முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீனலட்சுமி சிறுகதைத் தொகுப்பு வாசிப்பனுபவம்


எழுத்தாளர் கனகலதாவின் சீனலட்சுமி கதைத் தொகுப்பை வாசித்தேன். சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு வெவ்வேறு பின்னணி கொண்ட பெண்களின் கதைகளை எழுதியிருக்கிறார்.

இந்த அத்தனை கதைகளிலும் உள்ள பொதுவான தன்மையாகக் கதையில் இருக்கும் ஆசிரியரின் கதைசொல்லலைக் காண முடிகிறது. இந்தக் கதைகளில் அனைத்திலும் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் என்பது மிகக் குறைவானதாகவே இருக்கின்றது. ஆசிரியரே கதை நிகழும் களம், நிகழ்ச்சிகளைச் சொல்லிச் செல்கின்றார். இவ்வகையான கதைகளை வாசிக்கின்ற போது, வாசகனுக்குக் கதையின் போக்கை அழுத்தமாக நிறுவ ஆசிரியர் நம்பகமான தகவல்களைச் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது. கதை தானே நிகழும் போது பாத்திரத்துடன் வாசகனுக்கு உருவாகும் அணுக்கத்தை, ஆசிரியரின் கதை சொல்லல் தன்மை எடுத்துக் கொள்கிறது. அந்த வகையில் கதை சொல்லலில் நம்பகமும் வாசகன் கதையை உள்வாங்கி கொள்ளும் வகையிலான சித்திரிப்பும் கூடிய கதைகளை எழுத்தாளர் லதா இந்தத் தொகுப்பில் நிகழ்த்தியிருக்கிறார் எனலாம்.

இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக நிர்வாணம் கதையைக் குறிப்பிடலாம். எப்பொழுதும் சிரிப்பும் கம்பீரமும் தோன்ற இருக்கும் அம்மாவுக்கு ஏற்படும் புற்றுநோயால் உருக்குலைந்து போகிறார். வேலை, காதல் எனப் பரபரப்பாக இயங்கி வரும் மகளுக்கு அம்மாவுடன் விலக்கம் குறைந்து அணுக்கம் உருவாகும் தருணத்தை மிகச்சிறப்பாகச் சித்திரிக்கின்றது. அம்மாவின் கம்பீரம் அவளை மற்றவர்கள் நெருங்காமல் இருப்பதற்கான தடையாக இருக்கின்றது. அது வீழ்கின்ற போது, அவள் அடைகின்ற பதற்றமும் அதன் பின்னர் மகளுடன் உருவாகின்ற நெருக்கமும் மகள் தாயாகவும் தாய் மகளாகவும் மாறுகின்ற தருணமும் கொண்டிருக்கின்றது. அம்மாவின் நோய்மையும் உருக்குலைவையும் சொல்லும் சித்திரம் மிக உயிர்ப்பாக இருந்தது. புற்றால் இருமுறை அவள் தொடர் நோய்மையில் வீழ்ந்து எழும் சித்திரம் கதை நிறைவில் கொள்ளக்கூடிய மீச்சோகத்துக்குக் காத்திருக்கும் போது மகளும் தாயும் தங்களுக்கிடையிலான விலக்கத்தைக் களைந்து கொள்ளும் அணுக்கமும் கதைக்குப் புதிய பரிணாமத்தை அளிக்கின்றது.

கதைக்குள் பார்வையாளர் கோணம் ஒன்றை உருவாக்கி அதன் வாயிலாகக் கதையை வளர்த்தெடுக்கிறார். தேக்காவில் ஒரு பாலம் இருந்தது என்ற கதையில் ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் இயங்கிய இந்தியத் தேசிய ராணுவத்தில் நேதாஜியின் வீராவேசமான உரையைக் கேட்டுப் பங்குபெறுகிறார்கள் அக்காவும் தங்கையுமென இருவர். 18 வயதுடைய மூத்தவள் திருமணம் புரிந்து இயக்கத்தில் விவரம் மிகுந்தவளாகவும் இயக்கத்தில் பங்குபெறுவதன் பின்னால் இருக்கும் இடர்களைக் கடப்பது குறித்த முன்னறிவுடன் இருக்கின்றாள். அவளை விட 2 வயது சிறியவளான இளையவள் கதை முழுவதும் அக்காவைப் பிந்தொடர்பவளாக அவர்களின் இயக்க ஈடுபாட்டையும் அதில் உருவாகும் விலக்கத்தை மட்டும் சொல்லும் பார்வையாளர் கோணத்தில் இருக்கின்றாள். ஐ.ஏன்.ஏவின் பெண்களுக்குச் சமையல் பணி, மருத்துவப்பணி, ராணுவ வீரர்களுக்கு உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளே வழங்கப்படுகின்றன. மேலும், இவர்களிருவரும் தாழ்த்தப்பட்டவர்கள் (நேரடிச் சித்திரிப்பு இல்லை) என்பதால் மற்றவர்களால் ஒதுக்கப்படவும் செய்கின்றனர். இந்தச் சூழலில், இயக்கத்திலிருந்து வெளியேறி இன்னொரு போராட்டத்துக்குத் தயாராக வேண்டுமென எண்ணுவதோடு முடிகிறது. ஐ.ஏன்.ஏ போன்ற இயக்கங்களிலும் தொடர்ந்த பெண்களை ஏவலர்களாக நடத்தும் போக்கு, அதிகார வட்டம் ஆகியவைக் குறித்து எழுதப்பட்ட முக்கியக் கதையாக இக்கதை அமைந்திருக்கிறது.



சிலந்தி கதையும் பார்வையாளர் கோணத்திலிருந்தே விரிகிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் நடக்க முடியாத இளைஞனுக்குக் கால்களையும் உடலையும் நீவி விடுபவர் தன்னுடைய அனுபவங்களைக் கதையாகச் சொல்கிறார். தன்னுடைய பால்ய வயதில் சிலந்திகளைப் பிடித்துச் சண்டையிட வைக்கும் விளையாட்டு பற்றி குறிப்பிடுகிறார். நண்பனின் சிலந்தியைத் திருடி விளையாட்டில் வெற்றி பெற முடியாமல் ஆகிறது. அதன் பின்னர், அதே நண்பனை சிங்கப்பூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்கள் மலேசியாவுடன் இணைந்த போது நிகழும் இந்தோனேசிய படைகளின் ஊடுருவலின் போது சிங்கப்பூர் ராணுவத்தில் பங்குபெற்றபோது காண்கின்றார். இந்தோனேசியப் படையினர் அவரது நண்பனைச் சுட்டு வீழ்த்தும் போது அவன் சிலந்தியைப் போன்று வீழ்ந்தான் எனக் கதை முடிகின்றது. எதிர்படையினரின் தாக்குதலை முன்னுணர்ந்தும் நண்பனைத் தற்காமல் போனதற்குச் சிறுவயதில் உருவான அவமான உணர்வு காரணமாக இருந்திருக்கக்கூடும் என எண்ணத்தோன்றுகிறது. கதையைக் கேட்கின்ற உடல் இயலாமையில் இருப்பவன் அனிச்சையாக வண்ணத்தியொன்றை நசுக்குகிறான். அவமானம், இயலாமை போன்றவை பிரக்ஞைப் பூர்வமாக மனதில் தேங்கியிருக்கும் போது ஏற்படும் எதிர்மறை உணர்ச்சிகளைச் சிறுகதை காட்டுகிறது.

முன்னர் இருந்த கதையில் சிலந்தி ஒரு படிமமாக எவ்வாறு விரிகிறதோ அதைப் போல காவடி கதையிலும் காவடி ஏந்துதல் படிமமாக மாறுகிறது. சிறுவயதிலிருந்து தைப்பூசத்தில் தூக்கப்படும் சிலாவு காவடியை விரும்பி பார்க்கும் முதியவரான கதைசொல்லியின் பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அவளின் இளமைக்காலத்தில் கடுமையான பணிகளைச் செய்த பாட்டி உடல்வலு மிக்கவராக இருந்திருக்கிறார். மருத்துவமனையிலிருந்து வெளியேறி எப்படியாவது தைப்பூசத்தில் தூக்கப்படும் காவடிகளைப் பார்த்துவிடவேண்டுமென எண்ணுகிறார். அத்துடன், ஒருமுறையாவது சிலாவு காவடி எனப்படும் நீண்ட முள்ளை உடலில் குத்திக் கொள்ளும் காவடியை ஏந்த வேண்டுமெனவும் பிடிவாதமாக இருக்கிறார். முதுமையில் நீரிழிவு நோயால் உருக்குலைந்து போனவரின் உடலில் அங்காங்கே ஏற்றப்பட்டிருக்கும் ஊசித்தடங்களும் மூத்திரப்பைகளும் சேர்ந்து பாட்டி தற்போது இன்னொரு காவடி ஏந்திப் போராடிக் கொண்டிருப்பளாகக் கதைசொல்லிக்குத் தெரிகிறார். கதை, கதைசொல்லியின் நினைவுகளில் இருக்கும் உடல்வலு மிகுந்த பாட்டியும் தற்போது உருக்குலைந்து போயிருக்கும் பாட்டியையும் ஒன்றாக்கிப் பார்க்கிறது.

 நினைவுகளில் இருக்கும் நிலைக்கும் தற்போது நிகழ்ந்திருக்கும் வீழ்ச்சிக்கும் இடையில் மனம் அடையக்கூடிய ஆசுவாசப்புள்ளிக்கான தேடலாகவே கதை அமைந்திருக்கிறது. அதைப் போலவே, வலி கதையும் அமைந்திருக்கிறது. சிறுவயதில் மிகத் துடிப்பாக மீன் பிடிக்கக் கற்றுக் கொள்கிறாள். பின்னாளில், மீன்களை விதவிதமாகச் சமைக்கும் உணவகத்தைத் திறக்கின்றாள். கணவரின் இறப்புக்கு மறைமுகக் காரணமாக மாறியதால், சாலையில் தலைதெறிக்க ஒடி விபத்தில் காயமுற்றுக் கைகளை இழக்கின்றாள். நீதிமன்றத்தில் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை இழந்து தனியாக வசிக்கின்றாள். அப்பொழுது, மீண்டும் அலங்கார மீன்களை வாங்கிச் செயற்கைக் கைகளால் நீரில் அளையும் மீன்கள் கைகளில் மொய்ப்பதால் குறுகுறுப்பை அடைகிறாள் எனக் கதை முடிகிறது. இந்தக் கதையில் அமைந்திருக்கும் விரைவான கதையோட்டமும் சம்பவங்களும் கதைக்கு எந்தளவு துணைபுரிகிறது என்ற கேள்வி எழுகிறது. அதிகமான சம்பவங்கள் அமைகின்ற போது அதையொட்டிய கேள்விகளும் எழுகின்றன. குடும்பத்தினர் இருந்தும் தனித்திருக்க வேண்டிய தேவை என்ன, மீன் பிடிக்க ஆசை இருப்பதாலே உடனடியாக மீன் படகுக்கான உரிமம் வாங்கிவிட முடியுமா என்ற கேள்விகள் அமைந்திருக்கின்றன. இந்தக் கேள்விகள் எல்லாம் சேர்ந்து கதையின் மையத்தைச் சிதறடித்து விடும் அபாயம் இந்தக் கதைகளில் இருக்கிறது. இந்தக் கேள்விகளை ஒதுக்கி, மீன் என்பது கதையில் என்னவாக இருக்கிறது எனப் பார்த்தால், ஒரு வகையில் அவளின் மனம் கொள்ளக்கூடிய துடுக்குத்தனம், வெளிப்பாடு இப்படியாக எல்லாம் மாறுகிறது. அதுதான்,கைகள் இழந்து தனிமையில் இருக்கும் போது மகள் கைதொட்ட போது ஏற்பட்ட அதே குறுகுறுப்பை உடலுக்குள் ஏற்படுத்துகிறது.

தொகுப்பின் தலைப்புக் கதையான சீனலட்சுமியின் வரிசை கதையும் சிறந்த கதைகளுள் ஒன்றாக இருக்கின்றது. சிங்கப்பூரின் செல்வ வளம் அங்கிருக்கும் கட்டுப்பாடு மிகுந்த சட்டங்கள் ஆகியவற்றின் மீதான வியப்பு தமிழ் கூறு நல்லுலகின் பொதுவான வியப்புகளில் ஒன்றாக இருப்பதைக் காணலாம். அந்த ஒழுங்கின் மீது இருக்கும் பெருமிதம் கொண்ட தமிழ் குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்படும் சீன வம்சாவளி பெண்ணின் அகத்தை இச்சிறுகதை முன்வைக்கிறது. தன்னுடைய தோற்றம் ஒன்றாகவும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் வேறொன்றாகவும் இருப்பதில் இருக்கும் அடையாளச் சிக்கல் உணர்வுடன் சீனலட்சுமியின் பால்யம் கழிகிறது. அதிலிருந்து மீட்டெடுத்துக் கொள்ள ஒழுங்குகளின் மீது விருப்பம் கொண்டு கடைபிடிக்கிறாள். வயது மூத்தும் தான் நிற்கின்ற கடை வரிசை, வாக்கெடுப்பு வரிசை என அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டு அங்கிருக்கும் திரளில் தன்னையும் ஒருவராகக் காண்கிறாள். பெருநகரத்தின் அலைச்சல் மிகுந்த வாழ்வில் இன்னொருவருடன் இயல்பாகப் பேசுவதற்கான வாய்ப்பை வரிசைகளே அளிக்கின்றன என்பதால், அவர்களுடன் வலிந்து பேசுகிறாள். தமிழ் பண்பாட்டு நடைமுறைகள் குறித்தும் நன்கு அறிந்து வைத்திருக்கிறாள். தன்னை ஒழுங்குக்குள் பொருத்திக் கொண்டு திரளில் ஒருவராக எண்ணும் மனநிலையைக் கதை அளிக்கிறது. இந்த மனநிலையையே கதை வளர்த்தெடுத்துச் செல்கிறது. இதிலிருந்து இன்னொரு தளத்தைக் கதையின் இறுதி அடையவில்லை.

இதைப் போல வாழ்விட அடையாளம் மறையும் போது ஏற்படும் உணர்வை அலிசா கதை காட்டுகிறது. சிங்கப்பூரின் வளர்ச்சியிலிருந்து ஒதுங்கி இருக்கும் உபின் தீவு பகுதியில் வசிக்கும் தாத்தா பாட்டியுடன் அலிசா எனும் சிறுமி தன் பால்யத்தைக் கழிக்கிறாள். மெல்ல சிங்கப்பூரின் வளர்ச்சி உபின் தீவையும் தீண்டும் 70, 80 ஆண்டுகளின் காலப்பகுதியில் கதை நடக்கிறது. அலிசாவின் தாத்தா, எதையும் கற்று தராதவராக தானாக ஒன்றைக் கற்றுக் கொள்ள செய்ய வைப்பவராக இருக்கிறார். இந்த வாழ்விடம் பறிக்கப்படவிருப்பதை எண்ணி சஞ்சலமும் தாத்தாவின் நிதானமாக வாழ்க்கையை ஏற்றுப் போவதின் போக்கின் மீதான வியப்புடன் கதை நிறைவு பெறுகிறது.

பெருநகர வாழ்வில் ஏற்படும் தனிமையை அடையாளப்படுத்தி எழுதப்படும் பூனை போன்ற குறியீட்டைத் தேடி கதைக்கான தேடல் மேற்கொள்ளும் பெண்ணின் கதையை பச்சை நிறக்கண்களுடன் கறுப்பு பூனையில் காண முடிகிறது. பூனை குறித்து முன்னரே அழுத்தமாக நிறுவப்பட்டிருக்கிற பொருளைத் தாண்டிய ஒன்றைத் தேட தலைப்படுகிறாள். ஒருவகையில், அந்தப் பெண் தன் வாழ்வில் இருக்கக்கூடிய மர்மத்தை உருவாக்க அலைகிறாள். அந்த மர்மத்தின் தேடல் ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பைக் கதை சொல்கிறது. அதைப் போன்றே, இன்னொரு உயிர் தோன்றியவுடன் தன் மீதான கவனத்தை அதற்குப் பகிர்ந்தளிக்க வேண்டியதால் தாய்க்கு ஏற்படும் உளவியல் அழுத்தத்தை இளவெய்யில் கதை சொல்கிறது. குழந்தைகள் மீது இருக்கும் அழகு, குறும்பு, கள்ளமின்மை எனப் பொதுச்சூழலால் ஏற்றப்படும் எண்ணங்களுக்கு மாறாக குழந்தை வளர்ப்பு கோரும் கவனம், ஒழுங்கு ஆகியவை மெல்ல தன்னை உறிஞ்சிக் கொள்ளும் போது எழும் தன் இருப்பு குறித்த கேள்வியை நீலமலருக்கு ஏற்படுத்துகிறது. அதனுடன், உடல் சார்ந்த வலியும் உலகியல் நெருக்கடிகளும் சேர்ந்து கொள்கிறது. அதனை அவள் எதிர்கொள்ளும் போது நேரும் சமநிலைக்குலைவைக் கதை காட்டுகிறது.

இந்த ஒன்பது கதைகளும் நேரடியாக உணர்ச்சிமிகுந்த மொழிநடையில் பெண்களின் உடல் உள அழுத்தங்களை முன்வைப்பதில்லை. மாறாக, மிகுந்த நிதானமான கதை சொல்லலின் வாயிலாக பெண்கள் மீது ஏற்றப்படும் தாய்மை, மரபார்ந்த உணர்ச்சிகளைக் களைந்து அவர்களின் அகத்தை முன்வைப்பவையாக இருக்கின்றன.

சீனலட்சுமி சிறுகதைத் தொகுப்பு வாங்க 

https://tamilasiabooks.com/product/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற