முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Better Call Saul தொடர்

 Better Call Saul தொடரைப் பார்த்து முடித்தேன். Breaking Bad தொடரின் prequel ஆன Better Call Saul இல் ஆறு பருவங்கள் அறுபத்து மூன்று எப்பிசோட்கள் கொண்ட நெடுந்தொடர்.  தான் வாதிடுகின்ற வாதிக்குச் சாதகமாக வழக்கை மாற்றியமைத்தும் ஆதாரங்களை மாற்றியமைத்தும் உடனடியாக வழக்கை நடத்தும் பெட்டிக்கடை வழக்கறிஞராகவே ஜேம்ஸ் மெக்கில் அறிமுகமாகிறான். அரிதாகவே மாற்றப்படும் நீதித்துறை விதிகளில்  தளர்வுகளை ஏற்படுத்திப் பேரம் பேசுகிறான்.  ஒருவகையில் அவனுடைய திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தாலே இதைச் செய்கிறான். தன் வழக்கறிஞர் சேவையைக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்திக் கொள்வதன் மூலமாகச் சில்லறைக் குற்றங்களுக்கு வாதிடுகிறான். அவனுடைய முயற்சிகள் எதோ ஒருவகையில் மீள மீள தோல்வியுறுகின்றன. 

முழுமையாக விரும்பவோ அல்லது வெறுத்து ஒதுக்கவும் முடியாத இருமைத்தன்மை கொண்டவனான ஜேம்ஸ் மெக்கில் பாத்திரத்தில் Bob Odenkirk மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லாவற்றையும் உடனே செய்து முடித்து விடத்துடிக்கும் அவசரமும் குறுக்கு வழி தேடும் இயல்பும் ஜேம்ஸ் மெக்கில்லின் இளவயதிலே அமைந்துவிடுகிறது. வழக்கறிஞரானப் பின்பும் அதனையே பின்பற்றுகிறான்.  அந்த இயல்பினாலே பல சிக்கல்களுக்கும் உள்ளாகிறான். 

ஒவ்வொரு சிக்கலிலிருந்து விடுபட்டு ஆயாசமாய் உணர்கின்ற போதும் இன்னொரு சிக்கலுக்கும் அவனே அறியாமல் உந்தி தள்ளுகிறது அவனது நிலைகொள்ளாத இயல்பு. ஒரிடத்தில் நிலையாகப் பணியாற்றுவதென்பது மெக்கிலால் முடியாததாக இருக்கின்றது.  

சில்லறை வழக்குகளை வாதிடுகின்ற ஜேம்ஸ் மெக்கில் சால் குட்மானாக ஆனதும் சட்ட நுணுக்கங்களைக் கொண்டு எல்லா குற்றங்களிலிருந்தும் வழக்குகளை வாதிட்டு வெல்கிறான்.  தன்னையறியாமல் அழிவு செயற்பாடொன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான். மறுபக்கம், சட்ட வல்லுநரான மெக்கில்லின் அண்ணன் சார்ல்ஸ் தன் சட்ட நுணுக்கத் திறமையின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றான். அவன் அறிவின் மீதான அதீத நம்பிக்கையே எல்லாவற்றிலிருந்தும் அவனைத் தனித்திருக்கச் செய்யும் நோய்க்கும் காரணியாகிறது.

உள்ளூரத் தன் தம்பி மீது நம்பிக்கையற்றவனாகவும் அவன் திறமையால் சீண்டவும் படுகிறான். இருவரும் ஒருவரையொருவர் வீழ்த்த கைகொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இடையில் உள்ளூர அன்பு கொண்டிருக்கின்றனர். தான் நம்புகின்ற சட்டம் தன்னை முழுமையாய்க் கைவிடும் போது தனித்து விடப்பட்டவனாய் உணர்கின்ற சார்ல்ஸ் மரணத்தை நாடும் காட்சி அழுத்தமானதாக அமைந்திருந்தது. ஒவ்வொரு பிசகிலிருந்தும் வெளியேறுகின்ற ஜேம்ஸை அணைத்துக் கொள்ளும் கிம் வெக்ஸ்லர் பாத்திரமும் நன்றாக இருந்தது.


எதைச் செய்வது என்பதில் தொடங்கி செய்வதில் இருக்கும் அறமின்மை என மனத்தை உறுத்தும் தடுமாற்றங்களில் நிற்பவளை மெக்கில் வழிநடத்திச் செல்கிறான். மெக்கில் நிகழ்த்தும் குற்றங்களில் துணையாக நின்றதால் நேரும் குற்றவுணர்விலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள  அவனைப் பிரிகின்றாள். முற்றிலும் வேறான வாழ்க்கை வாழத் தொடங்கியப் பின்னரும், சால் குட்மன் ஜேம்ஸ் மெக்கில்லாக ஆகும் இறுதி நாடகீயத் தருணமொன்றில் அவனுடன் துணைநிற்க தயாராகின்றாள். இந்த உணர்ச்சி மிகு தருணங்களுக்கு இடையில் போதைத் தொழிலில் நிகழும் போட்டிகளும் விறுவிறுப்பும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. எதிலும் நேர்த்தியுடனும் கட்டுக்கோப்பாக இருப்பவராகப் படைக்கப்பட்டிருக்கும் குஸ்தாவோ, தான் ஈடுபட்ட போதைப் பொருள் குழுவினருக்கான பாதுகாப்பளிக்கும் தொழிலைத் தன் பேரக்குழந்தை காப்பதற்காக விடாமல் செய்யும் மைக்பாத்திரமும் சிறப்பாக இருந்தது. இறுதிப் பருவத்தில் நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பின்னரும் better call saul சிறப்பாகவே இருந்தது. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குருதிவழி நாவல் அறிமுகம்

