முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குள்ளச்சித்தன் சரித்திரம்

11 ஜூன் 2022 அன்று வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்ந்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புலக அரங்கில் குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலை ஒட்டி ஆற்றப்பட்ட உரை.

 

குள்ளச்சித்தன் சரித்திரம்-வாசிப்புப் பார்வை

அறிமுகம்

புதுமைப்பித்தனின் காஞ்சனை சிறுகதையில் எழுத்தாளர் ஒருவர் அன்றாட வாழ்வின் சலிப்புச் சுழலுக்குள்  வாழ்வார். எழுத்தின் வாயிலாக அவர் கற்பனையிலும் அறிதலிலும் சென்று தொடக் கூடிய தூரங்களுக்கு மாறாக நிகர் வாழ்க்கையில் அன்றாடத்தின், யதார்த்ததின் சலிப்புக்குள் சிக்கியிருப்பார்.

மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்துநினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்டன்பாதையில்தான் இந்தக் கட்டை வண்டி செல்கிறது.

அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டுவிட்டுத் தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துகளையெல்லாம் பொருட்படுத்தலாமா

 நவீன வாழ்வின் சிக்கலும் கூட. அந்தச் சலிப்புச் சுழலிருந்து விடுபட புனைவுக்கும் வாழ்வுக்குமான கோட்டை அழித்துப் பார்க்கும் மாற்று அனுபவமே கதையாக அமைந்திருக்கும். அவருடைய வீட்டுக்குப் பிச்சைக்காரியாக வரும் பெண்ணை வீட்டு வேலைக்காரியாக மனைவி அமர்த்துவாள். அதற்கு முன்னரே, தூக்கமின்மை, பிண வாடை என விநோதமான உணர்வுகளை அடைவார். வந்திருக்கும் பெண் மீது தன்னுடைய அமானுடக் கற்பனைகளைச் சுமத்திப் பார்ப்பார்.

அவள் காசியில் கேட்ட இளவரசி காஞ்சனையின் கதையைச் சொல்வாள். மந்திரவாதியின் வஞ்சத்தால் கொல்லப்பட்ட இளவரசி வஞ்சம் தீர்க்க மீண்டும் வேலைக்காரியாகப் பிறப்பெடுத்திருக்கிறாள் என்ற மாதிரியான சித்திரிப்பு அமைந்திருக்கும். தூக்கத்திலிருக்கும் மனைவியை நடு இரவில் வேலைக்காரி கொல்வதாக எண்ணி அவளை எழுப்பிச் சேமக்கலக்காரன் கொண்டு வரும் திருநீற்றைப் பூசுவார். வேலைக்காரியும் வீட்டை விட்டுச் சென்றிருப்பாள். இறுதியாக அவரது மனைவி, இந்த ஆம்பிளைகளே இப்படித்தான் என அங்கலாய்ப்பதாகக் கதை முடியும். அவள் சொல்லக் கூடிய ஆம்பளைங்களே இப்படித்தான் என்பதற்கு, அன்றாட வாழ்வின் யதார்த்ததைத் தாண்டியவற்றை அறிந்து கொள்கின்றவர்களுக்கு ஏற்படும் மிகைக்கற்பனைகள்,தன்னிலையழிவு ஆகியவையாக உருவகிக்கலாம் என நினைக்கிறேன். அன்றாட வாழ்வில் ஏற்படும் பழகிப் போன அனுபவங்களுக்கு மாறாக ஏற்படும் நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் இந்தத் தயக்க மனநிலையைக் குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலில் வரும் ராம.பழனியப்பன் கதாபாத்திரத்துடன் பொருத்திப் பார்க்க முடியும்.



