முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஹாத்மன் சிறுகதைகள்

 மஹாத்மன் சிறுகதைகள் வாசிப்பனுபவம்

தமிழ் விக்கி பக்கத்தில் மலேசிய எழுத்தாளர்கள் சிலரைக் குறித்த பதிவை உருவாக்கும் போது எழுத்தாளர் மஹாத்மனைக் குறித்துத் தரவுகளை இணையத்தில் தேடினேன். ஒரு நேர்காணல், சிறுகதைத் தொகுப்பு மீதான விமர்சனக் கட்டுரை என மிகச் சொற்பமானத் தகவல்களே இருந்தன. அவரின் ஒ லாவே கதை மட்டும்தான் கதையாக இருந்ததாக சிங்கப்பூர் எழுத்தாளர் இளங்கோ தன்னிடம் சொன்னதாக நேர்ப்பேச்சில் சிரித்துக் கொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது. அவரது சிறுகதைத் தொகுப்பை எடுத்து வாசித்தேன். அவர் வெளியீட்டிருக்கும் ஒரே நூலும் அதுதான் நினைக்கிறேன்.

தொகுப்பில் இருந்த 8 கதைகளையும் வாசித்த பின்னர், நேரடி வாழ்வில் பெற்ற அனுபவங்களும், சொல்ல கேட்ட கதைகளும் எப்பொழுது கதையாக உருமாறுகின்றன என்ற கேள்வியும் உடன் எழுந்தது. மஹாத்மன் எழுதிய கதைகள் யாவும் நேரடியான அனுபவப்பதிவிலிருந்தும் கண்டும் கேட்ட கதைகளிலிருந்தும் அமைந்தவை. இதைத் தன்னுடைய நேர்காணலிலும் குறிப்பிடுகிறார். அதைப் போல ஒவ்வொரு கதையும் நான் எனத் தன்னிலையில் தொடங்கி ஒற்றை மனிதனின் அகச் சிக்கல்களை ஒட்டியே அமைகிறது. மஹாத்மன் முன்வைக்கும் பாத்திரம் எல்லா கதைகளிலும் ஒன்றைப் போன்றதாகவே இருக்கிறது.

 


முதலாவது கதையான மதம் பிடித்தது எனும் கதையில் மனநலக் குறைவான தந்தையைக் குணப்படுத்த பல சிகிச்சைகளையும் மாந்தீரிகத்துக்கும் அலைந்து கொண்டிருக்கும் குடும்பச் சூழலில் இயற்கையை ரசிக்கும் தனக்குள் ஒடுங்கிப் போனவனாகச் சிறுவனொருவன் வளர்கிறான். உடன்பிறந்தவர்களுக்கும் அவனுக்குமான வயது வித்தியாசம் அதிகம் இருப்பதால் அவர்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கிறான். அத்துடன் அவனுக்குத் திக்குவாய் சிக்கலும் இருக்கிறது. தோட்டத்திற்கு கிருஸ்துவ மத ஊழியம் செய்ய வரும் பாஸ்டரிடம் இயல்பாக நெருங்கிப் பழகுகிறான். பையனின் திக்குவாய் சிக்கலைப் பாஸ்டர் போக்கிக் காட்டுகிறார். அவருடன் கிருஸ்துவக் கூட்டங்களுக்கு அனுப்பி வைக்க அம்மா உடன்படுகிறார். அவனுடைய தந்தையையும் குணப்படுத்த முயல்கிறார். அவரின் பேச்சு முறையால் அப்பாவும் மெல்ல இயல்பு நிலைக்கு மீள்கிறார். அவனும் தாய்தந்தையரும் கிருஸ்துவ மதத்துக்கு மாறுகின்றனர். அப்பாவை உடனடியாக நோயிலிருந்து மீட்டெடுக்க கடும் உபவாசத்தை பாஸ்டர் பரிந்துரைக்கிறார். மருந்து, உணவும் ஒழிந்து விசுவாசத்துடன் உபவாசம் இருக்க முடியாமல் அப்பாவுக்கு மனநோய் முற்றுகிறது. அம்மாவையும் கொன்று வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தித் தப்பித்து ஒடிப் போய் லாரியில் அடிப்பட்டு இறக்கிறார். இளமையில் நிகழ்ந்து விடுகின்ற அதிர்ச்சியும் பெருந்துயரமுமான சம்பவமொன்றை இந்தக் கதையில் காண முடிகின்றது. பால்யத்தின் பரவசத்தைக் குடும்பச் சூழலும் பறித்துக் கொள்கின்றது. அதன் பிறகு, தீவிர மதப்பற்று எனும் நம்பிக்கை வழங்கப்படுகின்றது. நிகழ்ந்துவிடும் துயரால் அதுவும் அற்றுப் போகும் போது ஏற்படும் வெறுமையும் குழப்பமுமே கதையின் வாசிப்பனுபவமாக அமைகிறது. இவ்வாறான அதிர்ச்சியும் அலைவும் அளிக்கும் அக அனுபவங்களினூடே உடல் கொள்ளும் அனுபவத்தைச் சிறப்பாக அளிக்கின்றார். கடும் மன, உடல் உளைச்சலுக்குப் பின்னதான உடலனுபவத்தை //கழுத்து நரம்புகள் இரண்டும் தாடை எலும்புகளுடன் பின்னிச் சுளுக்கிக் கொண்டன// எனச் சித்திரிக்கிறார். இவ்வாறான சித்திரிப்புகள் கதையின் பாத்திரம் கொள்ளும் சோர்வை மிகத் தத்ரூபமாகச் சொல்கின்றன. இந்தக் கதையில் அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கும் மனநோய் என்பது மிக முக்கியமானது. அவரைக் குணப்படுத்த அளிக்கப்படும் நோன்பு அவரின் உள்ளியல்பை வெளிப்படுத்தச் செய்கிறது. அவரில் அடங்கியிருக்கும் நோயியல்பு அவன் உள்ளொடுங்கிப் போவதற்கான காரணமாகவும், துயர் கொள்வதற்கான காரணமாகவும் அமைகின்றது. அவனது இயல்பையும் தந்தையின் சிக்கலையும் ஒன்று சேர்க்கும் புள்ளியின்றி கதை அமைவதால் அதிர்ச்சியூட்டும் அனுபவப்பதிவாகவே கதை அமைகிறது.

மஹாத்மனின் கதைகளில் வரும் பாத்திரங்கள் ஏதேனும் புறச்சூழல் அல்லது சிக்கலால் ஒடுங்கிப் போயிருக்கின்றனர். அவர்களுக்கான விடுதலையாக மதப் போதனைகள் வழங்கப்படுகின்றன. அந்தப் போதனைகளும் நிகர்வாழ்க்கைக்குமான முரணும் அது உருவாக்கும் அர்த்தமின்மையையும் கதைகள் சுட்டுகின்றன. மூன்றாவது அற்புதம் கதையில் கிருஸ்துவ மதப்போதனையில் தீவிரமாக ஈடுபடும் குடும்பத்துடன் நெருங்கிப் பழகுகிறான் பதின்ம வயது இளைஞனொருவன். அந்த வீட்டிலுள்ளவர்கள். கிருஸ்துவ மதத்தின் ஆசாரங்களை அனைத்தையும் முறையாகப் பின்பற்றுகின்றனர். அவர்கள் வீட்டில் நடைபெறும் போதனையில் பங்குபெறுவதால் உள்ளூர டேனியலும் முதிர்ந்தவனாக மெய்ம்மை அடைந்தவனாகத் தன்னை உணரத் தொடங்குகிறான். நாற்பது நாட்கள் வெறும் வயிற்றுடன் இருந்து உபவாசம் இருக்கின்றனர். இறுதி மூன்று நாட்களின் போது, தீவிரமான பிரார்த்தனை புரியவும் உபவாசம் இருந்து ஒய்வெடுக்கவும் இடம் தேடிக் காட்டுக்குச் செல்கின்றனர். போதகர் கற்பித்த பைபிள் நூல்படியாக நிகழ்த்தப்படும் பிரார்த்தனையில் நூலில் சொல்லப்பட்டதைப் போன்றே சில அற்புதங்கள் நிகழ்வதாக உணர்கின்றனர். தங்கத்துகள் மழை, சூட்ச்சுமமான இறைவனின் அருகிருத்தல் ஆகியவற்றை உணர்கின்றனர். புற்றுநோய் கண்டவள் கூட வயிறு வலியை மறந்து வயிறுவலிக்கச் சிரிக்கிறாள். அந்தக் குடும்பத்தில் மதப் போதனைகளை நன்கு அறிந்தவரும் பணம் மிகுந்தவருமான அஞ்சலையின் கணவர், இவர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனையைச் சாத்தானின் செயல் என நிறுத்துகிறார். புற்றுநோய் கண்டவளும் பொய்யாகத்தான் நோய் தீர்ந்ததாகச் சொன்னதாக மறுப்பு சொல்கின்றாள். மெய்யியல் பரப்புகின்ற மதம், குடும்பம் உட்பட எல்லா அமைப்புகளிலும் இயங்கும் அதிகாரம் என்னும் அடுக்கைத் தாண்டி நிகழ்பவை இவ்வாறாக எதிர்ச்செயலாக மாறுவதைக் கதை காட்டுகிறது. இந்தக் கதையும் நேரடி அனுபவப்பதிவைக் கூறும் மொழியிலே அமைந்திருந்தது.

