முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 பேயின் கதை

 

இவ்வாண்டு வாசித்த நூல்களில் மிகவும் சுவாரசியமும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நூலாக Pai Naa எனும் நூலைக் குறிப்பிடவேண்டும். பொதுவாகவே, ஆங்கிலத்தில் வாசிக்கச் சிரமம் இருப்பதால் கொஞ்ச நாட்கள் எடுத்து நிதானமாகவே வாசித்து முடித்தேன். 1940 களில் ஜப்பானியப் படையெடுப்பின் போது சுங்கை லெம்பிங் எனும் ஈயவளம் மிகுந்த சிற்றூரில் காட்டில் தப்பித்து வாழ்ந்த நோனா பேக்கர் எனும் வெள்ளைக்காரப் பெண்ணின் வாழ்வனுபவம்தான் இந்நூல். என்னுடைய வீடு அமைந்திருக்கும் குவாந்தான் நகரிலிருந்து சில பத்து கிலோமீட்டர் தூரத்தில்தான் சுங்கை லெம்பிங் இருக்கிறதென்பது நூலின் ஆங்கிலத்தைக் கடந்து வாசிக்கச் செய்வதாக இருந்தது. அதிலும், பள்ளியிலும் குடும்பத்துடனும் அந்நகரத்துக்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் செல்லும் ஈய அருங்காட்சியகம்தான் நோனா பேக்கரின் வீடாக இருந்தது என்பதும் கூடுதல் ஆர்வத்தை எழுப்பியது. அங்கு ஈயம் எடுக்கப்பட்டதற்கான எஞ்சிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் அருங்காட்சியகத்தில் ஈய வரலாற்றுடன் வெள்ளை இனப் பெண்ணொருத்தியின் உருவம் தெரிந்திருப்பதாகவும் தட்டச்சு இயந்திரச் சத்தம் கேட்பதாகவும் வாய்மொழிச் செய்திகளும் உலாவி வந்திருக்கின்றன. இன்றைக்குக் கிட்டதட்ட கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அந்நகரைக் குறித்தச் செய்திகளை இணையத்தில் தேடும் போது இந்தப் பேய் கதைத்தான் முந்தி நிற்கிறது. அந்தப் பேயின் கதைத்தான் இந்நூலின் கதை.



1910 முதற்கொண்டே சுங்கை லெம்பிங் ஈயச்சுரங்க நிர்வாகியாகப் பணிபுரியும் நோனாவின் அண்ணனுக்கு உதவியாக 1930 களில் சுங்கை லெம்பிங்குக்கு நோனா வருகிறார். அன்றைய மலாயாவில் மற்ற இனத்தவர்களின் வாழ்க்கையுடன் ஒப்புநோக்க வெள்ளைக்காரர்கள் பெரும் ஆடம்பரமான வாழ்வையே வாழ்ந்திருக்கின்றனர் எனலாம். பொதுவாகவே, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளைக் காட்சிப்படுத்தும் ஆங்கிலப்படங்களைப் பார்க்கும் போது இதை நன்கு காண முடியும். நேர்த்தியான உடை, இள மஞ்சள் நிற ஒளியுடன் கூடிய அறைகள், கத்தரித்தைப் போன்ற அளவெடுத்த மொழி என வசீகரமானதாக இருக்கும். உலகின் மிக ஆழமான (12 அடுக்கு) ஈயச்சுரங்கம் சுங்கை லெம்பிங்கில்தான் இருந்தது. கனிமவளம் மிகுந்த எல் டொரடோ (El Dorado) நகரத்தைப் போல ஆசியாவின் எல் டொரடோவாகச் சுங்கை லெம்பிங் அறியப்பட்டது. 1930களிலே திரையரங்கு, கார்கள், பார் என ஆடம்பரமாக வாழ்ந்திருக்கின்றனர். பிரிட்டன் ஆளுகைக்குட்பட்ட மலாயாவின் மீது ஜெர்மனி போன்ற நாடுகள் எந்நேரத்திலும் படையெடுக்கலாம் என்ற செய்திகள் அங்கிருந்த வெள்ளைக்கார அதிகாரிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களிடமிருந்த கேளிக்கைக்கான விருப்பம் குறைந்து மெல்ல அச்சத்துடன் கூட்டமாகக் கூடுவதைக் குறைத்துக் கொள்கின்றனர். பலரும் தங்கள் நாடுகளுக்கே திரும்புகின்றனர். ஜப்பானியர்கள் மலாயாவைக் கைபற்றுவதற்கு முன்னரே நோனாவும் அவரது அண்ணனும் 1941 இன் பிற்பகுதியிலே காட்டுக்கு  தப்பிச் செல்கின்றனர். முதலில், தெரிந்த சீனர்களின் உதவியுடன் சொந்தமாகக் குடிலைக் கட்டி கொண்டு வந்த டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்டு வாழ்கின்றனர். 

