முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.ஏ.இளஞ்செல்வன் கதைகள்- வாசிப்பனுபவம்

 

எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வன் முந்தைய தலைமுறை மலேசியப்படைப்பாளிகளில் நன்கு அறியப்பட்டவர். அவருடைய சிறுகதைகள் தொகுப்பை வாசித்தேன். அவர் எழுதிய அனைத்துச் சிறுகதைகளையும் உள்ளடக்கி 1999 ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. சிறுகதைகள் அனைத்தும் காலவரிசைப்படி இல்லாது முன்பின்னாகவே அச்சிடப்பட்டிருக்கிறது.




இளஞ்செல்வனின் தெருப்புழுதி எனும் கதை ஆசிரியர் பயிற்சிக்கழகத்தின் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்ததால் அதை வாசித்திருக்கிறேன். அந்தக் கதையில் கூட சீண்டல் தன்மைதான் பிரதானமான இருக்கும். ஒரு மோசமான சூழலைச் சித்திரித்து அதிலிருந்து மீண்டெழும் சீண்டல் வார்த்தைகள் இருக்கும். அதனால் சீண்டப்பட்டு மனம் மாறும் தருணமொன்றுதான் கதையின் மையமாக இருக்கும். அவரை மலேசிய ஜெயகாந்தன் என்றழைப்பதையும் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், அவருடைய கதைகள் ஒழுக்கவாத, முற்போக்கு கருத்துகள் கொண்ட கதாபாத்திரங்களின் பிரதிநிதிகளும் அதற்கு மறுமுனையில் வறுமை, சூழல் ஆகியவற்றால் சமூகம் ஒதுக்குகின்ற குற்றங்களில் ஈடுபடும் மனிதர்கள் என இருவேறு துருவத்திலே இயங்குகிறது. ஜெயகாந்தனின் மார்க்சியப்பார்வையால் கதைமாந்தர்களில் வெளிப்பட்ட நல்லுணர்வுகள் இளஞ்செல்வனின் கதைகளில் இல்லை எனலாம். வறுமை, நெருக்கடி ஆகியவற்றிலிருந்து விடுபட கல்வி, உழைப்பு, முயற்சி, துணிவு, ஒழுக்கம் போன்ற விழுமியங்கள் அவசியமாகின்றன என்பதையே அவருடைய கதைகளில் சுட்டப்படுகிறது. பொதுவாக மற்ற கதைகளில் பேச முன்வராத சில பேசுபொருட்களைப் பேசியிருப்பதே அவருடைய கதைகளின் பலம் எனலாம்.

அவருடைய கதைகளில் பிறழ் பாலியல் உறவுகள், போதைப்பழக்கம் கொண்டவர்கள் உயிர்ப்புடன் கதையில் எழுந்து வருகின்றனர். ஆனால், அவர்களைக் கொண்டு எழுத்தாளர் பேசும் கருத்துகள் தனியாக ஆராய வேண்டியவை. அத்துடன் ஈர்ப்பான மொழியில் கதைகளை இளஞ்செல்வன் எழுதியிருக்கிறார். நவீனத்துவக் கதைகளின் இயல்பான நேரடியாக ஒன்றைக் குறிப்பிடாமல் அதனை குறியீடாக்கி அளிக்கும் நுட்பமும் அவருடைய கதைகளில் அமைகிறது. பெரும்பான்மையான கதைகளில் கதைமாந்தர்களின் உணர்வை வெளிப்படும் புறநிகழ்வுகள், பொருட்கள் ஏதாவது இடம்பெறுகின்றன. நொண்டி வாத்து கதையில் காதலை நம்பி ஏமாறும் ரம்லா நொண்டி வாத்தாக மாறுகின்றாள்.