இந்தத் தொகுப்பின் பலவீனமான கதைகளில் ஒன்று பிணப்பெட்டி எனும் கதை. முதல் கதையின் தொடர்ச்சியைப் போன்றே தொடங்கும் கதையில் இறந்து போன அப்பாவின் பிணத்தைக் கிடத்தி வைத்துப் பிணப்பெட்டிக்காகக் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். எந்தச் சலனமுமின்றி அப்பாவின் பிணத்தைக் கடப்பதிலிருந்தே உள்ளூர அப்பாவின் மீதான விலக்கத்தை உணர முடிகின்றது. இந்து மதத்திலிருந்து கிருஸ்துவ மதத்துக்கு மாறிதால் எந்த மத வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட வேண்டுமென்கிற விவாதம் நிகழ்கிறது. அதில், குடும்பத்தின் வழக்கப்படி இந்துமதச் சடங்கு செய்யப்பட வேண்டுமெனச் சொல்லப்பட்டு கூச்சலாலும் அதிகாரத் தோரணையாலும் எதிர்தரப்பை விரட்டியடிக்கின்றனர். இந்தக் கவுரத்துக்குப் பலியாக வேண்டா விருப்பாக தாய்மாமன் சிறியப் பிணப்பெட்டியை வாங்குகிறார். அதில் பிணத்தை வைக்க முடியாமல் போனதால், தோட்டத்தில் ஓடிப்போயும் திருமணத்துக்கு முன்பும் கர்ப்பமான இரண்டு பெண்கள் தங்கள் கடுமையான உடலுழைப்பால் பிணப்பெட்டியைப் பிரித்துப் பெரிதாக்குகின்றனர். அவர்களின் உதவியும் உறுதியுமே கதைசொல்லியின் கண்களுக்குத் தெரிவதாகக் கதை முடிகின்றது. ஊரால் ஒதுக்கப்பட்ட பெண்கள் செய்து தரும் பிணப்பெட்டி எனக் கதை ஒதுக்கப்பட்டவர்களுக்கான சிறப்பை நேரடியாகப் பேசும் கதையாகச் சுருங்கிப் போகிறது. கதையாசிரியரின் நேரடிக் கதைக்கூறு முறையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். இம்மாதிரியாகவே, பெருநகர வாழ்வின் நெருக்கடிக்குள் ஒன்றமுடியாத உளச்சோர்வும் இருத்தலியல் சிக்கலுடன் அலைபவனின் அகத்தை நடந்தது என்னவென்றால் கதையும் பரதேசி நடையும் அந்த அலறலும் கதையும் பிரதிபலிக்கின்றன. நகரத்தில் வீடிலியாக அலைந்து கொண்டிருப்பவன் எந்நேரமும் காவல் துறையினரின் கேள்விகளுக்கும், விசாரணைகளுக்கும் அஞ்சி கொள்ள வேண்டியதைச் சித்திரிக்கிறார். அவ்வாறாகச் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் சிறையில் உணரும் அந்நியத்தன்மையை நன்கு காட்சியாக்கப்பட்டிருக்கிறது. சிறையில் அவனுக்குக் காதுவலி உண்டாகிறது. அதற்காக மருத்துவரைச் சந்திக்கவும் இனப்பாகுபாடு தடையாக அமைகிறது. அங்கு நன்னடத்தையின் காரணமாய் வழங்கப்படும் சிறைப்பணிகள் யாவும் மலாய் கைதிகளுக்கே வழங்கப்படுகின்றன. அதனை இந்தியக்கைதிகளோ, சீனர்களோ எதிர்க்கவில்லை. வெளியிலிருப்பதைப்போல ஒப்புக்கொள்ள பழகியச் சூழலில் மலாய்க்கைதிகளுக்கும் மற்றவர்களுக்கும் கலவரம் ஏற்படுகிறது. அதற்கான சாட்சியத்தின் போது சுமூகத்தன்மை கருதி உண்மை மறுக்கப்பட்டப்பின் கதைச்சொல்லிக்கு விடுதலை அளிக்கப்படுகிறது. அது அவனுக்கு ஒரு வெறுமையை அளிக்கிறதெனக் கதை முடிகிறது. அவனது விடுதலையை நினைத்து மகிழ்ச்சியடைய தடுப்பது எது என்றால் வன்முறைக்கான விருப்பமா, வெளியுலகம் மீதான வெறுப்பா, கைதிகளின் கோழைத்தனமா என்ற கேள்வியுடனே கதை முடிகிறது. 

அடுத்ததாக , பரதேசி நடையும் அந்த அலறலும் கதை பெருநகரத்தில் வேறுபட்ட பல மத அமைப்புகள் அளிக்கும் இலவச உணவை உண்டு வாழும் எந்த மத அமைப்பிலும் ஒட்டிப் போக முடியாத கதைசொல்லியும் அவனைப் போன்ற அலையும் மனிதர்களையும் பேசுகிறது. அவனது அலைச்சலுக்கு சிலர் முன்வந்து அளிக்கும் இலவச உணவு உண்பதின் குற்றவுணர்ச்சி போதம், அறிவுரைகளை வெறுத்து ஒதுக்கி அலைகிறான். அவன் முன்னால் கனத்த பையுடன் வெள்ளைக்காரப் பெண்ணொருத்தி நடக்கின்றாள். மதத்தில் அல்லது எந்த அமைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அலையும் மனிதர்களின் அகவுணர்வு சொல்லப்படுகிறது. ஆனால், இதுவும் சொல்லப்படும் தகவல் அளிக்கும் புதுமையாலும் சித்திரம் அளிக்கும் அதிர்ச்சியாலும் நிலைகொள்கின்றது.

கடவுள் கொல்ல பார்த்தார் எனும் கதையும் தனக்கு நேர்ந்த அகச்சிக்கலுக்குக் கடவுளைக் காரணம் காட்டும் கதைசொல்லி காட்டுக்குள் எவ்வித இலக்குமற்று அலைகின்றான். அங்கு நிகழும் சிரமங்களைக் கடவுளின் வஞ்சனைகளாகவே காண்கின்றான். கடவுளின் வஞ்சிக்கின்ற பார்வையிலிருந்து விலகிக் கொள்ளவே பயணம் மேற்கொள்வதாகச் சொன்னாலும் ஒரு வகையில் அந்த இலக்கற்ற பயணம் கடவுளைத் தேடியதாகவே அமைகின்றது. அது மரணத்தைத் தேடிக்கொள்வதாகவும் புரிந்து கொள்ளலாம். முட்செடிகள் பட்டு தோல் கிழிந்து கிடக்கும் போது பூர்வக்குடி பெண்ணொருத்தி உடலில் போர்த்தியிருக்கும் முட்களை அப்புறப்படுத்தி முலைப்பால் பீய்ச்சுகிறாள் என்பது வாழ்வதற்கு வழிசெய்கிறது. வாழ விருப்பமற்றவனுக்கு அது நிச்சயம் ஒருவித உணர்வெழுச்சி தருணமாக அமைந்திருக்கலாம். ஆனால், கதைத் தலைப்பு தேர்வு, கதைசொல்லியின் வாழ்வு, கடவுள் வெறுப்பு ஆகியவை சேர்ந்து கதையைப் புரிந்து கொள்வதில் சிக்கலை உண்டாக்குகிறது எனலாம்.

மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள் என்பது கிருஸ்துவ மத வழக்கப்படி இறந்து போன பிணத்தைத் தூக்க வருகின்ற தூதர்களில் ஒருவன் அளிக்கும் மரணித்தவனின் வாழ்வில் நிகழ்ந்த மூன்று சம்பவங்களைக் கதை சொல்கிறது. மூன்று சம்பவங்களுமே மரணித்தவின் குற்றவுணர்வைத் தீண்டும் ரகசியங்கள். முதல் சம்பவம், தோட்டத்தில் அடாவடியாக மனைவியையும் குழந்தையையும் குடித்து விட்டு அடித்துக் கொண்டிருந்த சாமியாடியை மருள் வந்தவனைப் போல ஆடி சாட்டையால் அடித்துக் கொன்றது. இரண்டாவது சம்பவத்தில். தோட்டத்தில் வசைமொழிகளுடன் இன்னொருத்தியுடன் அம்மா சண்டையிடுவதைத் தடுக்கும் போது அரிவாளால் அம்மாவையே வெட்ட நினைத்துப் பின் நேரும் குழப்பங்களால் ஒரேயடியாக வீட்டை விட்டே செல்வது. அதன் பிறகு, பணம் கொடுக்க மறுத்த சீன முதலாளியைக் கொன்று மறைப்பது. இந்த மூன்றுமே தான் நம்புகின்ற ஒழுங்குக்கு ஆட்பட மறுக்கின்ற அல்லது எதிர்மாறான சம்பவங்கள் நேரும் போது மனம் கொள்ளும் கணநேர அலைதலையும் அதன் விளைவாகப் புரிகின்ற குற்றங்களையும் சொல்கின்றது. இந்தக் குற்றங்களை நினைவுக்கூர்ந்து நியாயச்சபைக்குச் செல்வதாகக் கதை முடிகின்றது.

இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று ஒ லாவே எனும் கதை எனலாம். வீட்டிலிருந்து வெளியேறி அலைந்து கொண்டிருக்கும் ஒருவன் அவனைப் போன்ற மற்றொரு சீனனைக் கண்டுகொள்கிறான். அவர்களின் நடனம், புத்தகம், சதுரங்க விளையாட்டு என இருவரும் தங்களுக்குள் கற்றும் கற்பித்தும் பகிர்ந்து கொள்கின்றனர்.  இருவருக்கும் தனித்த இடமென்று ஒன்றில்லை என்றப்போதிலும் அலைதலில் நுட்பமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தியனான கதைசொல்லிக்கு ஒருவகையான கட்டுப்பாட்டுப் பிரக்ஞை அமைந்திருக்கின்றது. பணம் செலவு செய்வதிலும், கற்றுக் கொள்வதிலும், மற்றவற்றை உள்வாங்குவதிலும் அரூபமான தன்னிலை ஒன்று கட்டுப்படுத்துகிறது. சீனர் முற்றாக அதை இழந்து வேறொன்றால் இயங்குபவனாக இருக்கின்றான். கேசினோவில் பணத்தைப் பலமுறை இழக்கத் தயாராய் இருக்கின்றான். அதிர்ஷ்டம் மட்டுமே என எண்ணுமளவு அடுத்தடுத்த வெற்றிகள் அமைகின்றன. கேசினோ சூதாட்டத்தில் பணமிழந்த பின் தன் தாயில் கடையிலிருந்து கொண்டுவரும் விலையுயர்ந்த பணப்பை, வார்ப்பட்டை, ஆகியவற்றை விற்றுப் பணமாக்கிக் கொள்கிறார்கள். இறுதியாக எஞ்சும் விநாயகர் சிலையைக் கோவில், இந்தியக் கடை என யாருமே வாங்க மறுக்கின்றனர். வேறு வழியின்றி சிலையை காடொன்றில் வைத்துவிட்டுச் சென்று சில ஆண்டுகள் கழித்து அவ்விடத்தைப் பார்க்கும் போது கோவிலொன்றே உருவாகியிருப்பது இருவருக்கும் வியப்பு ஏற்படுத்துகிறது. சீனர்களுக்கும் இந்தியர்களுக்குமான மனநிலையில் இருக்கும் உள்ளார்ந்த பண்பாட்டு முரணைக் கதை பேசுகின்றது.

இந்தக் கதைகளில் இருக்கும் பொதுத்தன்மைகளில் சிறுவயதில் நிகழ்ந்துவிடுகின்ற அதிர்ச்சியான சம்பவத்துக்குப் பின் கடவுளுக்குப் பின் முதுகு காட்டி தன்னுள் ஒடுங்கி அலையும் வாழ்வொன்றைத் தேர்வு செய்து கொள்ளும் இருத்தலியல் மனநிலையைக் குறிப்பிடலாம். லட்சியவாதம், மதம் சார்ந்த நல்லியல்புகளின் முரண்களையும் பொருளின்மையையும் முன்வைக்கின்றன. சில கதைகள் மதத்தையும் கடவுளையும் கைவிடமுடியாமல் அலைந்து கொண்டிருப்பவனின் குழப்பத்தையும் காட்டுகிறது. விளிம்பு நிலை மனிதனின் அகத்தில் கடவுள், மதம் ஆகியவற்றின் இடத்தைக் காட்டுகிறது.

இந்தக் கதைகளின் சம்பவங்களை அடுக்கிப்பார்த்தால், சிறுவயது அதிர்ச்சி, மதப்போதனை அதன் பின்னான அலைவு, வெறுமை என ஒரு பரிணாமத்தைக் காண முடிகின்றது.இந்தக் கதைகளின் கலைக்குறைப்பாட்டைத் தாண்டி அதனை முக்கியமானதாக ஆக்குவதும் இதிலிருக்கும் கடவுள் பற்றிய கேள்விகள் தான். அத்துடன் உணர்ச்சி மிகுந்த தருணங்களில் நிகழும் மனவெழுச்சியும் அது பின்னாளில் குற்றவுணர்ச்சியாக மாறி மனப் பிறழ்வையும் பற்றிய சித்திரிப்புகளும் கதைகளை மிக முக்கியமானதாகக் காட்டுகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற