கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன. மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.
யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். ஒரு நட்பார்ந்த
ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட
வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரிதலே
அவரை அத்தகையவராக முன்வைக்கிறது. அதே சமயத்தில் அவருடைய உறுதியான மொழியில் வெளிப்படும்
மென்மையான கண்டிப்புகள் அவரில் இருக்கும் ஆசிரியரையும் காட்டவே செய்கிறது. முதல் சந்திப்பின்
போதே ஆரத்தழுவிக் கொண்டு நலம் விசாரித்தார். முதல் அமர்வு யோகப் பயிற்சியின் போதே உடலில்
ஏற்படும் மாற்றங்களை உணரத் தொடங்கிவிட்டேன்.
யோக
முகாமின் இரண்டாவது நாள் ஓய்வின் போது உணவு மண்டபத்திலிருந்து திரும்பி மண்டபத்துக்குள்
நுழையும் போது எதிர்ப்பட்ட செளந்தர் உடனே ஆரத்தழுவிக் கொண்டு தோள்பட்டையில் கைகளைப்
போட்டுக் கொண்டு சிநேகப் பாவத்துடன் யோகப் பயிற்சியின் அனுபவங்களைக் கேட்டார். முன்னர்
அவர் கற்றுக்கொடுத்த யோகப் பயிற்சிகளைச் செய்யத் தொடங்கி இரண்டாண்டுகளாகப் போகின்றன.
இந்த இரண்டாண்டுகளில் ஏறக்குறைய அறுபது நாட்கள் தவிர மற்ற நாட்களில் எல்லாம் பயிற்சிகளைச்
செய்து வந்திருக்கிறேன். சொல்லப் போனால் கழுத்து நரம்புகளில் இருந்த இறுக்கம், கெண்டைக்காலில்
இருந்த இறுக்கமும் கூட சற்றே நெகிழ்ந்திருப்பதை உணர முடிகிறது. ஆனாலும், முகாமில் பயிற்சி
செய்யத் தொடங்கிய இரண்டாவது அமர்விலே புதியதாகப் பயிற்சியைச் செய்யத் தொடங்கியதைப்
போல உடலில் மாற்றங்கள் எழுந்தன. இடுப்பின் இருபக்கங்களிலும் கிள்ளியதைப் போன்ற வலி
எழுந்தது. வயிறு வரை மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளியேற்றும் போதும் உடலில் நிரம்பிய காற்றைப்
பார்க்க எனக்கே வியப்பாக இருந்தது. ஒவ்வொரு பயிற்சி நிறைவின் போதும் உடலில் எழுந்த
பசியும் புத்துணர்ச்சியும் பயிற்சி செய்த மற்ற நாட்களில் அரிதாகவே எனக்கு அமைந்திருந்தது.
செளந்தரிடமே அதனைச் சொன்னேன். அவருக்கே உரிய சிரிப்புடன் ‘’ வேகமாகச் செய்து முடிக்கணும்ன்னு
அவசரத்துல சில விஷயங்கள கவனிக்காம விட்டுருப்பீங்க… இங்க எல்லார் உடன் அமர்ந்து செய்யும்
போது இயல்பாகவே அது மேல் கவனம் வந்து விடுகிறது… அதுதான் அப்படி தெரியுது…அது ஒண்ணும்
சிக்கல் இல்ல… ஆனா நல்ல அவதானிச்சுருக்கிங்க’’ எனச் சொல்லி விட்டு மண்டபத்துக்குள்
நுழைந்தார். அன்றாடத்தின் ஓரங்கமாகப் பயிற்சியை மாற்றும் போது இயல்பாகவே அதனுள் கொஞ்சம்
கொஞ்சமாக குறுக்கு வழிகளும் அவசரமும் நுழைந்துவிட்டிருந்தது. அதனை வெறும் உடற்பயிற்சியாக
மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
நான்
பின்னாலே சென்று மறுபடியும் அவரிடம் ‘’ அது எப்படி அவசரமா செய்யுறத நிறுத்துறது’’ என்பது
மாதிரியாகக் கேள்வியொன்றைக் கேட்டேன். லேசான புன்னகையுடன் ‘’ மூச்சைக் கவனிங்க’’ என்று
சொன்னார். யோக முகாமிலிருந்து கற்றுக்கொள்வதற்காக ஒன்றை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டுமென்றால்
கவனத்தையே சொல்வேன். இந்த மூன்று நாள் யோக முகாமின் பயிற்சிகளை நினைவு வைத்துச் செய்வதன்
பலனைக் கவனத்தின் மூலம் மட்டுமே அடையமுடியும் என்பதைத்தான் செளந்தர் நினைவுபடுத்துகிறார்.
கவனத்துக்கான பயிற்சியையும் யோகாவே அளிக்கிறது. யோகப்பயிற்சிகளை ஒரு வாழ்க்கை முறையாக
மாற்றிக் கொண்டு யோக சாதகனாகுவதையே பயிற்சியின் அவசியமென்பதாக செளந்தர் ஒவ்வொரு முறையும்
நினைவுபடுத்தி வந்தார். மூன்றாவது யோக முகாமிலிருந்துதான் அதனைக் கவனத்துடன் செய்ய
வேண்டியதன் அவசியத்தைக் கற்றிருக்கிறேன்.
இம்முறை
யோகத்துடன் நடந்த ஆயுர்வேத வகுப்புகளும் நன்றாக இருந்தன. இந்திய மரபு மருத்துவங்களில்
செவ்வியலாகக் கருதபப்டும் ஆயுர்வேதத்தின் பெயரை குறித்து விளம்பரங்களில்தான் அடிக்கடி
கேட்டிருக்கிறேன். சவர்க்காரம், பற்பசை எல்லாவற்றின் முன்னொட்டாக ஆயுர்வேதம் சேர்க்கப்பட்டுச்
சொல்லப்படும் விளம்பரங்கள் வழித்தான் பலருக்கும் ஆயுர்வேதம் அறிமுகமாகியிருக்கும்.
ஆனால், தொகை நூல்கள், வழி நூல்கள் என முறையான அறிவுத்துறையாக ஆயுர்வேதம் பல நூற்றாண்டுகளாகத்
திரண்டிருக்கிறது. அதன் பின்புலம், வரலாறு, நோய், நோய்க்காரணி, உடல் கூறுகள், மருந்து
என அது முன்வைக்கும் விரிவான விளக்கத்தை சுனில் கிருஷ்ணன் எளிமையாக விளக்கி வந்தார்.
பட்டியலொன்றின் வாயிலாக உடலின் மூன்று கூறுகளான (முக்குற்றங்கள்) வாத, பித்த, கபத்தை
விளக்கி உடல்,மன இயல்புகளுடன் தொடர்புபடுத்தி விளக்கினார். ஒரு கணிதச் சூத்திரத்தைப்
போல மாறாத விதியாக இல்லாமல் அவரவர் உடலின் இயல்புக்கேற்ப எப்படி நோய், மருந்து ஆகியவை
உருவாக்கியளிக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுனில் விளக்கிச் சொன்னார்.
அந்த விளக்கமளிப்புக்குப் பின் கொஞ்ச நேரத்தில் அரங்கிலிருந்தவர்கள் அத்தனைப் பேரையும் ஆயுர்வேத மருத்துவர்களாகிவிட்ட மயக்கத்தையே கொடுத்துவிட்டார். அந்தளவுக்கு உடல் மன இயல்புகள், மாற்றங்கள் பிடிபட்டிருந்தன. அடிப்படையில் உடல் மன இயல்புகளைப் பற்றிய கவனத்தையே ஆயுர்வேத மருத்துவ விளக்கத்தில் சுனில் ஏற்படுத்த முயன்றார். யோக முகாமின் இரண்டாவது நாள் இரவு அமர்வில் செளந்தரின் ஙப் போல வளை நூலும் சுனிலின் இரண்டாவது நாவலான குருதிவழி நாவலும் வெளியீடு கண்டன. குருதி வழி நாவல் குறித்து நானும் எழுத்தாளர் நவீனும் அறிமுக உரையை ஆற்றினோம். 2019 ஆம் ஆண்டில் வல்லினம் நடத்திய ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டியில் என்னுடைய சிறுகதை தேர்வு பெற்றிருந்த சூழலில் தான் சுனிலை முதன் முறையாகச் சந்தித்தேன். ஒரே சிறுகதை மட்டுமே எழுதியிருந்த எனக்கு என்னுடைய அனுபவங்கள் வழி சிறுகதை எழுதுவதைப் பற்றிய முதல் பொன்மொழி சுனிலிடமே கிடைத்தது. அனுபவங்களை ஊறவச்சு எழுதுங்க…அது வேறொன்னா மாறும்… அது உங்களுக்கே தெரிய வரும் போது கதைகளை பிரசுரிக்கலாம் என்பதைப் போல சொன்னார். அவருடைய இரண்டாவது நாவலை வாசித்து அறிமுக உரையை ஆற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.
சுவாமி பிரம்மானந்தா
அதோடு
முகாமிலே, மனதுக்கினிய சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியுடனும் உரையாட முடிந்தது மகிழ்ச்சியாக
இருந்தது. இரண்டாவது நாள் நிறைவில் சுவாமி ஆற்றிய நிறைவுரை வாழ்வின் அர்த்தமின்மையிலிருந்து
எதன் வழியே அதனைச் சாரமாக்கிக் கொள்வதென்பதாக இருந்தது. மரண விளிம்பில் அடியெடுத்து
வைத்து முன்னிருக்கும் சூனியத்தைக் கண்டு திகைத்தவரின் தருணத்தைச் சுவாமி குறிப்பிட்டார்.
திகைக்கச் செய்யும் உவமையுடன் வாழ்வின் சாரத்தைப் பற்றிச் சொன்னது புனைவைப் போன்றதாகவே
மனதில் பதிந்திருந்தது. என்னுடைய ஆசிரியர் திரு தமிழ்மாறன் அவர்களையும் சந்தித்து உரையாட
முடிந்தது நிறைவாக இருந்தது. இலக்கிய நண்பர்கள் பரிமித்தா, விஜயலட்சுமி, தேவகுமார்
எனப் பலருடனும் இலக்கியம், கனவுகள் பற்றி உரையாட முடிந்தது. பரபரப்பு ஓய்ந்து ஆசுவாசம்
கொள்ளச் செய்த நிறைவான நாட்கள்.




கருத்துகள்
கருத்துரையிடுக