்கிய குதிரையிலிருந்து கீழே குதிக்காமல், தான் எதிர்கொள்ளும் நெருக்குதலை இலக்கியத்தின் வழியாகச் சமன் செய்து விடுவார் என நம்பலாம்.
-ஜி.எஸ்.தேவகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக