முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

 

இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது.



லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்தது என்பது பைபிளின் தொன்மம். அதனாலே, மனிதன் வழிவழியாக உலகில் பிறந்து இறந்து இச்சையுடன் போராடுகிறான் என்கிறது பைபிள் தொன்மம்.

 அப்படியாக சியாமும் இச்சை தூண்டப்பட்டு தன் இறுக்கத்தை இழக்கின்ற தருணமொன்றில் அவன் வினியோகிக்க வைத்திருந்த போதைப்பொருள் காணாமற் போகிறது. காணாமற் போன போதைப்பொருளின் மதிப்பான 30000 வெள்ளியை மூன்றே நாட்களில் தந்துவிட ஈபு கெடு விதிக்கிறாள். அந்தப் பணத்தைத் திரட்டுவதற்காக சியாமின் நண்பனான ஊசியும் அவன் வழியே அறிமுகமாகின்ற ஜேக்கும் இணைந்து செய்யும் முயற்சிகளே படமாக விரிகின்றது. மூன்று நாட்களில் பணத்தைத் திரட்டாவிட்டால் தான் கொல்லப்படுவோம் என்ற இக்கட்டு சூழ்கிறப்போது இன்னும் சியாமின் இறுக்கங்கள் தளரத்தொடங்குகின்றன. பணத்தைத் திரட்ட கொள்ளையடிக்கத் தூண்டுகிறான் ஜேக். மூவரும் சேர்ந்து பணத்தைத் திரட்ட மேற்கொள்ளும் பயணம் முழுவதுமே சியாம் பார்வையில் அந்த இறுக்கத்துக்கும் இச்சைக்குமிடையிலான போராட்டமாகவே காண முடிகிறது. அந்தப் பகுதி முழுவதுமே வெடிச்சிரிப்புகளால் நிறைந்த பகுதிகளால் ஆனதாகவே இருக்கிறது. பணத்தைக் கொள்ளையடிக்கும் ஆசையை ஒருபக்கம் ஜேக் தூண்டி கொண்டிருக்க இன்னுருப்பக்கம் ஊசி அபத்தமான வசனங்களால் சூழலின் தீவிரத்தைச் சிதறடிக்கும் நகைச்சுவை செய்து கொண்டிருக்கின்றான். கொள்ளை, கடத்தல், கொலை என ஒவ்வொன்றையும் எந்தப் பதற்றமும் கொள்ளாத தன்மையால் மிகச் சாமர்த்தியமாக ஜேக் கடந்து செல்கிறான். அதைப் போல எல்லா சூழலிலும் நேரப்போகும் குற்றங்களையும் பிசகுகளையும் உணர்ந்து உள்ளூர பதற்றமடைந்தாலும் அதனைத் தன் துணிச்சலால் சியாம் கடந்து செல்கிறான்.

அந்த முழுப்பகுதியிலும் மறைமுகமாக பகடியும் பின்னிழையாக இருந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது. அதிகாரத் தரப்பு எப்படி ஊழலும் மந்தத்தன்மையும் நிரம்பியிருக்கிறது என்பதற்குப் பல உதாரணங்கள் இருந்தன. ஊழலாகப் பெறப்படும் சோறு ஹலால் தானா என உறுதிப்படுத்தும் காவல் அதிகாரி முதலாக வாகனத்தின் வானொலியில் ஒளிபரப்பாகும் அதிபரின் பொங்கல் வாழ்த்தில் சிறுபான்மை என்பது நினைவில் இருக்கட்டும் என முடிவது தொடங்கி எல்லாமே அதிகாரத் தரப்பின் மீதான மெல்லிய சீண்டல்களால் ஆனதாக இருந்தது.

படத்தின் முதலிரு பகுதியில் தொடரும் பைபிளின் தொன்மச்சரடைப் போலவே இன்னொரு இந்து தொன்மமும் தொடர்கிறது. தாந்தீரிக மரபில் ஆற்றல் வடிவாகப் பார்க்கப்படும் வராகி அம்மனும் படத்தின் மையப்பாத்திரங்களுடன் பயணிக்கிறாள். வாகனத்தில் படுத்து ஊசி காண்கிற கனவில் ரத்தம் குடிப்பவளாக வராகி அம்மன் வருகிறாள். பன்றி முகத்தைக் கொண்ட வராகி அம்மனை நினைவுறுத்துவதாகவே அவர்களின் கடத்தல் முயற்சியின் போது பன்றி உட்பட காட்டு விலங்குகளை வேட்டையாடும் வியாபாரியின் மகனைக் கடத்தும் காட்சியும் அமைந்திருந்தது. ஒரு வகையில் சியாம், ஜேக், ஊசி மற்றும் படத்தில் இடம்பெறும் சீன வியாபாரி எல்லாருமே வேட்டை விலங்குகளைப் போலத்தான் பணம், அதிகாரம் என வேட்டையாடியும் வேட்டையாடப்படும் உலகிலும் இருக்கின்றனர். இந்த உலகில் நீதியை நாட்டுபவளாக வராகி அம்மனை சஞ்சய் காட்ட முயல்கிறார். அவளின் இருப்பைக் காட்ட பல இடங்களில் வராகி அம்மன் குறித்த காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால், அவை அரூபமாக சியாமின் இறுக்கத்தைத் தூண்டுவதாகக் காட்சி அமைகிறது. அவனளித்த போதைப்பொருள் இன்னொருவனின் மரணத்துக்குக் காரணமாகின்றது என்பதைத் தெரிந்தவுடன் அவனுடைய இறுக்கம் முற்றிலுமாக தளர்கிறது. ஒரு விபச்சார விடுதியில் அன்னையென இறுக்கம் முற்றிலும் நீங்கியச் சூழலில் அவனை விபச்சாரி அணைத்துக் கொள்ளும் நுட்பமான காட்சியொன்றின் மூலமாக சஞ்சய் அதை வெளிப்படுத்துகிறார். அங்கிருந்தது அவனாகவே மன்னிப்பு நோக்கி நகர்வதாகக் கதை முடிகிறது.


சஞ்சயின் பலம் அவரின் காட்சியின் அடர்த்தியின் வழி கதை சொல்லும் நுட்பம். அதனைப் படத்தின் பல இடங்களில் உணர முடிந்தது. இக்கட்டின் முன் குழம்பித் திரியும் சியாம் அரையாடை மட்டும் அணிந்த மனநலம் பிறழ்ந்தவனைக் காண்கின்றான். கையெல்லாம் கயிறுகளை முறுக்கிக் கொண்டு வானொலிப் பெட்டியின் முன்னும் பின்னுமாக குமிழ்களைத் திருகிக் கொண்டு எதையோ தேடிச் சலிக்கிறான். இறுக்கமே ஆக இருக்கின்ற சியாமின் கனவுக்குள் ஊடுருவும் கடல் அலை காட்சி. அதைவிட இருள் உலகமொன்றுத்தான் படத்தின் முக்கியமான கருப்பொருளாக இருக்கிறது. ஆனால், அந்த வன்முறையும் அதன் குற்றங்களையும் சஞ்சய் காண்கின்ற விதம் அவருக்குள் செயற்படும் படைப்பாளரின் அகத்தைத்தான் காட்டுகிறது. போதை, மது, காமம் என அத்தனை திளைப்புக்கு மத்தியில் ஒளியை நோக்கிய ஒரு அகக்குரல் அந்தப் பாத்திரங்களுடன் இருக்கவே செய்கிறது. அதனைக் கனவுக்காட்சிகளாக, உடன் வரும் காட்சியாகச் சித்திரிக்கிறார். ஒரு சாதாரண ஹேய்ஸ்ட் வகை குற்றப்படம் என்ற இடத்திலிருந்து இந்தப் படத்தை மேலே கொண்டு செல்வது அதிலிருக்கும் இந்தப்பார்வையே என நினைக்கிறேன்.

சியாமாக நடித்திருக்கும் கர்ணன் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். இறுக்கம் குறையாத பதற்றமும் இச்சையுமென ஒன்றிலிருந்து பலவற்றை வெளிக்காட்டும் மிகச்சிறந்த நடிப்பு. இர்பானும் அலட்டிக்கொள்ளாதத் தன்மையுடனான பாத்திரமாக நடித்திருந்தார். எல்லா வகையிலும் செய்து காட்டுதல் இல்லாத இயல்பான நகைச்சுவை குபேனிடம் படம் முழுவதுமே இருந்தது.


                                                                  கர்ணனுடன்

மாச்சாய் நிச்சயமாக மிகச்சிறந்த திரையனுபவத்தைத் தந்தது. எல்லா உலகமொழிப்படங்களிலும் பேசப்பட்ட குற்றவுலகக் கதைத்தான். ஆனால், அதில் ஒரு படைப்பாளர் தன் திரைமொழியால் எவ்வளவு நுட்பம் சேர்த்திருக்கிறார் என்பதைத்தான் மாச்சாய் படம் காட்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...