  வரலாற்றை என்ன செய்வது சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலை வாசித்து முடித்தவுடன் எழுந்த முதல் கேள்வி வரலாற்றை என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது. தான் வாழாத காலமொன்றின் சித்திரமான வரலாற்றை ஒவ்வொருவருமே நிகழ்காலத்தில் கதைகளாக, தரவுகளாக என ஏதோ ஒரு வகையில் சுமந்தலைந்து கொண்டுத்தான் இருக்கின்றனர். காலத்துக்குள் தொடர்ச்சியொன்றைப் பேணுவதன் மூலமாகத்தான் சமூகமும் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வரலாற்றை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்/ அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதன் விவாதமே குருதிவழி நாவலில் பேசப்பட்டிருக்கிறது.                                                            குருதி வழி நாவல் குருதிவழி நாவல் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. நிகழ்காலத்தில் பலகாரங்களைச் சுட்டு விற்கும் பெருமாள் மற்றும் அவனது மனைவி மீனாட்சிக்குத் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகியும் குழந்தையின்மை சிக்கல் இருக்கிறது. அதனுடன் பெருமாளின...

யோகம் மற்றும் ஆயுர்வேத முகாம் அனுபவம்

  கடந்த 31 அக்டோபர் தொடங்கி 2 நவம்பர் வரையில் மூன்று நாட்களுக்கு யோகம் மற்றும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் கூலிமில் இருக்கும் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றன. யோக முகாமை செளந்தரும் ஆயுர்வேத அறிமுகப் பயிற்சியை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனும் வழிநடத்தினர். ஏற்கனெவே செளந்தரின் இரண்டு யோக அறிமுக வகுப்புகள் மலேசியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இம்முறை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் இணைந்தனர். நாங்கள் வருவதற்கு முன்னரே பிரம்மவித்யாரண்யம் மாலை நேர மழையால் குளிர்ந்திருந்தது. காலையில் மெல்லிய பனித்தூறலும் இருந்தது. தூரத்தே தெரியும் ஜெராய் மலையின் தொடர்கள் பச்சை நிறக் கரிய கோடுகளாகத் தெரிந்தன.  மூன்று நாள் காலையும் இரவும் மெல்லிய வெம்மையுடன் கூடிய குளிர் இருந்தது. புறப்படும் நாள்தான் வெய்யில் சற்று உக்கிரமாக இருந்தது.  யோகப்பயிற்சியாளரான செளந்தரின் வகுப்புகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன் . ஒரு நட்பார்ந்த ஆசிரியராக மரபார்ந்த கலையொன்றைக் கற்றுத் தருவதென்பது செளந்தரின் தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். நவீன வாழ்வு, இலக்கிய வாசிப்பு இரண்டின் மீதும் அவருக்கிருக்கிற ஆழமான புரி...

மாச்சாய் படம் - ஒளியும் இருளும்

  இயக்குநர் சஞ்சய் பெருமாளின் இரண்டாவது படமான மாச்சாய் படத்தைப் பார்த்தேன். மலேசியாவின் சாயலைக் கொண்ட லிங்காப்புரா எனும் புனைவு நாடொன்றில் படத்தின் களம் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பேசக்கூடிய களம் மற்றும் சித்திரிப்புகளுக்கு அப்படியான புனைவு நாடொன்றை அமைக்கவேண்டியிருக்கிறது. லிங்காப்புராவின் பெரும் போதைப்பொருள் சம்ராஜ்ஜியத்தையே நடத்திவரும் ஈபுவிடம் போதைப்பொருள் வினியோகிப்பாளர்களில் ஒருவனாக சியாம் இருக்கிறான். அவன் இருக்கும் குற்றவுலகத்துக்குள் மிகச்சிறிய பிசகொன்று கூட பெரும் அசம்பாவிதத்தை உருவாக்கவல்லது என சியாம் நன்கு அறிந்திருக்கிறான். அதனாலே, அவனுடைய தன்னுணர்வில் எந்தப் புறத்தூண்டுதலுக்கும் இடம் தராத ஆழமான இறுக்கம் அவனிடம் எப்பொழுதும் இருக்கிறது. இருள் உலகின் மிகச் சாதாரணங்களான மது, புணர்ச்சி, போதை எதுவுமே தன்னைத் தீண்ட விடாத இறுக்கம் அது. இந்தத் தருணத்தைப் பைபிள் சொல்லும் ஆதிக்கதையுடன் சஞ்சய் தொடர்புறுத்துகிறார். ஆதிமனிதனான ஏவாளையும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி இச்சை தீண்டவே செய்தது. பாம்பு வடிவில் வந்த சாத்தான் இச்சையைத் தூண்டி விலக்கப்பட்ட கனியை உண்ணச் செய்...