அன்றாட வாழ்வின் உண்மையை யதார்த்ததை மெய்ம்மை என்று வரையறை செய்தால் அதற்கு நிகரான உண்மையை மாற்று மெய்ம்மை எனச் சொல்லலாம். காஞ்சனையில் வரும் எழுத்தாளருக்கும் ராம.பழனியப்பனுக்கும் ஏற்படும் அனுபவங்கள் மாற்று மெய்ம்மையை ஒட்டியதாகவே அமைந்திருக்கிறது. ஒரு வகையில், காஞ்சனை கதை முன்வைக்கும் சில கேள்விகளுக்கான பதிலையும் குள்ளச்சித்தன் சரித்திரம் தேடுகிறது எனலாம்.

மழை பொழிவதற்கான காரணத்தை மையப்பாத்திரமான ராம.பழனியப்பன் பட்டியலிடுகின்ற போது ரூபக்காரணம், திறன் காரணம். பொருண்மை காரணம் ஆகிய அறிவியல் காரணங்களுடன் ஆடு,மாடு புல், தழை ஆகியவை பெருக என்ற ஒரு காரணத்தையும் முன்வைக்கிறான். மாற்றுமெய்ம்மையின் இருப்பைப் புறவயமாக அறிவியல் பார்வையில் தொகுத்துச் சொல்வதோ அல்லது மீபொருண்மையியல் அடிப்படையில் ஆன்மீக, மதம் சொல்லும் காரணங்களை ஒட்டி ஆராய்வதும் இந்நாவல் செய்யவில்லை. இந்தச் சாத்தியத்தை மட்டும் புனைவு வாயிலாகவும் தத்துவத்தை மொழியால் கவிதையாகத் தளர்த்தி அடைய முயல்கிறது.

 

 குள்ளச்சித்தன் நாவல் கதையமைப்பு

முதலாவது அடுக்கு

குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலின் கதையமைப்பை முதலில் சொல்லாலமென்று நினைக்கின்றேன்.. இந்த நாவலின் கதை சொல்லல் முறை நேர்கோடற்ற பாணியில் முன் பின் என சிக்கலான மூன்றடுக்குத் தளத்தில் நிகழ்கிறது. முதல் தளத்தில்

1976 இல் நடைபெறும் நிகழ்கதையில் நூலகராகப் பணியாற்றும் ராம.பழனியப்பனுக்கும் அவரது மனைவி சிகப்பிக்கும் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகியும் மகப்பேறு இல்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க  சிகப்பி எல்லாவகையான நேர்த்திக்கடன்களையும் விரதங்களையும் பக்தி சிரத்தையுடன் மேற்கொள்கிறாள். இதற்கு நேர் எதிர் திசையில் இவற்றை ஒருவகையான சலிப்புணர்வுடனும் நம்பிக்கையின்மையுடனுமே பழனியப்பன் அணுகுகிறார். தன்னுடைய தருக்க நியாயத்துக்கு அப்பாற்பட்டவை அனைத்தையும் தருக்கத்தால் பதில் காண முயல்கின்றான்.

பல்லாண்டுகளான மகப்பேறு இன்மைக்கு உபாயமாக இன்னும் சில நாட்களில் இவை தீர்ந்துவிடும் என முன்பின் அறிந்திராத சவுண்டி பிராமணரும் கண் பார்வையற்ற குறிசொல்பவரும் சொன்ன பின்னர் பழனியப்பனின் தருக்கச் சிந்தனையில் பெருங்குழப்பம் நேர்கிறது. வைத்தீஸ்வரன் கோவிலின் ஏட்டில் குழந்தைப்பேற்று அமையும் வயது அதற்கான காரணம் ஆகியவை முதற்கொண்டு மேலும் குழப்புகிறது.

இன்னொரு மெய்ம்மையை உணர கற்பனையை விரித்துக் கொள்ளும் எழுத்தாளரின் இன்னொரு பரிணாமமாகத்தான் குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலின் ராம பழனியப்பனைக் காண முடிகிறது.தன்னுடைய அறிதலுக்கு அப்பாற்பட்ட உலகொன்றைப் புரிந்து கொள்வதில் இருக்கும் தயக்கம் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.  இவ்வாறாகத் தான் வாசித்து அறிந்த நூல்களிலிருந்தும் பெற்ற உடனிகழ்வான அறிவு அசோசியட் மேமரியிலிருந்து வெளியேறி மாற்று மெய்ம்மையை ஏற்றுக் கொள்ள முடியாதவனாக ராம.பழனியப்பன் இருக்கிறான்