இளஞ்செல்வனின் கதைகளில் இருக்கும் பொதுவான அம்சமாக அதிலிருக்கும் ஒழுக்கவாத மதிப்பீடுகளை முன்வைக்கலாம். அவருடைய கதைகளில் படர்கை நோக்கில் அமைந்திருக்கும் கதைசொல்லியின் கூற்றிலிருந்து நிகழ்வுகளைச் சொல்லிச் செல்லும் போது அதில் ஒழுக்கவாத மதிப்பீடுகளுக்கு அளிக்கும் அழுத்தத்தைக் காண முடிகின்றது. குடி, போதைப்பழக்கம், புகை, பிறழ் பாலியல் உறவுகள், சட்டவிரோதமான செயல்கள் இவற்றை ஒருவித அழற்சியுடனே கதைகளில் அணுகுகிறார். அதனாலே அவருடைய கதைகளில் நன்மை தீமை என்கிற துருவப்படுத்தல் இயல்பாக நிகழ்கிறது. அவ்வாறு அமைகின்ற துருவப்படுத்தலுக்குத் தீர்வுகளும் சில கதைகளில் நிகழ்கின்றன.  சேதாரம் எனும் கதையில் கணவனை இழந்து தனித்து வாழும் பங்கஜம் தன் அக்காள் மகள் திருமணத்துக்கு நகை செய்ய பத்தர் கடைக்குச் செல்கிறாள்.



அவளை முன்னரே திருமணம் செய்து கொள்ள விரும்பிய போதிலும் காலச்சூழலால் அவள் வேறொருவரையும் இவர் தமிழகத்தில் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்கின்றனர். மனைவியைப் பிரிந்து மலேசியாவில் பொற்கொல்லராக இருக்கும் போது பங்கஜத்தின் கணவன் இறந்துவிட்டான் எனபதை அறிந்து அவளை நெருங்க ஆசைப்படுகிறார்.

சேதாரம் அதிகமிருப்பதால் கூடுதலான தொகை தேவைப்படும் என பத்தர் சொல்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவளை நெருங்கிவிட வேண்டும் என எண்ணுகிறார். இதற்கிடையில் தமிழகத்தில் இருந்து மனைவியிடமிருந்து வரும் கடிதத்தில் அவருடைய தம்பி தன்னைத் தவறான விதத்தில் நெருங்க ஆசைப்படுவதாக மனைவி தெரிவிக்கின்றாள். அதனுடன் அவளுக்குத் துரோகம் செய்ய மாட்டேன் என அவர் உறுதி கூறியதையும் நினைவுபடுத்தித் தன் கற்புக்கு ஏதேனும் இழுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தையும் வெளிப்படுத்துகிறாள். இதனால் மனநெருடலுக்கு ஆளாகித் தன் மனத்தைப் பத்தர் மாற்றிக் கொள்கிறார். இவ்வாறாக மிக நேரடியான சில மனம் உறுத்தும் நிகழ்வுகளால் உடனடியாகத் தங்களைத் திருத்திக் கொள்ளும் மனிதர்களை இளஞ்செல்வனின் கதைகளில் காண முடிகின்றது. அவருடைய புகழ்பெற்ற தெருப்புழுதி சிறுகதையிலும் உதிரி மனிதர்களாகக் கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு போதை, மது எனத் திரியும் மனிதர்கள் மத்தியில் தோட்டத்திலிருந்து வறுமையின் காரணமாய் நகரத்துக்கு வரும் கண்ணன் சிக்கிக் கொள்கிறான். சினிமா மோகம், மதுப்பழக்கம், மற்ற இனத்தவர்களின் கீழ் சட்டவிரோதச் செயல்கள் செய்வது என இவற்றிலெல்லாம் ஒருவித விலக்கத்தை உடையவனாகவே கண்ணன் அமைகின்றான். அந்தக் கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும் சிங்காரம் ஒரு நாள் திரையரங்க வாசலில் கள்ள டிக்கெட் விற்கும் போது கூட்டத்திலிருந்து ஒருவர் பேசும் ‘இதெல்லாம் ஒரு பிழைப்பா, இதைவிட முச்சந்தியில  துண்டை விரிச்சிப் போட்டு…எனச் சொல்ல கேட்கும் சொற்களால் மனம் மாறி திருந்திவிடுகின்றான். இம்மாதிரியான செயற்கையன அல்லது கதைசொல்லியின் ஒழுக்கவாதக் கூற்றுகளைப் பேசும் பிரதிநிதிகளாக வரும் பாத்திரங்களின் கூற்றுகளே அவருடைய கதைகளைச் சாதாரணமாக மாற்றுகிறது. 1970 களில் மலேசியாவின் மார்க்கெட் சூழல் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை தெருப்புழுதி கதை மிக உயிர்ப்பாகவே சித்திரிக்க முயன்ற போதிலும் அதன் இறுதியில் அமைந்துவிடுகிற உபதேசக்கருத்துகளால் சீண்டப்பட்டு திருந்தும் சூழலால் கதை சாதாரணமாகிறது.

இதே ஒழுக்கவாத மதிப்பீடுகளைக் கதைசொல்லி அழுத்தமாக முன்வைத்தும் அதன் முன் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் கதைமாந்தர்கள் வாழ்க்கையைத் தொடர்வதாக வரும் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. தான் தோன்றி பறவைகள் கதையில் தோட்டத்தில் வசிக்கும் பார்வதி தன்னுடைய பழைய கணவரிடம் இருந்து விலகி புதியதாக இன்னொருவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். மாற்றாந்தாய் குழந்தைகளிடம் மிகவும் கடுமையாக மாரிமுத்து நடந்து கொள்கிறான். குடித்து விட்டு மனைவியை அடிப்பது, சந்தேகத்தால் அனுதினமும் கடுஞ்செற்களால் ஏசுவது என நரகவாழ்க்கையைப் பார்வதி வாழ்கின்றாள். மகன் போதைப்பழக்கத்தால் சிறை சென்று திரும்புகிறான். அவனை முன்னாள் கணவன் ஜாமினில் மீட்டெடுக்கிறான். அவளுடைய முன்னாள் கணவனின் அருமை புரியாமல் விட்டு வந்ததற்கு வருத்தப்படுகிறாள். இதற்கிடையில், மூத்த மகளும் வீட்டை விட்டு ஓடிப்போனதை அறிந்த ஓரிரவில் கணவனுடைய தொடுதலுக்கு மரத்துப் போயிருப்பதாகக் கதை முடிகிறது. முதல் கணவனை விட்டு வந்தது, புதிய கணவனிடம் சூழ்நிலைக்கைதியாக அகப்பட்டுக் கொண்டது, மகள் இன்னொருவனிடம் ஓடிப்போனது என அத்தனையும் பார்வதியின் தவறு என்ற கோணத்திலே கதை அணுகுகிறது. நடந்துவிடுகின்ற சூழல்களும் உணர்வுகளைம் சேர்ந்து மனிதர்களைக் கையறு நிலைக்கு இட்டுச்செல்கிறது என்பது கதைகளில் இருக்கும் பொதுவான் வடிவமொன்றுத்தான். ஆனாலும், எந்த உணர்வு ஊடாட்டங்களுக்கும் இடம் கொடுக்காமல் ஒழுக்கவாத மதிப்பீடுகள் முன்னிலைப்படுத்தும் போது கதைகள் அதன் வீச்சை இழந்துவிடுகின்றன எனலாம். தற்காலிகங்கல் எனும் கதையில் கணவனை இழந்து குடியுரிமை இல்லாமல் குழந்தைகளுடன் வறுமையில் வாடும் பார்வதிக்குத் தோட்டத்தில் வேலை பறிபோகும் சூழல் ஏற்படுகிறது. அதே தோட்டத்தில் 40 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாமல் இருக்கும் ரெங்கையாவைத் திருமணம் செய்து கொண்டு குடியுரிமை விண்ணப்பிக்க எண்ணுகிறாள். முன்னரே  தன் குழந்தைகளின் பசிக்காக அவனிடம் கடன் வாங்க சென்ற அவளைக் கைபிடித்து இழுத்துத் தன் பாலியல் தேவையை வெளிப்படுத்தியிருக்கிறான். ஆனால், பாலியல் சுகத்துக்காகப் பணம் தர முடியும், திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என ரெங்கையா கைவிரித்ததும் அழுவதாகக் கதை முடிகிறது. இதிலும் பார்வதி வெளிப்படையாகவே ரெங்கையா நகரத்தில் பாலியல் தொழிலாளிகளை நாடிச் செல்வதைச் சாடுகின்றாள். பின்னால் அவளே அவனிடம் திருமணம் புரிந்து கொள்ளச் சொல்லி கெஞ்சுகிறாள். ஆனால், அவளுக்கு நேர்ந்திருப்பது தவிர்க்கமுடியாத இக்கட்டு என்றும் அது அளிக்கும் கையறுதருணமும் சரியாக வார்க்கப்படாமலே கதை அமைகின்றது.

இந்த ஒழுக்கவாத மதிப்பீட்டிலிருந்து கொஞ்சம் தப்பிய கதையாக வித்தியாசமான ஒருத்தி கதையைக் குறிப்பிடலாம். செல்வச்செழிப்பான சூழலில் வளரும் இளம்பெண் தன்னுடைய பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ள வாகன ஒட்டுநரிடம் பாலியல் உறவு கொள்கிறாள். இதனால் உருவாகும் கருவைக் கலைக்க வரும் மருத்துவரிடம் அவள் நிகழ்த்தும் உரையாடலே கதையாக அமைந்திருக்கிறது. மனம் தூய்மையாக இருப்பதால் இதுவெல்லாம் ஒரு பொருட்டில்லை எனச் சொல்கிறாள். ஆனால், அதை ஒழுக்கம், மரபு எனப் பேசுகிறார் டாக்டர்.  அதிலும் மிக முக்கியமாக, அவ்வாறான மனநிலையில் இருந்தாலும் தன் வருங்கால கணவனுக்காகத்தான் குழந்தையைக் கலைக்க வந்திருப்பாதச் சொல்லும் இடத்தில் அவளுக்குள்ளும் மரபு, பெண்களின் திருமணத்துக்கு முந்தைய கற்பு போன்றவற்றின் நம்பிக்கை வெளிப்படுகிறது. அதையே வளர்த்தெடுத்து, மாறுபட்ட பாலியல் முடிவுகள் கொடுக்கும் உளவியல் தாக்கத்தைக் கதை பேசியிருக்குமானால் அது உச்சத்தைத் தொட்டிருக்கும்.. இறுதியில், இந்தத் தலைமுறைப் பெண்களைத் திருத்த முடியாது என டாக்டர் புலம்புவதுடன் கதை என மீண்டும் பழகிய அச்சிலே வந்து முடிகின்றது.

நிராகரிப்பு எனும் கதையில் தன் சொந்த மாமாவால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் அவரையே திருமணம் செய்து கொள்கிறாள். அதன் பின், அவரைப் பழிவாங்கும் விதமாக ஒவ்வொரு முறையும் வயிற்றில் வளரும் கருவைக் கலைத்துக் கொள்கிறாள். இறுதியில், தன்னையே மாய்த்துக் கொள்கிறாள். இந்தக் கதை திரைப்படப் பாணியில் மிக அபத்தமாக எழுந்த கதையாக இருந்தது. அதைப் போல மற்றொரு கதையில் தன் அக்கா கணவர் தன்னைப் பாலியல் தொந்திரவு செய்ய முன்வரும் போது இன்னொரு பாத்திரம் மாமா என்பது இன்னொரு தந்தை என்பதைப் போன்ற உபதேசங்களைக் கூறுகிறது.  இதனால் உசுப்பப்படுகின்ற மாமா திருந்துகிறார் என்பதைப் போன்ற அபத்தமான எளிய முடிவுடன் கதை அமைகின்றது.

1970களில் மலேசியத்தமிழர்கள் அதிகமும் எதிர்நோக்கிய குடியுரிமைச்சிக்கல், வேலை வாய்ப்பின்மை, மதுவுக்கு அடிமை, சினிமா மோகம், அரசியல் இலக்கின்மை, போன்ற கருக்களைத் தன்னுடைய கதைகளில் இளஞ்செல்வன் கருவாக்கியிருக்கிறார். ஆனால், அவை அனைத்தும் முதிராத கருக்களாகவே அமைந்திருக்கின்றன. 1970 களுக்குப் பின்னால் பெரிய வேலைவாய்ப்பாக அமையும் விற்பனைப் பிரதிநிகள் (சேல்ஸ் கெர்ள்) பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கலாம் என எண்ணும் ஆண்களின் மனநிலை முச்சந்தி மலர்களில் சாடப்படுகின்றது. அந்தப் பெண் வன்புணர்வுக்கு ஆளாகிய பின் அவளைத் திருமணம் செய்து கொள்கின்ற ராணுவ வீரன் அவளின் களங்கமில்லாதன்மையை மெச்சுகின்றவனாக இருப்பது போன்ற முடிவுகள் கதையை அன்றைக்கிருந்த முற்போக்கு அழகியல்களுடன் வெளிவந்து கொண்டிருந்த கே.பாலச்சந்தர் படங்களுடனான ஒப்பீடைச் செய்யத் தூண்டுகிறது.

குடியுரிமை இல்லாத ஒருவரின் புலம்பலையே கதையாக அந்நியங்கள் கதையில் எழுதியிருக்கிறார். ஆற்றாமையுடன் வாசகர்களை நோக்கிப் பேசும் கதையும் குடியுரிமைச்சிக்கலைக் கவனப்படுத்தும் முயற்சியாகவே அமைகிறது. மலேசியத் தமிழ் இந்துக்களை மதமாற்றம் செய்யும் தரப்பினருக்குப் பதில் தரும் வகையில் மிக எளிய நியாயங்களை ஒட்டிப் பேசும் கதை விக்ரமாதித்தர்கள். சமூகத்தில் நிகழ்கின்ற சிக்கல்களைக் கவனப்படுத்தும் முயற்சியே இந்தக் கதைகளில் முந்துவதால் கதையாக அவற்றை மதிப்பீட இயலவில்லை எனலாம்.

இளஞ்செலவனின் அழகியல் மிகுந்த நடை என்பது கதைகளின் வாசிப்பில் ஈர்ப்பை வழங்கியிருக்கக்கூடும் என ஊகிக்க முடிகிறது. ஆனால், அழகியலான மொழி என்பது கதையின் வெளிப்பாட்டுக்குத்தான் உதவியாக இருந்திருக்கக்கூடும். கதையில் தலைப்புகளும் கூட மிக வெளிப்படையாகக் கதையின் போக்கு இவ்வாறுத்தான் இருக்கக்கூடும் என்ற முன்முடிவை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. இழைப்புளி எனும் கதையில் பள்ளியில் முறையாக ஆசிரியர் பயிற்சி பெற்று வந்த துடிப்பான இளம் ஆசிரியர் ஒருவருக்கும், தமிழ்க்கல்வி பெற்று அனுபவத்துடன் வந்த முந்தைய தலைமுறை தலைமையாசிரியருக்குமான முரண்பாட்டைப் பேசுகிறது. இரு தலைமுறையைச் சேர்ந்தவர்களின் தலைமுறை இடைவெளியோடு படித்தவர்கள் நடைமுறை வழக்கத்துடன் ஒட்டிப்போகாமல் முரண்டு பிடிப்பார்கள் போன்ற கற்பிதமும் சேர்ந்து கொள்கின்றது. இந்தச் சூழலில் கதையின் தொடக்கத்திலே பள்ளி நிகழ்ச்சிக்குக் கட்டைகளை இணைத்து ஒட்ட தேடப்படும் இழைப்புளியே கதையின் முடிவிலே இருவருக்குள்ளும் ஏதோ ஒரு சமரசம் நிகழவிருப்பதைக் கூறி விடுகிறது. கதையின் கருவை நேரடியாகக் குறிப்பிடும் கதைத்தலைப்புகள் வாசிப்பின் தொடக்கதிலே கதையின் போக்கைக் கூறிவிடுகின்றன. இரையாகும் பறவைகள் சிறுகதையில் குடும்ப வன்முறையும் வறுமையும் மிகுந்த சூழலில் கேட்பாரற்றுக் கிடக்கும் இளைஞன் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிறான் என்பதைக் கதைத் தலைப்பே காட்டுகிறது.

இந்தத் தொகுப்பில் அமைந்திருக்கும் பாக்கி எனும் கதை மிகச்சிறப்பான கதையாகக் குறிப்பிடலாம். 1960,70 களில் தோட்டத்தில் வாழ்ந்த குடும்பப் பெண்களின் ஒரு நாள் வாழ்வைக் கதையாக அமைத்திருக்கிறார். காலையில் எழுந்ததிலிருந்து இடைவிடாத வேலைகளால் நிரம்பிய வாழ்வில் இரவு உறங்கப்போகும் முன் உடல் மேல் விழும் கணவனின் கைகள் சொல்லும் இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கிறது என்பது அன்றைய வாழ்வின் அவலத்தைச் சொல்கிறது. பெண்களின் இடம் குடும்பத்தில் என்னவாக இருந்தது என்பது குறித்த அதிர்ச்சியான பதிவை வைக்கிறது. இதிலிருக்கும் சீரான கதைசொல்லல்தன்மையும் ஆசிரியரின் தலையீடு இன்மையும் இந்தக் கதையை முக்கியமான கதையாக்குகிறது எனலாம். 

 மலேசியாவில் எழுந்த முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளியாக எம்.ஏ.இளஞ்செல்வனைக் கருதலாம். அவருடைய கதைகளில் நேரடியான விமரிசனமும் சீண்டல் குரலும் கதைகளின் கலைத்தன்மையைக் குறைப்பதாகவே அமைந்திருக்கின்றன.  ஆனால், பாலியல் ஒழுக்கம், அரசியல் கட்டுப்பாடுகள் அனைத்தும் இறுக்கமாக இருந்த சூழலில் சலனத்தை ஏற்படுத்தும் முயற்சிகளாக அவரின் கதைகள் நினைவுக்கூரப்படும்.

 

 https://tamil.wiki/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

எம்.ஏ.இளஞ்செல்வனைப் பற்றி தமிழ்விக்கியில்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதும் பெற்றதும்

(33 ஆண்டுகள் குவாந்தான் தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஆசிரியை செல்வி ராதா பணி நிறைவு காண்பதையொட்டி அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறேன்) வீடு நோக்கி ஒடுகிற நம்மையே காத்திருக்குது பல நன்மையே பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு விருட்டெனச் செல்ல துடிக்கும் என்னைக் கண்டு ராதா டீச்சர் சீண்டலாகச் சொல்லும் பாடல் வரிகள் அவை. இடைநிலைப்பள்ளியில் மிகுந்த கூச்சமும் தயக்கமும் கணமும் என்னை மென்று விழுங்கி கொண்டிருந்த தருணங்களில் பள்ளி நேரம் முடிந்து ஒரு நிமிட நேரம் கூட பள்ளியில் நிற்காமல் வீட்டுக்கு நடந்து சேர்ந்து விடுவேன். படிவம் மூன்று தேர்வுக்கு முந்தைய மாதாந்திரச் சோதனைகளில் புள்ளிகள் குறைவாகப் பெற்ற பாடங்களைப் பார்த்து ராதா டீச்சர்தான் என்னுடைய சிக்கலை ஒருவழியாகக் கண்டறிந்தார். தமிழ்ப்பாட வேளை நடக்கும் மதிய வேளைக்காகக் காலைப்பள்ளி பயிலும் உயர் இடைநிலைப்பள்ளி வகுப்பு (படிவம் 3 முதல் 5 வரை) மாணவர்கள் நாங்கள் காத்திருப்போம். பாடம் முடிந்ததுமே, உடனே வீட்டுக்குச் செல்ல துடிப்பேன். அப்படியான தருணத்தில் தான், அங்கே
நேபாளப் பயணம் 1 விமானத்தில் சன்னல் இருக்கைக்கு இரண்டாவது இடத்தில் இடம் கிடைத்தது.அங்கமர்ந்து எக்கியடித்து கைப்பேசியை சன்னலில் ஒட்டி வைத்து மாறி மாறி காணொளிகளும் படங்களும் எடுக்க முயன்றேன். ஒளிக்குறைவாலும் எக்க முடியாததாலும் காணொளி எடுக்க முடியவில்லை.கை முட்டியை நீட்டும் முயற்சி தூக்கக் களைப்பால் இன்னுமே தடைப்பட்டது. கைப்பேசியைக் கால்களுக்கு இடையில் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். விமானம் மெல்ல ஒடுதளத்தில் ஒடத்தொடங்கி பாய்ச்சலெடுக்கும் போது அடிவயிற்றில் கூச்சமெடுத்தது மட்டுமே தெரிந்தது. அப்படியே தூங்கி போனேன்.  அதன் பிறகு, பக்கத்திலமர்ந்த எழுத்தாளர் நவீன் அரைத்தூக்கத்தில் எடுத்துக்குங்க அரவின் எனச் சொன்னப் போதுதான் பசியாறலை நீட்டிய நேபாளப்பெண்ணை அருகில் பார்த்தேன். நல்ல மஞ்சள். எதோ அவித்த கிழங்கின் நிறம். ஒரு தட்டு நிறைய பழங்கள், காளானும் பொறித்த முட்டை, பன் வெண்ணெய், ஜேம், நீர் தின்னக் கொடுத்தாள். அதைத் தின்ன முடியவில்லை. சாப்டுக்கிங்க...ஈர்ப்பா இல்லத்தான்...ஆனா இதெல்லாம் சரியா சாப்ட்டுருனும்...காளான்ல்லாம் சாப்டக்கூடாது...காத்து அடச்சுக்கும் வயித்துக்குள்ள...என நவீன் சொன்னார். இந்தப
  மறுநாள் காலையில், பெளத்தநாத் ஸ்தம்பம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். கிழக்கு காட்மாண்டில் அமைந்திருக்கும் பெளத்தநாத ஸ்தம்பம்  43.03 மீட்டர் உயரத்தைக் கொண்டது. இப்பொழுதிருக்கும் தூபி கட்டுமானம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பல முறை புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என நம்பப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் புராதானச் சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தூபி நிர்மாணிப்பின் பின்னணியில் இருக்கும் சுவராசியமான கதையை கணேஷ் லும்பினியிலே கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஜைசிமா எனும் விதவைப் பெண் தன் சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு இத்தூபியை நிர்மாணிக்க அரசரிடம் அனுமதி கேட்கிறார். அரசர் அனுமதித்த பின் தூபியின் பணிகள் தொடர்கின்றன. இத்தூபியின் பிரமாண்டம் மக்களுக்கு ஜைசிமா மீது பொறாமையைத் தூண்டச் செய்கிறது. மன்னரிடம் ஜைசிமாவைப் பற்றி பொல்லாதவைகளைக் குறிப்பிட்டுப் பணியை நிறுத்தச் சொல்கின்றனர். ஆனால், அரசர் என்பவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என அரசர் பணியை நிறுத்த மறுக்கிறார். பணிகள் தொடரும் போதே ஜைசிமாவும் இறந்து போகிறார். ஜைசிமாவின் நான்கு கணவர்களுக்குப் பிற