முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வயலும் வாழ்க்கையும்

 

வயலும் வாழ்க்கையும்

ஷானோன் அகமாட்டின் detik detik diri di daerah daif (உட்புற மாவட்டமொன்றிலிருந்த தருணங்கள்) எனும் தன்வரலாற்று நூலைத்தான் முதலில் வாசித்தேன். செய்திகள், தேர்வு வாசிப்புக்காகவும் இல்லாமல் நான் முதன்முதலாக வாசித்த மலாய் புனைவு நூலும் அதுதான். கெடா மாநிலத்தின் உட்புறப்பகுதியான சிக் பகுதியில் கழிந்த தன் பால்யத்தையும் மேற்கல்வி வரையிலான வாழ்வைப் புனைவு கலந்து சொல்லியிருப்பார். மலாய் மக்களின் கிராமப்புற வாழ்வின் சிரமங்கள், நெல் வயல் வேலைகள் எனச் சுவாரசியமாக இருந்ததாக நினைவிருக்கிறது. அதிலும் குறிப்பாக, தன் தந்தையுடன் சேர்ந்து மணிப்புறாவைப் பிடித்து அதைத் துள்ளத்துடிக்கக் கொல்லும் சித்திரமொன்று நன்கு நினைவில் இருக்கிறது. அதற்கடுத்து tivi எனும் குறுநாவலை வாசித்தேன். நெல் விவசாயம் செய்யும் மலாய் மக்களின் வாழ்வுக்குள் நவீனத் தொழிற்நுட்பத்தின் வருகையை ஒரு விவசாயக் குடும்பத்துக்குள் தொலைக்காட்சி முதலில் அறிமுகமாகி அதன் வழியாக விவசாயப் பணிகளுக்குச் செல்லச் சோம்பல் ஏற்பட்டு மெல்லக் குடும்பம் சீரழிவதைச் சொல்லும் படைப்பு திவி. கலை என்பதை விட சமூக விமர்சனத்தை முன்னிலைப்படுத்தும் அந்த நாவல் வாசிப்பில் அவ்வளவாகக் கவரவில்லை. இரண்டு நாவல்களிலும் ஷானோன் அகமாட் குரூரமான சித்திரமொன்றை வெவ்வேறு சொற்களில் நுணுக்கமாகச் சித்திரிக்கும் விதம் நுட்பமாக இருந்தது.

அவருடைய புகழ்பெற்ற நாவலான ranjau sepanjang jalan (வழியெங்கும் பொறிகள்) நாவலும் விவசாய வாழ்வைப் பின்னணியாகக் கொண்ட குடும்பத்தின் கதையைத்தான் சொல்கிறது. அவருடைய பால்யத்தில் தேங்கிய நினைவுகளைத்தான் தொடர்ந்து புனைவுக்கான களங்களாக உருமாற்றிப் பார்த்திருக்கிறார். கெடா மாநிலத்தின் சிக் மாவட்டத்தின் பங்குல் டெர்டாப் எனும் குக்கிராமத்தில் ஷானோன் அகமாட் பிறந்தார். அவருடைய தந்தை இந்தோனேசியாவின் மேடானிலிருந்தும் தாயார் தாய்லாந்தின் பட்டாணிப்பகுதியிலிருந்தும் கெடாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். காலனிய அரசில் அஞ்சல் துறைப் பணியாளராக தந்தை பணியாற்றியிருக்கிறார். கெடாவின் புகழ்பெற்ற அப்துல் ஹமிட் கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்ற ஷானோன் ஆசிரியராகவும் ராணுவ அதிகாரியாகவும் பணியாற்றிப் பின்னாளில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுபெற்றவர். 1950 களில் சிறுகதைகளை எழுதிப் படைப்புலகத்துக்குள் நுழைந்த ஷானோன் அகமாட் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், விமர்சனக்கட்டுரைகள் என மிக விரிவாக இலக்கியத்துக்குள் இயங்கியிருக்கிறார். மலேசிய அரசு இலக்கியத்துக்காக வழங்கும் உயரிய அங்கீகாரமான தேசிய இலக்கியவாதி (Sasterawan Negara) எனும் விருதினை ஷானோன் அகமாட் 1982 ஆம் ஆண்டு பெற்றார். 1998 இல் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுத் துணைப்பிரதமர் பதவியில் நீக்கப்பட்டு அன்வார் இப்ராகிம்க்குச் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. அவருக்கு இழைக்கப்பட்டது அநீதி என்ற ஆதரவு அலை நாடு தழுவிய நிலையில் இருந்தது. அன்றைய பிரதமரையும் அரசியல் போக்கையும் விமர்சிக்கும் வகையில் shit எனும் நாவலை ஷானோன் எழுதினார். அன்வார் புதிதாகத் தொடங்கிய கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியான பாஸ் கட்சியில் சேர்ந்த ஷானோன் அகமாட்  சிக் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டு வென்றார். 2017 ஆம் ஆண்டு 84 ஆவது வயதில் காலமானார். இலக்கியம், அரசியல், சமூக விமர்சனம் என மலாய் பண்பாட்டுச் சூழலுக்குள் முழுமையாகப் பங்களிப்பாற்றிய வெகு சில எழுத்தாளர்களில் ஷானோன் அகமாட் முதன்மையானவர்.


ஷானோன் அகமாட்

கல்லூரியில் பயிலும் போது விரிவுரைஞர் தமிழ்மாறன் ranjau sepanjang jalan நாவலை வாசித்தால் மலாய் மக்களின் பாடுகள் தெரியமெனச் சொல்லியிருந்தார். தமிழ்மாறன் பரிந்துரைத்த படைப்புகளைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்த காலக்கட்டமது. இடையில், மலாய் மொழியில் செய்திகள் தவிர பெரும்பாலும் எதனையும் வாசிப்பதில்லை. Ranjau sepanjang jalan நாவலை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். நெல் விவசாயத்தில் ஈடுபடும் மலாய் குடும்பத்தின் பாடுகளைத்தான் நாவல் முன்வைக்கிறது. லஹுமாவும் ஜெஹாவும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் தம்பதிகள். அவர்களுக்கு வயதுக்கு வந்த இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட ஏழு பெண்பிள்ளைகள் இருக்கின்றனர். அடுத்த விதைப்புக்கான காலக்கட்டத்தை மிகுந்த சோர்வும் சலிப்புமாக எதிர்பார்த்துக் காத்திருப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. வெள்ளம், வறட்சி, வயல் நண்டுகள், தியாக் பறவைகள் என எல்லா பேரிடர்களிலிருந்தும் வயலைக் காத்து நெல்லை வீட்டுக்கு எடுத்துச் செல்வதில் இருக்கும் பழகிப்போன சிரமங்களை எண்ணி வரும் சலிப்பும் சோர்வும்தான் அது. அத்துடன் ஏழு பிள்ளைகளுக்குமான உணவையும் தங்கள் மொத்த வாழ்வுக்குமான ஆதாரமாக பதினான்கு வயற்தோட்டங்களே இருக்கின்றன என்பதன் அச்சமும் கூட. ஆனால், வாழ்வின் இன்பம் துன்பம் எல்லாமே அல்லா (இறைவனின்) பார்வைக்கே விட்டுவிட்டே லஹுமா வாழ்ந்து வருகிறான்.



புதர் மண்டியிருக்கும் வயற்காட்டை லஹுமாவும் ஜெஹாவும் திருத்தி உழுகின்றனர். சேற்றுப்பகுதிப் புதர்களைக் களையும் போது பத்திவிரித்து நிற்கும் ராஜநாகத்தின் முன்னால் சிலைத்துப் போன மனைவியைக் காப்பாற்ற கையிலிருந்த அரிவாளால் நாகத்தைத் லஹுமா துண்டமாக்குகிறான். வாழ்வின் நேரப்போகும் சிதைவுக்கான கட்டியமாக அக்காட்சி தொடங்குகிறது. பாம்பை நேருக்கு நேராய்ச் சந்தித்த அதிர்ச்சியில் நோய்வாய்பட்டு ஜெஹாவின் உடல் பலவீனப்படுகிறது. வளர்ந்த பிள்ளைகளைத் துணைக்கு வைத்து வயல்காட்டு வேலைகள் பிந்திவிடுமென்ற அச்சத்தில் லஹுமா வேலை செய்கிறான். வயல்காட்டில் இருந்த நிபோங் பனையின் முள் கால்களில் குத்திக் கால்களைக் காயப்படுத்துகிறது. கால்களில் முள் குத்தி சீழ்பிடித்து வீட்டிலிருப்பவனுடைய மொத்த நினைவும் காடுகளைத் திருத்தி நடவுப்பணிகளைத் துரிதப்படுத்துவதில் இருக்கிறது. அதனாலே வயலுக்குப் பிள்ளைகளை அழைத்து அவன் சொற்படியே நடவுக்கான பணிகளை மனைவி ஜெஹா செய்கிறாள். காலில் குத்திய முள்  நஞ்சாக உடல் முழுதும் பரவி காது, வாய், குதம் என எல்லாப்பகுதியிலும் சீழ் வடிந்து கோரமாக ல்ஹுமா இறந்து போகிறான். மொத்த குடும்பப்பொறுப்பையும் ஏற்க வேண்டிய இக்கட்டு ஜெஹாவுக்கு வந்து சேர்கிறது. அவனுடைய நினைவுகளால் அலைகழிக்கப்படுவளின் மனதுக்குள் அசரீரியாக லஹுமாவின் வயல்காட்டுப் பணிகளுக்கான கட்டளைகள் ஒலிக்கத் தொடங்குகின்றன. அந்த அசரீரி குரலால் ஆட்டுவிக்கப்பட்டு இரவு பகல் பாராமல் வயல்காட்டில் வேலை செய்பவளுக்கு மனநலம் பிறழ்கிறது. மனநலம் பிறழ்ந்தவளைக் கட்டிப்போட்டு பிள்ளைகள் ஏழுவரும் பணிகளைத் தொடர்கின்றனர். அவர்கள் அறியாத வயல்காட்டுப் பணிகள் ஒவ்வொன்றாய் அறிய வந்து ஈடுபடுகின்றனர். மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டும் கணவனின் குரல் தன்னிலிருந்து விடுபடாத ஜெஹாவை வீட்டிலே அடைத்து வைத்து அறுவடையும் முடித்து பிள்ளைகள் வாழ்வைத் தொடர காத்திருப்பதோடு நாவல் முடிகிறது.

இந்த நாவல் மலாய் கம்பத்து வாழ்வின் பாடுகளையே பிரதானமாகப் பேசுகிறது. ஆனால், அதனை வாழ்வின் மேன்மை அல்லது தன்னிரக்கம் போன்ற பாவனைகளைக் கொண்டு அணுகவில்லை என்பதே இதன் இலக்கியத்தரத்துக்கான சான்றாக இருக்கிறது. வயல் காட்டை நீக்கிவிட்டு எந்தப் பின்னணியை வைத்திருந்தாலும் இந்நாவல் முன்வைக்கும் வாழ்வின் நிச்சயமின்மை என்பதும் கால் பாவி நிற்கும் மண் சட்டெனப் புதைகுழியாகும் இக்கட்டுகள் சூழும் வாழ்வின் விந்தை சம்பவிக்கக்கூடும். அந்த வீழ்ச்சித் தருணத்திலும் அறியாத வாழ்வுக்குள் நம்பிக்கையுடன் காலடி எடுத்தும் வைக்கும் சித்திரத்தையும் நாவல் காட்டுகிறது.

வாழ்வில் எல்லாவற்றையும் பேரிறைவன் அளிப்பதே என்ற நம்பிக்கையை லஹுமா எண்ணுவதிலிருந்து நாவல் தொடங்குகிறது. வயல் காட்டு வேலையின் பாடுகளை ஆண்டுதோறும் ஒரே மாதிரியாக அனுபவித்து வருபவனின் ஞானம்தான் அந்தச் சொல். அந்த ஆண்டு நேரப்போகும் பெருந்துன்பத்துக்கான அறிகுறியாக ராஜநாகத்தின் வருகையைப் பார்க்கிறான். காலில் நிபோங் முள் குத்தி மெல்ல மெல்ல உடலையும் அவனுடைய மனவலிமையும் முற்றாகக் குலைத்துச் சீழ்பரவி சாகின்றான். அதனால் மனைவி மனநலம் பிறழ்கிறாள். அப்பாவுடனும் அம்மாவுடனும் வயல்காட்டு வேலைகளை வேடிக்கை பார்த்த அனுபவத்தையும் கம்பத்து மக்களின் செயலைக் கொண்டே வயல் வேலைகளில் அவர்களின் பெண்பிள்ளைகள் ஈடுபடுகின்றனர். வயலில் படையெடுக்கும் நண்டுகளையும் தியாக் குருவிகளை விரட்டுகின்றனர்; வெள்ளம் கொண்டு வந்து சேர்க்கும் குப்பைகளை அகற்றுகின்றனர். நெல்லை பத்தாயத்தில் கொண்டு வந்து சேர்த்தப்பின்னர் அம்மாவின் மனநலம் சரியாகி மருத்துவமனையிலிருந்து திரும்பியப்பின்னரே புதுநெல்லெடுத்து இறந்த தந்தைக்கும் ஊருக்கும் நன்றியறிவிப்பு விருந்தை நடத்தக் காத்திருக்கின்றனர். உடல் ஒடுங்கி கன்னக்குழிகளில் ஒடுக்கு விழுந்து கண்கள் குன்றிய படியே கணவனின் அசரீரி குரலைத் தாங்கியப்படி வரும் ஜெஹாவின் அரற்றல்கள் ஓயப்போவதில்லை என்ற முடிவுக்கு வரும் சனா அவளை வீட்டுக்குள்ளே கட்டிப்போடுகிறாள். அவளுடைய மனத்தில் வயல் வேலையின் பாடுகள் ஒன்றொன்றாக நினைவுக்கு வர பின்னணியில் அம்மாவின் பேரோலமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாழ்வின் சலிப்பும் சோர்வும் பழகிப் போய்விடும் இயல்பான முதிர்வு அவளுக்குள் ஏற்படுகிறது.

வாழ்வின் கோரத்தைச் சொல்லும் தருணங்களே நாவலில் நிறைய இருக்கின்றன. லஹுமா சீழ்பிடித்து வயிறு உப்பி சீழ்நாற்றத்தால் வீடே நாறிச் சாகிறான். வயல் காட்டில் நண்டுகள் படையெடுக்கும் போது, உப்பிய வயிற்றுடன் நண்டுகளை அள்ளி அள்ளி எடுத்து விழுங்கும் கோரக்கனவால் ஆட்டுவிக்கப்பட்டு ஜெஹா ஓயாமல் நண்டுகளைப் பொறுக்கி விறகடுப்பில் அவித்துக் கொல்கிறாள். கணவன் நோயில் வீழ்ந்த பின்னர், தோக் பெங்குலுவிடம் நிலத்தை உழுவதற்கு டிராக்டர் கேட்டுப் பார்க்கலாமென ஜெஹா எண்ணுகிறாள். அவளின் நிலையைப் புரிந்து கொண்டு நிலத்தைத் திருத்தி உழ டிராக்டரை இலவசமாகவே தர தோக் பெங்குலு (கிராமத்துத்தலைவர்) முன்வருகிறார். பயிர்களெல்லாம் தலை தூக்கிய பின்னர், நன்றி சொல்வதற்காக பெங்குலு வீட்டுக்கு ஜெஹா செல்கிறாள். ‘’லஹுமா உன்னிடம் நன்றி சொல்லச் சொன்னான்’’ எனத் தொடங்குகிறவள் வற்றி போன தன் முலையை விட பிள்ளைகளின் முலைகள் பெருத்திருப்பதாகச் சொல்லித் திருமணம் புரிந்து கொள்கிறாயா எனக் கேட்கிறாள். அந்தத் தருணத்துக்குப் பிறகே காட்டுக்கட்டைகளை வெட்டியெடுத்து வேரால் கட்டிவைக்கப்படும் வீட்டுச்சிறைக்குள் ஜெஹா அடைபடுகிறாள். அந்தச் சிறைக்குள் நின்று கொண்டு வயல்காட்டு வேலைகளுக்கான கட்டளைகளைக் கத்திக் கத்தி ஓய்பவளின் குரல் ஆங்சா வாத்தின் குரலைப் போல சிறுத்துப் போனதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். இப்படியாக, சிதைவையும் கோரத்தையும் ஷானோன் நுட்பமாகக் காட்டிச் செல்கிறார்.

ஷானோன் அபூர்வமாகவே நுண் தருணங்களை நாவலில் காட்டுகிறார். துர்மணம் தரும் செரிண்டிட் ரக நெல்லை விதைக்க வேண்டாமென ஜெஹா கணவனைக் கேட்கின்றாள். ஆனால், அவை வயிற்றுக்குள் செல்கின்ற போது நாற்றம் வீசும் உன் கூந்தலைவிட நன்றாகவே இருப்பதாக லஹுமா சொல்கின்றான். விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளைக் காட்டி இந்தக் கூந்தலால்தான் எழுவரைப் பெற்றெடுத்தாய் எனக் கணவனை அறைந்து சொல்கிறாள். மரணத்துக்குக் காத்திருக்கும் லஹுமாவைக் காண தோக் பெங்கூலு வீட்டுக்கு வருகிறான். சென்ற அறுவடைக் காலத்தில் அவருடைய கொம்பு வளைந்த எருமை மாட்டை உயிரைப் பணையம் வைத்துக் காட்டுக்குச் சென்று லஹுமா பிடித்து வந்தான். அதற்கு ஈடாக, தன் நிலத்தில் உழ டிராக்டரைக் கேட்டுப் பார்க்க லஹுமாவுக்கு எண்ணம் இருக்கிறது. கண்கள் வெறித்திருக்க மரணப்படுக்கையிலிருப்பவனுக்கு வயற்காட்டு வேலைகள் பற்றியே எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது. டிராக்டரை நாளைக்கு உன் நிலத்துக்கு அனுப்புகிறேன். அவை நாளை உன் நிலத்தில் வந்து உறுமுவதைப் பார் எனச் சிரித்துக் கொண்டே பெங்குலு ஜெஹாவிடம் சொல்கிறார். அந்தத் தருணமே, லஹுமாவின் உயிர் பிரிந்து உடலின் துவாரங்களில் இரும்பு மணம் வீசும் மஞ்சள் சீழ்நீர் வெளியாகிறது. குடும்பம் தொடர்ந்து நிலைத்திருக்குமென்பதற்கான சான்றைக் கேட்டபின் இறப்பு லஹுமாவைத் தழுவுகிறது.

சோர்வும் சலிப்பும் தரும் விவசாய வேலையின் உழைப்பும் கவனமும் எல்லாமே வெறும் வயிற்றுடன் மட்டுமே முடிச்சிட்டு நாவல் எழுதப்பட்டிருப்பதே இதனை மிகச்சிறந்த நாவல் என முன்வைக்கும் தயக்கத்தை உண்டுபண்ணுகிறது. லஹுமா, ஜெஹா, அவர்களின் மூத்தப்பிள்ளை சனா என எல்லோருமே தங்களுக்கான வாழ்வாதாரமாக மட்டுமே நெல்லைக் காண்கின்றனர். பிள்ளைகள், சகோதரிகள் பட்டினி இருக்கக்கூடுமென்ற அச்சம் மட்டுமே மூளையில் நச்சரிப்பாக மாறி வேலை செய்யத் தூண்டுகிறது. நெல் சோறு உணவும், சிதைவுற்றிருக்கும் வீடும், உடைகளும், திருமணமும் என எல்லா தேவைகளும் பொருள் குறித்ததாகவே இருக்கிறது. அதைத் தாண்டிய வேறு தேவைகளோ கேள்விகளோ அற்று வாழ்வு அமைந்துவிடுகிறது. விவசாயப் பணியின் ஒழுங்கு தவிர அன்றாடமெனச் சொல்லத்தக்க பண்பாட்டு நிகழ்வுகளோ மனித உறவின் ஊடாட்டங்களோ இன்றி வெறும் வாழ்வின் சிரமங்களைச் சொல்லும் படைப்பாகத் தன்னைக் குறுக்கிக் கொள்கிறது.

லாய் இலக்கியத்தில் ரஞ்சாவ் செபாஞ்சாங் ஜாலான் நாவலின் இடத்தை மதிப்பீடு செய்வதற்கு இன்னுமே நிறைய மலாய் நாவல்களை வாசிக்க வேண்டும். வாழ்வின் நிச்சயமின்மை புதைமணலாய் ஒரு தலைமுறையை உள்வாங்கி கொள்ளும் போது அதன் நிச்சயமின்மைக்குள் நின்று வாழ்வைத் தரிசிக்கும் இன்னொரு தலைமுறை உருவாகும் சித்திரத்தை வெறும் வாழ்க்கைத் தேவைகளைக் கொண்டு சொல்ல முயன்ற படைப்பாக இதனைக் குறிப்பிட முடிகிறது.

*ரஞ்சாவ் செபாஞ்சாங் ஜாலான் நாவலைத் தழுவி 1983 இல் அதே பெயரில் மலாய் திரைப்படம் ஒன்றும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதன் முழுமையான பிரதி யுடியுபில் கிடைக்கவில்லை.

 

 

 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோக முகாம் அனுபவம்

யோக முகாம் அனுபவம் யோகா செளந்தர் எனும் பெயரை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் அவரிடம் யோகப்பயிற்சி பெற்றவர்கள் அவரது கற்பித்தல் முறையின் சிறப்பையும் பயிற்சிகளின் பலனையும் குறித்து எழுதிய கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து வைத்திருந்தேன். மலேசியாவில் அடிப்படை யோகப்பயிற்சிகளுக்கான அறிவிப்பை எழுத்தாளர் ம.நவீன் வெளியீட்டப்போது ஆர்வத்துடன் அதில் பதிந்து கொண்டேன். முன்னரே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் செளந்தரை   பார்த்திருந்தேன். முதற் சந்திப்பிலே இறுகத் தழுவி முதுகில் செல்லமாக தட்டி இயல்பாய்ப் பேசத் தொடங்கினார். அவரின் இயல்பான பாணியே பயிற்சிக்கு வந்தவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கிவிடுவதைக் கண்டேன். அந்தப் பயிற்சியில் அடிப்படையான   ஆறு ஆசனப்பயிற்சியகளையும் முதன்மைப்பயிற்சியாக யோக நித்திரா எனும் பயிற்சியையும் அளித்தார். பயிற்சிகளுக்குப் பின் நவீன மருத்துவம், அறிவியல் சொல்லும் செய்திகளை யோகத்துடன் தொடர்புபடுத்திய கேள்விகள் ஒருபக்கமும் யோகத்தின் பலன்கள் எனப் பரவலாக அறியப்படுவற்றின் மீதான கேள்விகள் என இருவேறு கேள்விகளையும் செளந்தர் எதிர்கொண்டார். அவற்றுக்கு அவரளித்த பதில்களிலிருந்து சிலவற்...

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே...

வல்லினம் முகாம் & விருது விழா அனுபவம்

  வல்லினம் வழங்கும் இளம் எழுத்தாளருக்கான விருது   எனக்கு வழங்கப்படுவதாக மார்ச் மாதம் நடந்த வல்லினம் முகாமின் இறுதி நாளன்று எழுத்தாளர் அ.பாண்டியன் அறிவித்தது முதலே விருது குறித்த பதற்றங்கள் மனத்தில் ஏற்படத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்த வாழ்த்துச் செய்திகளிலும் விருதுக்கான தகுதியென்பது தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதே என பல முக்கியமான எழுத்தாளுமைகள் எச்சரிக்கையுடன் நினைவுறுத்திக் கொண்டே இருந்தனர். வல்லினம் எடுத்திருந்த எழுத்தாளுமைகளின் ஆவணப்படங்கள்தான் தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவற்றில், எழுத்துப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தையும் தேக்கத்தையும் சொல்கின்ற பகுதிகளில் எழுத்தாளர்களிடம் வெளிவரும் குற்றவுணர்வும் துயரும் ஒவ்வொரு முறையும் என்னை அச்சுறுத்தக் கூடியது. அதனைக் கடந்து தொடர்ந்து இயங்க வேண்டுமென்கிற உணர்வு எப்பொழுதுமிருக்கும். அதனையே, எழுத்தாளுமைகள் வாழ்த்தும் எச்சரிக்கையுமாய் கலந்து சொல்லிக் கொண்டிருந்தனர். விழாவன்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் வெளியீடு கண்டால் நன்றாக இருக்குமென எழுத்தாளர் ம.நவீன் தெரிவித்தார். அதற்காகக் கதைகளைத் தொகுத்து அனுப்பினேன். ஒவ்வொரு ...