வின் பேக்கர் ; நோனா பேக்கரின் அண்ணன்

பணமும் உணவும் குறையத் தொடங்கும் போது காட்டுக்குள் இருந்த கம்யூனிஸ்டு படைகளின் கூடாரத்தில் அடைக்கலமாகின்றனர். எந்தச் சித்தாந்தம் தங்கள் நிறுவனத்தில் தோன்றகூடாது என எதிர்த்தார்களோ அவர்களின் ஆதரவில் உயிர்வாழத் தொடங்குகிறார்கள். இப்படியாக இந்நூல் காட்டில் வாழ்ந்த அனுபவத்துடன் இக்கட்டுகளில் நம்பி வந்த நம்பிக்கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் மாறாக இயங்கும் ஆழ்மன உளவியல் என மனித மனத்தின் ஆழத்தையும் தொடுகிறது. கம்யூனிஸ்டு படையில்தான் Pai Naa எனும் பெயர் நோனா பேக்கருக்கு இடப்படுகிறது. படையில் நாளிதழாசிரியராக, மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிகிறார். இரண்டாண்டுகள் காட்டில் மறைந்திருந்ததால் ஒரு முறை கூட நேருக்கு நேராக ஜப்பானியப் படைகளைக் காணாமல் இருந்திருக்கிறார். மலாயாவுக்கு வந்த ஜப்பானியப் படையினர் மிகக் குறைவானவர்களாகவே இருந்திருக்கலாம். மீண்டும் வெள்ளையர்கள் மலாயாவுக்கு வந்தவுடன் பிரிட்டனுக்குத் திரும்பி பல்லாண்டுகள் கழித்துத் தன்னுடைய அனுபவங்களைக் கூறி இருவர் அதை நூலாக வெளியீடச் செய்திருக்கிறார். ஈயச்சுரங்கத் தொழிலாளிகள் இடையே செல்வாக்குமிக்க மிஸ்ஸியம்மாவாக இருந்து ஜப்பானியருக்குப் பயந்து காட்டில் மறைந்திருந்து உயிரைக் காத்துக் கொள்ள சூழ்நிலையால் கம்யூனிஸ்டாக ஆகிப் பின் நாடு திரும்பியவரை வரலாறும் மக்களும் பேயாக நினைவு கூர்கின்றனர்.

இணையத்தில் பி.டி.எப் ஆக இந்நூல் மொத்தமாகவே கிடைக்கிறது. ஜப்பானியர் காலத்தில் இருந்த மலாயா குறித்த சித்திரத்தையும் அனுபவங்களையும் நூல் தருகிறது. அத்துடன், இக்கட்டுகளில் மனித மனம் செயல்படும் தளத்தையும் சொல்கிறது. அந்த நூலில் இருந்து ஒரு பகுதியைப் பொருள் மட்டுமே விளங்குமாறு மொழிபெயர்திருக்கிறேன்.


//பல நாட்களுக்கு சேற்றுப்படுக்கையில் படுத்திருந்தோம். வின்னுக்கு வரும் கடுமையான ஆஸ்த்மாவினால் அவ்வப்போது எழுந்தமர்ந்து வலியுடன் மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். அவரைப் படுக்கச் செய்து நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்துவிடுவேன். கடுமையான வயிற்றுப்போக்கும் குமட்டலும் கண்டிருந்ததால் எங்கும் ந்கர முடியாமல்  தங்கியிருந்த குடிலுக்கு வெளியே இருந்த மரத்தின் கரியக்கிளைகளை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒரு நாளிரவு, ஒரே பக்கமாகப் படுத்திருப்பதால் மிகவும் வேதனையாக இருக்கிறது, தன்னை மறுபக்கம் திருப்பிப் படுக்கச் செய்யுமாறு வின் கேட்டார். நான் மிகவும் பலவீனமாகவும் கால்களில் கடும் வலியுமிருந்ததால் என்னால் இயன்ற வரை திருப்ப முயன்றும் வின்னைத் திருப்ப முடியவில்லை. வின் முழுமையாக என்னை நம்பியிருக்கத் தொடங்கியதும் என் இயலாமையும் தெளிவாகவே தெரியத் தொடங்கியது.

‘டார்லிங், உனக்கு என்ன சிக்கல், ஏன் எனக்கு உதவி செய்ய மறுக்கிறாய் எனக்காக இதுவரை பலவற்றைச் செய்திருக்கிறாய். இப்பொழுது இறுதியில் ஏன் எனக்கு எதிராகத் திரும்புகிறாய்’ எனக் கேட்டார்.

நான் மனமுடைந்து அழத்தொடங்கினேன்.

‘வின் டார்லிங், ஆம், உங்களுக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன், ஆனால், உங்களை திருப்பும் அளவுக்கு என் உடலில் வலு இல்லை’. இருவரும் போதிய உணவில்லாததால், அரைத் தன்னினைவுடன் தூக்கமும் சோர்வும் சேர்ந்திருந்தோம்.

அதற்கடுத்த நாள் காலையில் வின் என்னை எழுப்பி விட்டார்

‘நின், எனக்காக ஒரு தீக்குச்சியைப் பற்ற வைக்கிறாயா, கடுங்குளிரில் நடுக்கமாக இருக்கிறது’ என மலேரியா கண்டு நடுங்கி கொண்டே சொன்னார்.

என்னால் முயன்றதைச் செய்கிறேன். நம்மிடம் இப்பொழுது இரண்டு குச்சிகள் மட்டுமே இருக்கின்றன. அவையும் ஈரம் கண்டிருப்பதால் பற்ற வைக்க முடியாமல் போய்விடுமென அச்சமாக இருக்கிறது என்றேன். எங்கள் குடிலில் இருந்த அனைத்துப் பொருட்களும் மழையீரத்தால் நனைந்து ஊறிப் போயிருந்தது.

பையிலிருந்த இரண்டு குச்சிகளில் ஒன்றை வெளியெடுத்து என்னுடைய கன்னத்தில் உரசினேன். அந்த உத்தியே நனைந்து போயிருக்கும் தீக்குச்சிகளைக் காயச் செய்யும் மிகச் சிறந்த உத்தியாகக் கண்டிருந்தோம். ஆனால், அதைப் பற்றவைக்கும் போது அதன் மேற்பகுதி மிருதுவாகவும் ஈரமானதாகவும் இருந்தது. அதன் மேற்பகுதியிலிருந்த மருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டியதுடன் தீப்பெட்டியின் பற்ற வைக்கும் அட்டையின் ஒரு பகுதியும் உரிந்தது. எஞ்சியிருந்த ஒரு தீக்குச்சியும் வீணாகிவிடுமென்பதால், அதைப் பயன்படுத்த நான் துணியவில்லை.

வின், பகலில் கொஞ்ச நேரம் காத்திருப்போம் தீக்குச்சி காயட்டும் என்றேன். இரவில் கனத்த மழை பெய்திருந்தாலும் காலைச் சூரியனின் கதிர்கள் இலைகளைத் தாண்டி தீண்டிக் கொண்டிருந்தது.

காய்ச்சல் கண்டிருந்த சோர்ந்த கண்களால் என்னைப் பார்த்த வின்னின் பார்வையில் அவர் உடலிலிருந்த வலியை ஊசியாய் என் உள்ளத்தில் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

‘நின், நீ என்னை மனமுடையச் செய்கிறாய், எனக்காகத் தீக்குச்சியைக் கூட பற்ற வைக்க மறுக்கிறாய். அது ஒன்று மட்டுமே இப்பொழுது நான் வேண்டுவது, அதையும் எனக்காகச் செய்ய மறுக்கிறாய்’

டார்லிங், என்னால் முடியாது, நம்முடைய கடைசி தீக்குச்சியையும் வீணாக்கிவிட்டால், அதன் பிறகு எதுவும் இருக்காது’ ஈரம் ஊறிப்போன போர்வையைப் போர்த்திய வின்னுக்கருகில் படுத்து உடலுக்குக் கொஞ்சமாவது வெப்பமாகட்டுமென முயன்றேன். கொஞ்ச நேரத்தில், அவரின் உடல் நடுக்கம் குறைந்தது. அவரது கால்கள் பரபரக்கத் தொடங்கி அடிபட்டிருந்த என்னுடைய காலை நோக்கிச் சில முறை உதைத்தார்.

‘வின், நீ என்னைக் காயப்படுத்துவதாக உணரவில்லையா, என்று கேட்டும் அவரது கால்கள் ஓயாமற் இழுத்துக் கொண்டிருந்தது. அவர் கடுங்காய்ச்சலால் தன்னினைவின்றி இருக்கிறார் என அப்போதுதான் தெரிந்தது.  அவரருகில் குனிந்து பார்த்தப் போது கண்களில் இருந்த வெள்ளைப்படலத்தைக் கண்டு அதிர்ந்துவிட்டேன். என்னுடைய போர்வையை எடுத்து அவருக்குப் போர்த்திவிட்டுக் கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டே அவரதுப் பெயரைச் சொல்லி அழைத்தேன், ஆனால், பாதி திறந்திருந்த வாயிலிருந்து விட்டுவிட்டுச் சீறலுடன் ஆழ்ந்த மூச்சு அசைவு வெளியேறி கொடிய இறப்பு அவரது உடலில் அணைக்கத் தொடங்கியது.

என்னுடைய எஞ்சிய ஒரே சேமிப்பான கடைசித் தீக்குச்சி உடலின் வெப்பத்தில் காயச் சட்டையில் வைத்திருந்தேன். குடிலில் இருந்த ரப்பர் துண்டொன்றில் நெருப்பு மூட்டி காய்ந்து போன சுள்ளிகளில் தீமூட்டலாம் என நினைத்திருந்தேன். ஆனால், தீ பற்றுமா எனப் பயமாக இருந்தது. தீப்பெட்டியையும் திக்குச்சியையும் கன்னத்தில் நன்கு உரசி நிதானத்துடன் தீக்குச்சியை உரசி ரப்பர் துண்டில் தீ பற்ற செய்து சுள்ளிகளிலும் நெருப்பு பரவச் செய்தேன்.

 

‘டார்லிங் பார்,’ என வின் பக்கம் திரும்பி அழுது கொண்டே ‘நான் பற்ற வைத்துவிட்டேன்’ என்றேன். ஆனால், என்னுடைய குரலைத் தாண்டி வெகு தொலைவுக்கு வின் போயிருந்தார்.

என்னுடைய கதறலினால் தொண்டை காய்ந்து விடும் எனப் பயந்து மிகவும் முயன்று என்னுடைய அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது தண்ணீரை ஊற்றி அணைத்துவிட்டு அதை எடுத்து வின்னுக்கும் வாய் திறந்து புகட்டினேன். ஆனால், தண்ணீர் வாயிலிருந்து வெளியே வந்தது. அவர் கன்னத்துடன் கன்னம் சேர்த்து உடலை வெப்பமாக்க முயன்றேன். அதற்குச் சற்று நேரத்துக்கு முன்னர்தான் ஒரு சீனர் சில உணவு பொருட்களைக் கொடுத்து  விட்டுச் சென்றார்.

வின்னின் உடலைப் பார்ப்பதற்கு முன்னால்,மிகுந்த உற்சாகத்துடன் ஜப்பானியப் படையினர் தங்களைப் பலநாட்களாகத் துரத்தி அலைந்து இப்பொழுது மொத்தமாக அந்தப் பகுதிலிருந்து பின்வாங்கி சென்றுவிட்டதாகவும் கூறினார்.  கையிலிருந்த பன்றி இறைச்சித் துண்டொன்றை என்னை நோக்கி வீசி, ‘இன்று காலையில்தான் வீரர்கள் காட்டுப்பன்றியொன்றைக் கொன்றனர் என்றார், வின்னின் உடலில் இருந்து மெல்லிய மூச்சசைவு கண்டதும்  தலையை ஆட்டிக் கொண்டே நடந்து சென்றார். வின்னை இறுக்க அணைத்துக் கொண்டிருந்த போது ஆழ்ந்த மூச்சுடன் அவர் உடலிலிருந்து மூச்சு நின்று போனது. கால்களைக் குவித்தமர்ந்து காடதிரக் கதறினேன். என்னுடைய குரல் கேட்டு குரங்குகளும் கூச்சல் எழுப்பின. அவர் உடலிலிருந்து நகர்ந்து குடிலின் மறுபகுதியில் படுத்துக் கொண்டேன். உலகத்தில் நான் மிகவும் விரும்புகின்ற மனிதரின் உயிரற்ற உடலருகே அமர்ந்து காலையில் அந்தச் சீனர் கொண்டு வந்திருந்த பன்றி இறைச்சித் துண்டை மிக நிதானமாகச் சுவைத்துச் சாப்பிடத் தொடங்கினேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற