வரலாற்றை என்ன செய்வது
சுனில்
கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன
செய்வது என்பதாகத்தான் இருந்தது.
தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.
குருதி வழி நாவல்குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின் கனவில் அவனுடைய தாத்தா கொலை புரிவதைப் போல புதிரான கனவுகளும் வருகின்றன. அவனுடைய இரு தம்பிகளான சோலையும் சேகரும் திருமணமாகாமல் இருக்கின்றனர். அவனுடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எனப் பலரும் கோரமாக இறந்திருக்கின்றனர். இதனைச் சாபமாக எண்ணுகிறவன் அதற்கான பின்னணியைத் தேடி சோதிடர்களை நாடிச் செல்கிறான். அவ்வாறாகத்தான் அவனுடைய தாத்தா நிகழ்த்திய கொலைக்கான பிழையீடு காண கொல்லப்பட்டவரின் குடும்பத்திடம் மன்னிப்பு கோர எண்ணுகிறான். அதற்காகக் கொலையுண்டவரின் மகனான வேலுச்சாமியைச் சந்திக்க முயன்று தோல்வியுறுகிறார்.
நாவல் அறிமுக நிகழ்ச்சிஅதே
காலக்கட்டத்தில் தன் தந்தை குழந்தை வேலை வேலுடையார் என நாட்டார் தெய்வமாக வரித்துக்
கொண்ட கோவிலுக்குப் பூசகராக, சாமிக் கொண்டாடியாக வேலுச்சாமி விளங்குகிறார். இந்திய
ராணுவத்தில் பணியாற்றி வந்த வேலுச்சாமிக்கு நாட்டார் தெய்வம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாமல்
இருக்கிறது. அவருக்கு நேர்கிற தருக்கத்துக்கு அப்பாற்பட்ட அனுபவமொன்று அவரைப் பூசகராக்குகிறது.
அவருடைய தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி சிற்றப்பாவின் குடும்பம் அரசியல் அதிகாரம்
பெறுகிறது. அதனை விரும்பாதவனாக இருந்துவந்தாலும் காலப்போக்கில் நேர்ந்துவிடுகிற தனிப்பட்ட
இழப்பொன்றின் காரணமாக அவர்களின் கருவியாக மாறிப்போகிறார். ஒவ்வொரு திருவிழாவின் போதும்
சந்ந்தம் கொண்டு வழங்கும் வெள்ளி வேலை அரசியல்வாதிகளுக்குத் தந்து கொண்டிருக்கிறார்.
அதிலிருந்து விடுபட எண்ணி எஞ்சிய ஆற்றலைத் திரட்டிக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து வெள்ளி வேலைப் பெறுவதன் வாயிலாகத்
தங்கள் குடும்பத்தின் சாப விமோசனத்தைப் பெற்றுவிட எண்ணும் பெருமாள் தோல்வியுறுகிறார்.
இப்படி இருவேறு சரடுகளாக நிகழ்கிற கதையைத் தொகுப்பது நடந்திருக்க சாத்தியமான ஒரு வரலாற்றுப் புனைவு. 1930 க்கும் 1942 க்கும் இடைப்பட்ட காலக்கட்டம். 1942 ஆம் ஆண்டு திருவாடானை, தேவகோட்டை பகுதிகளில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் உச்சக்கட்டத்தில் நிகழ்ந்தது. ஆங்கிலேய அரசால் சிறை வைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் சின்ன அண்ணாமலையை விடுவிக்க 20000 பேர் திரண்டு திருவாடானை சிறையை உடைத்தனர். தந்திக் கம்பங்கள் சரிக்கப்பட்டு தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது இந்தப் போராட்டத்தின் போது எழுபதுக்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த அறிந்த வரலாற்றில்தான் இரண்டு புனைவுபாத்திரங்களை நாவலாசிரியர் கொண்டு வருகிறார். போராட்டம் நிகழும் பகுதிகளில் ஒன்றான பரப்பு வயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தை வேலும் சுடலையும். நாவலில் சொல்லப்பட்டிருக்கும் களம், விவரிப்புகளைக் கொண்டு குழந்தை வேல் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவன் என உறுதியாகச் சொல்ல முடிகிறது. அதே ஊரில் சாதியால் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்தவன் சுடலை. 1920 களிலிருந்தே அப்பகுதியில் இருக்கும் சாதிய வெறியைக் கண்கூடாகக் கண்டு ஒருநாளும் தன்னுடையதென ஊரைச் சுடலையால் சொந்தம் கொண்டாடமுடியாமல் போகிறது. கண்முன்னாலே சட்டை அணிந்து அய்யனார் கோவில் புரவியெடுப்புக்குச் சென்ற மாமாவைக் கண்முன்னே வெட்டிக் கொன்ற சமூகத்திடமிருந்து அஞ்சி ஒளிந்து கொள்கின்றான். காலமுழுவதும் அந்த அச்சமே அவனைப் பின் தொடர்கிறது. பூ வைசிய இந்திரகுல சங்கம் வாயிலாக அரிஜன மக்களுக்குச் சேவையாற்றிய பெருமாள் பீட்டரிடம் ஆதரவு பெற்றுக் கல்வி கற்று காலனிய ராணுவ வீரனாகிறான். தன் சமூகம் சமமாக நடத்தப்பட வெள்ளையர்களுடன் இணைந்திருப்பதே சிறந்தது எனும் முடிவுக்கு வருகிறான். அவனுடைய பால்ய நண்பனான குழந்தை வேல் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்கிறான். கும்பலாக ஒன்று திரண்டு செய்யும் வெறி அவனையும் உந்தித்தள்ள சிறையை உடைக்கவும் களஞ்சியம் உடைக்கவும் எல்லா வெறிச் செயலிலும் இறங்குகிறான்.
சுனிலின் உரைபோராட்டத்தில்
பங்கேற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக ஊர் மக்களுக்குக் காலனிய அரசு கடும் தண்டனைகளை
வழங்குகிறது. ஊரார் முன்னாலே பெண்களை மானப்பங்கப்படுத்துவது தொடங்கி முறைதவறிய பல தண்டனைகளை
வெள்ளையர்கள் செய்கிறார்கள். காலனிய ஆட்சியை அகற்றும் போராட்டமென்னும் அறிந்த வரலாற்றில்
அறியப்படாத முரணாக இருக்கும் சாதிய முரண் என்பது வரலாற்றைச் சிக்கலானதாகக்குகிறது.
இந்த முரண்களின் பின்னணியில் ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றிம் சுடலை எதிரியாக மாறிப்போகிறான்.
தனக்கு அறிமுகமான சமூகத்தாருக்கு இழைக்கப்படும் கொடுந்தண்டனைகளைக் கடந்து செல்வதைத்
தாண்டி வேறெதனையும் அவனால் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயர்களின் மீதான சினத்தைத் தங்களுக்கு
முன்னால் அஞ்சி ஒளிந்து கொண்டிருந்த சமூகத்தைச் சேர்ந்த சுடலையின் மீதான வன்மமாக குழந்தைவேலால்
திரட்டிக் கொள்ள முடிகிறது. குழந்தைவேலுக்கும் சுடலைக்கும் ஏற்படுகிற மோதலால் குழந்தைவேலின்
உயிர் பறிபோகிறது. அதற்கு சுடலை காரணமாகிறான்.
இந்த
வரலாற்றுச் சித்திரம் என்பது நடந்திருக்கச் சாத்தியமான புனைவும் வரலாறும் கலந்த ஒன்றாக
பெருமாளின் தம்பி சோலையால் அவனுடைய தாத்தா சுடலையின் தன்னிலையில் வைத்துப் புனையப்படுகிறது
இவ்வாறாக வரலாறு ஏன் மறுபடியும் புனையப்படவேண்டும். தங்களைப் பின் தொடரும் முன்னோரின்
பழியிலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே பெருமாளின் குடும்பத்தார் முயல்கின்றனர்.
அதற்காகவே, வேலுடையார் திருவிழாவில் வழங்கப்படும் வேலைப் பெற பெருமாள் முயல்கிறார்.
இவ்வாறாக, வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட முடிச்சொன்றை அவிழ்க்க போராடுகின்றனர். சமூகம்
வரலாற்றை எப்படி கட்டமைத்து எதிர்கொள்கிறதென்பதும் நாவலில் சொல்லப்படுகிறது.
குழந்தை
வேலைக் கொல்ல பயன்பட்ட வேல் கண்டறியப்படும் போது அடுத்தடுத்து சில மர்ம மரணங்கள் நேர்கின்றன.
அதனைக் கண்டு அஞ்சுகிற சமூகம் உடனுக்குடன் அதற்கும் ஒரு மர்மத்தன்மையை ஏற்றுகிறது.
இதற்கு முன்னர் நேர்ந்த மரணங்களுடன் பத்தொடு பதினொன்றாக அந்த மரணங்களைச் சேர்த்துக்
கடந்து போக எண்ணுகிறது. அதற்கடுத்ததாக, சாமி கொண்டாடியின் சந்நதத்தில் தெரியவரும் குழந்தைவேலுவின்
மரணத்துக்குப் பிழையீடாகக் கோவில் வைத்து ஒரே சமயம் வரலாற்றை நினைவு வைத்துக் கொள்ளவும்
மறந்துவிடவும் செய்கிறது. அதனை அதிகாரத்துக்கான கருவியாக குழந்தை வேலின் தம்பி குடும்பம்
மாற்றுகிறது. நிகழ்காலத்தில் வரலாற்றுப் பழியெனப் பின் தொடரும் சாபத்திலிருந்து விடுபட
பிழையீட்டைப் பெற பெருமாள் அலைகிறார். வேலுச்சாமியைச் சந்தித்து மன்னிப்பு கோரும் முயற்சி
தோல்வியுறுகிறது. அவர் சந்நதம் கொண்டு கொடுக்கும் வேலையும் பெற இயலாமல் போகிறது.
நடப்பவற்றுக்குத்
தருக்க ஒழுங்கைக் கண்டு அதற்கான அறுதியான விடுபடலையே எல்லாரும் ஏங்கி தவிக்கின்றனர்.
ஆனால், நிழல் தடம் தேடி ஆசுவாசம் கொள்வதைப் போல அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றுக்கு
ஒரு தொடர்ச்சியை உருவாக்கித் தனக்குள்ளே கதைகளின் வாயிலாக சோலை ஒரு விடுபடலை உணர்கிறான்.
. புனைவில் வருவதைப் போல முற்றிலும் தற்செயலானதாக மட்டுமே கொலையை அவர் நிகழ்த்தினாரா.
வேட்டை விலங்குக்கு அஞ்சி ஓடும் இரையென காலம் முழுவதும் குறிவைக்கப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்தவரின் மனத்தில் திரண்டிருக்கும் வன்மமும் கோபமும் முற்றாக ஒடுங்கியிருக்குமா
என எல்லா கரைகளையும் தொட்டுப் பயணிக்கும் ஆறாக அவனுடைய புனைவில் வரலாறு கட்டற்றுப்
பயணிக்கிறது. இப்படியாக வரலாறு குறித்த எண்ணங்களை நாவலில் கலைத்துப் போட்டுக் கொண்டே
சுனில் செல்கிறார்.
இந்த
இரண்டு கால அடுக்குக்கு மேலாக அறிபுனையாக வரும் எதிர்காலக் கதையிலும் வரலாறு குறித்து
கேள்வி நேரடியாக எழுப்பப்படுகிறது. 250 ஆண்டுகள் கழிந்து நடப்பதாக வரும் கதையில் வரலாற்றை
மாற்றிவிட முயலும் சுடலை எனும் பாத்திரம் வருகிறது. காலப்பயணம் செய்து வரலாற்றை மாற்றிவிடமுயல்பவனின்
முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியடைகின்றன. அவனை எதிர்கொள்கின்ற ஹவாஸ்கா எனும் பாத்திரம்
//வாலாற்றைக் கதைகளாக ஈரக் களி மண் மூட்டையாகப்// பார்க்கக் கற்று தருகிறது. இவ்வாறாக
வரலாற்றை விரித்தும் நெகிழ்த்தியும் பார்க்கும் பார்வை நாவலில் வருகிறது. அதன்வழி வரலாறென
நாம் புரிந்து வைத்திருக்கும் வாழ்க்கையையும் கேள்விக்குட்படுத்துகிறது.
ஒரு
நிகர் வாழ்வனுபவத்தைத்தான் சிறந்த நாவல் வாசிப்பனுபவம் கடத்துகிறது. குருதிவழி நாவலின் வாசிப்பனுபவத்தில் உணர்வுகளை
நுட்பமாக விளக்கக்கூடிய நிறைய இடங்கள் இருந்தன. நாவலின் தொடக்கத்தில், வேல் கண்டடையப்படும்
போது அடுத்தடுத்துச் சில மரணங்கள் நிகழ்ந்துவிடும். அப்படியாக நிறைமாதக் கர்ப்பிணி
மனைவியான பொன்னழகியைக் கண்டு செல்ல வந்த கணவன் சுப்பையனும் இறந்துவிடுகிறான். கணவனின்
மரணத்தினால் மனத்தில் அடக்கமுடியாத அழுத்தத்துடன் அழுது அரற்றி ஓய்ந்திருக்கும் பொன்னழகி சுவரில் உடலில் திட்டுகள் கொண்ட மரப்பல்லியைக் காண்கிறாள். அதனருகிலே சிலந்தி வலை பின்னுகிறது.
சூழ்கிற அசம்பாவிதத்தைக் கலைக்க பல்லியை விரட்ட எண்ணிச் சோர்ந்து அமர்ந்திருக்கிறாள்.
வலையில் மறைந்திருக்கும் சிலந்தியை நாநீட்டி பல்லி கவ்வுகிறது. அதனைக் கண்டு மொத்தமாக
உடைந்து அழுகிறாள். அடுத்த கணமே கைகளை வயிற்றில் தடவி குழந்தையின் இருப்பை உணர்ந்து
ஆசுவாசமடைகிறாள். ஒரு கையறு நிலை துயரம் கொண்டு வரும் மனநிலையை மிகச் சிறப்பாக இதில்
கொண்டுவந்திருக்கிறார்.
ஏதோ
ஒருவகையில் நாவலில் காந்தியின் இருப்பை உணர முடிந்தது. காந்தியின் காரைக்குடி வருகையே
ஒருபகுதியில் சித்திரமாக வருகிறது. அதைத் தாண்டி, இன்னும் சில மனிதர்களும் கணங்களும்
காந்தியத்தின் தாக்கத்துடன் அமைந்திருப்பதை வாசிப்பில் அறியமுடிந்தது. உதாரணத்துக்கு,
இந்திய – பாகிஸ்த்தான் பிரிவினையின் போது எல்லை கடந்து வரும் பார்ஸியான தரஸ்தாத்ஜி
பிரிவினைக் கொடுமைகளைக் கண்டவன். அதன் கோரத்தாண்டவக் காட்சிகளான கொலை, கொள்ளை எல்லாவற்றையும்
தன் மனத்தில் தேக்கியிருப்பவன். பின்னாளில், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் போது எதிரே
வரும் பாகிஸ்த்தானிய ராணுவ வண்டிக்கு முன்னால் பாய்ந்து குண்டுகளை வாங்கி கொள்கிறான்.
அவனுடைய உருவெளித்தோற்றத்தில் நடக்கச் சாத்தியமாக இருந்த பேரழிவினைத் தடுத்து நிறுத்த
தன்னை ஈகம் செய்ய துணிகிறான். அவனே வேடிக்கையாகச் சொல்வதைப் போல மானைச் சுடுவதற்குப்
பதில் மடுவுக்கு குறி வைத்து பேரழிவினைத் தடுத்து நிறுத்துகிறான். பூ வைசிய இந்திரக்
குல சங்கம் மூலமாக அரிஜன மக்களுக்குத் தொண்டாற்றிய பெருமாள் பீட்டரையும் நாவலில் சுனில்
ஒரு பாத்திரமாக்குகிறார். காந்தியத்தின் அடிப்படை விழுமியமான அகிம்சையும் தொடர் செயலின்
வாயிலாக செய்யப்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கங்கள் கொண்டவர்களாகவே இவ்விரு பாத்திரத்தையும்
காண முடிந்தது.
குருதி
வழி நாவல் பாத்திரங்கள் வழியே அவரவர் சுமந்தலையும் வரலாறு குறித்தே சுனில் விவாதம்
உருவாக்குகிறார். எல்லா கரைகளையும் தழுவி ஓடும் ஆறாக வரலாற்றைக் கற்பனை செய்வதன் வழி வரலாறு நெகிழ்வடைவதையே குருதி வழி நாவல் சித்திரிக்கிறது.



கருத்துகள்
கருத்துரையிடுக