//இவ்வளவும் நடக்கின்றப்பின்னும் திகில்தான் கூடிக்கொண்டே போகிறது, திகில் முற்றும் போது அதிலிருந்து தப்பிக்கவேண்டி மனம் தன்னிச்சையான காரணங்களையும் சமாதானங்களையும் மனம் உற்பத்தி செய்கிறது.//

 

இரண்டாவது அடுக்கு

இந்தத் தடுமாற்றத்தின் பின்னணியில் பிற கதைமாந்தர்களும் மாற்றுமெய்ம்மையை உணர்வதின் பல ஊடுவழிகளை நாவல் சித்திரிக்கிறது. ராம.பழனியப்பனுக்குக், குள்ளச்சித்தன் சரித்திரம் என்ற நூல் கிடைக்கிறது. 1955 இல் ஹாலாஸ்யம் ஐயரால் எழுதப்பட்ட நூலில் தம்முடைய நெருங்கிய தோழரும் சித்தருமான முத்துச்சாமி கேட்டுக்கொண்டதற்கிணங்க குள்ளச்சித்தன் எனும் சித்தரின் அற்புதங்களையும் முன்பின் எனக் காலம் வெளி ஆகியவற்றைக் கடந்த அவரின் முற்பிறவிகள் ஆகியவற்றை நேர்கோடற்ற முறையில் நாவலைப் போலவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நூலின் கருத்துகளைத் தற்கால மொழிக்கும் சிந்தனைக்கும் ஏற்ப நவீனப்படுத்தியும் அதே பெயரில் இரண்டாம் பதிப்பும் வெளியீடப்பட்டிருக்கிறது. இது நாவல் நிகழும் இரண்டாவது தளம். முத்துச்சாமிக்கும் தனக்கும் நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல்கள், அனுபவங்கல் ஆகியவற்றுடன் யோகிஸ்வரர் எனப்படும் குள்ளச்சித்தருக்கும் தங்களுக்குமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்றவர்களின் உரையாடலையும் இந்நூல் கொண்டிருக்கிறது.

அந்த நூலிலும் குள்ளச்சித்தனின் இன்னொரு வார்ப்பாக இருக்கும் முத்துச்சாமி சொல்ல நூலாசிரியர் பதிவு செய்யும் நேரடி அனுபவங்கள், குள்ளச்சித்தன் சாமியாரைப் பற்றி நீலகண்டன் எனும் வழக்கறிஞரின் அனுபவங்கள், பெருமாள் எனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் அனுபவங்கள் சாமியின் அணுக்கச்சீடரான பலவேச முதலியாரின் அனுபவங்கள், அற்புதங்களைச் சொல்லும் தாயாரம்மாள், சென்னகேசவ முதலியாரின் அனுபவங்கள் எனப் பலவும் சேர்ந்த நூலாக இருக்கிறது. இத்தனையும் கடந்துதான் காலம், வெளி அற்ற மெய்ம்மையொன்றின் தரிசனத்தைக் கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னொரு வகையில், அதனை உணர்வதற்கு இவையெல்லாம் திரைகளாக இருக்கின்றன என்றும் சொல்லலாம். ஒவ்வொன்றையும் கடந்த பின் காண்பது பொருள்ளில்லாத வெளியாக அல்லது நாம் உண்டாக்கிக் கொள்ளும் பொருள் வெளியாக இருக்கலாம்.

வழக்கறிஞர் நீலகண்டன் குள்ளச்சித்தரின் அற்புதங்களை முன்னிலைப்படுத்தி மடத்தை நிறுவி செல்வமும் அதிகாரமும் மிக்க பீடத்தை உருவாக்குவதில் நாட்டம் கொண்டிருக்கிறார். தாயாரம்மாள், சென்னகேசவ முதலியார் போன்றவர்களுக்கு உலகியல் கவலைகளைத் தீர்ப்பதற்கே சித்தர் தேவையானவராக இருக்கிறார். ஹாலாஸ்யம் ஐயருக்குச் சித்தரின் அழைப்பு கிடைக்கிறது. அதைப் போல பழனியப்பனுக்கும் சித்தரின் அழைப்பும் அணுக்கமும் அமைகின்றது. ஹாலாஸ்யத்தின் முன் இருக்கும் கைதி ஒருவன் சொல்லும் யாரை காக்க யாரை அடிக்கிற தொர என்ற சொல்லும் நாவிதனின் உலகியல் தாண்டிய ஒன்றுக்கான சிரிப்பும் சேர்ந்து உலகியலும் அதைத் தாண்டிய மெய்ம்மை என கேள்வி எழக்கண்டு சித்தரிடம் செல்கிறான். அவனுக்கு இயல்பாக வெறுமை ஒன்று அமைந்திருந்தது என ஊகிக்கலாம். அடுத்ததாக, பழனியப்பன், அறிந்தவற்றாலும் தருக்கத்தாலும் மேலும் மேலும் பொருள் தேடி வந்தடைகின்ற குழப்பமும் அவனை மெய்ம்மையை நோக்கி இட்டுச் செல்கிறது.

 

 

 

 

 

மூன்றாவடு அடுக்கு

மூன்றாவது தளமாக, அதன் உள்ளே ஊடுபிரதியாக 17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வணிகம் புரிய வரும் வெள்ளையனான மவுண்ட் பேட்டன் எனும் வணிகனின் மெய்ம்மை அனுபவங்களும் அமைகின்றன. வணிக நோக்கத்துக்காக இந்தியா வரும் அவனுக்கு இங்கிருக்கும் மெய்ம்மையில் உள்ளூர ஈடுபாடு ஏற்படுகிறது.  அவனது முற்பிறவிகளை இங்குள்ள ஞானிகள் காட்டுவதிலிருந்து தான் வந்த நோக்கம் சிதைந்து வேறொரு மெய்ம்மையை அறிகிறான்.

இந்த மூன்று தளங்களிலும் தங்கள் தருக்க அறிவால் அறியக்கூடிய அனுபவங்களுக்கு மாறாக நிகழ்பவற்றைப் புரிந்து கொள்வதில் இருக்கும் ஊசலாட்டத்தை வெவ்வேறு காலக்கட்டம், பின்னணி, இயல்பு கொண்ட மனிதர்களின் அனுபவத்தை நாவல் பேசுகிறது. நாவலாசிரியர் சொல்வதைப் போல மாற்று மெய்ம்மைக்கு அப்பால் நிகழும் தளத்துக்கான பல ஊடுவழிகள் கொண்டதாக நாவல் அமைகின்றது.

அதைப் பொருள் படுத்திக் கொள்ளும் முயற்சிகளாகவே உலகியலும் அதைச் சார்ந்தவற்றையும் குறிப்பிடலாம். உலகியல்  அதைக் கடந்த நிலை/மெய்ம்மை இவற்றுக்கான இருமை நிலை ஊசலாட்டமே மையக் கதைமாந்தரான பழனியப்பன், நூலாசிரியர் ஹாலசியம் அவர்களின் மனநிலையாக இருக்கிறது. இந்த ஊசலாட்டத்திலிருந்து விடுபட்டு மெய்ம்மையை அணுக இருக்கும் சில பாதைகளாகவே இந்நூலில் வெளிப்படும் ஒவ்வொரு பாத்திரத்தின் புலன் அனுபவங்களையும் அதைக் கடந்த நிலையையும் குறிப்பிடலாம்.

மெய்ம்மையின் ஊடுவழிகள்

எனக்கு மிகவும் நெருக்கமானதாக அமைவது, பழனியப்பனின் மனநிலை. காண்பன அனைத்தின் மீதும் ஏற்கெனவே அறிந்த தருக்கத்தின் நியாயத்தை விதிப்பது அவனது வழி. மழை ஏன் பெய்கிறது என்பதற்கு பொருண்மை காரணம். நாம் அறிந்த அறிவியல் வழிமுறை. காற்று குளிர்ந்து மழை பொழிவது. திறன் காரணம், மேகத்திடம் ஈரப்பதம் கொள்ளக்கூடியது. மூன்றாவது, ரூபக்காரணம், தண்ணீரின் இயல்பு தரையை நோக்கிப் பாய்வது. இந்த மூன்று அறிவியல் வழி உண்மைக்கு அப்பால் நான்காவதாக, ஆடு மாடு தழைகள் தாவரங்கள் உயிர்வாழ எனும் காரணத்தைக் குறிப்பிடுகிறான். இது தருக்கத்தால் மறுக்கப்படமுடியாதது. அதே சமயத்தில், அறிவியல் உண்மையைக் கடந்த நிலைக்கும் நெருக்கமானது. அறிவைக் கொண்டு இயற்கை நிகழ்வுகளையும் உலகியலுக்கு அப்பாலான வாழ்வார்த்ததைப் புரிந்து கொள்ள முயல்வதன் சான்று. சவுண்டி பிராமணர், குழந்தைப் பேறு கிடைக்குமென்றும், வாழ்த்துகின்ற போது அவர் காசு கேட்காமல் போவது பழனியப்பனுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது.

அதற்கு நேர்மாறாக, உலகியல் செயல்கள் அனைத்தையும் இறைவனின் செயல்கள் என்று சிகப்பி திடமாக நம்புகிறாள். குழந்தைப் பேறின்மைக்கு உடல் குறை காரணமென்றால் அதைக் கொடுத்த இறைவனே தீர்க்கவும் செய்வான் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறாள். உலகியல் தேவைகளைத் தீர்க்க இறைவனுக்கு நேர்த்திக் கடன் செய்தல், விரதம் எடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறாள். உள்ளுணர்வையும் புலன் சார்ந்த அனுபவங்களையும் மட்டுமே கொண்டு மெய்ம்மையை அடைய முயலும் பலரின் வடிவம் அவள். குழந்தைப் பேற்றுக்கு ஏங்கித் தவிக்கும் சிகப்பியில் உறைந்திருக்கும் வெவ்வேறு ரூபங்களும் வெளிப்படுகிறது. பகவதிக் கோவிலில் நடக்கும் பூஜையின் போது செண்டை முழங்கும் போது ஆடுவதற்குத் தயாராக இருக்கின்றாள்.  குடும்பச் சொத்தை மீட்பதில் வெளிப்படும் உறுதியும், உலகியலில் நிலைகொள்ள முடியாமல் தவிக்கின்ற கணவனைப் பிடித்து நிறுத்துவதில் கவனமும், தான் கொண்ட நம்பிக்கையில் தீராத மனத்திடமும், குழந்தைப் பேறின்மையைக் காரணம் காட்டிச் சொல்லப்படும் அறிவுரைகளின் முன்னால் கொள்ளும் கோபமும் சேர்ந்தவளாக இருக்கிறாள். இவையெல்லாம் கடந்து உறக்கத்தில் அவள் அணிந்து கொள்கிற வெகுளித்தன்மை பேரழகு மிக்கவளாக மாற்ருகிறது. குழந்தைப் பேறு உண்டானவுடன் கொள்ளும் குழந்தைக்கே உரிய துருதுருப்பை உடையவளாக மாறுகிறாள்.

ஹாலாஸ்யம் முற்றிலும் தன்னைச் செலுத்தும் உள்ளுணர்வின் பாதையில் இதைப் புரிந்து கொள்ள முயல்கிறார். தான் காண்கின்ற அனுபவங்கள், பதிவுகள் அத்தனையும் நிதானமாகக் கண்டு தொகுத்து அதில் உள்ளுணர்வு செலுத்தும் பாதையைத் தேர்கின்றார். அதில் அறிவின் பாதிப்பும் இருக்கிறது. நீலகண்டன் எழுதிய நூல் முற்றிலும் வணிக நோக்கத்திலானது என்பதை உணர்கின்றவர்தான் தாயாரம்மாள், பெருமாள், பலவேச முதலியார் ஆகியோரின் எளிமையும் உண்மையும் சேர்ந்த பக்தியை உயர்வாகக் காணுவது நூலின் படைப்பில் தெரிகிறது.

பலவேச முதலியாரும் உள்ளுணர்வின் பாதையில்தான் குள்ளச்சித்தரைப் பின்பற்றத்தொடங்குகிறார்கள். சொல்ல வரும் செய்தி, அதன் ஊடே இருக்கும் வெயில், புழுக்கம் அத்தனையும் கடந்துதானே சொல்ல வரும் செய்தியின் பொருள் புரியும் எனும் பலவேச முதலியாரின் சொல்கிறார்.

உலகியல் தாண்டிய மெய்ம்மை என்பதை விளக்கும் அற்புதங்களைச் சொல்லும் நாவலாகக் குள்ளச்சித்தன் சரித்திரம் நாவல் அமையவில்லை. மாறாக, அந்த உலகியல் கடந்த நிலையை ஒட்டிய கேள்விகளை நம் முன் வைக்கிறது.

 இந்த நாவலின் மனிதர்கள், உயிரினங்கள் யாவும் தம்முடைய இனத் தொடர்ச்சியைப் பேண விரும்புகின்றன. கால, வெளிகளுக்கு அப்பால் மனிதர்களுக்கு நிச்சயமாகக் கொடுக்கப்பட்டது இனத்தொடர்ச்சியாகத்தான் இருக்கிறது. பிறவியை, காலத்தைத் தாண்டிய குழப்பங்களும் தேடல்களும் ஆண்களுக்கே அதிகமாக இருக்கின்றன. பெண்கள் தங்கள் இனத்தொடர்ச்சியை உறுதி செய்வதில்தான் சிரத்தையாக இருக்கின்றனர். முதலியாரின் மனைவியாகட்டும், பழனியப்பனின் மனைவியாகட்டும் இனத்தொடர்ச்சியை உறுதி செய்வதே இந்தப் பிறவிக்கான நிறைவை அடைவதாக உணர்கின்றனர். ஆண்களுக்கு அதையும் தாண்டிய பொருள் தேடல் தேவைபடுகிறது. காஞ்சனை கதையில் ஆண்களின் புத்தியே இப்படித்தான் என எழுத்தாளரின் மனைவி குறிப்பிடுவதைப் போலவே ஆண்களுக்குத்தான் அன்றாட வாழ்வைத் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது.

பழனியப்பனின் தந்தை ராமநாதன் தனக்கு காசநோய் இருப்பதாக அறிந்து கொண்ட பின்னர் உலகியல் வாழ்க்கையை முற்றிலும் துறந்துவிட்டு மரங்களுக்கு நீர் வார்க்கிறார். பல கோடி ருபாய் சொத்துக்குச் சொந்தக்காரரான பலவேச முதலியார் அதைத் துறந்துவிட்டு மடத்தில் பணியாளராக இருக்கிறார்.

அழகியல்& மொழி

யுவனின் மொழி கவித்துவமும் செறிவும் மிகுந்தது. மர்மத்தை விளக்கும் இடங்களில் கவித்துவத்தைக் கையாள்கிறார். காலம், இடமும் கடந்த வெளிகளில் பிரயாணிக்கும் ஞானியர்களின் பயணத்தைச் சொல்லும் இடங்களைக் கவித்துவத்தின் வாயிலாகவே பொருள் கொள்ள முடிகின்றது.

 தருக்கத்தால் முழுமையாக விளக்கி முடியாத பகுதியைச் சொல்லுக்குள் முழுமையாகப் பொருள் கடத்தி விட முடியாத பகுதிகளைப் பற்றி பலவேசம் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட ஏப்பம், கழுதையின் கனைப்பு, வெயில், புழுக்கம் ஆகியவற்றை எப்படிப் பொருள்படுத்திக் கொள்வது எனக் கேட்குமிடத்தில் அதன் மர்மத்தன்மையைக் கவித்துடத்துடன் குறிப்பிடுகிறார்.

முத்துச்சாமி தன்னுடைய முற்பிறவிகளைச் சொல்லும் இடம் முழுமையாக கவித்துவம் கொண்டது. ஜோசியக் கிளி மாதிரி, ஞாபக அடுக்குகளை ஒவ்வொன்றாய்க் கலைத்து ஒதுக்கிப் போடுகிறது பிரக்ஞை…கால இட பேதமற்ற பிராயாணத்தில் எங்கும் செல்லாமலே எங்கோ சென்று கொண்டிருக்கின்றேன்.

மனுஷனா மையமா வைத்து யோசித்துப் பழகி விட்டோம். பூமியின் ஆண்டைகள் நாம்தான் என்கிற மாதிரி.தெருவிலிருந்து தேங்கிய சாக்கடை நீரும் சரி மகாசமுத்திரத்திலிருந்தும் சரி மேகமாகிப் பொழியும் மழைத்தாரை ஒவ்வொரு துளி நீருக்கும் தனிச் சரித்திரம் இருக்கிறது.

தன்னை ஒரு வள்ளுவர் குலத்தைச் சேர்ந்தவனாகத் தெளிவாக அடையாளப்படுத்திக் கொள்கிறார் சிறுவயது முத்துச்சாமி. பிராமணத் தொனியுடனான உச்சரிப்பே ஒருவகையான ஒவ்வாமையை அளிக்கிறது. இங்கு உருவாகி வரும் சுயமரியாதை இயக்கங்கள் போன்றவற்றில் பார்வையாளராகப் பங்கெடுத்து ஹாலாஸ்யம் ஐயரையும் அழைத்துச் செல்கிறார். சுயமரியாதை இயக்கங்களின் முன்னோடியான தலித் இயக்கங்கள் அதை ஒட்டிய மாற்றுமெய்ம்மையும் அவரில் பாதிப்பு செலுத்தியிருக்கலாம். அதற்கான தெளிவான இடங்கள் நாவலில் இல்லையென்றாலும் அதை ஊகிப்பதற்கான இடம் இருக்கிறது. மெய்ம்மை சார்ந்த பார்வை என்பது குலம், சாதி சார்ந்த ஒன்றில்லையென்றாலும், அதற்கான தேடல் அமையப்பெற்றவர்கள் பெரும்பாலும் நோய், வறுமை, தனிமை ஆகியவற்றால் ஆனவர்களாகவே இருக்கிறார்கள்.

ஏற்கெனவே தெரிந்தவற்றிலிருந்து விடுபடுவது எப்படியென்று தெரியவில்லை.

மழை பெய்வதற்கான காரணங்களை அறிவியல், தருக்கத்தின் வாயிலாக விளக்க முற்படும் ராம.பழனியப்பன் காரணம் கண்டுபிடித்துவிட்டால் அற்புதம் அற்புதம் இல்லாமல் போகுமா எனக் கேட்டுக் கொள்கிறான். அந்த மனநிலையோடு குழந்தைப் பேறு கிடைத்தவுடன் கொசுத்தூறலில் மகிழ்ச்சியாக நடந்து செல்கின்றான். அவனுடைய அறிதல், கற்பனையெல்லாம் அடங்கி ஒரு கணம் மழை பொழிவதன் மகிழ்ச்சி மனத்தில் நிலைக்கிறது. மாற்று மெய்ம்மை என்பதை அறிந்து கொண்டு அதை நிருபிக்கும் மனம் மீண்டும் அறிந்தவற்றின் சுமையால் தன்னை நிறைத்துக் கொள்கிறது. அந்த அறிதலிலிருந்து தன்னை விடுவித்து முழுமையாக இருக்கும் ஒரு கணத்தின் ஒரு கணம் தான் மாற்றுமெய்ம்மையை உணர  முடிந்ததாக நாவல் முடிகிறது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற