முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போயாக் சிறுகதைத் தொகுப்பு கதைகளின் வாசிப்பனுபவங்கள்

 போயாக் சிறுகதைத் தொகுப்பு கதைகளின் வாசிப்பனுபவங்கள்

பழங்குடிச் சமூகத்தின் ஒழுங்குகளைப் பேணும் ஈபான் சமூகத்தில் நாகரீக அடையாளத்துடன் வரும் ஆசிரியரின் பாலியல் தடுமாற்றத்தையும் பழங்குடி அறத்தையுமே போயாக் சிறுகதையில் காண முடிகிறது. விநோதமான மாந்தீரிகச் சடங்குகள், தாய்வழிச் சமூகம் என்பதால் பெண்களைப் பிற இனத்தவர்களுக்குத் திருமணம் புரிந்து வைப்பதைத் தடுக்கின்றனர். இதைப் போன்ற தகவல்களைத் தாண்டி சிறுகதையில் மிகவும் கவர்ந்தவை முதலைக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒப்பந்தம். ஒருவகையில் மனிதன் முதலையைத் தின்றும் மீண்டும் முதலை மனிதனையும் தின்றும் இயற்கையான அறமொன்றை நிலைநாட்டிக் கொள்கின்றனர். ஒருவேளை இவற்றை மதம் தீண்டுகிற போது அவை சடங்குகளாக, புனிதமாகக் கட்டமைக்கப்படும். புனிதமாகக் கட்டமைக்கப்படுபவற்றை மீறும் சுதந்திரத்தைக் குற்றவுணர்ச்சி மூலம் மனிதன் பெற்றுக் கொள்ளலாம். கதைசொல்லியும் பாலியல் மீறல் செய்து வெளியேற பார்க்கிறான். அவனே முதலையாக மாறி ஒப்பந்தத்தை மீறுகிறான். படகில் செல்லும் போது பிரதி மாற்றம் செய்யப்பட்டவனாய், அறமொன்றின் முன்னாலான தவிப்புடன் நிற்கிறான்.




மூன்று தலைமுறை ஆண்களின் மனத்தில் பலநிலைகளில் வளர்கிற பெண்ணின் ஆற்றல் பேச்சி சிறுகதையில் காண முடிகிறது. மகனின் பார்வையில் அப்பா எதிர்நிலையிலும் தாய் தெய்வத்தன்மை பொருந்தியவளாக இருக்கிறாள். அதைத்தான் அவனது மனம் உண்மை என ஏற்றுக்கொள்ளத் தயாராகிறது. தருக்கத்துடன் அணுகினாலும் தந்தையை எதிர்நிலையில் வைத்துத் தாய்மையைத் தருக்கத்தை மிஞ்சிய ஆற்றலாகவே மனம் உருவகிக்கிறது. கணவனின் பார்வையில், மூர்க்கமும் வெறியும் அடக்கும் காதல் பொருந்தியத் தெய்வமொன்று பொன்னியில் இருந்தது. அது தாய்மையுடன் அள்ளி அணைக்கவும் செய்கிறது. அந்தத் தாயை மறந்த சிறுவனாகவே கதைசொல்லியின் தாத்தா இருக்கிறார். இந்த மூவரிலும் இருக்கும் குழந்தைமையைத் தொட்டெடுத்து அணைத்துக்கொள்பவளாக அன்னை மாறுகிறாள்.

யாக்கை கதையில் மனத்தில் தோன்றுகின்ற பொருந்தாக் காமத்துக்காகக் கடலில் குதித்து உடலை மீன்களுக்கு உணவாக்கிக் கொள்ளும் தந்தையும் வாழ்வுக்காக உடலின் வாயிலாகக் காமத்தை கொஞ்சகொஞ்சமாக உணவாக்கிக் கொண்டிருக்கும் மகளும் வருகின்றனர். விடுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளியின் கதைகளின் வாயிலாகக் கதை நகர்கிறது. தான் உடலைப் பிறருக்கு அனுபவிக்கக் கொடுக்கும் விடுதியறையிலிருந்து அப்பா குதித்து இறந்த கடற்பகுதியும், படகையும் மகள் பார்ப்பது அற்புதமான குறியீடாக விரிகிறது. இருவரும் காமத்தின் வெவ்வேறு முனைகளின் தங்களை இழந்தவர்களாக இருக்கிறார்கள். அவளின் உடலைக் கொஞ்ச கொஞ்சமாகத் தின்னும் பல நூறு மீன்களில் தானும் ஒருவன் எனும் குற்றவுணர்வைக் கதைசொல்லி அடைகிறான்.

வெள்ளைப் பாப்பாத்தி கதை குழந்தைக் கனவுகளின் வழியே விடுதலையைப் பேசும் கதை. கணவன் இறந்தபின் வறுமையில் ருக்கு தன் மகள் கொடிமலரை வளர்க்கிறாள். மர ஆலையில் நிகழும் பாலியல் மீறலைச் சகிப்பதும் ( எதை மீறல் என எடுத்துக்கொள்வது எனக் குழப்பம்) மற்றவர்களின் உதவிகளின் மூலமும் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். கொடிமலருக்கு மனமெல்லாம் வெண்ணிறப் பாப்பாத்தியாகப் பறந்தலையும் விடுதலையுணர்வு மேலோங்கி நிற்கிறது. அந்த வெண்ணிறப்பாப்பாத்தியில் வண்ணங்களைத் தடவச் சமூகம் முயல்கிறது. வறுமையைக் காரணம் காட்டி இலவச உணவுக்காக தாவோயிச வகுப்புகளுக்குச் செல்ல வைப்பதும், வறுமை கோலத்தைக் கிண்டலடிக்கிறது. வெண்ணிற பாப்பாத்தியின் வண்ணம் தீட்டப்படாத சிறகுகளைக் கண்டுகொள்ள மறுக்கிறது.

தன்னைத் தானே அஞ்சும் காமத்தின் கதை நாகம். தெய்வத்தன்மையுடன் இருக்கும் முத்தம்மாவின் காமமே நாகமாக மாறுகிறது. அந்த நாகம் தன் முன்னால் பணிந்திருக்கும் காசியை அணைத்துக் கொள்கிறது. காசியின் அச்சமடங்கிய உடலில் நாகம் வளரத்தொடங்குகிறது. கண்களில் அச்சம் தெரியத் தொடங்கும் போது இன்னொரு உடலில் பாய்கிறது. அதன் நீட்சியாகவே பக்கிரியின் உடலிலும் தாவுவதற்குத் தயாராய் இருக்கிறது. தன்னை அஞ்சாத மனிதனின் உடலில் நாகம் குடியேறுகிறது. நாகத்தைக் கொல்லத் துணியும் காசி, கொன்றுவிடும் பக்கிரி என ஒவ்வொருவரையாகத் தன் இரையாக்கி வாசம் செய்கிறது.

தீண்டாமையால் தன் அடையாளங்களையும் நினைவுகளையும் புறக்கணிக்க துணிபவனின் பிரக்ஞையை மீறி எழும் உணர்வெழுச்சியை வண்டி சிறுகதை வெளிப்படுத்துகிறது. குழந்தைமையின் இயல்பான மகிழ்ச்சியையும் பரவசத்தையும் தீண்டாமைக்குப் பலிகொடுப்பதால், மரியதாஸ் தன் அடையாளங்கள் அனைத்தையும் ஒழிகிறான். ராமச்சந்திரன் எனும் பெயர் மரியதாஸாகிறது. தாய்தந்தையரையும் குடும்பத்தையும் இடமிருந்து மனவிலக்கம் ஏற்படுகிறது.  ஆனால், எம்.ஜி.ஆரின் மீதான அப்பாவின் பற்றும் குழந்தைமையின் நினைவுகளாக இருக்கும் வண்ணக்காகிதத்தால் மடித்துத்தரப்பட்ட   அப்பாவின் பரிசுகளும் மனத்தில் நிலையாக நிற்கின்றன. எம்.ஜி.ஆர் என்பது நாயகச்சித்திரம் என்பதைத்தாண்டி, ஒடுக்குமுறைச் சமூகச் சூழலைத் தாண்ட எண்ணும் விடுதலையின் குறியீடாகவே காண முடிகிறது. இன்னொரு நிலையில் புறக்கணிப்புச் சூழலைத் தாண்டி குழந்தைமையைக் கடத்தச் செய்த அப்பாவின் சித்திரமுமாகவும் இருக்கிறது. அவ்விடமே அப்பாவும் எம்.ஜி.ஆரும் ஒன்றேயாகும் இடமாகிறது. அப்பாவின் எம்.ஜி.ஆர் எனும் சித்திரம் மரியதாஸிடம் வளர்கிறது. எம்.ஜி.ஆரின் இறப்பே அப்பாவின் இறப்பாக மரியதாஸுக்குத் தோன்றுகிறது. தோமஸ் உற்சாகத்துடன் மாட்டு வண்டியின் நுகத்தடியை இழுப்பதில் எம்.ஜி.ஆர் உயிர்தெழுகிறார்.  குப்பை அள்ளும் வண்டி, அப்பாவின் நகரச்சுத்தி வேலை, அம்மாவின் மலவாளி தூக்கும் வேலை, சமூகப்புறக்கணிப்புகள் ஆகிய அடையாளங்களை தாண்டிய குழந்தைமையின் பரவசத்தில் அப்பாவை மரியதாஸ் அடையாளம் கண்டு கொள்கிறான்.

ஜமால் சிறுகதையில் தொழிற்சாலையில் ஜமால் என்னும் வங்காளதேச இளைஞனுடன் இணைந்து கதைசொல்லி வேலை செய்கிறான். அம்மா இறந்தப்பின் சித்தியுடன் திருமணம் செய்துகொள்கிற அப்பாவின் மேல் வெறுப்புணர்வு கொள்கிறான். தொழிற்சாலையில் வேலை செய்யும் மஸ்துராவும் ஜமாலும் உறவு கொண்டதை மேலாளரிடம் சொன்னதால் ஜமாலின் வெறுப்பைப் பெற்றுக் கொள்கிறான். அந்த வெறுப்பை ஒரு வகை இனிய ஆடலாக் இருவரும் நிகழ்த்திப் பார்த்துக் கொள்கின்றனர். ஒருவரையொருவர் நோக்கிச் செய்கின்ற செயல்களை உள்ளூர விரும்புகின்றனர். அம்மாவின் இழப்பால் உணரும் தனிமையுணர்வையும் அப்பாவின் மீதான வெறுப்புணர்வையும் ஜமாலின் மீது வெறுப்பாகச் செலுத்தி நிகர் செய்து கொள்கிறான். சுற்றிலும் இருப்பவர்களை இறுக்கத்துடனும் வெறுப்புடனும் அணுகுகிற ஜமாலும் கதைசொல்லியுடனான வெறுப்பை விளையாட்டாக மாற்றிக் கொள்கிறான். சொல்லப்படாத எல்லையொன்றில் ஒருவரையொருவர் சீண்டி இன்புறும் ஆடலாக அதைக் கண்டுகொள்கின்றனர். கதைசொல்லியின் கைகள் இயந்திரத்தில் சிக்கிக் காயமுறும் போது ஜமாலின் கண்கள் அம்மாவுடையதாய்க் கனிவு கொள்கின்றன. ஒருவரையொருவர் சீண்டும் வெறுப்பின் ஆடல் விபத்தாக மாறும் போது அன்பு பிறக்கும் தருணமது. அந்த அன்பு இருவருக்குமிடையில் இருந்த ஆடல் முடிந்துவிடுமோ என்பதன் துயரில் பிறந்ததாகக் கூட இருக்கலாம். அந்த வெறுப்பின் ஆடலில் தனது பிரதியாகவே கதைசொல்லி மாறியிருப்பதையே ஜமால் உணர்கிறான். அன்பின் மொழிகளில் வெறுப்பின் ஆடலும் ஒன்றாக மாறும் அழகிய தருணமது.

மசாஜ் சிறுகதையில் கதைசொல்லியின் தந்தை கூத்தில் ரதியாக வேடம் கட்டி ஆடுகிறார். வயதின் காரணமாக ரதி வேடம் மறுக்கப்படுகிறது. அதில் பெரிதும் வருத்தமடைகிறார். சாகும் நாளுக்கு முன்வரையில் மனத்தை வருத்துகிறது. கதைசொல்லி கோலாலம்பூருக்குச் சென்று நகரின் நுட்பங்களை……….கற்றுக்கொள்கிறான். புதிய சூழலில் அனைவரும் உணரும் பாதுகாப்பின்மையை உணர்கிறான். சூழ இருப்பவர்களின் தந்திரங்களை விழிப்பாகக் கவனிக்கிறான். மசாஜ் மையத்தில் சந்திக்கும் ஷாஷாவின் வேடத்தைக் களைகிறான். வேறொரு அடையாளத்தைத் தாங்கியிருப்பவளின் நாடு, குடும்பம் என ஒவ்வொன்றையும் வெளிக்கொணர்ந்து தன் விழிப்புணர்வை நிலைநாட்டுகிறான். பால் சுரந்து பெருத்திருக்கும் மார்புடன் உடலோடு உடல் ஒட்டி மசாஜ் செய்யும் போது சிந்துகின்ற கண்ணீரில் தந்தையின் கண்ணீரை நினைத்துக் கொள்கிறான். கூத்தில் காமனை இழக்கப்போகும் ரதியாகவே மாறி கதைசொல்லியின் தந்தை நடிக்கிறார். வேடம் மறுக்கப்பட்டப்பின் எஞ்சிய வாழ்நாளெல்லாம் பாடும் கதைசொல்லியின் தந்தை தன்னைத்தான் இழந்ததாய் உண்ர்கிறான்.

போரில் குடும்பத்தை இழந்த ஷாஷா, பால் வற்றிய மார்புடன் குழந்தைக்குப் பாலூட்ட முடியாதவளாகிறாள். அந்நிய நாட்டில் வேறொரு அடையாளத்துடன் பால் கனக்கும் மார்பை முதுகுடன் அணைத்து மசாஜ் செய்கிறாள். தாய்மையின் வெற்றடையாளமாக மாறிப்போயிருக்கும் மார்பும் திரிந்த தன்னடையாளமும் சேர்ந்து ஷாஷாவும் தன்னைத்தான் இழந்திருக்கிறாள். அந்த இழத்தலின் துயரையே கதைசொல்லி உணர்கிறான். சுற்றியிருப்பவர்களின் தந்திரம் கூடிய நடிப்பை விழிப்புடன் கவனித்துவருபவன், மெய்யான துயரொன்றைப் புரிந்து கொள்ளும் தருணத்தைச் சிறுகதை வெளிப்படுத்துகிறது. நினைவில் பதிந்திருக்கும் தந்தையின் கண்ணீரும் தாயொருத்தியின் ஏக்கக் கண்ணீரையும் இணைத்துப் பார்த்துப் பொருள் கொள்கிறான். முதுகின் மேல் படியும் மார்பின் அணைப்பில் நடிப்புகளுக்குப் பின்னான மெய்துயரை அடையாளம் காண்கிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...